இதே அவங்க வீடா இருந்தா இப்படியே விட்டுட்டு போயிருப்பாங்களா? பொது இடம்தானே நமக்கென்ன என்கிற அலட்சியம். “ஹனியாம் ஹனி”. என்னைய சொல்லணும். முன்னாடியே கிளம்பிருந்தா இந்த இம்சையே இருந்துருக்காது. நேரம்தான் இருக்கேனு போனுல உட்கார்ந்தது என் தப்பு’ மூக்கை இறுக்க மூடியபடியே எப்போடா மின்தூக்கி முதல் தளத்தை அடையும் என்று ஒளிரும் அம்புக்குறியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘என்னை மறந்துட்டியா?’ங்கற மாதிரி முட்டியில சுரீர்னு வலி. மூணு மாசமா முட்டிவலி. நின்னா உட்கார முடியல. உட்கார்ந்தா எழுந்திரிக்க முடியல. அதெல்லாம் பரவாயில்ல. மாடிப்படி ஏறிட்டு இறங்கறதுக்குள்ள உயிர் போயிடும். இடது கால்லதான் அதிக வலிங்கிறதால தாங்கி தாங்கி நடந்து நடையே மாறிப் போயிட்டு. வீட்டுக்கு கீழ இருக்கிற டாக்டர்கிட்ட காண்பிச்சு மருந்து சாப்பிட்டும் அதுக்கு என்னையவிட்டு போக மனசில்ல. உடம்பு கனத்து இருக்கிறதுனாலதான் சிறு வயதிலேயே முட்டி வலி வந்துருக்கும். நீங்க கண்டிப்பா எடையை குறைச்சாகணும்னு அவரு என்னமோ வெளியில வந்து பார்மசியில மருந்து வாங்கிற மாதிரி சுலபமா சொல்லிட்டார். சிம்ரன் மாதிரி சிலிம்மா இருக்கணும்னு எனக்கும் ஆசைதான். நடக்கமாட்டிங்குதே. ஆறு மாசம் உடம்பைப் போட்டு வருத்திக்கிட்டு குறைக்கிற எடை கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டா ஆறே நாள்ல நம்மூரு விலைவாசி மாதிரி கடகடன்னு ஏறுது. அது கிடந்துட்டு போகுதுனு இப்பவெல்லாம் அத கண்டுக்கறதே இல்ல. “டாக்டர் இப்ப இந்த வலிக்கு வழி சொல்லுங்க. வைத்தியம் பண்ணுங்க”னதும் பாலிகிளினிக்கு போகச் சொல்லி அங்கிருந்து எலும்பு மருத்துவரிடம் புக் பண்ணினா கட்டணம் கம்மியா இருக்கும்னு சொல்லி அனுப்பி வைத்தார்.
உடம்பை குறைக்கிறதுக்காக நீச்சல் கத்துகிட்டப்போ பத்து வினாடிகூட என்னால மூச்சுவிடாம இருக்க முடியாது. தண்ணிக்குள்ள இருக்கிறதுனாலனு நினைச்சேன். அது தப்புன்னு மின்தூக்கி பதினோராவது தளத்தை அடைறதுக்குள்ள மூச்சு திணறுனதிலே தெரிஞ்சு போச்சு. ‘இன்னும் பத்து மாடி இருக்கே. மாஸ்க்காவது போட்டுக்கிட்டு வந்துருக்கலாம். அம்புக்குறி எத்தனை முறை வந்து வந்து போகுதுன்னு எண்ண வச்சிட்டியே ஹனி. அதை குறை சொல்லக்கூடாது. மத்தவங்களும் லிப்ட்ட பயன்படுத்துவாங்களேனு கொஞ்சம் கூட அக்கறை இல்லாம போன அந்த அம்மணியதான் சொல்லணும்.’
பாலிகிளினிக்ல, சாங்கி பொது மருத்துவமனைல மூணு மாசம் கழிச்சுதான் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட அப்பாயின்மென்ட் இருக்குன்னு சொன்னதும், “அப்போ என்னால தவழ்ந்துதான் போக முடியும். நடந்து போற மாதிரி கொஞ்சம் முன்னாடி வேற எங்காவது இருந்தாலும் பரவாயில்ல அப்பாயின்மென்ட் வாங்கி கொடுங்க”னு கேட்டதுக்கு பொங்கோல் மருத்துவமனையில நாலு மாசம் கழிச்சுதான் தேதி இருக்கு. சாரி எங்களால ஒன்னும் செய்ய முடியாதுனு சொல்லி முடிச்சிட்டாங்க.
உடம்புக்கு நோவு வருதோ இல்லையோ மூணு மாசத்துக்கு ஒரு அப்பாயின்மென்ட் எல்லா ஸ்பெஷலிஸ்ட்கிட்டயும் வாங்கி வச்சிக்கணும். தேவையில்லன்னா கேன்சல் பண்ணிடனும் என்று தோழி சொன்னது நினைவுக்கு வந்தது.
