வினோதப் பரப்புரைகள்

0
75
ஜமால் சேக்

சிங்கை வாசிகளுக்கு காலங்கள் தோறும் அரசாங்கம் மக்களிடம் சென்று சேருமாறு மாற்றங்கள் வேண்டிச் செய்யும் செயல்முறைப் பரப்புரைகள் புதியதல்ல. உதாரணத்திற்கு அண்மைக்காலத்திய “சுத்தமான சிங்கப்பூர்” விளம்பரங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இப்படிப்பட்ட அரசுப் பரப்புரைகள் பயனீட்டாளர்களுக்கு பெரும்பாலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும், சில சமயம் வேடிக்கையும் வினோதமும் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. சிங்கப்பூர் தனி நாடாக உருவாகும் முன்னரும், பின்னரும் ஆரம்பக் காலங்களில் தற்போதைய சிங்கப்பூரை உருவாக்குவதில் அக்காலத்தியப் பரப்புரைகள் மிகவும் உதவியிருக்கின்றன. அதே சமயம் அரசு நிர்வாகச் சீரமைப்பிற்காக மேற்கொள்ள வேண்டியிருந்த சில முயற்சிகள் மக்களிடம் எடுபடாமல், பலனின்றி தோல்வியில் முடிந்துள்ளன. சிங்கப்பூர் அரசும் நீக்குப்போக்காக நடந்துகொண்டு மக்களுக்கு ஏற்புடைமையற்ற சில அரசுப் பரப்புரைகளை பிற்பாடு விலக்கிக்கொண்டுள்ளது. அப்படி விலக்கிக்கொள்ளப்பட்ட சில பரப்புரைகள் இக்காலத்திய இளையர்களுக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அரசு நிர்வாகச் சீரமைப்பிற்காக மேற்கொள்ள வேண்டியிருந்த சில முயற்சிகள் மக்களிடம் எடுபடாமல், பலனின்றி தோல்வியில் முடிந்துள்ளன.

1966-68களில் தெற்காசிய நாடுகளில் நெல் விளைச்சல் பருவ கால நிலை காரணமாகக் குறைந்து விட்டதாலும், தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளில் இராணுவ ஆட்சிகள் காரணமாகவும், வியட்னாம், பங்களாதேசில் உள் நாட்டுப் போர் காரணமாகவும், அரிசி உற்பத்தியும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதால், அரிசித் தட்டுப்பாடு அதிகரித்து, அரிசியின் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் 1967ல் நிதி அமைச்சராக இருந்த கோ ஹெங் ஸ்வீ சிங்கப்பூருக்கு 22 மில்லியன் டாலர் கூடுதலாக அரிசி இறக்குமதிக்கு என அன்னியச் செலாவணி செலவழிக்க வேண்டியிருந்ததால், உலகச் சந்தையில் அரிசி விலை குறையும் வரை அரிசிக்கு மாற்றாக கோதுமையை உண்ண மக்களைப் பழக்கலாம் என்று அரசு முடிவெடுத்தது. அதிகம் கோதுமை உண்ணுங்கள் (Eat More Wheat) என்கிற பரப்புரை செய்யப்பட்டது. NTUC, அரசு விழாக்கள் ஆகியவற்றில் கோதுமையால் செய்யப்பட்ட உண்ணும் பண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. அரிசி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக இது அமைந்தது.

அடிப்படையில் சீனர்கள், மலாய்கள் மற்றும் தமிழர்கள் ஆகியோர் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டவர்கள். கோதுமையைப் பயன்படுத்தும் வழக்கம் அவர்களிடத்தில்லை. விலக்காக சீன மற்றும் இந்திய நாடுகளில் வடபகுதிகளில் கோதுமை விளைச்சல் அதிகமிருப்பதால், மேற்படி நாடுகளின் வடபகுதி மக்கள் கோதுமையை முக்கிய உணவாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முன்பே சிங்கப்பூரில் குடியேறிய சீனர்களும், இந்தியர்களும் அரிசியை முக்கிய உணவாகக் கொள்ளும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். 1961ல் ஆரம்பிக்கப்பட்ட பிரைமா மாவு ஆலை அப்போதுதான் தனது கோதுமை மாவு உற்பத்தியை முழு அளவில் எட்ட ஆரம்பித்திருந்தது. உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பிரைமா ஆலைதான் இன்றைக்கும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய உணவுமாவு ஆலை.

உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பிரைமாஆலைதான் இன்றைக்கும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய உணவுமாவு ஆலை.

