சுண்டி இழுக்கும் சிங்கப்பூர் இலக்கியம்

நித்திஷ் செந்தூர்

சிறுவர், கட்டுரை, கவிதை, புதினம், நாடகம், வரலாறு முதலிய உள்ளூர் நூல்கள் சென்னைப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருந்தன. “சிங்கப்பூர்ப் படைப்பாளர்களின் எழுத்துக்களை தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் எங்களுடைய முக்கிய நோக்கம். அவ்வகையில் சிங்கப்பூர்ப் படைப்புகளைப் பற்றி தமிழ்நாட்டு வாசகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன்.

சிறுவர் முதல் பெரியோர் வரை சிறுகதைத் தொகுப்புப் புத்தகங்களையும் வரலாற்று நூல்களையும் வாசகர்கள் அதிகமானோர் வாங்கிச் சென்றனர். சிங்கப்பூரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் உள்ளூர் வாழ்க்கைமுறையைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளவும் அவை உதவும் என்பதால் அவற்றின் விற்பனை நன்றாக இருந்தது. “இதுவரைக்கும் நான் சிங்கப்பூர் இலக்கியத்தைப் பற்றி படித்தது கிடையாது. குறிப்பாக வரலாறு. வரலாற்றின்மீது எனக்கு ஆர்வம் உண்டு. எனவே சிங்கப்பூர் வரலாற்றை எடுத்துச் சொல்லும் நூலை வாங்கத் திட்டமிட்டுள்ளேன்” என்றார் மாணவியான அபிராமி.

குடும்பத்தினரும் மாணவர்களும் ஆவலுடன் சிங்கப்பூர்ப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, இங்குள்ள வாழ்க்கை பற்றி மேலும் அறிந்துகொள்ள முனைப்புடன் இருந்ததைக் கண்கூடாகக் காண முடிந்தது. “இவ்வாண்டு சிங்கப்பூர்ச் சிறுகதைத் தொகுப்பு நூல்களின் விற்பனை முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு, வரலாற்றுப் புத்தகங்களின் விற்பனை அமோகமாக இருந்தது. அயலகத் தமிழர் தின மாநாட்டிற்கு வந்திருந்தோரும் இங்கு வந்து சிங்கப்பூர் நூல்களை வாங்கிச் சென்றனர். சிங்கப்பூர்ப் புத்தகங்களை இங்குக் கொண்டு வருவதற்கு நமது அரசாங்கம் எடுத்துள்ள இந்தப் பெரும் முன்னெடுப்பைப் பற்றி இங்கு வரும் வாசகர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். அதுகுறித்து அவர்கள் மிகவும் பெருமைப்பட்டனர். சிங்கப்பூர் அரங்கிற்கு வந்த சிறுவர்களுக்கு சிங்கப்பூர்க் கொடி வழங்கப்பட்டது. அவர்கள் சிங்கப்பூர்க் கொடியை அசைத்தவாறு விளையாடி மகிழ்ந்தனர்.

உள்ளூர் எழுத்தாளர்களின் பல நூல்கள் புத்தகக் காட்சியில் அறிமுகமாயின. சில புத்தகங்கள் வெளியீடும் கண்டன. பொன்.சுந்தரராசுவின் சம்செங், இளவழகன் முருகனின் பீஷ்மர், சகுனி, பரசுராம், மணிமாலா மதியழகனின் தேத்தண்ணி, அழகு நிலாவின் சங் கன்ச்சில், சித்ரா ரமேஷின் நிழல் நாடகங்கள், மா.அன்பழகனின் செம்பியன் திருமேனி, கவிஞர் இன்பாவின் கடல் நாகம் பொன்னி, மலையரசி சீனிவாசனின் முகிழ், நா.ஆண்டியப்பனின் முல்லும் மலரும், பிரேமா மகாலிங்கத்தின் நீர்த் திவலைகள், கவிஞர் கா.து.மு.இக்பாலின் காவின் குரல்கள், கவிஞர் பிச்சினிகாடு இளங்கோவின் வெளிச்ச தேவதைகள், தமிழ்ச்செல்வியின் காற்றலையில் ஆகிய நூல்கள் அறிமுகம் கண்டன. அதோடு ஷாநவாஸின் ருசி பேதம், சித்ரா ரமேஷின் வெண்மையின் நிறங்கள், ஜமால் சேக்கின் அசாபியா, மணிமாலா மதியழகனின் ஆழிப்பெருக்கு, வண்ண வண்ண ஆர்க்கிட், வாலோடு பிறந்தவன், கருப்பு வண்ணப் பூனை, ஒற்றைக் கொம்பு குதிரை ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வார இறுதி நாள்களில் அலைமோதும் கூட்டத்தில் நாம் தொலைந்துவிடலாம். நேரத்தையும் நூல்களில் தொலைத்துவிடலாம். 17 நாள்களுக்கு நடைபெற்ற புத்தகக் காட்சிக்குச் சுமார் 1.5 மில்லியன் பேர் வருகை புரிந்தனர். புத்தகங்களின் விற்பனை 2.9 மில்லியன் வெள்ளியைத் தாண்டியது.

கொட்டிக் கிடக்கும் புத்தகங்களை வாசித்துப் பார்த்து வாங்கவேண்டும் என வந்த கூட்டத்தினரைக் காண கண்குளிர்ந்தது. தமிழ்நாட்டு வாசகர்களிடையே சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் உள்ளூர்ப் புத்தகங்களும் இருக்கும் ஆதரவைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்துபோனது.