எழுத்தின் உறைவிடம்

0
554
ஹேமா

பெங்களூரு ISROவுக்கு அருகிலிருக்கும் ஒரு மரங்களடர்ந்த சாலையில் பெரிய நாவற்பழ மரத்திற்குக் கீழிருக்கிறது ‘தி ஜாமுன் ஹவுஸ்’. சிறு தோட்டத்துடன் கூடிய அந்த வெண்ணிற வீட்டில்தான் ‘தி சங்கம் ஹவுஸ்’ என்றழைக்கப்படும் எழுத்தாளர்களுக்கான உறைவிடத் திட்டம் இயங்குகிறது. இந்தத் திட்டத்திற்குச் செல்லும் 2023ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் எழுத்தாளராக என்னைத் தேர்வு செய்து ஆதரவளித்திருந்தது சிங்கப்பூர் தேசிய கலை மன்றம்.

சங்கம் இல்லத்திற்கு நான் சென்ற முதல் தினம் அதுவரை எனக்கு மின்னஞ்சல் மூலம் மட்டும் அறிமுகமாகியிருந்த பாஸ்கல் சியகர் என்னை வரவேற்றார். பாஸ்கல் தான் அந்த மாதத்திற்கான எங்களின் இல்ல நிர்வாகி. அங்கிருந்த அறைகள் ஒன்றில் அவர் தங்கியிருந்தார். பாஸ்கல், அன்று எனக்கு அவ்விடத்தைச் சுற்றிக்காட்டினார். என்னுடைய அறை, நடுவில் ஒரு பெரிய மெத்தைக் கட்டில், ஒரு தொலைக்காட்சி, அதன் பக்கத்தில் எழுதுவதற்கான நாற்காலி மேசை என்று வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. அறையின் ஒருபக்கக் கண்ணாடிச் சுவரை நீண்ட வெண்ணிறத் திரைச்சீலைகள் அலங்கரித்திருந்தன. அறைக்குள்ளேயே ஒருபக்கமாய் சுடுநீர் வசதிகொண்ட குளியலறை இருந்தது. என் அறைக்கு வெளியே ஒரு சிறு நூலகம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், ப்ரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிப் புத்தகங்கள் அதில் இருந்தன.

அன்றைய இரவு உணவின்போது இல்லத்திலிருந்த மற்ற எழுத்தாளர்களிடம் என்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். எழுத்தாளர் சாம்ராட் ஹைதராபாதைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். ஷான்ருப், இவர் நேபாள கவிஞர், மாணவர். மூன்றாமவர் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த செபஸ்டியன். இவரை நாவல் எழுதுவதற்காக அவர் நாட்டு ப்ரெஞ்சு மொழி அமைப்பு தேர்ந்தெடுத்து இந்த உறைவிடத் திட்டத்திற்கு அனுப்பியிருந்தது. ஐஷீனா, ஜமாய்க்காவைப் பூர்வீகமாகக் கொண்ட நியூயார்க் பத்திரிக்கையாளர். இல்ல நிர்வாகி பாஸ்கல் ப்ரெஞ்சு மொழி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். என்னுடன் இருந்த சக எழுத்தாளர்கள் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு அமைப்பின் அல்லது எழுத்தாளரின் ஆதரவில் அங்கு வந்திருந்தார்கள்.

சங்கம் உறைவிடத்திட்டம் வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் ஒரு இடமாகத் திகழ்கிறது. 

இத்திட்டத்தின்கீழ் 2023ஆம் ஆண்டிற்காக வந்திருந்த 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 17 பேர்களைச் சங்கம் இல்லம் தேர்ந்தெடுத்திருக்கிறது. நவம்பர் மாதத்திற்கு நாங்கள் ஐவர். பொதுவாக வருடத்தில் மூன்று மாதங்கள் நடைபெறும் இத்திட்டத்தில் மாதத்திற்கு ஒரு இல்ல நிர்வாகியாக மூவர் பொறுப்பேற்கிறார்கள். தங்கியிருக்கும் எழுத்தாளர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் தடையின்றி கிடைப்பதை இவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்காகவே பாஸ்கல் ப்ரான்சிலிருந்து வந்திருந்தார். இரண்டாம் தினம் பாஸ்கல் எங்களை அழைத்துச் சென்று அருகிலிருந்த இடங்களைச் சுற்றிக் காட்டினார். கடைத்தெரு, ISRO என்று பார்த்துக்கொண்டே நாங்கள் வர, பாஸ்கல் எந்தெந்த பொருட்களை எங்கு வாங்குவது, தொலைந்தால் எப்படி மீள்வது போன்ற சிறுகுறிப்புகளைக் கொடுத்தபடி வந்தார்.