மக்களிடம் கோதுமையைப் பயன்பாடு பற்றிய பரப்புரைகள் எடுபடவில்லை. கோதுமையைப் பயன்படுத்திச் சமைக்கத் தெரியாததால் அதை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரவில்லையென்று உத்தேசித்து, கோதுமையை அடிப்படையாகக் கொண்ட உணவுப்போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசுத்தொகைகளும் அறிவிக்கப்பட்டன. சீன, மலாய், இந்திய மற்றும் வெளினாட்டவர்களுக்கென நடத்தப்பட்ட போட்டியில் மூன்று ஆண்கள் ஒரு பெண் வெற்றி பெற்றிருந்தனர். கோதுமை விலை மலிவானது என்கிற அடிப்படைக்குறிக்கோளை முன்வைத்து, 2 வெள்ளிக்குள் ருசியான ஒரு கோதுமை உணவுப்பண்டத்தைத் தயாரிக்கவேண்டும் என்பது தான் போட்டி. மிகுந்த விளம்பரங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் நடத்தப்பட்ட போட்டிகளின் பின்பும், அரிசிப் பயன்பாடு குறையவே இல்லை. அரசு மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தியது. முடிவில் மொத்தம் 2 சதவீதத்திற்கும் குறைவானோரே கோதுமைக்கு மாறியிருக்கின்றனர் என்று அறிந்தனர். காரணம் அறிய முயலுகையில், காலங்காலமாகப் பழக்கத்தில் உள்ள அரிசிப் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ள முடியாததாலும், கோதுமை உணவுப்பண்டங்கள் தயாரிக்க கூடுதலான உபரிப்பொருட்கள் தேவைப்படுவதும், அதைத் தயாரிக்க ஆகும் கூடுதலான நேரமும், உண்மையில் அரிசிக்கு ஆகும் செலவைவிடக் கூடுதலாக ஆகிறது என்பதைக் கண்டவுடன், அரசு மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தது. நல்லவேளையாக, பசுமைப்புரட்சி என்று, விளை நிலங்களில் செயற்கை இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தி அரிசி உற்பத்தி அதிகரித்தவுடன், அரிசித் தட்டுப்பாடு நீங்கிவிட்டது. அரசும் கோதுமை அதிகமாகப் பயன்படுத்தச் சொல்லிச் செய்த பரப்புரையை விலக்கிக்கொண்டுவிட்டது.

1974களில் இதேபோன்ற மற்றுமொரு பரப்புரை, Operation Snip Snip, நீண்ட தலைமுடியைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிச் செய்யப்பட்டது. ஹிப்பிக் கலாச்சாரம் பரவிக்கொண்டிருந்த காலத்தில் மேற்கத்தியக் கலாச்சாரம் இங்கு பரவி விடக்கூடாது என்கிற காரணத்தால், நீண்ட முடி வைத்திருப்பவர்கள் எந்த அளவு முடி வளர்க்கலாம், என்று படங்களுடன் விளம்பரம் செய்யப்பட்டது. சிங்கப்பூருக்கு சுற்றிப்பார்க்க, வேலை நிமித்தமாக மற்றும் வியாபாரம் செய்ய வருவோர்க்கும் இது பொருந்தும். வேலையிடங்களில் முடியைக் குறைக்க மறுத்தவர்கள் வேலை நீக்கம் செய்யப்படப் பரிந்துரைக்கப்பட்டது. நீள முடி வைத்திருந்ததால் அதைக்குறைக்க மறுத்து ராக்-அன்-ரோல் பாட வந்த The Bee Gees and Led Zeppelin வெளினாட்டுக்குழுக்கள் தமது கச்சேரிகளை ரத்து செய்த கூத்தும் நடந்தது. டிவி ரேடியோக்களில் பாப் மற்றும் ராக்-அன்-ரோல் பாடல்கள் கூட தடைசெய்யப்பட்டிருந்தது. மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்த பரப்புரையும் பிற்பாடு கைவிடப்பட்டது.

இதன் பிறகு, மாண்டரின் பேசுவோம் (Speak Mandarin) என்கிற முயற்சி முன்னாள் பிரதமர் திரு.லீ க்வான் யூ அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. சீனாவின் வளர்ச்சியையும் அது வளர்ந்து எட்டப்போகும் உயரங்களையும் முன்னமே தொலைநோக்குடன் கணித்திருந்த அவர், சிங்கப்பூரர்கள் மாண்டரின் மொழி பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என விரும்பினார். கண்டோனீஸ் மற்றும் தியோச்யு வழக்கு மொழிகள் பேசும் தென்சீனத்து மக்கள் மிகுந்திருந்த சிங்கப்பூரில், சீன மத்திய அரசின் அரச மொழியான மாண்டரின் மீதான ஒரு வெறுப்பு அக்காலத்திய முதியோரிடம் இருந்தது. அதனால், மாண்டரின் பேசுவதில் விருப்பமின்றியும், அதே தருணம், தமது பிராந்திய பேச்சுவழக்கு மொழியான கண்டோனீஸையும், தியோச்யுவையும் பேசத் தடைவிதிப்பதாகவும் மக்கள் எண்ணலாயினர். அரசு ஆனால் தயங்காமல் தனது முயற்சியைத் தொடர்ந்தது. இதன் பயனாக காண்டோனீஸ் பாப் பாடல்கள் கூட தடை செய்யப்பட்டன, ஆனால் கொரியன்/ஜப்பானிய பாப் பாடல்கள் ஒலித்தன. இதனால் காண்டோபாப் எனப்படும் பாடல்கள் காண்டோனீஸ் பேசுவோர்க்கென தடைசெய்யப்படுகிறது என்கிற மனப்பான்மை உருவாகியது. ஆனாலும், நாளடைவில் சிறுகச் சிறுக எதிர்ப்புகள் குறைந்தன. ஆங்கிலமும் மாண்டரினும் சீன இளையர்களின் முக்கிய மொழிகளாகின. அரசின் முயற்சியால், இன்றைக்கு சுத்தமான மாண்டரின் பேசுவதற்கு இன்றைய சிங்கப்பூர சீன இளையர்கள் பழகிவிட்டிருந்தாலும், அவர்களால் தத்தம் தாத்தா பாட்டிமார்களுடன் அவர்களுக்குப் பரிச்சயமான பேச்சு வழக்கு பிராந்திய மொழிகளில் பேசமுடியவில்லை.

