கவிதை

சர்வான் பெருமாள்

அன்றாடங்கள்

தன்னை அழகுபடுத்திக்கொண்டபிறகே
மேலிருந்து குதிப்பதென
முடிவிலிருந்திருக்கிறது
இளம் பட்டாம்பூச்சி.
குருதியுடன் ஒட்டமறுத்த
உதட்டுச்சாயமும் அதை உறுதிபடுத்தியது.
கடந்துபோகும் போகும் ஒவ்வொருவரும்
கற்பனையில் ஒருமுறையாவது
மேலிருந்து தூக்கி எறிந்து ரசிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும்
விதவிதமாய் அலுப்பின்றி விழுந்து
எழுகிறாள் அவள்.
அடுக்குமாடிக் குடியிருப்பு
காலத்துக்கும் அழியாத
கருப்பு மையால் ஒரு நினைவுக்குறிப்பு
எழுதிக்கொள்கிறது!

பொங்கும் அமைதி

திடுமெனப் பூத்துக் குலுங்கும்
செடியொன்றைச் சுற்றி நிற்கும்
செடிகளின் கனத்த மெளனம்
சொற்களில் அடங்காது.
பிரபஞ்சம் கைபிசைந்து
எங்கோ போகும் மேகத்தை குலுக்கி விடுகிறது.
மீண்டும் ஒரு வசந்தம்
ஏதோ ஒன்றில்தான்
துளிர்விடத் துவங்குகிறது.
மேலும் மேலும் பெருகும் மெளனங்களால்
அமைதியின் மேல் ஏறி
அமைதியாய்ப் படுத்துக்கிடக்கின்றன
தோட்டத்தின் பொழுதுகள்.