“விமர்சனமல்ல, விமர்சனமின்மையே எழுத்தாளரைக் கொல்கிறது”

சிவானந்தம் நீலகண்டன்

இலக்கிய விமர்சனம் குறித்த பார்வைகள் (Perspectives on Literary Critique in Tamil Literature) என்னும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல், சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2023இன் ஒருபகுதியாக, தி ஆர்ட்ஸ் ஹவுஸில் 18 நவம்பர் 2023 அன்று நடந்தது. சிங்கப்பூர் தேசியக் கலை மன்றம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல்ஆஃப் ஹ்யூமனிட்டியின் நிதியுதவியைக் கொண்டு செயல்படும் ஒரு கூட்டு முயற்சியான ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத்திட்டத்தின் ஆதரவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன், அழகுநிலா, சிவானந்தம் நீலகண்டன் ஆகியோர் பங்குபெற்றனர். எழுத்தாளர் ரமாசுரேஷ் நெறியாளராக விவாதத்தை முறைப்படுத்தினார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டவற்றிலிருந்து சில கருத்துகள்இங்கே எழுத்துவடிவில். நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற கேள்வி-பதில் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை.தொகுப்பும் எழுத்தாக்கமும்: சிவானந்தம் நீலகண்டன்.

ரமா: சுனில், சிவா, நிலா நீங்கள் மூவரும் முதலில் இலக்கிய விமர்சனம் என்பதைக் குறித்த உங்கள் பொதுவான பார்வைகளை இங்கே முதல் சுற்றில் சற்று சுருக்கமாகப் பேசுங்கள். பிறகு சில குறிப்பான விஷயங்களை விரிவாகப் பேசலாம்.

சுனில்: விமர்சனம் என்பது, என்னைப் பொறுத்தவரை, படைப்பின் குடலை உருவிப்போடும் வேலை அல்ல. மாறாக அது படைப்பின் மீதும் படைப்புச்சூழலின்மீதும் எழும் அக்கறையினால் எழுதப்படும் ஒன்று. விமர்சனம் ஓர் இலக்கியப் படைப்பின் காலப்பொருத்தத்தை எடுத்துக்காட்டுவது அவசியம். அது சிலப்பதிகாரமானாலும் சரி, சித்துராஜ் பொன்ராஜின் சிறுகதையானாலும் சரி, தற்காலத்திற்கு அது எவ்வகையில் பொருந்தி வருகிறது, பொருளுள்ளதாகிறது என்பதை விமர்சனம் காட்டித்தரவேண்டும்.

விமர்சனம் ஓர் இலக்கியப் படைப்பின் காலப்பொருத்தத்தை எடுத்துக்காட்டுவது அவசியம்.

“விமர்சகன் காலத்தின் சேவகன்” என்று க.நா.சு. குறிப்பிட்டுள்ளார். தரமான படைப்புகள் காலத்தால் அடித்துச் செல்லப்படாமல் நிற்பதைப் பார்க்கிறோம். விமர்சகர் அவ்வளவு காலம் நம்மைக் காத்திருக்க வைக்காமல் முன்கூட்டியே நல்ல படைப்புகளை அடையாளம் காட்டுகிறார், காட்டவேண்டும். அது விமர்சகரின் ஒரு பொறுப்பு. ஒட்டுமொத்தமாக, விமர்சனம் என்பது பொறுப்பும் அக்கறையும் மிகுந்த இலக்கியச் செயல்பாடு என்பது என் பார்வை.

சிவா: சுனில் குறிப்பிட்டதைப்போல, விமர்சனம் என்ற சொல் ஏன் குறைகூறும் செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை நானும் யோசித்திருக்கிறேன். விமர்சனம் குறித்த என் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

