கவிதை காண் காதை

0
511

திங்கட்கிழமைப் புரட்சி

கணேஷ் பாபு

“திங்கட்கிழமைப் புரட்சி” என்று அதற்குப் பெயர் வைத்திருந்தோம். புரட்சி என்ற வார்த்தையே ரத்த நாளங்களில் ஒரு வகை கிறக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தரையில் இருந்து ஓரங்குலம் உயரமாக நடப்பது போன்ற ஓர் உணர்வையும் அச்சொல் தோற்றுவித்திருந்தது. சக மாணவர்களையெல்லாம் ஆதரவற்ற அகதிகளைப் போலவும் அவர்களைக் காப்பதற்காக இயற்கை தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்தாம் நாம் எனவும் நம்மை உணரச் செய்யும் ஒரு காலகட்டம் அது. மிகச் சாதாரணமாகத்தான் அது தொடங்கியது. கல்லூரியின் விடுதியறைகளின் மிக மெல்லிய முணுமுணுப்பொலிகளாகத் தொடங்கி ஒருகட்டத்தில் முக்கியமான பேசுபொருளாக வளர்ந்து விட்டிருந்தது.

நடந்தது இதுதான். எங்கள் கல்லூரி முதல்வரின் அடக்குமுறைகளும் அராஜகங்களும் நாளுக்கு நாள் அத்துமீறிவிட்டிருந்தன. இனியும் பொறுக்கமுடியாத நிலை. இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் விடுதியறைகளில் மாணவர்கள் அனைவரும் கூடி, முதல்வரின் செயல்பாடுகள் குறித்த எங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொள்வோம். தாய் நாவலில் வரும் பாவெலும் அவனது நண்பர்களையும் போல எங்களைக் கற்பனை செய்து கொள்வோம். இரவு முழுக்க விவாதித்து முதல்வரின் அதிகார அத்துமீறல்களை இவ்வாறு பட்டியலிட்டோம்.

1.எங்கெங்கும் அபராதம். எதற்கெடுத்தாலும் அபராதம். வகுப்புக்குத் தாமதமாக வந்தால் அபராதம். கேண்டீனில் சத்தமாகப் பேசினால் அபராதம். சட்டையை டக் இன் செய்யவில்லை என்றால் அபராதம். ஆங்கிலம் பேசத் தவறினால் அபராதம். மதிய இடைவேளைகளிலும் மாலை வேளைகளிலும் மாணவிகளோடு பேசினால் அபராதம் என ஒரு வரைமுறையின்றி அபராதம் விதித்தல். அப்படி வசூலித்த அபராதத்தில் கணிசமான தொகை முதல்வரின் சட்டைப் பைக்குள் போனதையும் எங்களில் சிலர் கண்டுபிடித்துவிட்டிருந்தனர். ஆகவே, அபராதம் வசூலிப்பதை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும். இதுவரை வசூலித்த அபராதத் தொகைக்கு முறையாகக் கணக்கு காட்டவேண்டும். அது குறித்த தணிக்கை அறிக்கைகளையும் மாணவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

2.பொறியியல் படிக்கும் எங்களுக்கு, செய்முறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது இன்றியமையாதது. ஆனால், கல்லூரியில் இருக்கும் செய்முறைப் பயிற்சி நிலையங்களும், பணிமனைகளும், அவற்றில் உள்ள இயந்திரங்களும் மிகவும் தரமற்றவையாக உள்ளன. இவற்றை வைத்து பொரி உருண்டை கூட வாங்க முடியாது. பொறியியலை எப்படி அறிந்து கொள்வது? இந்த கோரிக்கையை முன்னரே பலமுறை வலியுறுத்தியபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால், இந்தக் கோரிக்கை இப்போது கட்டளையாக மாறுகிறது.

3.புறநகரில் உள்ள நடுவாந்திரமான தனியார் பொறியியல் கல்லூரி அது. ஆகையால், பெரும்பாலான பேருந்துகள் கல்லூரி நிறுத்தத்தில் நின்று செல்வதே இல்லை. கல்லூரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நால்ரோட்டுச் சந்திப்பில் மட்டுமே பேருந்தை நிறுத்துகின்றனர். இதன்மூலம், கல்லூரிப் பேருந்தைப் பயன்படுத்தாத மாணவர்களும், விடுதி மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பேருந்துகளும் கல்லூரி நிறுத்தத்தில் நின்று போகுமாறு கல்லூரி நிர்வாகமும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (இனி இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு கல்லூரி வாசலிலேயே வசதியாக இறங்கிக் கொள்ளலாம்).