தனியார் மருத்துவமனைக்கு போனா நாளைக்கே டாக்டர பார்த்திடலாம். அதுக்கப்பறம் காசு கட்டுறத நினைச்சா முட்டிவலி போய் நெஞ்சு வலி வந்துடுமேன்னு பயமாயிருக்கு. வேற வழியே இல்லையானு கெஞ்சி கேட்டதும் அவசர சிகிச்சைக்கு போகச் சொல்லி யோசனை சொன்னாங்க. அங்க போனா வலியோட அளவு ஒன்னுலேர்ந்து பத்துக்குள்ள எவ்வளவுனு கேட்டு நாம பத்துனு சொன்னாலும் பத்துமணி நேரம் உட்கார வைப்பாங்க. “அப்போ நீங்க தினமும் காலைல பதினோரு மணிக்கு சாங்கி பொது மருத்துவமனை அப்பாயின்மென்ட் பகுதிக்கு கூப்பிட்டு தேதி மாத்த முடியுமானு கேளுங்க. ஏற்கனவே புக் பண்ணி வச்சிருக்கிறவங்க யாராவது கேன்சல் பண்ணினா உங்களுக்கு கொடுப்பாங்க” யோசனை ஏற்புடையதா இருந்துச்சு.
மின்தூக்கி ஒரு குலுங்கலுடன் ஒன்பதாவது தளத்தில் நின்றது. உள்ளே நுழைய வந்த ஒரு மலாய் ஆடவர் நான் நிற்கும் நிலையையும் உள்ளே இருந்த காட்சியையும் பார்த்துவிட்டு தலையை குலுக்கிவிட்டு தான் படிக்கட்டுகளில் இறங்கிக் கொள்வதாக திரும்பிவிட்டார். பொறாமையாக இருந்தது. ஒரு வீட்டில ரெனவேஷன் நடக்கிறதால உடைத்ததை கொண்டு போறதுக்கும் மற்ற சாமான்களை கொண்டு வர்றதுக்கும் அவங்களாகவே ஒரு மின்தூக்கியை குத்தகைக்கு எடுத்துக்கிட்டதால அது மேல வரதே இல்ல.
அடுத்த நாளிலிருந்து எந்த வேலையிருந்தாலும் மறக்காம அலாரம் வச்சிக்கிட்டு அங்க கூப்பிட்டு கேட்டதுல ஒரு மாசம் முன்னாடியே அப்பாயின்மென்ட் கிடைச்சி இன்னைக்கு கிளம்பிருக்கேன். ஒரு இடத்துக்கு திட்டமிட்டு அமைதியா குறிப்பிட்ட நேரத்துக்குள்ள கிளம்பி போகணும்னு ஒவ்வொரு தடவையும் நினைக்கிறதோட சரி. நேரத்தோட போனாலும் நம்மளுக்கு கொடுத்த நேரத்துக்கு அழைக்கப் போறதுல்ல. ஒரு தடவை மதியம் ரெண்டு மணிக்கு இருந்த அப்பாயின்மென்ட்க்கு மருத்துவர் அறைக்குள்ள நுழையும்போது நாலு மணி. அதுக்கப்பறம் காசு கட்டுறது மருந்து வாங்குறதுனு வீட்டுக்கு வரதுக்கு சாயந்தரம் ஆயிட்டு. இன்னைக்கு எப்படியோ தெரியல. பேருந்து இன்னும் பத்து நிமிடங்களில் வருதுன்னு பாத்துட்டு அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு மின்தூக்கி எடுக்க வந்த என்னைய “ஹனியும் அதோட மம்மியும்” இப்படி புலம்பவிட்டிருக்காங்க. அடுத்த பேருந்து வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும்.
இப்ப நான் இருக்கிற நிலைமைக்கு அரைமணி முன்னாடியே இறங்கிருக்கணும். நாலு நிமிஷத்துல பேருந்து வருதுன்னு காட்டினாகூட கடகடன்னு இறங்கி நடந்து மேம்பாலத்துல ஏறி எதிர போயி பேருந்து ஏறின காலமெல்லாம் அம்புக்குறியோட கீழ இறங்கிக்கிட்டு இருந்துச்சு. பத்தாததற்கு குறுக்குத்தீவு இரயில் பாதையின் கட்டுமானப்பணி நடப்பதால் வீட்டைச்சுத்தி, வெளியிலனு தகரத்தப் போட்டு அடைச்சு வச்சிருக்காங்க. அதனால வீட்டுக்கு பக்கத்துல இருக்கிறதில்லாம அடுத்த பேருந்து நிறுத்தத்துக்குப் போயிதான் பேருந்து எடுக்கணும். வீட்டுக்கு கீழேயே ஸ்டேஷன் வருதுங்கிறது மகிழ்ச்சியா இருந்தாலும் சத்தம், தூசி, வெளிய போக வர சிரமமாயிருக்கிறதையெல்லாம் ஆறு வருஷத்துக்கு பொறுத்துக்கணும்னா சலிப்பா இருக்கு. மழை வந்துடுச்சின்னா கேட்கவே வேணாம்.