1950களில் சிங்கப்பூரில் மிதிவண்டிக்கு உரிம அடையாள அட்டையும் வில்லை வட்டையும் தரப்பட்டிருந்தது தெரியுமா உங்களுக்கு? ஆமாம், தற்போது நான்கு சக்கர வாகனங்களுக்கு உரிம அடையாளம் இருப்பது போலவே, அப்போது இருசக்கர மிதிவண்டிக்கு என உரிம அடையாள அட்டை உண்டு. ஒவ்வொரு மிதிவண்டியும் வாங்கும்போது அதைப் பதிவுசெய்தாக வேண்டும். அதன் உரிமையாளர் புகைப்படம் ஒட்டி ஒரு அடையாள அட்டையும், அந்த மிதிவண்டிக்கென ஒரு வரிசை எண்ணும் ஒதுக்கப்பட்டு, அது வில்லையாக மிதிவண்டியின் பின்சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இது இங்கிலாந்து அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி வந்தது. அக்காலத்தில் நகராட்சி மன்றங்களுக்கு வரி வசூலை அதிகரிக்க, மிதிவண்டிக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வருடாந்திர வரி வசூலிக்கும் வழக்கம் ஆங்கிலேய அரசுக்குட்பட்டிருந்த நாடுகளில், சுதந்திரம் அடைந்த பின்னரும் வழக்கத்திலிருந்தது. தமிழ் நாட்டிலும் ஏறக்குறைய எண்பதுகள் வரையில் இந்த சைக்கிள் உரிம வில்லை இருந்தது, ஆனால் அடையாள அட்டை கிடையாது. எரிபொருளில் ஓடும் இருசக்கர வாகனங்களின் புழக்கம் அதிகரித்தபின்னர், 1982ல் இருசக்கர மிதிவண்டிக்கான பதிவுமுறை சிங்கப்பூரில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மிதிவண்டிக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வருடாந்திர வரி வசூலிக்கும் வழக்கம் ஆங்கிலேய அரசுக்குட்பட்டிருந்த நாடுகளில், சுதந்திரம் அடைந்த பின்னரும் வழக்கத்திலிருந்தது.

சமீபத்தில் நிறுத்தப்பட்ட மற்றொரு உரிமம், தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பயன்பாட்டிற்கு வருடாந்திர உரிமம் மற்றும் வரி (Radio and Television License) வசூலிக்கும் வழக்கம். ஆங்கிலேயர் காலந்தொட்டு இருந்து வந்த வானொலிப் பயனாளர் உரிமக் கட்டணம், பிற்பாடு தொலைக்காட்சி வந்தபின்னர், அதற்கும் சேர்த்து ஒரே பயனாளர் உரிமக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள், உணவுக்கூடங்கள், வண்டிகளில் வானொலி அல்லது தொலைக்காட்சி பொருத்தியிருந்தால் அதற்கெனத் தனியாகவும் ஒருவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி பயனீட்டுக் கட்டணம் செலுத்தியாக வேண்டும். முன்பு வசதி படைத்தோர் மட்டுமே வானொலியும் தொலைக்காட்சியும் வைத்திருந்ததால், அதற்கென தனியாக கட்டணம் வசூலிக்கும் வழக்கம் இருந்தது. 2000வது ஆண்டுக்குப் பிறகு, ஏறக்குறைய 99 சதவீதம் பேர் வானொலியோ, தொலைக்காட்சியோ வைத்திருந்த காரணத்தால், கடந்த 2011ம் ஆண்டு இந்த பயனீட்டாளர் கட்டணம் மற்றும் உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

மாறிவரும் காலங்களுக்கேற்ப சிங்கப்பூர் அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு கொள்கைகளை வகுத்தும் நிலை நிறுத்தியும், தேவைப்பட்டால் நீக்கியும், திருத்தியும் வந்திருக்கிறது. சிலசமயம், அரசுகள் ஒரு கொள்கையை அமுல்படுத்துவதும், அவற்றைத் திருத்துவதும், பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வதும் சிங்கப்பூருக்கு மட்டும் வழக்கமானது அல்ல. பின்னொரு சமயங்களில், வேடிக்கை வினோதங்கள் நிறைந்த பரப்புரைகளை நினைவுகூறும் பொழுது, நமக்குள் எழும் ஒரு புன்னகையுடன் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது.