சாதனை படைத்த துறைமுகம் !!
சிங்கை துறைமுகம் 2023ல் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமாக சரக்குகளைக் கையாண்டு புதிய முத்திரை பதித்துள்ளது. மொத்தம் 591.7 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. 39 மில்லியனுக்கும் அதிகமான 20 அடி சமான கொள்கலன்கள் (20 Ft TEUs), அணைந்த கப்பல்களின் மொத்த எடை 3 பில்லியன் கிகா டன், 51.8 மில்லியன் மெட்ரிக் டன் உயிரிஎரிபொருள் (Biofuel) விற்பனை என்று பல பரிமாணங்களில் கடந்த ஆண்டைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளது. மேலும் நீர்ம இயற்கை வாயு (LNG) விற்பனையிலும் 2022ஐ விட 6 மடங்கு விற்பனையாக 110 ஆயிரம் டன் கணக்காகியுள்ளது. அன்றாட கப்பல்கள் வருகை எண்ணிக்கையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. செங்கடல் பிரச்சினை துறைமுகத்தின் 2024 செயல்பாடுகளை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சூரிய ஒளி மின்சாரம் – சரியான பாதை!!
சூரிய ஒளி மின்சாரத்தை அறுவடை செய்வதில் சிங்கப்பூர் தனது 2030 ஆண்டுக்கான இலக்கில் பாதிக்கும் மேல் அடையவுள்ளது. 2025இல் 1500 மெகவாட் உற்பத்தியை அடையும் முயற்சி திட்டமிட்டபடி செயல்படுகிறது. 2050இல் 10 விழுக்காடு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். வேறு மாற்று வழிகளான இயற்கை வாயு, வட்டார வினியோக அமைப்புகளிலிருந்து இறக்குமதி, குறைந்த கரிம எரிபொருட்கள் என்று அனைத்து முறைகளிலும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு செயலாகி வருகின்றன. தற்போதுள்ள சூரிய ஒளி உற்பத்தியில் தனியார் நிறுவங்களின் பங்கு 63 விழுக்காடாக உள்ளது. அண்மையில் ஐக்கிய அமீரகத்தில் நடந்த பருவநிலை மாற்றக் கருத்தரங்கிலும் சிங்கப்பூரின் ஊக்கமான செயல்பாடுகள் பெரும் கவனம் பெற்றன.
கடல்நாக ஆண்டு தபால் தலைகள் !!
சந்திரப் புத்தாண்டு 2024 கடல்நாக ஆண்டாகப் பிறப்பதையொட்டி சிங்போஸ்ட் புதிய தபால் தலைகளையும் முதல் நாள் உறையையும் வெளியிட்டுள்ளது. 2020இல் பிறந்த எலி ஆண்டு தொடங்கி 12 சீன இராசிகளுக்குமான தொடரில் (zodiac series) இது ஐந்தாவது ஆண்டு. இவ்வாண்டுக்கான தபால் தலைகளை வடிவமைத்தவர் திருவாட்டி லிம் ஆன்-லிங். தபால் தலை சேகரிப்போருக்காக திரு.ஆன்டி கோ வடிவமைத்த பிரத்தியேகமான 10 வெள்ளி தபால் தலையுடன் 8 சிவப்பு உறைகளும் உண்டு.
மெழுகுச் சிலை கௌரவம்!!
பாராலிம்பிக்ஸ் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் நீச்சல் போட்டிகளில் சிங்கையைப் பிரதிநிதித்து விளையாடி பல பதக்கங்களைப் பெற்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்து, பின்னர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராகவும் ஈராண்டுகள் பணியாற்றிய திருவாட்டி யிப் பின் ஸ்யூ தற்போது சிங்கையில் உள்ள மேடம் டுஸ்ஸாட் மெழுகு பொம்மைகள் அருங்காட்சியகத்திலும் ஒரு மெழுகுச் சிலையாக அமைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். 2008 பெய்ஜிங், 2016 ரியோ, 2020 தோக்கியோ போட்டிகளில் தங்கம் வென்ற இவர் இந்த வருடம் பாரிஸ் நகரில் நடைபெறவிருக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.