‘பாத்து பக்குவமா நின்னுக்கலாம்னு அந்த சீன குடும்பத்தோடவே மின்தூக்கியில இறங்கியிருக்கணும்.’
மின்தூக்கிக்கு காத்துகிட்டு இருக்கும் போது “கீச் கீச்” என்று பிள்ளைகளின் காலணி சத்தம் பின்னாலிருந்து வந்தது. பக்கத்து வீட்டு இரட்டையர் ரேயும் ரேச்சலும் அவர்கள் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு வர அப்பா அவர்களின் தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தார். “ஹாய் பியுட்டீஸ்” என்று அவர்களை கொஞ்சிக் கொண்டிருக்கும்போதே மின்தூக்கி வந்துவிட்டது. நான் நுழைவதற்குள் குழந்தைகள் இருவரும் அம்மாவின் கைகளை இழுத்துக்கொண்டு அவசரமாக உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் போட்டி போட விரும்பாமல் என்று சொல்லலாம், ஆனால் அவர்கள் இடித்துவிட்டால் என் கால் வலி எனக்குத்தான் தெரியும் என்பதால் காத்திருந்தேன். அவர்கள் மூவரும் நுழைந்ததும் அப்பா தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு நுழைந்தார். அந்த தள்ளு வண்டியில் நானே ஏறி அமர்ந்து கொள்ளலாம் என்கிற அளவுக்கு இருந்தது. என் உருவத்துக்கு அந்த மின்தூக்கிக்குள் நுழைவது உசிதமாக தெரியவில்லை. “யு கோ ஃபர்ஸ்ட்” என்று பல்லில் மட்டும் சிரித்துக் கொண்டு நின்று விட்டேன்.
கதவுகள் மூடி கீழே இறங்க தொடங்கின அடுத்த வினாடி கீழே இறங்குவதற்கு பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தேன். இதேதான் கீழ போயிட்டு மறுபடியும் வந்தாகணும். ‘போகும்போதும் மேல வரும்போதும் எத்தனை தடவை நின்னு வரப் போகுதோ தெரியலையே. இப்பதான் இவங்களும் இறங்கணுமா? ஒரு நிமிஷம் கழிச்சு வந்திருந்தாக்கூட நாம போயிருந்திருக்கலாம். நீங்க முன்னாடி வந்தீங்க. நாங்க அடுத்ததுல போய்க்கிறோம் என்று அவர்களாவது சொல்லிருக்கலாம்.’
பேருந்து வரும் நேரத்தைப் பார்த்தேன். ஆறு, பனிரெண்டு என்று காட்டியது. இரண்டாவது பேருந்தைதான் பிடிக்க முடியும். கண்கள் மீண்டும் மின்தூக்கியின் ஒளிரும் அம்புக்குறியைப் பார்க்க ஆரம்பித்தன. முதல் தளத்திலிருந்து கிளம்பியிருந்தது. நிற்காமல் வர வேண்டுமே என்று நினைக்கும் போதே நீ என்ன நினைப்பது என்று ஐந்தாவது தளத்திலும் பிறகு ஏழாவது தளத்திலும் நின்றுவிட்டு ஒரு வழியாக பதினான்காம் தளத்தை அடைந்தது. கதவை நானே திறந்து உள்ளே நுழைந்து விடுவேன் என்கிற அளவுக்கு அவசரமாக உள்ளே நுழைந்தேன். அதே வேகத்திற்கு வெளியே வர வைத்தது அங்கிருந்த நிலைமை. மின்தூக்கியின் வலது ஓர மூலையில் யார் வீட்டு நாயோ மலம் சிறுநீர் கழித்திருக்க மின்தூக்கி குலுங்கியதில் சிறுநீர் கிளை பிரிந்து கொஞ்ச தூரம் ஓடி வந்திருந்தது. அந்த வாடை மூக்கில் அத்துமீறி நுழைந்து வேகமாக மின்தூக்கியை விட்டு வெளியேறும்படி வைத்தது. வெளியிலிருந்தே எக்கி எண் ஒன்றை அழுத்தி கீழே அனுப்ப நினைக்கும்போதுதான் இன்னொரு மின்தூக்கி வராது என்பது உறைத்தது.
