நூல் அறிமுகம்

0
131
ஷாநவாஸ்
வெண்மையின் நிறங்கள் / சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர் சிறுகதைகள் உலகத் தரத்தில் இருக்கின்றனவா? இந்த உலகத்தரம் என்பதற்கான அளவுகோல்தான் என்ன? தமிழ்நாட்டின் சிறுகதைகளுடன் ஒப்பீட்டளவில் கதைகளின் இடத்தை மதிப்பீடு செய்வதா அல்லது வாழும் இடத்தின் வாழ்க்கை சார்ந்த பார்வைகளா என்றால் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் வாழும் இடத்தின் கதைகள்தான் என்று சொல்லிவிடலாம்.

இன்று வடிவ ரீதியாகவும் சொல் முறை பாணியிலும் புதிய போக்கையும் பெரிய மாற்றத்தையும் கண்டடைந்திருக்கிறோம். இப்போது சிங்கப்பூரில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புக்களை இந்த புதிய உத்திமுறை கொண்டு அளவிடுவது வேண்டுமானால் சரியாக இருக்கும்.

சித்ரா வெண்மையின் நிறங்களை அவரின் இலக்கிய வாசிப்பின் தாக்கம் வெளிப்படாத வகையில் சுயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிங்கப்பூர் சமூகத்தின் அசலான வாழ்க்கையை எளிய சொல் முறையில் பரபரப்பு மிக்க இந்நகரத்து வாழ்க்கையின் அவலங்களை செறிவோடு படைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க கதைகளாக திரை வளை முருகையன் இந்நகரத்தின் பள பளப்புகளுக்கிடையே ஏழ்மையில் வாழ்ந்து சொல்ல முடியாத ஏமாற்றங்கள், அவமானங்களுடன் மடியும் காதாபாத்திரத்தை உயிரோட்டமாக படைத்திருக்கிறார்.

காகிதக் காளான்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூரில் வாழ்ந்த வீட்டில் அந்தக் காலத்து மனிதர்களின் இயக்கத்தில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

அமுதமாகி பொழிக கதையில் நகரத்து நடுத்தர வர்க்கம் பணியிடச் சூழலில் சிக்கி ஒடுங்கும்போது விளிம்பு நிலை மனிதர்கள் சுயம்புவாக சுதந்திர உணர்வை நாடுவதை மலேசிய சிங்கப்பூர் பாலம் கடக்கும் வேலைச் சூழலை பின்புலமாகக் கொண்டு எழுதியிருப்பது மனதில் நிற்கிறது.

ஈர நெருப்பு ஒரு பரிசோதனைக் கதை. கனவார்ந்த சந்தர்ப்பத்தை மனம் நாடும் தன்மையோடு ஈர்க்கிறது. கறுப்பு வெள்ளை, பூ முகம் போன்ற கதைகள் நிறம் பற்றிய இழிவான பார்வைகள் வளர்ந்த நாடுகளில் கூட நவீன மனிதர்களின் இறுகிய கள்ளத்தனங்களை அடையாளப்படுத்துகின்றன. தனக்கு நேர்ந்த அனுபவத்தை படைப்ப்பாக்கும்போது அது வெறுமனே தெளிவான விளக்கக் கதையாக மாறிப்போய்விடாமல் நுண் விவரிப்புகள் மூலம் கலையாக மாற்றியிருக்கிறார்.

அந்தந்த கதைக்கு மட்டுமே உரித்தான மனிதர்களின் செயல் பாடுகளும் அதிலிருந்து சித்ரா உருவாக்கியிருக்கும் பார்வைக் கோணங்களும் கச்சிதாமாக இருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அழமும் அகலமும் கொண்ட தேர்ந்த படைப்புகள், சித்ராவின் மிக முக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லலாம்.

சேஞ்ச் அலி / முஸ்தஃபா

1997இலும் 2008இலும் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காலங்களில் சிங்கப்பூர் நாணய மாற்றுத் தொழில் சந்தித்த சவால்கள் ஏராளம். உலக வர்த்தகத்தில் ஏற்படும் விளைவுகளை கவனப்படுத்திக்கொண்டு செயல்படும் கெட்டிக்காரர்கள் நிறைந்தது சிங்கப்பூர் நாணய மாற்று கடைகள்.

முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த குறுகிய கால ஊக வணிகர். உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகளில் தைரியமான சாகசங்களுக்கு பெயர் பெற்றவர். தென்கிழக்காசியாவில் அவரால் ஏற்பட்ட பாதிப்புகளும், நாணய மாற்று வணிகம் எதிர்கொண்ட சவால்களும் அதிகம். இதைப் பற்றி ஹாஜி முஸ்தபா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் தவறாக குறிப்பிட்ட ஆண்டை திருத்தினார்கள். இவ்வளவு துல்லியமான நினைவு சக்தியை நான் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.

