அகிலத் தமிழர்களை ஒன்றிணைத்த அயலகத் தமிழர் தினம்

நித்திஷ் செந்தூர்

தரணியெங்கும் பல்வேறு தேசங்களில் பரவி வாழும் தமிழர்களை ஒன்றிணைத்தது இவ்வாண்டின் அயலகத் தமிழர் தினம். கடந்த மாதம் (ஜனவரி) 11, 12ஆம் தேதிகளில் ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளுடன் சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற அயலகத் தமிழர் தினத்திற்குத் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் ஏற்பாடு செய்திருந்தது.

உலகத் தமிழர்களின் தமிழ்ப் பேச்சையும் தமிழ் நடையையும் திரைப்பட வசனங்கள் மாற்றமுடியும். தமிழ்நாடு தமிழுக்குத் தாய்மடி. அங்கிருந்து வரும் தமிழ் உலகெங்கும் கலங்கரை விளக்கம் போல வழிகாட்ட முடியும்.

58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், பிரமுகர்கள், பேராளர்கள், அமைச்சர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் முதலியோர் விழாவிற்கு வருகை புரிந்தனர். அதில் முக்கியமாக சிங்கப்பூர் அமைப்புகளின் தலைவர்களும் இளையர்களும் கலந்துகொண்டனர். சிங்கப்பூரைப் பிரதிநிதித்து சுமார் 130 தமிழ் ஆர்வலர்கள் விழாவில் பங்கேற்றனர். விழாவின் இரண்டாம் நாளில் தலைமை விருந்தினராக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிங்கப்பூர்க் குழுவினருடன் அமைச்சர் கா.சண்முகம்

“தமிழ்க் கலை, பண்பாட்டைப் பார்த்தால் உலகம் முழுவதும் நல்ல தமிழைப் பேசுவதற்கும் அதனைப் புரிந்துகொள்வதற்கும் தமிழ்நாடு தூண்டுகோலாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கமுடியும். அதில் சக்திவாய்ந்த வழி திரைப்படத்தின் மொழி. உலகத் தமிழர்களின் தமிழ்ப் பேச்சையும் தமிழ் நடையையும் திரைப்பட வசனங்கள் மாற்றமுடியும். தமிழ்நாட்டில் தமிழ் எப்படி வாழ்கிறது, வளர்கிறது என்பதை வைத்து உலகத் தமிழின் நிலையை நிர்ணயிக்கமுடியும். தமிழ்நாடு தமிழுக்குத் தாய்மடி. அங்கிருந்து வரும் தமிழ் உலகெங்கும் கலங்கரை விளக்கம் போல வழிகாட்ட முடியும்” என்றார் அமைச்சர் கா.சண்முகம்.

இளையர்களுடன் அமைச்சர் கா.சண்முகம்

அதோடு, பொருளியல் வளர்ச்சி பற்றியும் அமைச்சர் கா.சண்முகம் தமது தலைமை உரையில் குறிப்பிட்டார். “இன்று இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியப் பொருளாதாரம் உலகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று. அனைத்துலக ரீதியிலும் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களுடனும் உலக நாடுகளுடனும் முதலீட்டைப் பெறுவதற்குப் போட்டியிடவேண்டியிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது முதலீட்டை ஈர்ப்பதற்குத் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் வெற்றிநடை போட்டால் தமிழின் முக்கியத்துவம் மேலும் வளரும்” என்று அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் கா.சண்முகத்திற்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

அயலகத் தமிழர் தினத்தில் ஆண்டுதோறும் இலக்கியம், இலக்கணம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் மூவருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய எட்டுப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியத் துறையில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக உள்ளூர்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்குக் ‘கணியன் பூங்குன்றனார்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விருதினை சிங்கப்பூர் எழுத்தாளர் மா.அன்பழகன் பெற்றுக்கொண்டார். மருத்துவப் பிரிவில் சிங்கப்பூர் டாக்டர் ஜெயராம் லிங்கமநாயக்கர் விருதினைப் பெற்றார்.

பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்குக் ‘கணியன் பூங்குன்றனார்’ விருது

விழாவில் ‘எனது கிராமம்’ என்னும் திட்டம் அறிமுகம் கண்டது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் பிறந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் ஊர் மக்களின் கல்வி, மருத்துவம் முதலிய அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திச் செய்திடவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. அயலகத் தமிழர்கள் தங்கள் கிராமங்களுக்கான நன்கொடைக் காசோலையை தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலினிடம் வழங்கினர். அதோடு, ‘வேர்களைத்தேடி’ திட்டத்தின் காணொளித் தொகுப்பு விழாவில் காட்டப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பினைப் புதுப்பிக்க உதவுகிறது இத்திட்டம். அதற்காக ஆண்டுதோறும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு இரண்டு வார பண்பாட்டுச் சுற்றுலாவிற்கு அழைத்துவரப்படுகின்றனர். மாணவர்கள் சுற்றுலாவில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது தமிழ்ப் பண்பாட்டுத் தூதர்களாய்ப் புதிய வேர்களைப் பதிப்பது திட்டத்தின் இலக்கு. ‘தமிழகத்தில் நமது பாரம்பரியம், பண்பாடு எப்படி இருக்கு என்பதை சிங்கப்பூர் மாணவர்கள் அறிந்துகொள்ளவும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும்’ என்றார் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன்.

‘சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. அதில் கவிப்பேரரசு வைரமுத்துவின் தலைமையில் கனடா, அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வருகை புரிந்த கவிஞர்கள் கவிதை வசித்தனர். சிங்கப்பூர்க் கவிஞர் இறை.மதியழகன் ‘கணினியும் தமிழும்’ என்ற உபதலைப்பில் கவிதை வாசித்தார்.

உலகெங்கும் தமிழரின் வரலாற்றுப் பயணங்கள் வரைபடம்
திருவள்ளூவர் உருவச் சிலை

அயலகத் தமிழர்க் கண்காட்சி அரங்கத்தில் சிங்கப்பூர் உட்பட மலேசியா, அமெரிக்கா, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லண்டன் முதலிய நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சங்கங்கள் முகப்புகளை அமைத்திருந்தன. பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழ்மொழியைப் பேணிக் காக்க தமிழ்ச் சங்கங்கள் எடுத்துவரும் முயற்சிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் கண்காட்சி வழிகோலியது. ‘சிராங்கூன் டைம்ஸ்’ இதழ் குறித்தும் அயலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் விசாரித்து இதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

கத்தார் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட சிராங்கூன் டைம்ஸ் இதழ்
ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட
சிராங்கூன் டைம்ஸ் இதழ்

கண்காட்சியில் தமிழர்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் கைவினைப் பொருள்கள், கைத்தறிச் சேலைகள், புத்தகங்கள் முதலியவை இடம்பெற்றிருந்தன. ‘உலகெங்கும் தமிழரின் வரலாற்றுப் பயணங்கள்’ எனும் வரைபடம் தமிழர்களின் வேராகத் திகழும் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்க் குடிகள் எங்கெல்லாம் பயணங்களை மேற்கொண்டு விழுதுகளாய் விளங்குகின்றனர் என்பதை எடுத்துக்காட்டியது. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதை மெய்ப்பித்தது அந்த வரலாற்று வரைபடம்.

தேசத் தந்தை லீ குவான் யூவின் உருவச் சிலை

திருவள்ளுவர், பாரதியார் முதலிய தமிழ் அறிஞர்களின் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு அளவுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழ் அறிஞர்களின் சிலைகளைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ குவான் யூவின் உருவச் சிலையைக் கண்டபோது இனம் புரியாத உணர்வும் பேருவகையும் மனதில் அலைபாய்ந்தது.

அயலகத் தமிழர் தினம் அகிலத் தமிழர்களுக்குப் பாலம் அமைத்தது. அவர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைத்தது. அத்துடன் தமிழர்ப் பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஆழமாக வேரூன்றவும் வழிவகுத்தது.