கூகுள் ஜெமினி-புதிய (இரட்டை) முகம்

0
82
ஜமால் சேக்

ஒரு நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் உங்களுக்குப் பிடித்த BTS பாடகர் அல்லது கொரியத்தொடர் நாயகி பேட்டி கொடுப்பதை, அல்லது சீன அதிபர் முக்கிய அறிவிப்பொன்றை சீன மொழியில் பேசுவதை உங்கள் காதில் பொருத்தியிருக்கும் அலை ஒலிக்கேட்பான் வழியாக தமிழிலோ ஆங்கிலத்திலோ நேரடியாக மொழிமாற்றம் செய்து கேட்கும் வசதி வந்தால் எப்படியிருக்கும்? ஆம். இந்த வருடத்திற்குள் அது சாத்தியமாகலாம்.

ஏகப்பட்ட செய்யறிவு (Artificial Intelligence) மென்பொருள்கள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தெரியாத ஒரு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வடை சுடுவது எப்படி என்று நிலாவில் வடை சுட்ட பாட்டிக்குப் போட்டியாக தமிழிலேயே அவர் குரலில் பேசி அசத்துவதும், மறைந்த பாடகர்கள் அவர்கள் குரலில் திரைப்படப்பாடல்களைப் பாடுவதும் என நாம் வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதுமைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சாட்ஜிபிடி (ChatGPT)-யின் தாய் நிறுவனமான Open AI வெளியிட்ட Multimodel LLM எனப்படும் பற்கோண மொழித்தேறல் வழியாக தட்டச்சு செய்த கோரிக்கையை உள்வாங்கிக்கொண்டு ஒரு நிமிட ஒலிப்படத்தை உருவாக்கும் சோரா (SORA) என்றொரு மென்பொருள் பயனாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள் இந்த முயற்சியில் கடந்த 2014லிருந்தே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூகுள் ப்ரெய்ன் (BRAIN) என்றொரு மென்பொருள் அப்போது செயல்படத் தொடங்கியது. திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்யப்படும் வழமையான செயல்களை மென்பொருள் கொண்டு எளிமையாகச் செய்வதுதான் நோக்கம். அதே காலகட்டத்தில் ஐபிஎம் நிறுவனம் வாட்சன் என்றொரு மென்பொருளை உருவாக்கிக்கொண்டிருந்தது. ஆனால் ஐபிஎம் முந்திக்கொண்டிருந்தது. சமகாலப் பயன்பாடுகளில் வாட்சனின் பங்கு அதிகமிருந்தது. 2014ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரால் ஆரம்பிக்கப்பட்ட டீப்மைண்ட் (DeepMind) என்றொரு மென்பொருளை கூகுள் வாங்கி, பிரெய்ன் (Google BRAIN) உடன் சேர்த்து கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind) என்று பெயரிட்டு ஆராய்ச்சிகளை மும்முரப்படுத்தியது. டீப்மைண்ட் (Google DeepMind) உருவாக்கிய ஆல்ஃபாகோ (AlphaGo) கோ(Go) எனும் விளையாட்டில் அப்போதைய உலகச்சாம்பியனை வென்று ஆச்சரியமூட்டியது. புரொட்டீன் பற்றிய பரிசோதனைகளில் மிகவிரைவாக ஆராய்ந்து முடிவுகளை அறிவித்ததுடன் மட்டுமில்லாமல் சாத்தியமாகக் கூடிய 200 மில்லியன் புரோட்டீன் வகைகளை அது முன்கூட்டியே அடையாளம் கண்டது. இனிமேல் அப்படி ஒரு புரோட்டின் கொண்டிருக்கும் கண்டுபிடிக்கப்படாத உயிரினத்தை மனிதன் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கிடையில் இணையப் புழக்கம் பெருகியதால் பல்வேறு மொழிகளின் தாக்கமும் அவற்றை ஒன்றிணைக்கவும், அலசி ஆராயவும், மொழிசார்ந்த அறிவார்திறன் (Large Language Model – LLM) கூடிய மென்பொருள் தேவைப்பட்டது. (Google BARD) எனப்படும் மென்பொருள் அதற்காக உருவாக்கப்பட்டது. (ChatGPT) என்றொரு மென்பொருள் அதேசமயம் அதே தளத்தில் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்தது. கூகுள் அதை வாங்குவதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் முந்திக்கொண்டது. டூயட் ஏஐ (DUET AI) எனப்படும் கூகுள் மென்பொருள் தூசிதட்டப்பட்டு பார்டுடன் இணைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மும்முரமாயின. இரண்டும் இணைந்த புதிய மென்பொருள் கூகுள் ஜெமினி என்றழைக்கப்பட்டது. ஜெமினி என்பது இரட்டையரைக் குறிக்கும் – பார்டு மற்றும் டூயட் ஏஐ.