நீ ஏறினாலும் ஏறவில்லை என்றாலும் நான் என் பணியைச் செய்கிறேன் என்று “டோர்ஸ் ஆர் க்ளோசிங்” என்று சொல்லிக்கொண்டே மூட ஆரம்பித்தது. அவசரமாக பொத்தானை அழுத்தி கதவுகள் மூடாமல் பிடித்துக்கொண்டேன். உள்ளே செல்ல மனமும் இல்லை. செல்லாமல் இருக்கவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் மூக்கை மூடிக்கொண்டு காலில் படாதவாறு தூக்கி வைத்து ஓரமாக போய் நின்றுக்கொண்டேன். மேல் வீட்டில் துணிகள் காயப் போட்டிருந்தாலே அவர்கள் Dynamo பயன்படுத்துகிறார்களா Attack பயன்படுத்துகிறார்களா என்று என் மூக்கு கண்டுபிடித்து விடும். இப்பொழுது வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது. ‘சீனக் குடும்பம் இறங்கும் போதே இருந்ததா? வாய்ப்பில்லை. இருந்திருந்தால் அவர்களின் தள்ளு வண்டியே மின்தூக்கி முழுக்க மோப் செய்திருக்கும்.
வரும்போது ஏழாவது தளத்தில் நின்றது. அவர்களோட நாய்தான் இந்த வேலையை செய்திருக்கு. ஒருமுறை “அது எந்த குடும்பத்தை சேர்ந்தது என்று கேட்டதற்கு, நாய்னு சொல்லாத இது பேர் ஹனி அது எங்களோட பேபி” அப்படினு சிவந்த முகத்தோட சொன்னாங்க. இப்போ இது புது கலாச்சாரமா வளர்ந்துருக்கு. ‘நாய நாயின்னு சொன்னது ஒரு குத்தமா?’ என நினைத்தாலும், “ஓ…யூ ஆர் சோ ஸ்வீட்” என்று வழிந்துவிட்டு அந்த பேபிய கொஞ்சிவிட்டும் வந்தேன். அந்த ஹனி செய்த வேலையாதான் இருக்கும். மருத்துவமனை வேலை இல்லையென்றால் நேராக அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை அசிங்கம் அசிங்கமாக பேசிவிட்டு வந்துவிடுவேன். நிச்சயம் சந்திக்காமல் இருக்க மாட்டேன். அப்போ நான் பேசுற பேச்சுல அவங்க வீட்டு பேபி மூத்திரமே போகக் கூடாது. செல்லப்பிராணிகள் அசுத்தம் செய்தால் அபராதம்னு அறிவிப்பு பார்த்த மாதிரி ஞாபகம். இந்த மாதிரி ஆட்களெல்லாம் திருந்த மாட்டாங்கன்னா என்னத்த பண்றது. மின்தூக்கி மிகவும் மெதுவாக செல்வதுபோல இருந்தது. அட்லீஸ்ட் இப்பவாவது வேற எந்த தளத்திலும் நிற்காமல் முதல் தளத்திற்கு செல்லவேண்டுமே என்று மனம் ஏங்கியது. ஆனால் இன்று எதுவுமே நான் நினைத்தது போல நடக்கவில்லை என்பது ஏழாம் தளத்தில் நின்றதும் தெரிந்துவிட்டது.
கால் வலிச்சாலும் நேரம் போனாலும் பரவாயில்லை அவர்கள் வீட்டுக்குப் போய் சத்தம் போட்டுவிட்டு வந்துவிடலாமா என்று தோன்றியது. தேவையே இல்லை என்பது போல அந்த பெண்மணியே “ஹாய்” என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தார். அவங்க வருவாங்கனு எதிர்பார்க்காததினால என்னமோ நான்தான் தப்பு செய்த மாதிரி படபடப்பா ஆயிட்டு. ‘இவ்வளவு நேரம் வீராவேசம் பேசினியே இதோ அவங்களே வந்துட்டாங்க பேசு’ என்று மனம் தூண்டிவிட்டது.
“இங்க பாருங்க…” என்று ஆரம்பிப்பதற்குள் “சாரி எங்க ஹனி இங்க அசுத்தம் செய்துட்டு. இப்படி அது செய்ததேயில்லை. நாங்க அதுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். இன்னிக்கு என்னமோ தெரியாம பண்ணிட்டு” என்று சொல்லிக்கொண்டே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு கையுறை அணிந்த கையால மலத்தை எடுத்து கையுறையுடன் கழற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு சுத்தம் செய்கிற ஸ்ப்ரேயை அடித்து டிஷு தாளால் துடைத்துவிட்டு இன்னொரு முறையும் அதேபோல் செய்துவிட்டு “சாரி சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி air freshener-ஐ அடித்துவிட்டு எழுந்தார். மின்தூக்கியும் முதல் தளத்தில் நின்று “Doors are open” என்ற அறிவிப்பும் வந்தது.