சிங்கப்பூர் பணமாற்று வர்த்தகம் குறித்து அவர்களை எழுதுமாறு கேட்டேன். மாதம் ஒருமுறை சிராங்கூன் டைம்ஸ் இதழில் அவர்களிடம் பதிவு செய்த வாய்மொழிப் பதிவுகளை குறிப்பாக எடுத்துக் கொண்டு அவர்களையே திருத்தம் செய்யச் சொன்னேன். மேலும் தகவல்களை சேர்த்து திருத்தம் செய்து கொடுத்தார்கள்.

நாணயம் என்பது நாணய மாற்றுத் தொழிலில் எவ்வளவு முக்கியம் என்பதில் ஆரம்பித்து அவர்களுடைய அனுபவத்தில் ஏன் நாணய மாற்று வியாபாரிகள் பெருமதிப்பு தாள்களுக்கு கூடுதல் தொகையையும் சிறு மதிப்பு தாள்களுக்கு குறைந்த விலையையும் நிர்ணயம் செய்கிறார்கள்; குறிப்பாக நாணய மாற்றுத் தொழிலில் தமிழ் முஸ்லிம்கள் பெருமளவு ஈடுபாடு கொள்ள காரணங்கள் போன்றவற்றை விவரமாகச் சொன்னார்.

1838க்கு முன் சிங்கப்பூருக்கு வந்த நகரத்தார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு என்னும் நூலை எழுதிய அ.இராமநாதன் செட்டியார் கூற்றுப்படி, தங்களுக்குரிய கொடுத்து வாங்கும் தொழிலை மார்க்கெட் ஸ்திரீட்டில் மிகச்சிறப்பாக நடத்திவந்திருக்கின்றனர். அங்கு இப்போது தமிழ் முஸ்லிம்களின் நாணய மாற்று வியாபாரம் நிலை கொண்டதின் பிண்ணனி என்ன? எத்தனையோ பொருளாதார நெருக்கடியிலும் சிங்கப்பூர் வெள்ளி முதல் நிலையில் தொடர்ந்து இருப்பதன் காரணம் என்ன? கள்ள நோட்டுப் புழக்கத்தில் அமெரிக்க டாலர்களை கையாளும் திறன் பெற்ற சிங்கப்பூர் நாணய மாற்று வியாபாரிகள், ஹவாலா தொழிலை சட்டப் பூர்வமாக கையாள சிங்கப்பூரில் உள்ள வங்கி நடைமுறைகளின் கட்டுப்பாடுகள் என்று பல செய்திகளைச் சொன்னார்.

கவிஞர் வைரமுத்துவுடன் பயணம் செய்த போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செய்தியை பதிவு செய்த போது கவிஞர் சென்னை இல்லத்தை தொடர்பு கொண்டு அவர் நலமாக இருக்கும் செய்தியை தெரிவிக்க எடுத்துக் கொண்ட பிரயத்னங்களை கூறும்போது நெகிழ்ந்து விட்டார்கள். தன் ஊழியர் கொள்ளை சம்பவத்தில் சுடப்பட்டு இறந்தவுடன் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு உதவி வருவதற்கு நானே சாட்சியாக உள்ளேன். நாணய மாற்றுத் தொழிலில் உள்ள சில சங்கேத மொழிகளை பதிவு செய்ய நானே தயங்கியபோது உண்மைகளை உரத்துச் சொல்வதற்கு எந்த தயக்கமும் தேவையில்லை என்றார். இன்னும் அவர்களிடம் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன.

ஆதி நிலத்து மனிதர்கள் / ஹேமா

ஜப்பானின் ஆக்கிரமிப்பு பற்றிய வரலாற்று நூல்கள் இந்த தீவுக்கு வெளியில் வாழும் எழுத்தாளர்களால் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டவை. ஜப்பான் ஆக்கிரமிப்பு காலத்தில் சிங்கப்பூர் அனுபவித்த வன்முறையின் உச்சத்தை, போர்க் குழுக்களின் வெறியாட்டத்தை, குரூரமான தண்டனை முறைகளை ஹேமா தன்னுடைய முதல் நூல் வாழை மர நோட்டில் பதிவு செய்திருந்தார். சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் பரவலாக வரவேற்கப்பட்டு வாசிக்கப்பட்ட நூல் அது.