முதல் தின அறிமுகத்தைத் தொடர்ந்து பாஸ்கல், ஜாமூன் இல்லத்தில் நடைபெற்று வரும் சங்கம் உறைவிடத் திட்டத்தைப் பற்றி விவரித்தார். சங்கம் உறைவிடத்திட்டம் வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் ஒரு இடமாகத் திகழ்கிறது. இதன் நிறுவனர் அர்ஷியா சதார், அமெரிக்காவில் நடந்த ஒரு உறைவிடத் திட்டத்தில் ஒருமுறை பங்கேற்ற போது அதே போல ஒன்றை இந்தியாவில் உருவாக்கும் எண்ணம் உண்டாகியிருக்கிறது. அவர் பங்கேற்ற அமெரிக்க உறைவிடத் திட்டத்தின் நிர்வாகியான கிப்சனுடன் இணைந்து சங்கம் உறைவிடத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இல்லப் பராமரிப்பாளரான ரோகித் வீட்டின் எல்லா மூலைகளும் எப்போதும் துப்புரவாய் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். தினமும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கழிவறைகளும் அறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. அதேபோல மாலை மீண்டும் ஒருமுறை படுக்கை விரிப்புகள் சரி செய்யப்பட்டன. ரோகித்தும் அவரது உதவியாளர்களும் எப்போதும் வீட்டைத் தூய்மையாக்கியபடி எங்கள் பின்னணியிலேயே இருந்தார்கள்.

காலை உணவை எழுத்தாளர்களே தயாரித்துக் கொள்ளும் வகையில் தேவையான பொருட்கள் சமையலறையில் வாங்கி வைக்கப்பட்டிருந்தன. மதிய உணவும் இரவு உணவும் இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ட்ருப்தியின் வீட்டிலிருந்து வந்தன. தி ஜாமூன் இல்லத்தின் செயற்பாடுகளுக்கு ட்ருப்தியும் அவரது கணவரும் உறுதுணையாக இருக்கிறார்கள். இயல்பிலேயே எழுத்தாளர்களுடன் உரையாடும் ஆர்வம் கொண்டிருக்கும் அவர்கள் இத்திட்டத்தில் பெருவிருப்பம் காட்டி தங்களின் ஜாமூன் இல்லத்தை அதற்காக ஒதுக்கியிருந்தார்கள். அவர்களின் வீட்டுப் பணிப்பெண்கள் சமையலில் திறமையானவர்களாய் இருந்தார்கள். இவர்கள் சமைத்த தென் இந்திய, வட இந்திய, ஆசிய, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய உணவு வகைகள் மிகவும் சுவையானவை. தங்கும் எழுத்தாளர்கள் விருந்தாளிகளை அழைத்து உபசரிக்க விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். ஒருமுறை எழுத்தாளர் பாவண்ணன், விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் மற்றும் மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி என்னைக் காண வந்த போது இவ்வகையில் சிறந்த சைவ உணவை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த ஏற்பாடுகளை மேற்பார்வையிடுபவர் இல்ல அலுவலகத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் வெரோனிகா.

ஞாயிறு ஒருதினம் மட்டும் இல்லப் பணியாளர்களுக்கு விடுப்பு. அன்றைக்கு எழுத்தாளர்களே சமைத்துக்கொள்ளும் தினம். அந்த ஞாயிறு என்ன சமைக்கப் போகிறோம் என்பதை வெள்ளியன்றே கேட்டுவிடும் வெரோனிகாவும் பாஸ்கலும், அவற்றை வாங்கித் தயாராய் வைத்துவிடுகிறார்கள். இப்படியாக சிங்கப்பூர் பீஹூன், ஜமாய்கன் கோழி, நேபாள் கோழி கறி, ப்ரெஞ்ச் பாஸ்தா என வெளிநாட்டு உணவு வகைகளை ஞாயிறுகளில் எங்கள் சமையலறை பார்த்தது.

கலாச்சார அதிர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் இடமாகவும் இந்தச் சமையலறை இருந்தது.

‘என்ன, அரிசியை நீரில் அலசிவிட்டுத் தான் போடுவீர்களா?’, ‘என்ன, மட்டனை நீரில் கழுவி சுத்தம் செய்வீர்களா?’ போன்ற பிரமிப்புகளை நாங்கள் அங்கு எதிர்கொண்டோம்.

இந்தியர்கள் மட்டனை நீரில் நன்கு அலசியெடுத்த பின்தான் சமைப்பார்கள் என்று பாஸ்கல் செபஸ்டியனிடம் விளக்கியபோது, அவர் திகைத்தார். ப்ரெஞ்சு நாட்டினர் சமையலில் கழுவாமல் போடுவது பாக்கெட்டிலிருந்த உறைந்த மட்டனையென்பதைக் கேட்டு இந்திய, நேபாள, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கொஞ்சம் ஆறுதலடைந்தோம்.

முதல் வாரம் சம்பிரதாயமாக, ஒருவரை ஒருவர் புண்படுத்தக்கூடாது என்று பேசத் தொடங்கிய நாங்கள் மெல்ல மெல்ல நண்பர்களாய் மாறி ஒருவருக்கொருவர் மரியாதையாக கிண்டல் கேலி செய்து கொள்ள ஆரம்பித்தபின் சூழல் இலகுவானது. எழுத்தாளர்களின் கிறுக்குத்தனங்களும் மெல்ல வெளிவந்தன. ஒருமுறை நான் திறந்த மேற்தளத்தில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஒட்டி உயந்திருந்த கூரையைச் செபஸ்டியன் கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தார். வெவ்வேறு பக்கங்களில் நின்று அதையே அவர் உற்று நோக்க, என்ன பார்க்கிறீர்கள் என்று விசாரித்தேன். அந்தக் கூரைக்குக் கீழே ஒரு அறை அளவிற்கான இடம் எந்த வாயிலுமற்று இருப்பதை சுட்டிக் காட்டினார். நிர்வாகிகள் உட்பட எழுத்தாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்தும்கூட அதனுள் என்ன இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. செபஸ்டியன் ஒரு த்ரில்லர் எழுத்தாளர், அவரது கூர்நோக்கு எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியக்கூறாக எனக்குப் பட்டது.

தினமும் இரவு உணவு அனைவரும் சேர்ந்து சாப்பிடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது உலக நடப்புகள், தனிப்பட்ட அனுபவங்கள் இவற்றோடு, எழுதும்போது எங்களுக்கு ஏற்படும் சவால்கள், அதை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறோம் போன்றவற்றையும் நாங்கள் பேசிக் கொண்டோம்.

முதல் வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாசிப்பு நேரத்திற்கு இல்ல நிறுவனர் அர்ஷியா வந்திருந்தார். அன்று, என் ‘அராயின் குறுவாள்’ சிறுகதையை ஆங்கிலத்தில் வாசித்துக் காட்டினேன். தமிழ் சொற்களின் ஓசையைக் கேட்க விரும்பிய சக எழுத்தாளர்கள், கதையில் வரும் அமானுஷ்ய பத்தியைத் தமிழில் படித்துக் காட்டச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கம் பற்றி சற்று நேரம் உரையாடினோம். பல்வேறு நாடுகளிலிருந்து வந்த எழுத்தாளர்களுடன் கலந்து உரையாட ஆங்கிலம் வசதியாக இருந்தாலும் அவ்வுறைவிடத் திட்டத்தில் பங்கெடுக்க ஆங்கிலம் பேசுவதோ, தெரிந்து வைத்திருப்பதோ அத்தியாவசியம் அல்ல என்று பாஸ்கல் தெரிவித்தார். அங்கு வந்து தங்கிச் சென்ற ஆங்கிலம் பேசத்தெரியாத வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளிலிருந்து வந்த எழுத்தாளர்களுடன் கலந்து உரையாட ஆங்கிலம் வசதியாக இருந்தாலும் அவ்வுறைவிடத் திட்டத்தில் பங்கெடுக்க ஆங்கிலம் பேசுவதோ, தெரிந்து வைத்திருப்பதோ அத்தியாவசியம் அல்ல 