ஓர் அடிப்படை நெருக்கடி இலக்கியத்துக்கு அதன் வடிவத்திலேயே இருக்கிறது. ஓவியம், இசை, நடனம், சிற்பம் போன்ற கலைகள் வெளிப்படும் விதமும் (காட்சி/நிகழ்த்துதல்) அவற்றுக்கான விமர்சனம் வெளிப்படும் விதமும் (எழுத்து) முற்றிலும் வேறானவை. எவ்வளவு கறாராக ஓர் இசை விமர்சகர் எழுதினாலும் ஒருபோதும் அவர் அந்த இசைக்கலைஞரோடு ஒன்றாக நிற்க இயலாது. ஆனால் இலக்கியத்தில் கலையும் சரி, விமர்சனமும் சரி எழுத்து வடிவிலேயே இருக்கிறது. இது விமர்சனத்தைக் குறித்த ஒரு பதற்றத்தை – படைப்பைக் காட்டிலும் விமர்சனம் உயர்வு என்கிற தோற்றத்தை – தன்னியல்பாகவே உண்டாக்கிவிடுகிறதோஎன்று யோசித்ததுண்டு.

கலையின் வளர்ச்சிக்கு விமர்சனம் அவசியம் என்றே நினைக்கிறேன். அளவுகோல்கள் இங்கு அகவயமான ஒன்றுதான். ஆயினும் அவரவருக்கு ஓர் அளவுகோல் அவசியம். அது மாறிக்கொண்டே இருக்கலாம். நம் அனைவருக்கும் ரசனை இருக்கிறது. ரசனைதான் விமர்சனத்துக்கு அடிப்படை. ரசனை என்பதை அனுபவித்தல் என்றும் விமர்சனம் என்பதை வெளிப்படுத்தல் என்றும் சொல்லலாம். இலக்கியத்தில் ரசனையை வளர்த்துக்கொள்ள வாசிப்புதான் ஒரே வழி. படைப்பின் நுணுக்கங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டும் விமர்சனத்தின் எல்லைகள் ரசனையின் எல்லைகளுக்குள் நிற்கின்றன.

ரசனைதான் விமர்சனத்துக்கு அடிப்படை. இலக்கியத்தில் ரசனையை வளர்த்துக்கொள்ள வாசிப்புதான் ஒரே வழி.

வெளிப்படுத்தல் (விமர்சனம்) என்னும்போது அதில் படைப்பை ஆராய்தல், மதிப்பிடுதல், படைப்பு விமர்சகருக்குள் வளர்தல் என மூன்று நிலைகளைக் கற்பனை செய்கிறேன். அம்மூன்றில் மதிப்பிடுதல் ஒன்றை மட்டுமே விமர்சனமாக நாம் இன்று குறுக்கிக்கொண்டுவிட்டோம். அதுவொரு சிறுபகுதி மட்டுமே. ஆகவே ரசனை முதல் நிலை. அதற்கடுத்து விமர்சனத்தில் மூன்று நிலைகள் என நம் சட்டகத்தை விரிவாக வைத்துக்கொண்டால் அதில் பல்வேறு கருத்துகள் புழங்க இடவசதி இருக்கும், குறையே கண்டாலும் அது சிறிதாகத் தெரியும் என நினைக்கிறேன். இப்போதைக்கு இதுவே என் கருத்து.

அழகுநிலா: பிறந்தது முதல் குடும்பத்திலும் சமூகத்திலும் கல்வி நிறுவனம், வேலையிடம் என எல்லா இடங்களிலும் நாம் தொடர்ந்து மதிப்பிடப்படுகிறோம். அவற்றை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது அப்படித்தான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஓர் இலக்கிய விமர்சனத்தில் மதிப்பிடல் நிகழும்போது மட்டும் ஏன் ஏற்கமுடியவில்லை? இலக்கியத்தில் தொழிற்படும் படைப்பூக்கம் (creativity) ஒரு முக்கியமான காரணம் என நினைக்கிறேன்.

ஒரு பட்டாம்பூச்சியை ஒருவர் பட்டம்பூச்சியாகவே பார்ப்பதற்கும் அது ஒரு சுதந்திரத்தின் குறியீடு என இன்னொருவர் பார்ப்பதற்கும் வேறுபாடு அதிகம். ஆனால் அதில் ஒன்று மேலானாது மற்றது தாழ்ந்தது என்பதை எப்படி முடிவு செய்வது? ஒரு கற்பனையின் தரத்தை இன்னொரு கற்பனை எப்படி மதிப்பிடுவது? அங்குதான் சிக்கல்.

