பழந்தமிழ்ப் பா நயம்

பழ.மோகன

தலைவனும் தலைவியும் ஒரு மாலை வேளையில் உடன்போக்கு செல்கிறார்கள் இன்றைய மக்கள் வழக்கில் சொல்ல வேண்டுமெனில் ஒருவரையொருவர் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டு ஓடுகிறார்கள். அப்படிச் செல்கையில் பெருங்காடொன்றைக் கடந்து போகவேண்டும். வழியில் அவர்களைக் கண்ட மாந்தர் சிலர் இப்படிப்பட்ட நேரத்தில் இடர்ப்பாடுகள் நிறைந்த காட்டிற்குள் இந்தச் சிறுபெண்ணை அழைத்துக்கொண்டு செல்கிறானே இவன் எப்படிப்பட்ட கொடிய உள்ளம் கொண்டவனாக இருப்பான் என்று தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இதுதான் சூழல் அந்த வழிமாந்தர்கள் தங்கள் வாய்மொழியால் விவரிக்கின்ற இந்தச் சூழலைக் காட்சிப் படுத்தவேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இச்சூழலை எப்படிக் காட்சிப்படுத்துவது அப்போது ஒளிப்பதிவுக் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாத காலம். அத்தகைய காலத்தில் நான் காட்சிப்படுத்துகிறேன் என்று வருகிறான் ஒரு புலவன். அவன் பெயர் பெரும்பதுமன். அவனிடம் இருப்பதோ எழுத்தாணி ஓலைச்சுவடி ஆகிய இரண்டே இரண்டு கருவிகள். அவற்றைக் கொண்டு ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனைப்போல் தன் எழுத்தில் மிகமிக நுட்பமாக அக்காட்சிகளைப் பதிவுசெய்து நம் அகக்கண்ணில் விரியச் செய்கிறான். வாருங்கள் அவற்றைக் கண்டுகளிப்போம்.

தலைவனும் தலைவியும் செல்கின்ற நேரம் இருள்கவியும் மாலைப் பொழுது. செல்கின்ற வழியோ திகிலூட்டக்கூடிய கொடிய காடு இதைக் காட்சிப் படுத்த வேண்டும் எவ்வாறு செய்வது. எடுத்துக்காட்டிற்கு இன்றைய பேய்த் திரைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் ஒரு திகிலுணர்வை ஊட்டக்கூடிய காட்சியை எப்படி அமைந்திருப்பர். முதலில் ஊ….ஊ…. என்ற ஒலியோடு பெருங்காற்று வீசும், காலதர்க்(சன்னல்) கதவுகள் படபடவென்று அடித்துக்கொள்ளும் மெல்லிய தீரைச்சீலைகள் அசையும். இவற்றையெல்லாம் காணும்போது பார்ப்போர்க்குத் தானாக ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டுவிடும். இந்த வேலைகளை எல்லாம் அன்றே அவன் தன்னுடைய எழுத்தில் செய்கிறான். கீழ்க்காணும் பாடலடிகளைப் படித்தால் அதை அறிந்து கொள்ள முடியும்.

அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து
ஒலிவல் ஈந்தின் உலவை அம்காட்டு

காற்று சற்று அழுத்தமாக வீசுவதால் பெருங்குன்றத்தில் வளர்ந்திருக்கக்கூடிய ஈச்சமரத்தின் காய்ந்த ஓலை வலிமையான ஒலியை எழுப்பியபடி பிய்த்துக் கொண்டு கீழே விழுகின்ற காடு அது. நீங்கள் சிற்றூர்ப் பகுதியில் வாழ்ந்திருந்தால் இதை உணர்ந்திருப்பீர்கள். பொழுதடையும் நேரத்தில் பனைமரங்கள் இருக்கும் பகுதிகளுக்குத் தனியாளாய்ச் சென்றீர்கள் என்றால் காற்றில் பனை ஓலைகள் அசைந்தாடி எழுப்புகின்ற சரசரவென்ற ஒலி எப்பேர்ப்பட்ட துணிச்சல்காரனையும் அச்சம் கொள்ளச் செய்துவிடும். அதிலிருந்துதான் ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்ற சொற்றொடர் தோன்றியது. இந்நிகழ்வைத்தான் புலவன் மேற்கூறிய இரண்டு அடிகளில் பேரொலியெழுப்பியவாறே விழுகின்ற ஈச்ச ஓலையைக் கொண்டு விவரிக்கின்றான்.

