நான்காவது முறையாக தேசிய கலை மன்றத்தின் ஆதரவில் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை சென்னையில் காட்சிப்படுத்த சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் எடுத்துக்கொண்ட பொறுப்பு எளிதானதில்லை.
முதலில் நூல்களை எழுத்தாளர்களிடமிருந்து பெற்று, அதனை ஒருங்கிணைத்து, சென்னைக்கு அனுப்பும் சவாலான பணியில் தொடங்கியது இத்திட்டத்தின் முதல் கட்டம். நூல்களைச் சென்னைக்கு அனுப்பவுதில் ஏற்பட்ட பல சிக்கல்களை ஒவ்வொன்றாக முடிச்சவிழ்த்து ஒருவழியாக சென்னை வெள்ளத்தையும் கடந்து நூல்கள் சென்னையைச் சென்றடைந்தன என்ற செய்தி வந்தபிறகுதான் எங்கள் பதற்றம் தணிந்தது.
காலை முதல் இரவு வரை, ஓய்வில்லாமல், திட்டங்களை வகுப்பதும், செயல்படுத்துவதும், நூல் விற்பனையை மேற்பார்வையிடுவதும், கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதும் என தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்கு எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.நா.ஆண்டியப்பன் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற குறளுக்கு ஏற்ப அவரின் மேலாண்மைத் திறமையும், திட்டங்களை வகுத்து, அவற்றைக் குறித்த நேரத்தில் செயலாக்கும் திறமையும், அனுபவமும்தான் தேசிய கலை மன்றத்தின் நம்பிக்கையை நான்காவது ஆண்டாகத் தக்கவைத்து, 47வது சென்னை புத்தகக் காட்சியில் உள்ளூர் எழுத்தாளர்களைப் பிரதிநிதித்து கலந்துகொள்ள வைத்திருக்கிறது..
அடித்தளம் பலமாக அமைந்தால்தான் அதன்மீது உயரமான கட்டடம் எழுப்ப முடியும். சென்னை புத்தகக் காட்சியில் நூல்களைக் காட்சிப்படுத்துவது மட்டும் நமது நோக்கமல்ல. உள்ளூர் எழுத்துதாளர்களின் நூல்களை ஆய்வு செய்து, அறிமுகம் செய்வதற்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யவேண்டியிருந்தது. வடசென்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.இளங்கோ, எமரால்டு பப்ளிஷர்ஸ் நிறுவனர் திரு.ஒளிவண்ணன் ஆகியோரின் தலைமையில் 2 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் பேராசிரியர் உலகநாயகி பழநி, எழுத்தாளரும் ஆவணப்பட, திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார், பதிப்பாளரும் இதழாசிரியருமான லேனா தமிழ்வாணன், ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.புகழேந்தி, சிறுவர் இலக்கிய எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா ஆகியோர் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்தும் வெளியீடு செய்தும் சிறப்பாக உரையாற்றினர். சென்னை புத்தகக் காட்சியில் உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு கண்டது இதுவே முதல் முறை.
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எழுத்தாளர்கள் திருவாட்டி அழகுநிலா, திருவாட்டி மணிமாலா மதியழகன், திரு.பொன். சுந்தரராசு, முனைவர் மு.இளவழகன், கவிஞர்கள் திரு.மா.அன்பழகன், திருவாட்டி இன்பா ஆகியோர் கருத்தரங்குகளிலும் நூல் வெளியீட்டு விழா, அறிமுக நிகழ்ச்சி ஆகியவற்றிலும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சென்னையிலுள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதர் திரு.எட்கர் பாங்கும் தூதரக அதிகாரிகளும் சிங்கை அரங்கிற்கு வருகையளித்து “சென்னை புத்தகக் காட்சியில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மூலம் சிங்கப்பூர்ப் பிரதிநிதிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பாராட்டிச் சென்றனர்.
தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த ‘அயலகத் தமிழர் நாள்’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூரின் உள்துறை, சட்ட அமைச்சர் திரு.கா.சண்முகமும் அவரது துணைவியாரும் சிங்கப்பூர் அரங்கிற்கு வருகையளித்து, நூல்களைப் பார்வையிட்டது மட்டுமல்லாது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களைச் சென்னை புத்தகக் காட்சி 2024ன் ஒரு பகுதியாக கொண்டு வந்தது நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமாக இருக்கும் என்றும் அரசாங்கத்தின் ஆதரவு இந்த முயற்சியைச் செயல்படுத்த உதவியுள்ளதையும் குறிப்பிட்டு, கழகத்திற்கு நன்றி நவின்றது எங்களின் கடும் முயற்சிக்குக் கிடைத்த ஊட்டச்சத்தாக அமைந்தது.
