இல்லங்களில் தமிழ் இருக்குமானால்..

பொன்.சுந்தரராசு

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ டிசம்பர் மாத இதழில் நண்பர் திரு.சிவானந்தம் நீலகண்டன் ‘இல்லத்தில் தமிழ் இல்லாமலானால்!..’ என்று தலைப்பிட்டு எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சிவனானந்தம் நற்திறன் கைவரப்பெற்ற கூர்மதி படைத்தவர், சிந்தனையாளர், எழுத்தாளர், திறனாய்வாளர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தாம் படித்து இன்புற்ற நல்ல நூல்களின் சாரத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பண்புடையார். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்: 322) என்று திருவள்ளுவரானார் பகிர்ந்துண்ணுதலின் மாண்பை அறத்துப்பாலில் அருமையாக அறிவுறுத்துகிறார். அவர் உண்ணக் கிடைக்கும் உணவைப் பிறருடன் பகிர்ந்துண்பது அறவோர் காட்டும் அறங்களிலெல்லாம் மேலானது என்பதை குறளில் வலியுறுத்துகிறார். வயிற்றுக்கு உணவு காய், கனி, தானியங்களெனின் அறிவுக்கு உணவு அரிய நூல்கள் தரும் வளம்நிறை, செறிவுநிறைக் கருத்துக் கருவூலங்கள் அல்லவா? வயிற்றினும் மேலானது தலை. அந்தத் தலையை அழகுதமிழ்க் கட்டுரைகளால் வாரி ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடிபட்டிருக்கும் சிவானந்தம் அவர்களையும் அவரையொத்த ஏனையோரையும் பாராட்டுவது மெத்த பொருந்தும். சிவானந்தம் எழுதிய கட்டுரைக்குப் பதில் சொல்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அக்கட்டுரை என் சிந்தனையைக் கிளறியதால் ஏற்பட்ட விளைவுதான் இக்கட்டுரை.

இல்லத்தில் தமிழ் இல்லாமலானால்!.. என்ன விளைவு ஏற்படும் என்பதைத் தகுந்த தரவுகள்வழித் தம் அனுபவத்தையும் இணைத்துப் பதிவு செய்திருந்தார் திரு.சிவானந்தம். ‘இல்லங்களில் தமிழ் இருந்தால் ஏற்படும் என்னென்ன நற்பலன்கள் ஏற்படும் என்பதையொட்டி என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளை உள்ளடக்கியது எனது அனுபவம்!

உலகம் அறியாத ஒன்பது வயதுச் சிறுவனாக 1956இல் சிங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். படிக்க வைப்பதற்காக என் தந்தையார் என்னை அழைத்தார். தமிழ்ப் பள்ளிகள் தழைத்துச் சிங்கை மண்ணில் தமிழ்மொழி செழித்திருந்த காலம் அது! என் தந்தையார் என்னை ஒரு தமிழ்ப் பள்ளியில் சேர்த்து கற்றலுக்குப் பிள்ளையார்சுழி போட்டார். அது முதல் ‘சீனியர் கேம்பிரிட்ஜ்’ என்று அக்காலத்தில் அழக்கப்பட்ட பொதுக்கல்விச் சான்றிதழ் பெறும்வரைத தமிழ்வழிக் கல்வியே தொடர்ந்தது. அதன்பின் தமிழ்கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. பின்னாளில் 1990களுக்குப் பிறகுதான் அஞ்சல்வழிப் பட்டக் கல்வியாகக் காமராசர் பல்கலைக் கழத்தில் தமிழில் இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். 1975ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியும் இரண்டாம்மொழியாக மலாயும் பயின்ற சரோஜாவை மணம் புரிந்தேன். எங்களுக்கு ஆஸ்திக்கோர் ஆணும் ஆசைக்கோர் பெண்ணும் பிறந்தனர். அவர்களுக்கு முறையே அருளானந்தன், கவிதா என்று பெயரிட்டு மகிழ்தோம்.