சரி மேலே கூறியதுபோல் தற்காலத் திகில் திரைப்படமொன்றில் காற்று வீசுதல், காலதர்க் கதவுகள் அடித்துக் கொள்ளுதல் போன்ற காட்சிகளைக் காட்டியபிறகு அடுத்ததாக என்ன செய்வார்கள்? அப்படியே பார்ப்போர் உயிர் உறைந்துபோகும்படி குருதி ஒழுகிக் கொண்டிருக்கும் கொடிய முகமொன்றை அல்லது உருவமொன்றைக் காட்டுவார்கள். இதைத்தான் அப்போதே அப்புலவனும் அடுத்த சில அடிகளில் செய்கிறான்.

ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத்தலைய நெய்த்தோர் வாய
வல்லியப் பெருந்தலைக் குருளை மாலை
மானோக்கு இண்டிவர் ஈங்கைய சுரனே

அந்தக் காட்டு வழியே செல்கின்ற மான்களையோ அல்லது மற்ற கால்நடைகளையோ பாய்ந்து சென்று கழுத்தைக் கடித்து அவற்றின் தலைகளைத் துண்டாக்கியதால் தன் மேனியெங்கும் செந்நிறமாக மாறி வாய்ப்பகுதியில் குருதி ஒழுகிக் கொண்டிருக்கின்ற பெரிய தலைகளையுடைய புலிக்குட்டி ஒன்று மீண்டும் மானின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாலைப் பொழுது. இங்கு அந்தப் புலிக்குட்டி மானுக்காகக் காத்திருப்பதற்குத் தோதாக மான்போன்ற அந்தப் பெண்ணை அவன் அழைத்துச் செல்கிறான் என்று நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் எப்படிப்பட்ட வழியில் என்றால் இண்டங்கொடிகள் படர்ந்த ஈங்கைப் புதர்ச்செடிகள் நிறைந்த காட்டுக்குள் செல்கிறான். பொதுவாகப் புதர்ச்செடிகளே அடர்த்தியானவை. அவற்றின்மீது கொடிகளும் படர்ந்திருந்தால் மேலும் ஒளிபுக முடியா அளவிற்கு அடர்ந்திருக்கும். அத்தகைய இண்டங் கொடிகளோடு கூடிய ஈங்கைப் புதர்ச்செடிகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும் காட்டிற்குள் புலிக்குட்டி மறைந்திருப்பது தெரியாது. அப்படிப்பட்ட வழியில் அவளை முன்னே செல்லவிட்டு இவன் பின்னால் செல்கின்றான் என்றால் அவன் எப்பேர்ப்பட்டவனாக இருப்பான்? அதைத்தான் அடுத்த அடிகளில் விவரிக்கிறார் புலவர்.

வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே

கூரிய பற்களை உடைய மெல்லியலாளாகிய அந்த அழகுமங்கையை முன்னே செல்லவிட்டு கதிரவன் பகலுக்கும் இரவிற்கும் இடையில் நிற்கும் மாலைப்பொழுதில் ஊரைவிட்டு நீங்கும் அவ்விளைஞனின் உள்ளம், காற்றோடு பொருதிய முகில்கள் கரிய நிறத்து மலைமேல் மிளிர்ந்து உண்டாக்குகின்ற இடிமின்னலைவிடக் கொடியதாகும் என்று கடிந்துரைக்கிறார். இங்கே நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.