கூகுள் ஜெமினி தற்போது சாட்ஜிபிடி 4.0க்கு கடும் போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்திலும் சரி, வேகத்திலும் சரி, சாட்ஜிபிடி ஒரு படி பின்தங்கியே இருக்கிறது. கூகுள் ஜெமினி சராசரிப் பயனாளருக்கு இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் சாட்ஜிபிடிக்கு மாதாமாதம் பணம் கட்டவேண்டும்.

நமக்கு இலவசமாகப் பயன்படுத்தக் கிடைக்கும் கூகுள் ஜெமினி என்னவெல்லாம் செய்யும்?

ஆக்குச் செய்யறிவு (Generative AI) வகையில் ஜெமினியும் சாட்ஜிபிடியும் அடங்கும். அதாவது தானே சுயமாகச் சிந்தித்து உருவாக்கும் செய்யறிவு மென்பொருட்கள் எனப்படும். சுயமாகச் சிந்தித்து உருவாக்கும் ஆக்குச் செய்யறிவு இருவகைப்படும் – செய்யறிவுத் தானியக்கம் (AI Automation) மற்றும் செய்யறிவுத் தன்னியக்கம் (AI Augmentation). செய்யறிவுத் தானியக்கம் மனிதவேலைகளைத் தானே செய்து செல்வுகளைக் குறைக்கவும் கூடுதல் உற்பத்தித்திறன் ஈட்டுவதும் ஆகப் பயன்படுகிறது. செய்யறிவுத் தன்னியக்கம் என்பது மனிதமூளையின் வேலையைச் சுலபமாக்கி புதுப்புது புத்தாக்கத்தை உருவாக்குவது. இதன் வழி மனிதனின் புத்தாக்கத்தை பன்மடங்காக்கி இதுவரை சிந்தித்திராத சாத்தியமாயிராத புதுப்படைப்புகளை உருவாக்குவது. முன்னது மனிதனின் வேலைகளைக் குறைக்குமென்றால், பின்னது மனிதனின் மூளைத்திறன் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

சுயமாகச் சிந்தித்து உருவாக்கும் ஆக்குச் செய்யறிவு இருவகைப்படும் - செய்யறிவுத் தானியக்கம் (AI Automation) மற்றும் செய்யறிவுத் தன்னியக்கம் (AI Augmentation)

நடைமுறையில் நாம் காணும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

மொழி மற்றும் படங்கள் வழியாக புதிய படைப்புகளை உருவாக்குவது. உதாரணமாக, “ரம்மியமான கடற்கரையில், ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையில், ஒரு இளம் யுவனும் அழகிய யுவதியும் தங்கள் ஆடைகள் நனைவதை மறந்து கடலை ரசித்துக்கொண்டிருந்தார்கள்” என்று வார்த்தையால் தட்டச்சினால், அது படமாக உருவெடுக்கும் கலைதான் அது. வரைகலை மற்றும் கணிணிவரைகலை ஓவியர்களுக்கெல்லாம் இது வேலைகளைக் குறைக்கும். மேம்படுத்தி வரைய வாய்ப்புகள் உண்டு. புதிய கோணங்களும் கிடைக்கும். சமீபத்தில் சீனப்புத்தாண்டு வாழ்த்துக்கள் இப்படி செய்யறிவு கொண்டு உருவாக்கப்பட்டு உலா வந்தன.

மொழிவழி என்று எடுத்துக்கொண்டால், மின்னஞ்சல் பதில் அனுப்புவதற்கான முன்வடிவை செய்யறிவு உங்களுக்குத் தானாகவே தருகிறது. நீங்கள் மேற்கொண்டு மாற்றங்களைச் செய்து பதிலை அனுப்ப முடியும். மைக்ரோசாப்ட் சாட்ஜிபிடியை ஆபீஸ்365 வழியாக இந்த வசதியைத் தருகிறது. மிகச் சிறந்த பவர்பாயிண்ட்களும் நிமிடங்களில் உருவாக்கப்படுகின்றன. எக்ஸெல் சூத்திரங்களை நினைவுகொள்ளத் தேவையில்லை, செய்யறிவு அந்த வேலைகளைச் செய்கிறது.

கட்டுரைகள் எழுதுவதை சாட்ஜிபிடியும் ஜெமினியும் எளிமைப் படுத்தியுள்ளன. தானே இணையத்தில் தேடித் தரவுகளைக் கண்டு கட்டுரையையும் குறிப்பிட்ட அளவுகளுக்குள் ஒருவர் எழுதியது போன்றே எழுதிக் கொடுக்கிறது. ஆனால் அதில் பலப்பல ஆபத்துக்கள் உள்ளன, அதைப் பற்றி கடைசியில் பார்க்கலாம். ஒரு நிறுவனத்திற்காக அலுவல் நிமித்தம் கட்டுரை எழுத இது மிகவும் உதவும்.

ஒரு நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் (marketing) துறையில் பணிபுரிவோருக்கு செய்யறிவு ஒரு வரப்பிரசாதம். ஒரு விளம்பரத்தின் குறிச்சொற்கள் (keywords), படங்கள், தலைப்பு (title), மொழிபெயர்ப்பு, வலைத்தேடல்குறியீடுகள் (SEO) என அனைத்தையும் ஒரே முயற்சியல் செய்யறிவு தருவதால், இருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு கூடுதல்வேலைகளை அவர்களால் செய்யமுடியும்.

மென்பொருள் எழுதுவோர் தமக்குத் தேவையானதைச் சொன்னால் அதற்கான நிரல்களை செய்யறிவு தானே எழுதித் தருகிறது. மண்டையை உடைத்துக்கொண்டு மணிக்கணக்காக எழுதிக்கொண்டிருக்கும் வேலை இனி இல்லை. ஏற்கனவே எழுதிய மென்பொருள் நிரல்களில் தவறுகள் உள்ளனவா என்பதை நொடியில் சுட்டிக்காட்டுவதுமின்றி, அதைச் சரி செய்தும் தருகிறது. இது மிகப்பெரிய முன்னேற்றம். நிரல் எழுதி அதில் தவற்றைச் சரிசெய்யும் அக்கப்போருக்காகவே நிரல் எழுதுவதிலிருந்து வெளியேறிய என்னைப் போன்றோருக்கு இது அரிய வாய்ப்பு.

நிறுவனங்களில் அறிவுப் பெட்டகங்களில் (Knowledge Bank) இருந்து ஆராய்ந்து ஒரு தகவலைப் பெற சரியான தரவுத்தளம் முக்கியம். எனினும் சரியான தகவல்களை உடனடியாகத் தேடிப்பெற முடியவில்லை என்கிற குறையைச் சரிசெய்ய முடியவில்லை. அதை எளிதாக்க செய்யறிவு முன்வருகிறது. தேடப்படும் சொற்களைக்கொண்டு தானே ஆராய்ந்து ஏறக்குறைய சரியான தகவல்களை முதல் தடவையிலேயே தருகிறது செய்யறிவு. ஆனாலும் இதில் சில ஆபத்துக்கள் உள்ளன, அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பு படியெழுதுதல் (transcription) என்பது மிகப்பெரிய புறத்திறனீட்ட (Outsourcing) வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. ஒலிப்பேழையக் கேட்டு அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தருவதுதான் அந்த வேலை. இப்போது அந்த வேலை முழுக்க முழுக்க செய்யறிவிடம் போய் விட்டது. ஒருவர் பேசும்போதே அதை ஆங்கிலத்தில் சொல்லாக்கி கணிணியில் சேமிப்பதால், அப்படிப் பட்ட வேலைகளுக்கு இனி ஆபத்து தான். இதில் மொழிபெயர்ப்பும் விரைவில் சேர இருப்பதால், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்து அதைக் கணினியில் சேமிப்பதோ, வலையேற்றம் செய்வதோ இனி முடியும்.

முத்தாய்ப்பாக, ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே அதை அவரவர் மொழியில் மொழிமாற்றம் செய்து ஒலியாகவும் வார்த்தைகளாகவும் வேறு மொழிகளில் உடனே தருவதுதான் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இனி ஒருவருக்கு மொழி தெரியாததால் அங்கு சிரமமாக இருந்தது என்பதையோ, சொன்னது புரியவில்லை என்பதையோ சொல்லி சமாளிக்க முடியாது. உங்கள் ஒலிக்கேட்பானில் ஒருவர் வேறு மொழியில் பேசப்பேச அது உங்களின் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உங்கள் காதுகளில் ஒலிக்கும். நீங்கள் உங்கள் மொழியில் பதில் கூறினால், அதைக் கேட்க அவரும் அதே மாதிரியான் ஒலிக்கேட்பான்களைப் பயன்படுத்தவேண்டும், அல்லது செல்பேசியில் உள்ள மென்பொருள் வழியாக மொழிமாற்றம் செய்து ஒலியாக அடுத்தவருக்கு அவர் மொழியில் தரமுடியும். உலகம் சுற்ற நினைப்போருக்கு மிகப் பெரிய பரிசு இது.

ஒருவரின் உருவப்படத்தை வைத்துக்கொண்டும், அவரின் பேச்சை வைத்துக்கொண்டும், அவர் பேசுவது மாதிரியே பேசும் குறும்படங்கள் தற்போது பிரபலமாகி வருகிறது. ஒரு கட்டத்தில் மேலே போய் ஒரு குறும்படத்தில் இருப்பவரின் முகத்தை மாற்றி, குரலை மாற்றும் சாத்தியமும் அதிகம். இதனால், மோனாலிசா ஒவியத்திலிருப்பவர் உங்கள் கேள்விகளுக்கு இத்தாலிய மொழியிலேயே பதில் கூறுவார். உங்கள் தாத்தாவோ பாட்டியோ தற்காலத்து சினிமாப்பாடல்களை அவர்கள் குரலிலேயே பாடவைக்கும் குறும்படங்களின் சாத்தியமும் அதிகம்.

செய்யறிவின் பயன்பாட்டில் உள்ள சில ஆபத்துக்கள் பற்றிப் பார்க்கலாம்.

கட்டுரைகள் எழுதப் பணிக்கும்போது செய்யறிவு நம்மால் அணுக முடியாத பல இணையப் பக்கங்களிலிருந்தெல்லாம் தகவல்கள் தேடினாலும், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் வேலையை அது செய்வதில்லை. இதனால், அது தேடித்தரும் பல தகவல்கள் சிலசமயம் போலிச் செய்திகளாகக் கண்டறிந்த நிகழ்வுகள் உண்டு. இப்படி செய்யறிவு எழுதிய கட்டுரையைத் தரவு சரிபார்க்காமல் உங்கள் பெயரில் வெளியிட்டால் உங்கள் பெயருக்குக் கேடாய் முடியும். ஆகவே செய்யறிவு கொண்டு கட்டுரை எழுதுவதில் கவனம் அவசியம். அதே சமயம் ஒரு கட்டுரை செய்யறிவு கொண்டு எழுதப்பட்டதா என்பதை உறுதி செய்யும் செய்யறிவு மென்பொருட்களும் வந்து விட்டன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இப்படி செய்யறிவு எழுதிய கட்டுரையைத் தரவு சரிபார்க்காமல் உங்கள் பெயரில் வெளியிட்டால் உங்கள் பெயருக்குக் கேடாய் முடியும். ஆகவே செய்யறிவு கொண்டு கட்டுரை எழுதுவதில் கவனம் அவசியம்.