ஓர் இலக்கியச் சூழலுக்கு ரசனை விமர்சனம் அவசியம் என்பதுதான் என் கருத்தும். ஆனால் மதிப்பிடல் என்பதைத் தனிப்பட்ட விமர்சகரின் மதிப்பிடலாக அல்லாமல் ஒரு சூழலின் மதிப்பிடலாக நான் பார்க்கிறேன். ஒரே படைப்பு வெவ்வேறு வாசகர்களால் பாராட்டப்படும்போது அப்படைப்பு இலக்கியச் சூழலில் தனக்கான இடத்தைப்பெறுகிறது. ரசனை வெளிப்பாட்டின் பங்கு அவ்வகையில் முக்கியமானது.

ஒரே படைப்பு வெவ்வேறு வாசகர்களால் பாராட்டப்படும்போது அப்படைப்பு இலக்கியச் சூழலில் தனக்கான இடத்தைப்பெறுகிறது.

இலக்கியக் கோட்பாடுகளும் ரசனையுடன் இணைந்து வெளிப்படும் ஒருங்கிணைந்த விமர்சனமே நல்ல விமர்சனம் என்று சுனில் ஒருமுறை தன் இலக்கிய வகுப்பில் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரை அழகியலை முன்வைத்துப் பேசும் ரசனை விமர்சனத்தையே நான் முக்கியமாகக் கருதுகிறேன்.

ரமா: அக்கறையின் வெளிப்பாடாக அமைவது, சட்டகத்தை விரிவுபடுத்தி வைத்துக்கொள்வது, படைப்பூக்கத்தை மதிப்பிடுவதில் ரசனையின் பங்கு என அருமையான கருத்துகளை முன்வைத்தீர்கள். அடுத்தது சிங்கப்பூர் இலக்கிய விமர்சனச் சூழலைக் குறித்து உங்கள் கருத்துகளை அறிந்துகொள்ளலாமா?

சுனில்: புதுமைப்பித்தன் முதல் இங்கே அமர்ந்திருக்கும் பெருமாள் முருகன் வரை முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெறும் இலக்கியப் பட்டியல்கள் தமிழில் உண்டு. சிங்கப்பூர் இலக்கியத்தில் தவறவிடக்கூடாத படைப்புகளை அடையாளங்காட்ட அப்படி ஒரு பட்டியல் (literary canon) இருக்கிறதா? அழகுநிலா குறிப்பிட்ட ‘சூழலின் மதிப்பிடல்’ அத்தகைய பட்டியல்களிலிருந்தே உருவாக முடியும்.

தமிழகத்தின் பல குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் அவரவரளவில் முக்கியம் என்று கருதிய படைப்புகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளனர். அவை அனைத்திலும் இடம்பெறும் படைப்புகள் உடனடியாக முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. க.நா.சு.வின் பட்டியலில் இடம்பெற்றிருந்தும் பின்னாளில் கவனிக்கப்படாமல்போன படைப்புகளும் உண்டு, அதேவேளையில் அவர் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் இன்று ‘புயலிலே ஒரு தோணி’ (ப.சிங்காரம்) முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. ஆகவே ஒரு பட்டியலில் ஒரு குறிப்பிட்ட படைப்பு இடம்பெறுகிறதா இல்லையா என்பதைக் குறித்து உடனே விசனப்படவேண்டியதில்லை.

ஒரு சீரிய வாசகர் தன் உள்ளுணர்வால் கண்டுகொள்ளும் சிறந்த படைப்புகளை ஒரு விமர்சக நிலையில் நின்று பட்டியலிடுவது அவசியம். அப்படியான பல பட்டியல்கள் வழியாகவும் அவற்றின் மீதான ஏற்பு, மறுப்புகள், உரையாடல்கள் வழியாகவுமே சிங்கப்பூரின் இலக்கியம் வளரமுடியும். என்னைப்போல வெளியிலிருந்து வரும் ஒரு வாசகருக்கோ உள்ளூரில் புதிதாக எழுதவரும் ஒரு எழுத்தாளருக்கோ இலக்கியப் பட்டியல்கள் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

சிவா: பட்டியல் இருக்கிறதா என்று சுனில் கேட்டது நல்ல கேள்வி. சிங்கப்பூர் இலக்கிய விமர்சனச் சூழலைப் புரிந்துகொள்ள அங்கிருந்தே தொடங்கலாம். கந்தசாமி வாத்தியார் (சுப.நாராயணன்) 1952இல் தமிழ் முரசில்நடத்திய ‘ரசனை வகுப்பு’ இவ்வட்டாரத்தின் ஒரு முன்னோடிப் பட்டியல் முயற்சி என்பேன். விமர்சனத்தில்ம் ‘கண்ணியமான தாக்குதலுக்கு இடமுண்டு’ என்பது வாத்தியாரின் இலக்கியக் கொள்கை.