திரு.மாலன், திரு.பாஸ்கர் சக்தி, சென்னை கிருத்துவக் கல்லூரி தமிழ்த் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் மோசசு மைக்கல் பாரடே, திரு.சோம.வள்ளியப்பன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன், முனைவர் இரா.காமராசு, முதுபெருங்கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போன்றோர் சிங்கப்பூர் அரங்கிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
“சென்ற ஆண்டு நீங்கள் பரிந்துரைத்த நூல்களை வாங்கிச் சென்றேன், அழகு நிலாவின் ‘சிறுகாட்டுச் சுனை’ சிங்கப்பூரின் பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவியது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் உங்களைச் சந்திக்க இரண்டு முறை தேடி வந்தேன், நல்லவேளையாக இன்று உங்களைச் சந்தித்தேன்” என்று பேசிய வாசகரை அடையாளம் கண்டுகொண்டேன். சென்ற ஆண்டு அவரது மகளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்தேன் என்பதற்காக அவரது மனைவியின் வற்புறுத்தலால் இரண்டு நூல்கள் வாங்கிச் சென்றார். ஒரு வாசகரை மறு ஆண்டும் சிங்கப்பூர் இலக்கிய அரங்கைத் தேடி வரவழைத்ததற்குக் காரணம் ஏதோ ஒரு நூலை அவரிடம் விற்றோம் என்றில்லாமல் அவரின் வாசிப்புப் பழக்கத்திற்கும் ரசனைக்கும் ஏற்ற நூல்களை அவரிடம் சேர்த்ததுதான் காரணம்.
சிங்கப்பூர் 2016ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னைப் புத்தகக் காட்சியில் பங்கேற்றது. அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் கடந்த ஆண்டு (2023) மூன்றாவது முறையாகவும் சிங்கப்பூர் இதில் கலந்துகொண்டது.
நம்மைச்சுற்றி பலதரப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். வரலாறை விரும்பும் வாசகர், ஜனரஞ்சகமான கதைகள் முதல் செவ்விலக்கியம் வரை நீளும் வாசகர் பெருவெளி, சிறுவர் இலக்கியங்களை நாடிவரும் பெற்றோர் என்று ஒவ்வொரு நாளும் புத்தகக் காட்சிக்குப் பலரும் படையெடுக்கிறார்கள். ஒருவரின் ரசனையை அறிந்து படைப்புகளை அறிமுகம் செய்யும்போது அது அவர்களின் அகப்பைக்குள் விரைந்து அடங்கிக்கொள்கிறது. “இந்த ஆண்டு என்ன புதிய நூல்கள் வந்திருக்கின்றன, நீங்களே எனக்குச் சில நூல்களைப் பரிந்துரை செய்ங்க” என்று அந்த வாசகர் கூறி முடிக்கும் முன்பே நான் களத்தில் இறங்கி விட்டேன். சில நூல்களைத் தேர்ந்தெடுத்து, அதன் உள்ளடக்கங்களை விளக்கவும் மகிழ்ச்சியோடு அனைத்தையும் வாங்கிச் சென்றார். இப்படியாக சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் நூல்களை வாங்கிச் சென்ற சில வாசகர்கள் சிங்கப்பூர் அரங்கை மீண்டும் தேடி வந்தனர். சிங்கப்பூர் இலக்கியம் அரங்கு எண் 534/535 வழியே கடந்து செல்பவர்கள் சிங்கப்பூர் படைப்பாளர்களின் நூல்களைப் பார்த்து, சிங்கப்பூரில் இவ்வளவு தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? என்று வியந்தும், “ஆஹா, கரைகடந்தும் தமிழ் மொழியை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்களே!” என்று மனமாதர என்று மனதார பாராட்டியும் சென்றனர். சிலர் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நண்பர்கள், அவரவர்களின் அவரவர்களின் நண்பர்களின் நூல்களை வாங்கி ஆதரவளித்தனர்.
பெரும் ஆதரவு நல்கியவர்கள் சமூக வலைத்தள வாசக நண்பர்கள்தான். சென்ற ஆண்டு சந்தித்த ஜமுனாராணி என்னும் வலையொளியாளார், எனது பதிவுகளின் வழி நான் சென்னை வருவதைத் தெரிந்துகொண்டு என்னை சிங்கப்பூர் இலக்கிய அரங்கிற்கு நேரில் வந்து சந்தித்தார். பொங்கல் வரை இருப்பதை அறிந்து, குண்டு மல்லிகையும் குழிப் பணியாரமும் செய்து வருவதாகக் கூறிச் சென்றார். எங்கே வருவார் என்றுதான் நானும் உடனிருந்த மணிமாலாவும் நினைத்தோம், ஆனால் அவர் பொங்கல் சீர் என்று ஒரு பெரிய தாம்பாளத்தில் கரும்பு, பழம், தாம்பூலம், அரைத்த மருதாணி, மல்லிகைச் சரம் மற்றும் குழிப் பணியாரமும் கொண்டு வந்து கொடுத்தது உண்மையில் என் கண்களைப் பனிக்க வைத்தது.
தகவல் பரிமாற்றங்களுக்காவும் ஒரு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இன்றியமையாதது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நல்ல நட்புகளை இணைக்கும் பாலமாகவும் அது திகழ்கிறது. குறிப்பாக தொழில்நுட்பத்தின் வழி, அதிக பணச் செலவு இல்லாமல் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விளம்பரப்படுத்த இயலும் என்பதற்குத் தற்போது நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் இலக்கியத்திற்குக் கிடைத்த வெற்றியே ஒரு சான்று எனலாம்.
சுமார் 70 சிங்கப்பூர் எழுத்தாளர்களின்; 200 க்கும் மேற்பட்ட தலைப்புகளில்; 1000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்; லட்ச ரூபாய்களுக்கு மேல் விற்பனையாகியிருக்கின்றன என்றால் சிங்கப்பூர் இலக்கியம் கரைகடந்தும் பேசப்படும், நிச்சயமாக நூல்கள் சரியான வாசகர்களைக் கண்டடைந்திருக்கின்றன என்பதும் நிதர்சனம்.