சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான கடல்பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த ஜூன் 28க்கு இரண்டு நாள்களுக்குப் பின் ஜூன் 30 அன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தனது 100ஆவது இதழை அறிஞர்கள், வாசகர்கள் பலரின் முன்னிலையில் உட்லாண்ட்ஸ் நூலக அரங்கத்தில் வெளியிட்டது. நடனம், பாடல் , கலந்துரையாடல் நிகழ்வுகளுடன் தமிழகத்திலிருந்து வந்திருந்த மூத்தப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு.சமஸ் சிறப்பு விருந்தினராக உரை நிகழ்த்தி சிறப்பு சேர்த்தார் . 100ஆவது இதழ் எனும் மைல்கல்லைத் தொடப் பேருதவியும் ஆதரவும் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் ஆசிரியர் குழு மீண்டும் ஒருமுறை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தனது 59ஆவது தேசிய தினத்தைக் கொண்டாட இருக்கும் சிங்கப்பூர் அதற்கான ஆயத்தங்களில் மூழ்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொண்ட புதிய பிரதமர் திரு.லாரன்ஸ் வாங்கின் முதல் தேசிய தின உரையை சிங்கப்பூரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 4G எனப்படும் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த பல ஆண்டுகளாகத் தயார் செய்யப்பட்டு. கோவிட் நெருக்கடி காலத்தில் 4G குழு சிறப்பாகவே பணியாற்றி தனது செயல்திறனை வெளிப்படுத்தியது. அதன் செயல்பாடுகள் இனி வரும் காலத்தில் மக்களாலும் தலைவர்களாலும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். நாட்டுக்கும் மக்களுக்கும் புதிய குழு சிறப்பாகச் சேவையாற்றும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.
மேலும், மாத இறுதியில் பாரீஸ் நகரில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக 23 வீரர்கள் தடகளம், இறகுப்பந்து, நீச்சல் , மேசைப்பந்து, ஒற்றைபடகு, பாய்மரப்படகு உள்ளிட்ட பல விளையாட்டுகளில் பங்கெடுக்கின்றனர். தடகள வீராங்கனை சாந்தி பெரெரா மீதான நம்பிக்கை கூடியிருக்கிறது. வீரர்கள் வெற்றிகரமாக விளையாடி பதக்கங்கள் வென்று சிங்கைக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
செப்டெம்பரில் நடைபெற இருக்கும் ஃபார்முலா 1 கார்ப்பந்தயத்துக்கான ஏற்பாடுகளில் நகரம் மும்முரமாகி வருகிறது. 2008இல் தொடங்கிய இந்தப் பந்தயம் 15ஆவது முறையாக (2020-21இல் கோவிட் காரணமாக நடைபெறவில்லை ) நடைபெறுகிறது. சிங்கைக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வுகளில் ஒன்றான இதற்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
இம்மாதத்திலிருந்து திரு.மணலி அப்துல் காதர் நமது ஆசிரியர் குழுவில் இணை கிறார். குழுவில் இருந்த திரு.ஜமால் ஷேக் தற்கால விடுப்பில் சென்றுள்ளார் . ஜமால் ஷேக்கிற்கு நன்றிகளும் அப்துல் காதருக்கு வரவேற்பும் தெரிவித்துக்கொள்கிறோம்.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெ டுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.
சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனை த்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை [email protected] முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.