கருப்பு வெள்ளை

சித்ரா ரமேஷ்

எனக்கு மட்டும் இந்த உலகத்தில் எதையாவது மாற்ற வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் எதை மாற்ற நினைப்பீர்கள்?

இந்தக் கேள்விக்கு பெரிய உலகத்தலைவராக இருந்தால் உலகமே போராட்டங்கள் இல்லாத உலகமாக மாற வேண்டும் என்று பெரிய விஷயங்களைக் கேட்பார்களோ? நான் மட்டும் ஏன் இப்படி நிறத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்?ரோஸிக்கும் சியாமாவுக்கும் புரியவில்லை.

தனக்கு யார் ரோஸி என்று பெயர் வைத்திருப்பார்கள் என யோசித்தாள். அம்மாவைப் பெற்ற அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். அம்மம்மாதான் இந்த மாதிரி பெயர் வைக்க ஆசைப்பட்டிருப்பாள். ஆங்கிலப்படிப்பு படித்த அம்மம்மா மேற்கத்திய பாணியில் வீட்டை அலங்கரித்திருப்பாள். மாரியம்மனும் சங்கிலிக்கருப்பனும் கும்பிடுகிற சாமியாக இருந்தாலும் கான்வென்ட்டில் படித்த பாட்டி தன்னை ஒரு கிறிஸ்துவப்பெண்ணாகவே நினைத்துக் கொண்டு வளர்ந்தாள். கிறிஸ்மஸ் சமயம் வீட்டு வாசலில் ஒளியில் மிதக்கும் நட்சத்திரங்களை கட்டி வைத்து கிறிஸ்மஸ் மரம் முழுக்க தங்க நிறப் பந்துகளால் அலங்கரித்து வைப்பாள்.

ரோஸியின் அம்மா ஜென்னி மாமாவை ஸ்டீவ் என்று அழைப்பாள். தனக்குத்தானே பெக்கி என்று பெயர் வைத்துக் கொண்டாள். தாத்தா என்றாவது அஞ்சலை என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டால் கூட முகம் சுளிப்பாள்.

“ஆமா பெரிய ஆப்பக்காரின்னு நெனப்பு. என்ன பேர மாத்தினா என்ன? கருவாட்டுக் குழம்பும் கருவாட்டு வாடையும் வீசும் கருப்பிதானே” என்று சிரித்துக் கொண்டு கிண்டலடிப்பார் தாத்தா. தாத்தா ரயில்வேயில் வேலை பார்த்தார். கரி அள்ளிப் போட்டு கரியான கைகள். நம் குடும்பத்தின் தெய்வம் கருப்பு சாமிதான் என்று தீர்மானமாகச் சொல்வார்.

அதெல்லாம் ஒரு கனவு மாதிரி இருந்தது. தீபாவளி வருட இறுதி விடுமுறை என்றால் ஜோகூரில் இருக்கும் பாட்டி வீட்டுக்குப் போய் விடுவார்கள். ஆதிவாசிகள் போல் அலைந்து கொண்டிருப்பார்கள். பாட்டி சாப்பிடக் கூப்பிடும் போது மட்டும் வீட்டுக்குள் இருப்பார்கள்.

மாமா வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் சித்தியின் அலங்காரப் பொருள்கள், தாத்தாவின் சேகரிப்பில் இருந்த பழங்காலத்து ரெக்கார்ட் ப்ளேயர், அதில் ஓட விடும் வட்ட வடிவ ரெக்கார்டுகள், பழைய ஹிந்திப் பாட்டுகள், தலையை அசைத்து அசைத்து கோமாளி மாதிரி ஹீரோயினைத் துரத்திக் கொண்டு ஓடும் அந்த ஹிந்திப் பட ஹீரோ, ஐயையா கருமமே கியா சுக்கு சுக்கு என்று ஹிந்திப் பாட்டை தமிழாக்கிப் பாடிக்கொண்டு திரிந்து கொண்டிருப்பார்கள். என்ன இருந்தாலும் சிங்கப்பூர் சற்று நாகரிகமடைந்த பெரிய நகரமாகவும் ஜோகூர் இன்னும் நாகரிகமடையாத காட்டுப்பையன்களின் ஊராக இருந்ததில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது.

இப்படி கரியைக் குழைத்து ஒரு வண்ணம் கொடுத்தது போன்ற நிறம் அங்கே இருக்கும்போது பெரிய விஷயமாகத் தோன்றாது. இங்கே வந்து விட்டால் அனைவரும் சிவப்பாக அழகாக இருப்பது போலவும் தான் மட்டும் இந்தக் கூட்டத்தில் பொருந்தாது போல் இருக்கும் ரோஸிக்கு!