முதல் வாரம் எல்லா பிரமிப்புகளும் நீங்க, இரண்டாம் வாரத்தில் எங்களுக்கான ஒரு வழக்க நிரல் உருவாகியிருந்தது. சிங்கப்பூர் நேரப்படி விழித்துக் கொள்ளும் முதல் ஆள் நான். பின்னர் நேபாளம், ப்ரான்ஸ், இந்தியா, நியூயார்க் எழுத்தாளர்கள். ஜாமுன் இல்லத்திற்கு எதிரிலேயே உடற்பயிற்சி செய்ய வசதியாக ஒரு சிறிய பூங்கா இருக்கிறது. மரங்களடர்ந்த அந்தப் பகுதியில் சில்லென்ற சூழலில் காலை நடை செல்வது இதமாக இருந்தது. டிசம்பர் அல்லது ஜனவரியில் செல்பவர்களுக்கு குளிராடைகள் தேவைப்படும்.

2023ஆம் ஆண்டு நவம்பர், தீபாவளி மாதமாய் இருக்க, தீபாவளி தினத்தன்று ஜாமூன் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பட்டாசுகள், இனிப்புப் பண்டங்கள், பலகார வகைகள் என்று தீபாவளியை நாங்கள் விமர்சையாகக் கொண்டாடினோம். அலங்கார விளக்கின் மஞ்சள் ஒளியில் அர்ஷியா தீபாவளியின் காரணக் கதையையும் அதன் கொண்டாட்டங்களைப் பற்றியும் சொல்ல சுற்றிலும் அமர்ந்து நாங்கள் கேட்டோம். அர்ஷியா ஒரு திறமையான கதை சொல்லி என்பதை அன்று அறிந்தேன். அவர் இந்தியக் காவியங்களின் மீது பற்று கொண்ட எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் கூட.

சங்கம் இல்லம், Lekhana என்ற இலக்கியத் திருவிழாவை, 2023ஆம் வருடத்தின் நவம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்திருந்தது. Alliance Française de Bangaloreஇல், இந்திய எழுத்தாளர்களுடன் உறைவிடத் திட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாளர்கள் இணைந்து கலந்துரையாடும் வகையில் இவ்விழா திட்டமிடப்பட்டிருந்தது. இதில் நான் புலம்பெயர்ந்தவர்கள் பற்றி உள்ளூர் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினேன். அதே விழாவில், எழுதிக் கொண்டிருந்த நாவலின் ஒரு பகுதியை நான் வாசிக்க, அதன் மொழியாக்கத்தை அர்ஷியா படித்தார். அந்த இலக்கியத் திருவிழாவில் எங்கள் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அத்திருவிழாவின் முடிவில் ஜாமூன் இல்லத்தில் ஒரு கேளிக்கை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு வரை நீண்ட அது உள்ளூர் எழுத்தாளர்களுடன் உள்ளார்ந்து பேச ஒரு வாய்ப்பாக அமைந்தது.

எழுதுவதற்கும் வாசிப்பதற்குமாக மட்டுமே செலவிட்ட அந்த மாதத்தின் இறுதி தினத்தில் அனைவரையும் பிரியும்போது, புலனத்தின் வழி தொடர்பிலிருப்போம் என்பதை உணர்ந்தாலும், அது போன்ற ஒரு சூழலில் இனி நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ள முடியாது என்பது வருத்தமாக இருந்தது. இந்தப் பயணத்தின் வழி நான் எழுதத் திட்டமிருந்த என் நாவலின் முதல் வரைவை எழுதி முடித்திருந்தேன் என்ற மனநிறைவு உண்டாகியிருந்தது.

பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் இப்படிப்பட்ட உறைவிடத் திட்ட வாய்ப்புகளை சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு தேசிய கலை மன்றம் தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. அவற்றை நம் எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

இப்படிப்பட்ட உறைவிடத் திட்ட வாய்ப்புகளை சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு தேசிய கலை மன்றம் தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

உசாத்துணை:
https://www.nac.gov.sg/support/capability-development/training-opportunities/literary-arts-international-residencies-for-singapore-writers
https://www.sangamhouse.org/
https://thejamun.com/
https://scroll.in/article/963828/why-writers-residencies-in-general-and-sangam-house-in-particular-may-go-on-despite-covid-19