
எப்படித்தான் வாழ்கிறார்கள்?
சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் சில நாட்களாக பின் தொடர்ந்தது.
தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் இருந்தது. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது என்று பலரும் பொறாமையும் கொண்டார்கள்.
ஐம்பதை நெருங்கிய மனமொத்த தம்பதியினர் விழா மேடையில் ஏறுகிறார்கள். பெரிய ஆச்சர்யம்தான். இளம் தம்பதிகள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமுள்ளன என நினைக்கலானார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் பல தம்பதிகள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.
பலரும் அவர்களை முன்னுதாரணமாக எடுத்தார்கள். எப்படி வாழ்கிறார்கள் பாரேன் என பேசவும் செய்தார்கள்.
மேடையில் கணவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. “ஐயா உங்க கல்யாண நாள் எப்போ?”
அவருக்கு பதில் நினைவில் இல்லை. கூட்டத்தில் ஏதோ சலசலப்பு. பின் மனைவியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவருக்கும் நினைவில் இல்லை.
இருவருக்குமே திருமண நாளே நினைவில் இல்லையே; இவர்கள் எப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ்வதாகச் சொல்கிறார்கள் என்று குழம்பினார்கள்.
சிலருக்கு மட்டும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு இப்படித்தான் வாழ்கிறோம் என்ற பதில்தான் அவர்களுடையதும்.
அங்கே ஓரிடம் வேண்டும்
சுதாகர் ரொம்பவும் பக்தி கொண்டவர். இம்மையை விடவும் மறுமையில் அதிகமே அக்கறை கொண்டவர். அதற்காகப் பாடுபடுபவர். காலையில் விழிப்பது முதல் இரவு படுப்பது வரை ஒரே பக்திமயம்தான்.
அவர் வீட்டுத் தொலைக்காட்சியில் எப்பவும் பக்திப் படங்களாகவே ஓடிக்கொண்டிருக்கும். வானொலியில் எப்பவும் பக்திப் பாடல்களே கேட்டுக்கொண்டிருக்கும். கைப்பேசியில் கூட நாள் கிழமைகளுக்கு ஏற்றார் போல ஏதாவது ஒரு சாமி அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும். சட்டி பானைகள் எதுவும் மருந்திற்கும் ரத்தம் பார்த்திடாத சைவம் போற்றுபவர்.
பெற்றோர் செய்த புண்ணியத்தில் இம்மை இன்பமாக அமைந்திருந்தது. மறுமைக்குத் தான்தானே பாடுபடவேண்டும் என்கிற தெளிவு உள்ள மனிதர் அவர்.

ஒரு நாள் இறந்துவிட்டார். அவர் எதிர்பார்த்தது போல சுவர்க்கத்தின் வாசற்கதவின் முன் நிற்கலானார். கதவு திறந்தது. உள்ளே செல்ல எத்தனிக்கிறார். நீண்டதொரு ஈட்டியைக் கொண்டு வழி மறித்த வாயிற்காவலர், அவருக்கும் முன் சிலர் செல்லவிருப்பதைச் சொன்னார்.
சுதாகர் வழிவிட்டார். சுவர்க்க வாசலில் ஒன்றின் பின் ஒன்றாக சுதாகர் வீட்டு தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி, கைப்பேசி, சட்டி பானைகளென துள்ளிக்குதித்து ஆரவாரமிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தன.
கடைசியாக கரண்டி ஒன்று வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றது. சுதாகர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தச் சுவர்க்கவாசல் மூடத்தொடங்கியது.
ஆவியுடன் பேசுவது எப்படி?
இது விளையாட்டல்ல. முதலில் உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். நம்மை மீறிய ஏதோ ஒன்று இருப்பதை முழுமையாக நம்ப வேண்டும். அல்லது இருப்பதாகவாவது முழுமையாக நம்ப வேண்டும். அதுதான் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கான முதல் வேலை.