வை என்றால் கூர்மை என்று பொருள்படும். எயிறு என்பது பல்லைக் குறிக்கும் சொல்லாகும் வையெயிறு என்றால் கூரிய பல் என்பதே பொருள். சங்க இலக்கியம் முழுவதும் பெண்களைப் பற்றிய விவரிப்புகளில் வையெயிறு, வாலெயிறு என்றெல்லாம் பற்களைக் குறிப்பிட்டு விவரித்திருப்பர். ஏனென்று சற்று ஆழ்ந்துபடச் சிந்தித்தோமேயானால் ஒன்று விளங்கும். பற்களுக்கும் பருவத்திற்கும் தொடர்புண்டு. மாட்டின் அகவையை அறிய பல்லைப் பிடித்துப் பதம்பார்ப்பது வழக்கம். சிறு குழந்தைகளுக்கும் அகவையைக் கணக்கிட பல்முளைத்துவிட்டதா என்று பார்ப்போம். மேற்கண்ட பாடலில் கூரிய பற்கள் என்று குறிப்பிடுவதும் அதனால்தான். பற்கள் சிறிய வடிவத்தில் இருக்கும்போதுதான் கூர்மையாகத் தோற்றமளிக்கும். இளம் பருவத்தினர்க்கே பற்கள் சிறியதாகக் காணப்படும். ஆகையால் அப்பெண் அகவை முதிராப் பதின்பருவத்தினள் என்பதன் குறியீடாகவே வையெயிறு என்ற சொல்லை இங்குக் கையாள்கிறார் புலவர்.

நிறைவாக நாம் காணப் போவதுதான் இப்பாடலிலேயே வியக்கத்தக்க ஒன்றாகும்.

காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உருமி

இதில் மால்வரை என்றால் கரிய மலை என்று பொருள்படும். அம்மலையின் மேல் இடியோசையுடன் கூடிய மின்னல் உண்டாகிறதாம். அவ்விடிமின்னல் எவ்வாறு தோன்றுகிறதென்றால் காற்றில் மேகங்கள் ஒன்றோடொன்று உரசித் தோன்றுகிறதாம். இதில் ஓர் அறிவியல் உள்ளது. மேகங்களில் வெப்பக் காற்று ஈரக்காற்று இரண்டுமே இருக்கும். அதில் ஈரக்காற்றானது பனிப்படிகங்களாக மாறி மேகங்களின் கீழ்ப்பகுதியிலும் வெப்பக்காற்று மேகங்களின் மேல்பகுதியிலும் உறைந்திருக்கும். அவை இரண்டும் ஒன்றோடொன்று உராய்ந்து வினைபுரிவதால் மேகங்களில் நேர் மின்துகள்களும் எதிர் மின்துகள்களும் உருவாகின்றன. மழையின்போது வீசுகின்ற வலுத்த காற்றினால் மேகக்கூட்டங்கள் உந்தப்பட்டு ஒன்றோடொன்று சேர்கையில் அவற்றில் இருக்கும் நேர், எதிர் மின்துகள்களும் ஒன்றோடொன்று இணைந்து வினைபுரிந்து மின்னாற்றலாக வெளிப்படுகின்றன. அதாவது காற்று மேககங்களை உந்துவதுதான் மின்னல் உருவாகுவதற்கான முதன்மைக் காரணி. மேற்கண்ட கூற்றை அறிவியல் பாடநூல்களில் படித்திருக்கிறோம். இதை எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வாறு இவ்வளவு சரியாகக் கண்டறிந்து கூறியிருக்கின்றனர் என்று எண்ணிப் பார்க்கையில் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வாறு தோன்றும் இடியைப் போன்று அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லும் இளைஞனின் உள்ளம் கொத்தளிப்பான உணர்ச்சிப் பெருக்குடன் இருக்கிறது என்பதுதான் இப்பாடலின் முடிவு. மீண்டும் ஒருமுறை நற்றிணையின் இரண்டாம் செய்யுளாக அமைந்த இப்பாடலை முழுவதுமாய்ப் படித்துப் பாருங்கள் உறுதியாகப் பிடித்துப் போகும் உங்களுக்கு.

நற்றிணை – 2 / திணை : பாலை / கூற்று : கண்டோர் கூறியது

அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து
ஒலிவல் ஈந்தின் உலவை அம்காட்டு
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியப் பெருந்தலைக் குருளை மாலை
மான்நோக்கு இண்டுஇவர் ஈங்கைய சுரனே
வைஎயிற்று ஐயள் மடந்தை முன்உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே
-பெரும்பதுமனார்