பிள்ளைகளின் கல்வி நிலை:

பிள்ளைகள் இருவரும் ஆங்கிலப் பள்ளிகளில் பயின்றனர். அங்குத் தமிழ் இரண்டாம் மொழியாகக் (இப்போது தாய்மொழிக்கல்வி என்று அழைக்கப்படுகிறது) கற்பிக்கப்பட்டது. தொடக்கநிலை முதல் தொடக்கக் கல்லூரி வரை மகன் அருளானந்தன் தமிழ்மொழியில் முதல்நிலை மாணவனாகத் திகழ்ந்தான். கவிதா A நிலை மதிப்பெண்கள் பெற்று வந்தார். நான் தமிழாசிரியராக இருந்ததால் தமிழ் உச்சரிப்பையும் கட்டுரை எழுதுவதையும் முறையாகக் கற்றுக் கொடுத்தேன். பின்னர் அவர்களாகவே கற்றுத் தேர்ந்தனர். தமிழில் ஐயம் ஏற்படும்போது மட்டும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுடைய ஐயங்களைத் தீர்த்து வைப்பேன். என் தமிழாசிரியர் தகுதியும் புகழ்பெற்ற தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையும் அவர்கள் ஆர்வத்தோடு தமிழ் பயில ஊக்குவிப்பாக அமைந்திருக்கலாம்! இருவருமே உச்சரிப்புப் பிழை இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடு தமிழ்ப் பனுவல்களை வாசிக்கும் ஆற்றலுடையோராய் வளர்ந்தனர்.

இல்லச்சூழல்:

எங்கள் குடும்பம் சிறியது. நான், என் மனைவி, தந்தையார், பிள்ளைகள் இருவர். இல்லத்தில் எல்லாரும் தமிழில்தான் பேசுவோம்; தமிழில்தான் வாதிடுவோம்; தமிழில்தான் சண்டையிடுவோம்; தமிழில்தான் பேசி மகிழ்வோம்! என் மனைவி சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மலாய்ச் சொற்களும் சிற்சில சீனச்சொற்களும் கலந்த தமிழில் பேசுவார். ஹொக்கியன் மொழி ஓரளவு அறிவார். மலாய்மொழி நன்கு அறிந்தவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நான் அவர் பேசும் உள்ளூர் வழக்கு மொழியிலிருந்துதான் பல சொற்களும் சொற்றொடர்களும் கற்றுக்கொண்டேன் என்று சொல்ல வேண்டும். அவர் பேசும்போது இயல்பாகவே மற்ற மொழிச் சொற்கள் வந்துவிழும்! அவர் ஜாகா பண்ணுகிறார், அவளுக்குதான் உந்தோங், ஐயோ பைசெலா! நம்பர் மேலே ஏறிச்சுட்டுச்சு, இரண்டுபேரும் பிரிந்து இருந்தார்கள். வெட்டுப்பட்டுப் போச்சோ தெரியல.. முதலிய சொற்களையும் தொடர்களையும் கேட்டு நான் குறித்து வைத்துக் கொள்வேன்.

பிள்ளைகள் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். இல்லத்தில் தமிழில் பேச வேண்டும் என்றோ, தமிழ்மொழி நம் உயிருக்கு நிகரானது, மற்றமொழியில் பேசக் கூடாது என்றோ எந்த ஒரு நெருக்குதலும் பிள்ளைகளுக்குக் கொடுத்ததில்லை. என் பிள்ளைகளோடு நானும் என் மனைவியும் தமிழில்தான் பேசுவோம். கூடவே என் தந்தையார் இருந்தார். அவர் தம் பேரப்பிள்ளைகளோடு பேசுவதும் ஏசுவதும் தமிழில்தான். (என் மகனோடு மட்டும் அவர் சண்டை போட்டதை நான் பார்த்ததில்லை!). என் மகனும் மகளும் தமிழில்தான் பேசுவார்கள்.

என் மகள் தன் உடன்பிறந்தானை ‘அண்ணே!’ என்றுதான் விளிப்பார். அவர்கள் உயர்நிலைக் கல்வி பெற்றபோதுகூட ஆங்கிலத்தில் பேசிக்கொண்டதில்லை. ‘மற்ற வீட்டுப் பிள்ளைகளைப்போல் என் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள மாட்டார்களா!’ என்று நான் ஏங்கியதும் உண்டு! என் பிள்ளைகள் தமிழில் பேசத் தயங்கியதே இல்லை. இன்றும் என் இல்லதில் பேசும்மொழி தமிழ்தான். என் மகளைச் சந்திக்க அண்மையில் ஆஸ்திரேலியா என்றிருந்தேன். என்னை வரவேற்றதும் பேசியதும் உபசரித்ததும் தமிழில்தான்! அவர் நல்ல தமிழில் பேசினார். கேட்க இனித்தது! ‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதை என் பிள்ளைகளின்வழி உணர்ந்து கொண்டேன். வாழ்க்கையில் அனுபவத்தின்வாயிலாக அறிவது ஆய்வின் மூலமாக அறிவதற்கு நேர் என்பதை வாழ்க்கைப் பாடம் எனக்கு உணர்த்தியது!