நிறுவன அறிவுப்பெட்டகத்தில் செய்யறிவுப் பயன்பாடு, சிலசமயங்களில் உங்கள் நிறுவனத்தின் ரகசியத் தகவல்களை இணைய வழியாக மற்றவர்களுக்குத் தேடத்தரும் தகவல் கசிவு (Data Leaks) நிகழ்வுகள் பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளன. இதற்குக் காரணம் செய்யறிவு இணையத்தில் உள்ளதால், தேடிய தகவல்களைத் தனது சேமிப்பில் வைத்துக்கொள்வதால், நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் அப்படிச் சேமிப்பில் போய்ச் சேர்ந்து விடுவதால் இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்கான முன்னெடுப்புகள், தடுப்புச் செயலிகள் என இதைச் சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ரகசியத் தகவல்களை ரகசியமாகவே வைக்க இணையத்தில் தொடர்பின்றி நிறுவனத்திற்குள் செய்யறிவை நிறுவவேண்டியது அவசியமாகிறது.

Deep Fake எனப்படும் செய்யறிவுத் தொழில் நுட்பம் இன்றைக்குப் பெரும் அச்சுறுத்தலாகி உள்ளது. வாட்சப் வழியாக இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் மகனோ மகளோ தொலையிலிருந்து காணொலி வழியாக உங்களிடம் பணம் அனுப்பச் சொல்லும் சாத்தியம் அதிகம். சமீபத்தில் ஹாங்காங்கில் 20 மில்லியன் டாலர்களை இப்படி இழந்த ஒரு நிறுவனம் இருக்கிறது. இந்த வருடம் 67 நாடுகளில் தேர்தல் நடக்கிறது. அங்குள்ள தலைவர்களின் உருவங்களில் பொய்ப் பிரச்சாரங்களை அவர்கள் உருவிலேயே, அவர்கள் குரலிலேயே குறும்படங்களாக வெளிவரும்போது பார்க்கும் பாமரருக்கு அதன் தொழில் நுட்பம் புரியப்போவதில்லை. இதனால், அரசியல் தலைவர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. தொழில் நுட்பம் வழியாக இதைச் சரிசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் செய்யறிவுச் சட்டம் ஒன்றைக் கடந்த வாரத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் இந்தக் குறிப்பிட்ட தாக்கத்திலிருந்து உடனடியாக பரிகாரம் காண வழியில்லை.

கூகுள் ஜெமினி பல அவதாரங்களை எடுத்துள்ளது. ஜெமினி நானோ (Google Gemini Nano), ஜெமினி புரோ (Google Gemini Pro) மற்றும் ஜெமினி அல்ட்ரா (Google Gemini Ultra) என மூன்று வகையாக அறிமுகம் காணுகிறது. இதில் ஜெமினி நானோ ஆன் ட்ராய்ட் செல்பேசிகள் வழியாக இலவசமாகவும், கூகுள் கணக்கு வைத்திருப்போருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. ஜெமினி புரோ மற்றும் ஜெமினி அல்ட்ரா ஆகியவைகளைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டியிருக்கும். அவை பெரும்பாலும் நிறுவனங்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

காலத்தின் மாற்றங்கள் செய்யறிவின் வழி குதிரைப்பாய்ச்சலாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. குதிரையின் லகான் நம் கையில் உள்ளதா அல்லது குதிரையின் போக்கில் நாம் போகப் போகிறோமா என்பது தான் இப்போது நம்முன் உள்ள பெருங்கேள்வி.

காலத்தின் மாற்றங்கள் செய்யறிவின் வழி குதிரைப்பாய்ச்சலாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. குதிரையின் லகான் நம் கையில் உள்ளதா அல்லது குதிரையின் போக்கில் நாம் போகப் போகிறோமா என்பது தான் இப்போது நம்முன் உள்ள பெருங்கேள்வி

(இக்கட்டுரையில் பிரசுரமாயிருக்கும் படங்கள் டால்-ஈ என்னும் செய்யறிவுச் செயலி மூலம் உருவாக்கப்பட்ட படங்களாகும்)