அப்படியே நினைத்துக் கொண்டு வளர்ந்தாள். வெளியில் போகும் போது, வீட்டில் விசேஷங்கள் வரும் போது திருமணங்கள், வைபவங்கள் வரும்போது ரோஸிக்கு என்ன உடை உடுத்தலாம் என்ற கற்பனையிலேயே ஒரு மாதம் ஓடி விடும். அம்மாவிடம் கேட்டு கிளிப்பச்சை சட்டை, அடர்ந்த சிவப்பில் உடை என்று வாங்கி வைத்துக் கொள்வாள். கடைசியில் கிளம்பும் போது உடைகளைப் போட்டுப் பார்த்து விட்டு தனது பழைய இளம் பழுப்பு நிற உடை இல்லையென்றால் கருப்பு நிற சட்டையில் கிளம்புவாள். அம்மாவுக்கு அதைப் பார்த்து முகம் சுருக்குவாள். வெளியில் போகும் போதே இருவரும் முகத்தைச் சுளித்துக் கொண்டு கிளம்புவார்கள். நாளாக நாளாக அம்மாவும் ரோஸியுமாக வெளியில் ஒன்றாகப் போவது குறைந்து போனது. அம்மா தனக்கு வேண்டும் இடங்களுக்குத் தனியாக போக ஆரம்பித்தாள். ரோஸி அம்மாவிடம் உடைகள் வாங்கித் தரச்சொல்லி கேட்கும் வயதைத் தாண்டி விட்டாள். அவளுக்கு என்று உடைகள் கிடைக்கும் கடைகள் இருந்தன. அதில் அழுக்கு வெள்ளை நிறங்களிலும் பழுப்பு நிறங்களிலும் பல உடைகள் கிடைத்தன. அந்த நிறம்தான் தனக்குப் பொருந்துகிறது என நினைத்தாள். பள்ளி நாட்களில் சீருடை அணிவது என்பது ஒரு தண்டனையாக இருந்தது. அடர்ந்த நீல நிறச் சீருடை தொடக்கப்பள்ளியில். பிறகு பச்சை நிற சீருடை உயர் நிலைப்பள்ளியில்.

எதுவுமே தனக்குப் பொருந்தவில்லை என்று நினைத்துக் கொண்டு சீருடை அணிந்த பின் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளவேமாட்டாள். பாலிடெக்னிக் சேர்ந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. பிடிக்காத நிறத்தில் சீருடை அணிய வேண்டாம் என்பதால்!

வாழ்க்கை அவளுக்கு இப்படி பல வண்ணங்கள் காட்டாமல் கருப்பு நிறத்தை மட்டும் ஏன் காட்ட வேண்டும்? புரியவில்லை. அவள் வீட்டில் யாருமே ரோஸி அளவுக்கு கருப்பு நிறமில்லை. அம்மா மாநிற அழகி. அண்ணன் அப்பாவைப்போல் சாக்லேட் பழுப்பு நிறம். ஆண்கள் உயரமாக நிறம் குறைந்தவர்களாக இருந்தால் அழகனாக கருதப்படுவார்கள். மாநிற ஆணும் வெண்பளிங்கு நிறப்பெண்ணும் கூடிக் குழந்தைப் பிறந்தால் ஆண் குழந்தைகள் அப்பாவின் நிறத்தையும் பெண் குழந்தைகள் அம்மாவைப் போல் வெண் பளிங்கு நிறத்தையும் கொண்டு பிறப்பார்களா? யோசித்தாள். உயிரியலில் அவள் படித்த மரபியல் படி அது சாத்தியம் இல்லை என்று தெரியும். ஆனால் உலகம் முழுவதும் இப்படி ஒரு நிற நம்பிக்கையைக் கொண்டு இயங்குகிறது.

சியாமாவைப் பார்த்ததும் சட்டென்று ஒரு நொடி அவன் முகம் மாறியது. அம்மா வற்புறுத்தியதால் ஃபேஸ்டைம்மில் இப்படி தெரியாத ஒருவனுடன் வாழ்க்கைக் குறித்து விவாதிக்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு பார்க்கத் தொடங்கியதிலிருந்தே இதைப் போன்ற இக்கட்டுகள் ஏற்படும் என சியாமா எதிர்பார்த்திருந்தாள். கொஞ்சம் வழக்கத்தை விட அதிக பளீர் நிறத்தில் இருப்பாள். அவளைப் பார்த்தால் அல்பினிசம் என்ற வெண் தோல் குறைபாடு என்று சொல்ல முடியாது. நல்ல நிறமாக இருக்கும் பெண் என்று நினைப்பார்கள் என அம்மாவும் அப்பாவும் நினைத்தார்கள். ஆனால் அது உண்மையில்லை என்று சியாமாவுக்குத் தோன்றியது. சியாமா என்றால் கருப்பு. இந்தப் பெயர் எதற்குத் தனக்கு வைத்தார்கள் என்று புரியவில்லை. பாட்டியின் பெயர் என்பதால் வைத்து விட்டார்களோ? சின்ன வயதில் தன்னுடைய நிறத்தின் தீவிரம் புரியவில்லை. வளர வளர தன்னுடைய வெளுப்பு நிறம் இயல்பானதில்லை என்று புரிந்தது.