காலம் மாறலாம் கருத்து மாறுமோ!

என் பிள்ளைகள் உள்ளூரில் கல்வி கற்றது 1980களிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும். பின்னர், அவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுத் தேர்ந்தனர். ஆனால், தொலைபேசி வாயிலாக எங்களுடன் தமிழில் பேசுவது குறையவில்லை!

1970களும் 80களும் தமிழர்கள் இல்லங்களில் தமிழில் பேசிக்கொண்டிருந்த காலம்! ‘அக்காலக் கட்டத்தில் ஏறக்குறைய 80 விழுக்காட்டுக் குடும்பங்களில் தமிழர்கள் தமிழில் பேசினர்’ என்று கூறினார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் நீண்ட காலத் தலைவரும் தற்போதைய சங்க ஆலோசகருமான தி.சாமிக்கண்ணு அவர்கள். அப்போது திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களைத் தடையின்றிப் பார்க்க இயன்றது. ஈரச்சந்தைகளில் சந்தித்துக் கொண்டோர் ஒதுங்கி நின்று தமிழில் பேசிக் கருத்துப் பரிமாறிக்கொண்டனர். இல்லங்களுக்கு வரும் உறவினர்கள் தமிழில் பேசினர். விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றுள் கலந்துகொண்டோர் தமிழில் பேசினர். தமிழ் இசைக் கச்சேரிகள் அவ்வகை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. இவை எல்லாம் நடுத்தர, நடுத்தரத்திற்குக் கீழ்ப்பட்ட தமிழர்கள் இல்லங்களிலும் விழாக்களிலும்தான் இடம்பெற்றன. 20 விழுக்காட்டு மேல்மட்டத் தமிழர்கள் வீடுகளில் ஆங்கில மொழிதான் புழங்கியது; கோலோச்சியது. ஆங்கில மொழியே தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்தரமாக்க உதவியது என்று அவர்கள் நம்பினர்.

1990களுக்குப் பிறகு தமிழ்த்திரையரங்குகள் நகரச்சீரமைப்பிற்குத் தலைவணங்கி செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. 1982ஆம் ஆண்டு தமிழ் முதல்மொழியாகக் கற்பிக்கப்பட்ட உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மின்னிலக்கக் காலம் தொடங்கியது. பள்ளிகளிலும் இல்லங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன! தமிழ்மொழிப் பயன்பாடு சரியத்தொடங்கியது. தமிழ்மொழியை முதல்மொழியாகக் கற்று, தமிழ்மொழியின் வளத்தையும் மாண்பையும் மனத்தில் ஏற்றி, தமிழ்மொழியால் வாழ்வு பெற்று வாழ்ந்து வந்த என் போன்ற தமிழ்மொழி ஆர்வலர்கள் நெஞ்சம் பதைபதைத்தாலும் துயருற்றாலும் அலட்டிக் கொள்ளாமல் காலம் விரைந்து மாற்றத்தை ஏற்படுத்தியது. சிங்கப்பூரில் தமிழின் நிலை வீழ்ச்சியுறத் தொடங்கியது. அது தாழ்ச்சியுறாமல் இருக்க வேண்டுமானால் தமிழர்கள் தம் நிலையையை உணர்ந்து இல்லங்களில் தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதைத் தமிழர்களை வசதியாக மறந்தனர்.

திருமணமாகி என் மகள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த தொடக்கக் காலத்தில் ஒரு சமயம் நான் அங்கு சென்றேன். குடியேற்ற நுழைவுப் பகுதியில் என் நுழைவுச் சீட்டைச் சரிபார்ப்பகதற்காகச் வரிசையில் நின்றிருந்தேன். நான் என் மனைவியுடன் பேசிக்கொண்டு தென்கோடியில் நின்றேன். வடக்கோடியில் நின்று கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் கையை உயர்த்தி,

‘‘தமிழ். தமிழரா?’’ என்ற உரத்த குரலில் கேட்டார். வரிசையில் நின்றவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். நான் பொருட்படுத்தவில்லை.