4.இனிமேலாவது, கல்லூரி இறுதியாண்டு முடித்த மாணவர்களையே, அடுத்த ஆண்டு விரிவுரையாளராகக் கொண்டு வரும் அவலத்தை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாங்களே பல விஷயங்களைச் சொல்லித் தருமளவிற்குத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

5.கல்லூரி விடுதியில் தரப்படும் உணவு மிகக் கேவலமாகதாக இருக்கிறது. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் தேங்காய்களைக் குறிபார்த்து எறிந்து வீழ்த்தத்தான் இங்கே தரப்படும் இட்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஐந்து அம்சக் கட்டளைகளை முன்னிட்டு மறியல் செய்வதுதான் திட்டம். ஆனாலும், விடுதியறை சகாக்களான செந்திலும், முருகேசனும் மற்றொரு யோசனையையும் முன்வைத்தார்கள். “இதுல கொஞ்சம் காரம் கொறையுதே… கெழவன் பொண்ணுங்க மேல கைவைக்கிறானே, அதையும் சேர்த்துக்குவோம்” என்றார்கள். ஆகவே, முதல்வர் கல்லூரி வராண்டாவில் மாணவிகளோடு நடந்துகொண்டே பேசும்போது, அவ்வப்போது அவர்களின் தலையிலும் தோளிலும் கைவைப்பது எங்களுக்குத் தெரியாமல் இல்லை. அதற்காக, அனைத்து மாணவர்கள் முன்னரும், முதல்வர் மன்னிப்பு கோரவேண்டும் என்ற கட்டளையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆறு கட்டளைகளையும் நிறைவேற்றும் வரை, காலவரையற்ற மறியல் தொடங்கப்பட வேண்டும் என்று முடிவானது. வகுப்பிற்கு யாரும் செல்லக்கூடாது. விடுதி உணவகத்துக்கு யாரும் செல்லக்கூடாது. கல்லூரி மைதானத்தில் அனைவரும் அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்த வேண்டும். சகல திசைகளில் இருந்தும் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், உள்ளூர் பத்திரிகைகளுக்கும் இச்செய்தியைச் சொல்லி, பிரசுரிக்கச் செய்ய வேண்டும் என விரிவாகத் திட்டம் தீட்டினோம்.

வரலாறு காணாத இப்புரட்சியைத் திங்கட்கிழமை துவங்க வேண்டும் என்று பேசிவைத்திருந்தோம். விடுதி மாணவர்களின் இந்தத் திட்டம் பிற மாணவ மாணவிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அனைவரும் இப்புரட்சிக்கு ஆயத்தமாகத் தொடங்கினர். விதவிதமான கடிதங்களை எழுதினோம், கெட்டித் தாள்களில் படம் வரைந்தோம். விடுதியில் உள்ள தீவிரவாத கும்பல், ஒரு பதாகையில், முதல்வரின் படம் வரைந்து, அவர் முகத்துக்கு நேராக ஒரு கத்தியை வரைந்து, கத்தியின் கூர்முனையிலிருந்து ரத்தத் துளிகள் சொட்டுவது போல வரைந்திருந்தார்கள். இந்த ஏற்பாடுகள் யாவும் ஓரிரு நாட்களில் முடிந்துபோனது. அடுத்த திங்கட்கிழமைக்காக வெள்ளி மாலையிலிருந்து காத்திருக்கத் துவங்கினோம்.

கனவுகள் முழுக்க புரட்சி குறித்து எழுதப்பட்ட கதைகள், நாவல்கள், படங்கள் என கலவையாக வந்துபோனது. கனவுகள் ஒருபக்கமும், யதார்த்தம் மறுபக்கமும் இழுக்க, எதிரெதிர் திசைகளில் இருந்து இழுக்கப்படும் விசை தாங்க மாட்டாமல், வெடித்துச் சிதறுவதுதான் மனித வாழ்வு என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளும் தருணமும் வந்தது. நாங்கள் மறியல் செய்யப் போகும் செய்தியை முன்னரே தெரிந்து கொண்டாரோ என்னவோ, கல்லூரி முதல்வர் மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். வார இறுதியில் மாணவிகள் விடுதியில் இருந்து தகவல் கசிந்து, கல்லூரி நிர்வாகமும் சுதாரித்துக் கொண்டது. திங்கட்கிழமை கல்லூரிக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்தார்கள். கல்லூரி நிர்வாகத்தில் இருந்து, உள்ளூர் மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு போன் கால்கள் பறந்தன. பெற்றோர்கள் எச்சரிக்கப்பட்டனர். பெரும்பாலும், மத்தியத் தர வர்க்கத்தைச் சார்ந்த பெற்றோர்கள் உடனடியாக தங்கள் பிள்ளைகளை கண்டித்து வீட்டிலேயே இருத்திக் கொண்டனர், நொடிநேரத்தில் புரட்சி பிசுபிசுத்துப் போனது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குத் தந்திகள் பறந்தன. அவர்களில் சிலர் சென்னையின் புறநகரில் இருக்கும் கல்லூரிக்குத் தூத்துக்குடியில் இருந்தும் அகஸ்தீஸ்வரத்தில் இருந்தும் புறப்பட்டு வந்துவிட்டனர். ஒரு வார காலம் கல்லூரியே கொந்தளித்துக் கொண்டிருந்தது. பின்னர், மெல்ல மெல்ல சூடு குறைந்து சூழல் அப்படியே குளிரிந்து கெட்டியானது.