வெயிலில் நின்று விளையாட முடியாமல் உடல் எரியும். எவ்வளவு வெயிலில் நின்றாலும் கருத்துப் போகாத நிறம். அனைவரும் வெயில் தன்னைக் கருப்பாக்காமல் இருக்க க்ரீம் பூசிக் கொள்ளும் போது இவள் மட்டும் வெயிலை பார்த்து ஓட்டுக்குள் சுருங்கும் நத்தையாய் ஒதுங்கி நிற்பாள். என்ன நிறத்தில் உடை உடுத்தினால் தன் நிறம் இன்னும் சற்று நிறம் குறைவாக மாறாய்த் தெரியும் என்று யோசித்து யோசித்து பழுப்பு நிறமும் அழுக்கு வெண்மை நிறமும்தான் தன்னுடைய நிறத்தை இன்னும் பளீரென்று காட்டாமல் அடக்கும் என்று அந்த நிறங்களையே தேர்ந்தெடுப்பாள். அம்மா ஆசையாக குங்கும அரக்கில் முதல் முறை பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாள். கொஞ்சம் ஆசையாகத்தான் இருந்தது. அரக்கு நிறப்பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள். இன்னும் அதிகப்படியாக அவள் நிறத்தைக் காட்டியது போல் உணர்ந்தாள். புடவையை அவிழ்த்து வைத்துவிட்டு வழக்கம் போல் அவளுடைய பழுப்பு நிற சூடிதாரை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். நிறக்குறைபாடு கொண்ட பெண்ணை நீ ராஜாத்தி மாதிரி இருக்கே என்று சீராட்ட அம்மாவுக்கு மனதில்லையோ என்னவோ ஓரக்கண்ணால் பார்த்தபடி ஒன்றும் சொல்லவில்லை.


சற்று குறைந்த நிறத்தில் மாநிறமாகவும் கருப்பாகவும் நிறைந்த மனிதர்கள் வாழும் ஊரில் தன்னுடைய நிற வேறுபாடு எல்லோருக்கும் தெரிகிறதோ! ஐரோப்பா அல்லது வட அமெரிக்கா சென்று விட்டால் அங்கு அவ்வளவு வித்தியாசமாகத் தெரியாதோ?

தன்னை ஃபேஸ்டைம்மில் பார்த்த பையனுக்கு பிறவியிலேயே ஒரு பார்வை கிடையாது. ஆனாலும் அவனுக்கு கருப்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும் போது எதற்கு தேவையில்லாமல் இந்தப் பெண் என்று நினைத்தானோ என்னவோ அந்த ஒரு சந்திப்புக்குப் பிறகு பேசவில்லை. தன்னைச் சுற்றிப் பார்த்தாள். எத்தனை அழகு நிலையங்கள் இன்னும் முகத்தை வெண்மையாக்க? எத்தனை அழகுப் பொருள்கள் தோலை இன்னும் வெண்மையாகக் காட்ட?

எதாவது ஒரு க்ரீம் கிடைக்குமா தன்னை கறுப்பாகக் காட்ட என்று தேடினாள். கறுப்பு நிறத்தில் பளபள என்று கோவிலில் இருக்கும் அம்மன் சிலை போல் பக்கத்தில் இருந்தப் பெண்ணைக் கவனித்தாள். அந்தப் பெண் எதோ க்ரீமைத் தேடிக் கொண்டிருந்தாள். நிச்சயம் அந்தத் தேடல் அவள் கருப்பை வெளுப்பாக்கும் களிம்பாகத்தான் இருக்கும்.

‘நான் அரச குடும்பத்தில் மருமகளாக வந்தது தற்செயலான ஒரு சம்பவம். ஆனால் என் தாய் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனக்குப் பிள்ளைகள் பிறக்கும் போது கருப்பாக இருந்துவிட்டால் என்ன ஆகுமோ என்று என்னை சீண்டிப் பார்த்த குடும்பத்தில் எனக்கு என்ன மதிப்பு இருக்கும் என்று நான் அவர்களை விட்டு விலகினேன். ஆனால் என் காதல் கணவன், இளவரசர் என் தீர்மானத்திற்கு ஆதரவாய் அவரும் அரச குடும்பத்தை விட்டு விலகி வந்து விட்டார். இனி எங்களுக்கு எந்த நிறத்தில் குழந்தைப் பிறந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை’ என்று சொன்ன பெண்ணைத் தொலைக்காட்சியில் பார்த்தார்கள் ரோஸியும் சியாமாவும்.

இருவரும் ஒரே நிறத்தில் உடைகள் வாங்கிக் கொண்டு பணம் செலுத்தினர். வெள்ளையும் கருப்பும் நிறமல்ல என்று இருவருக்கும் இன்னும் தெரியாமல் ஒருவரைப் பார்க்காமலேயே கடந்து சென்றார்கள்.