அப்போது இலக்கியம் இங்கு பெரிதாக உருவாகியிராத காலம் என்பதால், எது சிறந்த பத்திரிகை என்பது முதல் எவர் சிறந்த வானொலிச் செய்தி வாசிப்பாளர் என்பது வரை ரசனை வகுப்பில் வாதவிவாதங்கள் நடந்தேறின. ஆனால் நான்கே வாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ் முரசின் அன்றைய ஆசிரியர் கோ.சாரங்கபாணிக்கு ரசனை வகுப்பைத் தொடர நெருக்கடி வந்தது. எட்டாம் வாரத்தோடு ரசனை வகுப்பு நின்றுபோனது. “என் வயிற்றில் அடித்துவிட்டார்கள். நான் ஒளிகிறேன்” என்ற அறிவிப்போடு வாத்தியார் காணாமற்போனார். பின்னாளில் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரின் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள் இங்கே உண்டாக்கிய அலைகள் பலரும் அறிந்தவை. இணையத்தில் காணக்கிடைப்பவை.

பட்டியல்கள் இலக்கிய வளர்ச்சிக்கான ஒரு தேவை என்று கருதப்படாமல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளாகவும் காழ்ப்புகளாகவும் புரிந்துகொள்ளப்படுவதே அடிப்படைச் சிக்கல். பட்டியல்கள் அவை எழுப்பவேண்டிய விவாதத்தை விடுத்து மற்ற அனைத்து விவாதங்களையும் எழுப்புகின்றன என்பதே நடைமுறைப் பிரச்சனை. ஒரேயொரு விமர்சகர் ஒரேயொரு பட்டியலை வெளியிடுவதற்கு மாறாகப் பல விமர்சகர்கள் அவரவர் பட்டியல்களை வெளியிட்டால் பட்டியல்களின் மீதான பதற்றம் தணியலாம்.

பட்டியல்கள் இலக்கிய வளர்ச்சிக்கான ஒரு தேவை என்று கருதப்படாமல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளாகவும் காழ்ப்புகளாகவும் புரிந்துகொள்ளப்படுவதே அடிப்படைச் சிக்கல்.

சுதந்திர சிங்கப்பூரின் முதல் அரை நூற்றாண்டு (1965-2015) இலக்கியத்தொகுப்பு சுமார் 350 நூல்களாக மின்னிலக்க ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நூலக வாரிய இணையத்தளத்தில் எவரும் எப்போதும் இலவசமாக வாசிக்கலாம், தரவிறக்கலாம். அத்திட்டக்குழுவின் தலைவரான அருண் மகிழ்நன், முடிந்தவரை எந்த இலக்கியப் படைப்பும் விடுபட்டுவிடக்கூடாது என முயன்று எழுத்தாளர்கள், தன்னார்வலர்களின் ஆதரவுடன் உருவாக்கிய தொகுப்பு (collection) அது. அடுத்தகட்டமாக, அத்தொகுப்பிலிருந்து படைப்புகள் தேர்வு (selection) செய்யப்படவும் மின்னூலாக்கவும் முயற்சி நடப்பதாக அறிகிறேன். பட்டியல் விஷயத்தில் அது ஆக்ககரமான ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்.

அழகுநிலா: இலக்கியப் பட்டியல்கள் தேவைதான் என்பதில் நானும் உடன்படுகிறேன். பட்டியல் போடுவதில் இன்னொரு சிக்கல் அதைச்செய்வோரின் பின்புலம் குறித்தது. சிங்கப்பூர் விமர்சனச் சூழலை நான் அந்தக் கோணத்தில் பார்க்கிறேன்.

