கடைசி இலை

0
375
மஹேஷ்

கவிதை

மரத்தில்
ஆகக் கடைசியாக மீதமிருக்கும்
அந்த ஒரே ஒரு இலைக்கு
பெரிதாக மகிழ்ச்சியில் திளைக்க முடியுமா?

முடியும்.
சுட்டெரிக்கும் ஒரு மதியத்தில்
சுவற்றில் ஒரு எறும்பு
இருக்கிறதென்று கொள்வோம்.

அந்த எறும்புக்கு
இந்த இலை
நிழல் தருவதாகக் கொள்வோம்.
வீசும் காற்றில்
இலை விழுந்தாலும்
மெல்ல அசைந்தபடியே
அது எறும்பின் மீது
ஒரு குடைபோல விழுவதாகக் கொள்வோம்.

தாய் எறும்பு வந்து
நலமுடன் இருக்கும் சேயைக் கண்டு
முறுவலிக்கும் வரையில்
இலையின் அந்த இருப்பு இருக்குமானால்
அதுதானே அதற்கு
ஆகப் பெரிய மகிழ்ச்சி !!

கவிஞர் பற்றிய குறிப்பு

வீரான் குட்டி

கேரளாவில் நாராயங்குளம் என்ற ஊரில் 1962இல் பிறந்த வீரான்குட்டி, தற்காலக் கவிஞர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். மலையாளம் மட்டுமல்லாது இவர் ஆங்கிலத்திலும் படைத்துள்ள கவிதைகள், பலமொழிகளில் மொழியாக்கமும் கண்டுள்ளன. தமிழகத்திலும் கேரளத்திலும் பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர். தற்போது மடப்பள்ளி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.