வாசிப்பனுபவம்

0
113
மஹேஷ் குமார்

எண்பதுகளின் இறுதி, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உடுமலைப்பேட்டையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கோமங்கலம் கிராமப் பகுதியில் சூரியகாந்தி, நெல், சோளம், பயறு போன்றவை பயிரிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அவ்வப்போது ஆங்காங்கே புகையிலையும் பயிரிடப்படும். நிலம் அதற்காகத் தயாராகி நாற்றுகள் நடப்பட்டு ஓரிரு வாரங்களில் முட்டைக்கோசுச் செடி போல பெரிய சாம்பல் நிற இலைகளுடன் விரிந்து வளரும். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கும் செடிகளை தண்டோடு வெட்டி இலைகளைச் சீவி எடுத்து, கொத்துக்கொத்தாகக் கட்டி கொடிகளில் தொங்கவிட்டு காயவைத்திருப்பதைப் பார்க்கலாம். இலைகள் சுருங்கி கருமை படர்ந்தபின் அவை எங்கு போகின்றன என்பது தெரியாது.

போலவே ஊருக்குள்ளே பல இடங்களில் சுவர்களில் பல்லடம் 10 AS போட்டோ பீடி, மங்களூர் கணேஷ் பீடி, கொடுவாயூர் மெ.ஷ.மு. செடி பீடி, சொக்கலால் சேட் பீடி, கேரள தினேஷ் பீடி, திண்டுக்கல் அங்குவிலாஸ் வாசனைப் புகையிலை, கலைமான் புகையிலை, TAS ரத்தினம் பட்டணம் பொடி, NC பட்டணம் பொடி போன்ற புகையிலை சார்ந்த லாகிரிப் பொருட்களின் விளம்பரங்களைக் காணலாம். ‘உழைக்கும் மாந்தருக்கு ஊக்கம் அளிப்பவை’, ‘ஓய்வில்லா உழைப்பாளிகளுக்கு’, ‘போடப் போட நாடுவது; நாடி நாடிப் போடுவது’ என்பது போன்ற கவர்ச்சியான வாசகங்களுடன் விளம்பரங்கள் திரைப்பட அரங்குகளிலும் இடைவேளையின் போது காட்டப்படும். கூடவே ‘அரங்கினுள் பீடி சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களுக்கு அனுமதி இல்லை’ என்ற அறிவிப்பும் வரும்.

மேலும் பல்லடம் பகுதியில் பீடி சுற்றும் தொழில் இன்று வரை ஊக்கத்துடன் இயங்கிவருகிறது. பீடி சுற்றத் தேவையான டெண்டு இலை மத்தியப் பிரதேசத்திலிருந்து வரும். அவற்றைக் கொண்டு வரும் ஏஜண்டுகள், பீடி சுற்றும் தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியிருக்கும் பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை என்று பல இடங்களிலும் அமர்த்தி இருப்பார்கள். பெரும்பாலும் குடும்பத்தின் பொருளாதாரத்தை சிறிது உயர்த்த பெண்கள் ஏஜண்டுகளிடமிருந்து பொருட்களை வாங்கி வீடுகளுக்குக் கொண்டுவந்து பீடி சுற்றிக் கொடுப்பர். பீடி சுற்றுவதை ஒரு கலையாகப் பயின்றவர்களின் வேலையைப் பார்ப்பதே ஒரு சுவையான அனுபவமாக இருக்கும்.

பேராசிரியர் இரா.காமராசு அவர்களின் ‘புகையிலை: வரலாறும் வழக்காறும்’ நூலைப் படித்தவுடன் மேற்சொன்ன யாவும் நினைவில் கிளர்ந்து எழுந்தன. ஒரு நூலை வாசிக்கும்போது இவ்வாறாக நினைவின் அடித்தட்டில் உறைந்து போன அனுபவங்களும் காட்சிகளும் மேலெழுமானால் அதுவே அந்நூலின் வெற்றி என்று கூறலாம்.

இந்த ஆய்வு நூலில் மக்களிடம் புழங்கும் நுகர்வுப் பொருள் எவ்வாறு சமூகத்தின் பண்பாட்டுடனும் கலாச்சாரத்துடனும் பின்னிப்பிணைந்து தொடர்கிறது என்பதை மிக அழகாக, தெளிவான விளக்கங்களுடன் கூறியிருக்கிறார். அந்த வகையில் உலகில் புகையிலை எங்கு முதன் முதலில் பயிரானது, மக்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்று தொடங்கி, அது உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய விதம், காலனி ஆதிக்கத்தின் பங்கு, அதன் வணிக வளர்ச்சி என்று பல்வேறு அம்சங்களைப் பேசியிருக்கிறார்.

புகையிலை எவ்வாறு, எங்கெல்லாம் பயிரிடப்படுகிறது, நிலத்தைத் தயார் செய்து விதைப்பதிலிருந்து அறுவடை வரையிலான பல்வேறு படிநிலைகள், அது சார்ந்த பாதுகாப்பு முறைகள், அதைக் கையாளுதல், பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் என்று விளக்கப் படங்களுடன் மிகத் தெளிவாகப் விளக்கியிருக்கிறார். பின்னர் புகையிலை ஒரு நுகர் பொருளாகப் பல்வேறு வடிவங்களைப் பெறுவதைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார்.

மேலும், புகையிலை தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரிவாக எழுதியுள்ளார். புகையிலையின் தோற்றம் குறித்த பல நாடுகளில் பலவிதமாகப் பேசப்படும் வாய்வழிக் கதைகள், புகையிலை குறித்த சித்தரிலக்கியங்கள், தனிப்பாடல்கள், சீனிச்சக்கரைப் புலவரின் ‘புகையிலை விடு தூது’, குஜிலி இலக்கியத்தில் ‘மூக்குத்தூள் புகழ்பதம் இதழ்பதம்’ போன்றவற்றில் புகையிலையின் தன்மைகளையும் அதை நுகர்வதில் கிடைக்கும் இன்பம் பற்றியும் பேசியிருப்பதை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல ஓசிப் பொடி கேட்பவர்களைப் பற்றிய நையாண்டிப் பாடல்கள், புகையிலைப் பொருட்களின் தீமையைப் பேசும் பாரதிதாசனின் பாடல்கள் என்று பல்வேறு குறிப்புகளும் உள்ளன. இவை தவிர நாட்டார் தெய்வ வழிபாடுகளில், பழமொழிகள், சொல்லாடல்களில், அன்றாட வாழ்வில் புகையிலையின் பயன்பாடுகள் குறித்தும் பல்வேறு சுவையான செய்திகள் நூலில் உள்ளன.

இதே ஆசிரியரிடமிருந்து அடுத்து வெற்றிலை குறித்தும் ஒரு நூல் தயாராகி வருகிறது. இது போன்ற தாவரவியல் சார்ந்த தமிழ் இலக்கியத்துடனும் உள்ள தொடர்புகளையும் காட்டும் ஆய்வு நூல்கள் வெளிவருவது அரிது.