முதலில் ‘சிங்கப்பூர் இலக்கியம்’ என்பதே ஒரு வரையறைக்குள் அகப்படாமல் நழுவிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டவர் எழுதியதா, இங்கேயே பலதலைமுறைகளாக வாழும் உள்ளூர் எழுத்தாளர் எழுதியதா, சிங்கப்பூரின் தனித்துவமிக்க சிக்கல்களைப் பேசுவதா என்றெல்லாம் படைப்பே பலவிதமான பிரிப்புகளுக்கு உள்ளாகிறது. அத்தகைய இலக்கியத்திற்கு விமர்சகரின் பட்டியல் வேண்டும் எனும்போது விமர்சகர் எத்தகைய பின்புலத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. பட்டியல்கள் வரும்போது பட்டியலாளர்களின் பின்புலமும் விமர்சனத்துக்குள்ளாகலாம்.

சிவா பேசும்போது 1950களிலேயே நடந்த ரசனை வகுப்பு, வெளிப்படையான மதிப்பீடு பற்றியெல்லாம் குறிப்பிட்டார். அப்போதே அவை சாத்தியம் என்றால் நியாயமாக இன்று விமர்சன சூழல் வெகுவாக மேம்பட்டிருக்க வேண்டும் அல்லவா? இன்று அதைவிட ஆழமான விவாதங்கள் நடைபெறவேண்டும் அல்லவா? ஆனால், நேரெதிராக, இன்று அறவே விமர்சன சகிப்புத்தன்மையை இழந்து நிற்கிறோம் என்று தோன்றுகிறது.

தமிழர் எண்ணிக்கைச் சிறுபான்மை, அதில் வாசிப்புச் சிறுபான்மை, அதில் தீவிர இலக்கியச் சிறுபான்மை, அதிலிருந்து எழுதுவோர், விமர்சிப்போர் என்று பார்க்கும்போது இருக்கும் பத்திருபது பேருக்கு உள்ளேயே ஒருவரையொருவர் போற்றியும் தூற்றியும் கொள்வதுமாக நிலைமை ஆகிவிடுகிறது. பட்டியல் போடுவதற்கும் விமர்சனத்தை முன்வைப்பதற்கும் தயங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ரமா: இலக்கிய விமர்சனத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும்? சிங்கப்பூர்த் தமிழ்ச் சூழல் எவ்வாறு எதிர்கொண்டுவருகிறது? அதில் மாற்றங்கள் தேவையா? தேவையென்றால் உங்கள் பரிந்துரைகள் என்ன?

சுனில்: விமர்சனம் எழுத்தாளரை நோக்கியது அல்ல, ஆகவே விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியது எழுத்தாளர் அல்ல. விமர்சனத்திற்கு ஏற்ப எழுதத் தொடங்கினால் எழுத்தாளர் நினைத்ததை எழுதமுடியாது. எழுத்தாளர் அவரளவில் எழுதுகிறார், விமர்சகர் தன்னளவில் விமர்சிக்கிறார். அந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், இன்றைய சமூக ஊடகக் களேபரத்திலும் ‘லைக்’ கலாச்சாரத்திலும் உருப்படியான விமர்சனங்கள் வராமலேயே போய்விடுகின்றன. ஆகவே விமர்சனமல்ல, விமர்சனமின்மையே எழுத்தாளர்களைக் கொல்கிறது என்பேன். விமர்சனம் – அது எவ்வளவு எதிர்மறையானது என்றாலும் – ஓர் எழுத்தாளரைக் கொன்றதாக வரலாறில்லை.

என்னளவில் இலக்கிய விமர்சனத்துக்கு நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். வெறும் குறைகளை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ள படைப்பு என்றால் அதை விமர்சிக்காமல் விட்டுவிடுவதே நல்லது. ஒரு சிறந்த படைப்பை வாசித்ததில் அடைந்த பரவசத்தை சக வாசகர்களும் அடையவேண்டும் என்கிற துடிப்பின் விளைச்சலாகவே விமர்சனத்தைப் பயன்படுத்துகிறேன். ‘நிலவைச் சுட்டும் விரல்’ என எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் ஒரு ஜென் படிமத்தைக் குறிப்பிட்டார். விமர்சனமும் நிலவைச் சுட்டும் விரலே. நிலவைப் பார்க்காமல் விரலைப் பார்ப்பதுதான் பிரச்சனை.

விமர்சனமும் நிலவைச் சுட்டும் விரலே. நிலவைப் பார்க்காமல் விரலைப் பார்ப்பதுதான் பிரச்சனை.

சிங்கப்பூரில் நான் பார்த்த சிக்கல் இலக்கிய ‘வெளி’. சிறிய தமிழ் ஊடகப் பரப்பில் பரப்பிலக்கியமும் தீவிர இலக்கியமும் ஒரே இடத்திற்குப் போட்டியிடுகின்றன. அது வாசகரிடையே குழப்பத்தை உருவாக்கிவிடும். தமிழகத்தின் கல்குதிரை, மணல்வீடு போன்ற சிற்றிதழ்களிலோ அல்லது காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்களிலோ இதர இணைய இலக்கிய இதழ்களிலோ எத்தகைய படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்பது குறித்த ஒரு பொதுப்புரிதல் உருவாகி இருக்கிறது. அது ஓர் இலக்கியச் சூழலுக்கு அவசியம். போட்டி ஒரே வகைக்குள் நிகழ்வதே சரியாக இருக்கும்.

சிங்கப்பூர் இலக்கியத்தின் வரையறை குறித்து நிலா பேசினார். சிங்கப்பூர் இலக்கியத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம் என நினைக்கிறேன்; ஒன்று, தமிழ் இலக்கியம் என்னும் பெரும்பரப்பில் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியம் இடம் பெறலாம். அடுத்தது, சிங்கப்பூர் என்னும் நிலப்பரப்பில் எழும் ஆங்கில, சீன, மலாய் இலக்கியங்களுடன் இன்னொரு மொழி இலக்கியமாகவும் பார்க்கலாம். முதல் வகைப்படுத்தலில் பரந்துபட்டத் தமிழ் இலக்கியத்தோடு ஒப்பிடுவதும், இரண்டாம் விதத்தில் சிங்கப்பூரின் பிறமொழி இலக்கியங்களோடு ஒப்பிடுவதும் நடக்கவேண்டும். இரண்டுமே ஆரோக்கியமான விமர்சனங்களாக அமையும்.

சிவா: இலக்கிய விமர்சனத்தை எதிர்கொள்வது என்று வரும்போது அது குறித்த பதற்றத்தைச் சூழலில் குறைப்பது அவசியம் என்பது என் கருத்து. அது நடந்தால் பிற சிக்கல்கள் தானாக அவிழ்ந்துவிடும் அல்லது காணாமற் போய்விடும்.

தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடிய எழுத்தாளர் சங்கக் கூட்டமொன்று 1959இல் நடந்தது. அதில் இலக்கிய விமர்சனம் தேவையா? என்ற கேள்வி எழுந்தது. தேவையில்லை என்று ந.பிச்சமூர்த்தியும் கு.அழகிரிசாமியும் வாதாடினர். அவர்கள் இன்று நவீனக் கவிதைக்கும் நவீனச்சிறுகதைக்கும் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். விமர்சனத்தைத் தேவையற்ற ஆற்றல் வீணடிப்பாக அவர்கள் கருதியிருக்கலாம். விமர்சனம் தேவை என்று வாதிட்ட க.நா.சு.வும் சி.சு.செல்லப்பாவும் இன்று விமர்சகப் பிதாமகர்களாகக் கருதப்படுகின்றனர். எந்தவிதமான விமர்சனம் என்பதில் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்பது வேறுவிஷயம்.

செல்லப்பா தொடக்கி நடத்திய ‘எழுத்து’ சிற்றிதழ் (1959-1970) இலக்கிய விமர்சனத்துக்காகவே பத்தாண்டுகள் முதன்மையாகச் செயல்பட்டது. அதன் 119 இதழ்களின் வழியாக விமர்சனம் குறித்த பதற்றத்தைச் சூழலில் தணிக்க கணிசமான பங்கை ஆற்றியது. விமர்சனத்தை எதிர்கொள்ள ஒரு தலைமுறைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்தது.