‘‘ஆம். சிங்கப்பூர்’’ என்றேன்.

‘‘பிறகு பேசுவோம்,’’ என்றார். பயணத்திற்கு நேரமிருந்ததால் பின்னர் அவரோடு அமர்ந்து காப்பி அருந்திக்கொண்டே உரையாடி மகிழ்ந்தேன். அடையாளம் தெரியாத ஆஸ்திரேலிய நாட்டில் எங்களை அறிமுகப்படுத்தியது எது? நாங்கள் பேசியமொழி. தமிழ்மொழி!

‘‘நீங்கள் வீட்டில் தமிழில் பேசுகிறீர்களா?’’ என்று சில பெற்றோர்களிடம் நான் கேட்டதுண்டு.

அவர்கள் “இல்லை. நாங்கள் இருவருமே ஆங்கிலவழிக் கல்வி பெற்றவர்கள். தமிழ்மொழிமீது வெறுப்பு இல்லை. தமிழில் பேசக்கூடாது என்ற கருத்தும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவது வசதியாக இருக்கிறது’’ என்றார்கள். அக்கூற்று அப்போது எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. ஆனால், வகுப்பறையில் அத்தகைய இல்லங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்குத் தமிழ் அயல்மொழி போலத் தோன்றி, கற்றலில் சிரமம் ஏற்பட்டதை அறிந்து வருந்தினேன். பள்ளியில் பெற்றோர் சந்திப்பில் நிகழ்வுகளில் தமிழில் பேச வேண்டியதன் இன்றியமையாமையைத் தவறாமல் எடுத்துரைத்து நெடுகலும் வலியுறுத்தி வந்தேன். ஆனால், நவீன யுகத்தின் வளர்ச்சி, மின்னிலக்கத்தின் அதீதத் தோற்றம், பொருளியலை நோக்கமாகக் கொண்டு மாணவர் கல்வி கற்கத் தொடங்கியமை எல்லாமாகச் சேர்ந்து சுனாமிபோல் ஏற்பட்ட யுகப்புரட்சியில் தமிழர்கள் அறியாமலே குறைந்துபோன எத்தனையோ மரபுகளில் தமிழ்மொழிப் புழக்கமும் ஒன்றாகிவிட்டது!

நிறைவாக:

பேச்சுத் தமிழின் சரிவைக் கவனித்த கல்வியமைச்சு அதனைச் சரிக்கட்ட தமிழ்மொழிப் பாடத்திட்டத்திலேயே பேச்சுமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘நாளும் தமிழ் நாவில் தமிழ்’ என்ற முழக்கவரியோடு ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்மொழியை நிலைநிறுத்தப் பல்லாண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கான பணத்தைச் செலவிட்டு ‘நாளும் நல்ல தமிழில் பேசுவோம்’ என்ற முழக்கவரியை முன்னிறுத்தித் தமிழ்மொழி வளர்ச்சிக் கழகம் தமிழ்மொழி மாதத்தை நடத்தி வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் தமிழ்மொழிப் போட்டிகளைத் தவறாமல் நடத்திப் பரிசு கொடுத்து ஊக்கமளித்து வருகின்றன.

இவற்றோடு மேலே குறிப்பிடாத இன்னோரன்ன பல நிகழ்வுகளும் தமிழ்மொழிப் புழக்கத்தை மேம்படுத்த வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. இருப்பினும், இல்லங்களில் தமிழ்மொழிப் புழக்கம் நாற்பது விழுக்காடாகி விட்டதே! இதற்கு என்ன செய்யலாம்? சிங்கப்பூர்த் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்! இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்த சிங்கப்பூர்த் தமிழர்கள் இல்லங்களில் தமிழ் பேசுவதை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்தான் தமிழர்களின் முகவரி என்று கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ கசிந்துருகிக் கூறுவார். தமிழ்மொழி தமிழர்களின் அடையாளம் மட்டுமன்று. அதுதான் தமிழர்களின் வாழ்வுக்கு வேர்! அதனை இப்போதாவது உணர்ந்து தமிழர்கள் தமிழைக் காப்பாற்ற வேண்டும்.

பட்டை தீட்டாத வைரம் பளிச்சிடுவதில்லை!
உருக்காத பொன் ஒளிர்வதில்லை!
அதுபோல்,
பேசாத மொழி வழக்கொழிந்து போகும்!
வரலாறு மாறும்!