விடுதி மாணவர்கள் நாங்கள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒவ்வொருவர் நடுவிலும் கனத்த பனிபோல மௌனம் நிலவியது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. மறியலுக்காகத் தயாரித்த பதாகைகள், கடிதங்கள் யாவும் அவசர அவசரமாக எரிக்கப்பட்டன. விடுதி அறைகளில் கல்லூரி நிர்வாகம் ஆய்வு செய்தது. மறியலுக்குத் திட்டம் தீட்டிய முக்கிய தலைகள் யாவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டோம். பின்னர், காலப்போக்கில், பனிப்பாறைகள் யாவும் உருகிப் போகவே, சூழல் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த ஏமாற்றத்துக்குப் பின்னர், புரட்சி, மறியல் போன்ற வார்த்தைகள் வேப்பங்காய்களாகக் கசக்கத் துவங்கின.

அதன்பின், மெல்ல மெல்ல அன்றாடத்தை நகர்த்திச் செல்லும் செய்திகளாலும், சூழல்களாலும் முற்றுகையிடப்பட்டு, அதனதன் போக்கில் செல்லத் துவங்கினோம். தேர்வுகள், ஆண்டு விழா ஆடல் பாடல்கள், சினிமா, அன்றலர்ந்து அன்றே மறையும் காதல்கள் என கல்லூரி மாணவர்களை மும்முரமாக வைத்திருப்பதற்குத்தான் எத்தனை விஷயங்கள் வரிசை கட்டுகின்றன. இறுதியாண்டின் கடைசித் தேர்வும் முடிந்து, விடுதி அறையைக் காலி செய்த அந்த கோடை மழை பெய்த நாளில், கல்லூரியின் முகப்பு வாயிலை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். ஏனோ, திங்கட் கிழமை புரட்சி நினைவுக்கு வந்தது. இது போல எத்தனையோ புரட்சிகள் மண்ணானதைப் பார்த்த அனுபவத்தில், கல்லூரி வாசல் என்னைப் பார்த்து புன்னகைத்தது போலிருந்தது.

நீங்கள் நனைவது
புரட்சியின் தூறல்
விரைவில் பெருமழை
உங்களை நனைக்குமென்றார்கள்..
அவசர அவசரமாக
பதுங்குகுழிகள் வெட்டப்பட்டன.
ஆயுதங்கள் தீட்டப்பட்டன.
செங்கொடிகள் காற்றில் புடைத்தன.
கறுப்புக்குடைகளும் வண்ணம் மாற்றப்பட்டன

அப்படியொரு மழை
பெய்யவேயில்லை.

காலமழை
குடைகளுக்கு சொந்த நிறத்தைக்
கொண்டுவர.
செங்கொடிகள்
“ஆட்கள் வேலை செய்கிறார்கள்” என
சகதியின் நடுவே
படபடத்துக் கொண்டிருக்கிறது

சாம்ராஜ்

சாம்ராஜின் இந்தக் கவிதையின் சாட்சியமாக இன்றளவும் என் அகத்தில் ஒளிர்ந்து மறைகிறது எங்கள் கல்லூரியின் திங்கட்கிழமைப் புரட்சி. இக்கவிதை, இடதுசாரிப் புரட்சிகளின் தோல்வியைச் சுட்டி நின்றபோதிலும், என்னளவில் அரசியல் கவிதையாக மட்டுமே இதைச் சுருக்கிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மனிதனின் அகத்திலும், ஒவ்வொரு நாளும் தோன்றி மறையும் புரட்சியின் வெளிப்பாடாகவும் இக்கவிதையை அணுகலாம். இப்போது நினைத்துப் பார்க்கையில், திங்கட்கிழமைப் புரட்சி தோல்வியடைந்தன் மூலம், தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் ஒரு காரியத்திற்கு எங்களை நாங்களே அப்போதே தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது. ஆம். இப்போதெல்லாம், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் அலுவலகம் செல்லத்தான் வேண்டுமா என்ற அதிகாலை நேர மனப்புரட்சியாக மட்டுமே சுருங்கிப் போனது திங்கட்கிழமைப் புரட்சி. அதுவும் தோல்வியில்தான் முடிகிறது.