சுனில் சிங்கப்பூருக்குள் பிற மொழி இலக்கியங்களுடன் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை ஒப்பீடு செய்வதைக் குறித்துப் பேசினார். அது விமர்சனப் பதற்றத்தைத் தணிக்க ஒரு நல்ல அணுகுமுறை. ஆனால் சிங்கப்பூர் ஆங்கில இலக்கியத்தை அதில் சேர்க்கமுடியாது. நாம் அன்றாடம் புழங்கும் உலகம் என்றாலும் ஏனோ ஆங்கில உலகம் மட்டும் நமக்குச் சொந்தமில்லாத ஒரு தனி உலகமாகவே நீடிக்கிறது.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் இந்த ஆண்டு முடிவில் ‘2023இன் சிறந்த படைப்புகள்’, ‘2023இன் மோசமான படைப்புகள்’ என ஒரு பட்டியல் போடுவார்கள். தமிழ் முரசிலோ மலாய், சீனப் பத்திரிகைகளிலோ அவ்வழக்கமில்லை. அதே சீன, மலாய், தமிழ் மக்கள்தாம் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் வாசிக்கிறார்கள் என்றாலும் அவரவர் தாய்மொழிக்குள் வரும்போது பதற்றம் உண்டாகிவிடுகிறது. அதனால் ஆங்கிலத்தை விட்டுவிட்டு சீன, மலாய் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களோடு உள்ளூர்த் தமிழிலக்கியத்தை ஒப்பிட்டு விமர்சிக்கலாம். அதன்வழியாக விமர்சனம் குறித்த பதற்றத்தைத் தணிக்க முயலலாம்.

அழகுநிலா: சிவா குறிப்பிடும் பதற்றம் சிங்கப்பூரில் இன்னொரு காரணத்தினாலும் உண்டாகிறது. இங்கு தமிழை ஒரு மொழியாக நீடிக்கச்செய்ய முனைப்புடன் செயல்படும் அமைப்புகளே இலக்கிய அமைப்புகளாகவும் உள்ளன. ஆகவே இலக்கியத்தில் நடக்கும் ஒன்று மொழியை பாதித்துவிடும் என்னும் அச்சம் நிலவுகிறது.

எடுத்துக்காட்டாக, இலக்கிய விமர்சனத்தால் ஒருவர் எழுதுவது குறைந்தாலோ நின்றாலோ அது மொழி வளர்ச்சிக்கு ஏற்படும் ஆபத்தாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர்ச் சூழலில் தாய்மொழி சார்ந்த செயல்பாட்டுக்குள் ஒருவர் வருவதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், வந்தவரை விமர்சிப்பது குறித்த பதற்றம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஒருவகையில் அதை எண்ணிக்கைக்கும் தரத்திற்கும் இடையிலான இழுபறி என்றும் சொல்லலாம்.

விஷயம் தெரிந்தவர்களும்கூட விமர்சனம் என்பது ‘பார்த்து’ செய்யப்படவேண்டியது என இங்கு கருதுவதற்கு அதுதான் காரணம். வயதான எழுத்தாளரின் படைப்பை இப்படி விமர்சிக்கலாமா என எனக்கே ஒருமுறை ஆலோசனை சொல்லப்பட்டது. ஆனால் விமர்சகர் அது எழுத்தாளரின் முதல் படைப்பா, மூத்த எழுத்தாளரா என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளமுடியாது. விளைவாக, பதற்றங்கள் தொடர்கின்றன. வாழும் மொழியாகத் தமிழைத் தக்கவைக்கப் பாடுபடும் அமைப்புகளையும் அவர்களின் கோணத்திலிருந்து பார்த்தால் குறைசொல்ல முடியாது.

படைப்பிலக்கியத்தைப் போலவே விமர்சனத்தையும் ஒரு தொடர் மரபாக ஆக்கவேண்டும் என்றால், மொழியைத் தக்கவைக்கும் அமைப்புகளைத் தாண்டி நவீன இலக்கியத்துக்கான அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். அதுவே என் பரிந்துரை. இன்று நாம் பேசிய இலக்கியப் பட்டியல்களின் உருவாக்கங்களை அத்தகைய அமைப்புகள் வெளியிடவேண்டும். அப்போது பதற்றங்கள் தணிவது மட்டுமின்றி விமர்சன எதிர்கொள்ளல்களும் உரையாடல்களும் சரியான தளங்களில் நிகழும்.