
“தி சிராங்கூன் டைம்ஸ்” 100வது இதழ் வரையில் மிக சிறப்பாக வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் புதுமைகள் தொடர்ந்து படைப்பாக்கங்களாக வந்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகை புதுமைகளை இணைத்து உள்ளடக்கம், உருவம், உத்தி, வடிவம் போன்றவைகளில் மாறுபட்ட பல்வேறு படைப்புகள் சிராங்கூன் டைம்ஸில் வந்துக்கொண்டிருக்கின்றன.
சிங்கப்பூரின் பழைய வரலாற்றுச் செய்திகளை அவைகளின் தொன்மம் மாறாமல் வெளியிட்டுக்கொண்டிருப்பதும் சிங்கப்பூர் என்ற தேசத்தின் கலாச்சார வரலாற்று மரபுகளை மீளுருவாக்கம் செய்து வெளியிடுவதும் பழைய, புதிய சிங்கப்பூரை படம் பிடித்துக்காட்டுகிறது.
அனைத்து இதழ்களிலும் திறனாய்வு, மொழிபெயர்ப்பு படைப்புகள் வெளிவருவது தமிழ் இலக்கியத்தின் பன்முக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது.
உரைநடை வடிவத்தில் வசன கவிதைகளும், தொடர்ந்து வெளிவருவது சிறப்பு. இவைகள் நவீன இலக்கியத்தில் பல்வேறு பாங்குகள், பண்புகளை எடுத்துரைத்து தமிழ் படைப்புகளை புதிய திசைகள் நோக்கி பயணப்பட வைக்கிறது.
மரபு இலக்கிய படைப்புகளோடு மரபு, புதுமை, நவீனத்துவம் சார்ந்த ஆளுமைகளை நம் சிங்கப்பூர் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிற பணியும் மிக சிறப்பு.
சமூக–கலாச்சார பண்பாட்டு வளர்ச்சிக்கான பயணத்தில் பங்குக் கொள்ளும் சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியர் குழுவினருக்கும் இலாபம் என்ற வணிக நோக்கில் இல்லாது ஒரு பண்பாட்டுக்கடைமையில் தன்னை ஒப்படைத்துக்கொண்டு சிங்கப்பூர் இதழியல் வரலாற்றில் ஒரு புதிய பார்வையை கொண்டுவர இந்த இதழை நடத்தும் அருமை நண்பர் ஹாஜி முஸ்தபா அவர்களுக்கும் அவரது இன்னும் பல புதிய முயற்சிகளை வரவேற்றும் என் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
நூறாவது இதழ் என்ற எல்லையையும் தாண்டி ஆயிரமாவது இதழ் வரையில் சிராங்கூன் டைம்ஸ் மலர வேண்டும்…
இந்த ஆயிரம் இதழ்களின் பண்பாட்டு மறுமலர்ச்சி வாசனை உலகெங்கும் பரவட்டும் என்று வாழ்த்துகிறேன்.