ஆதி நிலத்து மனிதர்கள் கட்டுரையை அவர் சிராங்கூன் டைம்ஸில் எழுத முனைந்தபோது விரிந்த வரலாறும், புலம்பெயர்வுகளும் கொண்ட தென் கிழக்காசிய பண்டைய நிலம் பற்றிய முறையான, நேரடியான வரலாற்றுப் பதிவே இல்லை என்ற நிலையில் எப்படி எழுதப்போகிறார் என்ற ஆசிரியர் குழுவின் சந்தேகத்தை இரண்டாவது அத்தியாயத்தை தொடரும்போதே போக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிங்கப்பூரை பற்றி வழக்கமாகச் சொல்லப்படும் இரண்டு பூர்வீகக் கதைகள் என்று செஜரா மலாயு (Sejarah Melayu) புனைவு நூலும், இரண்டாவதாக போர்ச்சுக்கீசிய வறலாற்றாளர் டாம் பிரஸ் எழுதிய சூமா ஓரியண்டல் (The Suma Oriental of Tomé Pires) என்ற சமூகத் தகவல்கள் அடங்கிய பெருந்தொகுப்பு நூலிலும் பதிவு செய்யப்பட்டவை.

இரண்டிலும் மையச் சரடாக வரலாற்று பதிவுகளையும் மக்களிடையே புழங்கும் வழக்காறுகளையும் பல நூல்களிலிருந்து இணைத்து பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என்று சொல்வது பரமேஸ்வரரைத்தான் என்று தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இரண்டு அத்தியாயங்களில் தான் அறிந்தவற்றை எழுதி, இதில் நிகழ்ந்த ஆய்வுகள் சார்ந்து மேலே வாசித்து முன் செல்ல விரும்பும் வாசகர்களின் முடிவுக்கு விட்டிருக்கிறார்.

1382இல் சீனப் பயணி வாங்-தா-யுவன் (Wang-Da-Yuan) நேரில் பார்த்து எழுதியிருக்கும் குறிப்பில் சிங்கப்பூரை Tan-Ma-Hsi) என்று குறிப்பிடுகிறார். தெமாசிக் என்ற பெயரை முதலில் முன் மொழிந்த அவரின் பதிவுகளை மேலதிகமாக விரிவாக எழுதியிருக்கிறார். இணையத்தை முழுதுமாக அவர் தரவுகளுக்கு பயன் படுத்தவில்லை என்பதை இந்நூலை வாசிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். வரலாற்று ஊகங்கள் முன்பிருந்த வரலாற்றுச் சித்திரத்துடன் பொருந்தக்கூடியவையாக, அதேபோல பிற்கால வரலாற்றுச் சித்திரத்திற்கும் வரலாற்றிலுள்ள இடைவெளிகளை நிரப்பி முழுமையான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தென் கிழக்காசிய ஆதி நிலத்தின் வரலாற்றினுள் யாரும் தங்கள் வரலாற்றை எழுதிக் கொள்ள முடியாது. மிக மிகக் குறைவான தகவல்களின் அடிப்படையில் பெரும்பாலும் ஊகங்களாவே சிங்கப்பூர் வரலாறு எழுதப்பட்டிருப்பதாக காலம் சென்ற திரு.பால பாஸ்கரன் அடிக்கடி குறிப்பிடுவார்.

இந்நூலில் இடபெற்றுள்ள பண்டைய இடங்களின் பெயர்களை எப்படி மிகக் கறாராக வரையறை செய்து கட்டுரையை செம்மைப்படுத்துவது என்ற குழப்பம் ஒவ்வொரு முறையும் வரும். ஹேமா அதற்கான தரவுகளை சேகரித்து தன் முடிவில் குறிப்பிட்ட அல்லது அதற்கு நிகரான சொல்லை பதிவு செய்துள்ளார். இதுவரை வெளிவந்த வரலாற்று நூல்களில் பெயர்ச் சொற்களின் உச்சரிப்பில் ஏதும் விவாதம் நிகழவில்லை. இந்த நூல் அந்த விவாதங்களை துவக்கி வைக்கும் என்று எண்ணுகிறேன்.

கால ரீதியாக கட்டுரைகளை எழுதும்போது நூல்களை முழுமூச்சாக வாசித்து சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதிக்கொண்டு அவற்றைப் பற்றி பிறரிடமும் விவாதித்த அவர் கடும் உழைப்பை நான் அறிவேன். குறைவான ஆதாரங்களிலிருந்து ஒரு வரலாற்றை ஊகித்து எழுதி தொகுத்த பிறகு எஞ்சியவற்றை எழுதும் பணி இன்னும் மிச்சமிருக்கும்தானே?!