நெகட்டிவ் பாசிட்டிவ் போல எல்லா இடத்திலும் இரண்டு தரப்புகள் இருக்கின்றன. ஒன்று தூய சக்தி இன்னொன்று தீய சக்தி. அந்த இரண்டு வித சக்திகளிலும் பல்வேறு நிலைபாடுகள் உள்ளன. ஆனால் நமக்கு அவை தேவையற்றவை. நாம் அறிவியல் பாடம் நடத்தவில்லை. இது அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட கலை.
ஆவியுடன் பேசுவதற்கான அடிப்படைகளின் மூலத்தை சொல்லி விட்டேன். மேற்கொண்டு செய்ய வேண்டியவைக்கு வரலாம்.
உங்களுக்கு நன்கு பழக்கமான ஒருவரின் புகைப்படத்தையும் பெயரையும் ஏற்பாடு செய்துக் கொள்ளுங்கள். மறந்துவிட்டேன்! அவர் செத்துப் போயிருக்க வேண்டும். அதற்காகவே ஒரு கொலையை செய்துவிட்டு என்னை போலீசில் கோர்த்து விட்டுவிடாதீர்கள். ஐ எம் பாவம்.
முக்கியமாக செத்துப்போனவர் நல்லவராக இருக்கவேண்டும். அதில் சிக்கல் இருக்காது. நல்லவர்களைத்தாம் நாம் சீக்கிரம் கொன்றுவிடுவோமே.
நள்ளிரவு 12.00க்கு சரியாக இருட்டறையில் அமர்ந்திருக்கவேண்டும். மெழுகுவர்த்தி இருக்கவேண்டும். பிடித்தமான வாசனையுள்ள ஊதுபத்தி இருக்கவேண்டும். எடுத்து வைத்திருந்த இறந்தவரின் புகைப்படமும் அங்கே இருக்கவேண்டும். அந்தப் படத்திற்கு முன் மெழுகுவர்த்தியின் ஒளி படவேண்டும். அதன் கீழ் வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு வண்ணத்தில் அவரின் பெயரை எழுதிக்கொள்ளுங்கள்.
இப்பொழுது கண்களை மூடிக் கொள்ளுங்கள் (உடனே அல்ல.!! முழுக்க வாசித்து முடித்த பின்). ஆழ்ந்து மூச்சை இழுத்து விடவும். மெல்ல விடவேண்டும். அவசரப்பட்டு முழுக்கவும் விட்டுவிடாதீர்கள். அப்பறம் உங்கள் புகைப்படம் இன்னொருவருக்கு தேவைப்பட்டுவிடும்.
எழுதி வைத்த பெயரை மெல்ல மெல்லச் சொல்லவேண்டும். அப்படியே கண்களை மூடிக்கொள்ள வேண்டும். விடாது அந்த பெயரைச் சொல்லவேண்டும். அறை முழுக்க அந்த பெயர்மட்டுமே இருளோடு இருளாக நிறையவேண்டும். ஒன்றெனக் கலக்கவேண்டும். இதுதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். இப்போது உங்கள் உடல் தானாக சிலிர்க்கத் தொடங்கும். மெல்ல உங்கள் கைகளில் அதிர்வு ஏற்படும். நீங்கள் கூப்பிட்ட ஆவி உங்கள் முன் வந்துவிட்டதற்கான அறிகுறி இதுதான்.
கண்களைத் திறக்கவேண்டும். இப்போது உங்கள் முன் ஒரு வெண்மேகம் வடிவில் ஓர் உருவம் தெரியும். அதன் ஒளி உங்கள் கண்களைக் கலங்கச் செய்யும். அதுதான் நாம் பேச அழைத்த ஆவி என அறிக. அதன் பிறகு நீங்கள் ஆவியுடன் பேச ஆரம்பிக்கலாம்.
ஒரு வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை என்றாலோ, நீங்கள் அழைத்த ஆவி வரவில்லை என்றாலோ கவலை வேண்டாம். எனக்கும் வரவில்லைதான். இருவரும் சேர்ந்து இன்னொரு முறை முயற்சிக்கலாம்.
tayag17@gmail.com



