எண்ணென்ப

வாழ்க்கை சூட்சும எண்களில் சூஃபிச சொல்லாடல்கள்

சிங்கப்பூர் ஜாமியா அற நிறுவனத்தின் மூத்த இயக்குனர் முனைவர்
எச். முகமது சலீம் அவர்கள் தமிழ் மெய்யியல் சூபிச சிந்தனையாளர்களான தக்கலை பீர்முகமது அப்பாவின் தமிழ் படைப்புகளில் மெய்யியல் கோட்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்ட எண்ணென்ப என்ற நூல் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் தலைநகர் நாகர்கோயிலில் அமைந்துள்ள பாரம்பரியச் சிறப்பு மிக்க ஸ்காட்கிறிஸ்தவத் தன்னாட்சிக் கல்லூரியின் பயின்றோர் கழகம் மற்றும் தமிழாய்வு மையம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்வில் வெளியீடு கண்டது.
மணலி அப்துல்காதர்

கல்லூரி முதல்வர் முனைவர் ஹென்றிராஜா தலைமையில் நடந்த நிகழ்வில் மேனாள் கல்லூரி முதல்வர் முனைவர் ஜேம்ஸ் ஆர்டேனியல் எழுத்தாளர் மீரான்மைதீன் கவிஞர் தமிழ்அலை இசாக் ஆகியோர் நூல் குறித்த ஆய்வுரை வழங்கினர். பேராசிரியர்கள், தமிழிலக்கிய ஆய்வுமாணவர்கள், மற்றும் சூபி இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் முனைவர்சலீம் தமது ஏற்புரையில், “எண்ணென்ப நூல் தனது சூஃபி இலக்கியம் குறித்த நூல்வரிசையில் நான்காவது நூல்” என்றுகுறிப்பிட்டார்.


தமிழிலக்கிய வெளியில் அதிகமாக அறியப்படவோ ஆய்வுசெய்யப்படவோ இல்லாமல் பின்தங்கி காணப்படுவது சூஃபி இலக்கியங்கள் ஆகும். இத்தகைய இஸ்லாமிய மெய்ஞ்ஞான ஆன்மீக இலக்கியங்கள் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலுமுள்ள தமிழ்மொழி இலக்கியம் மற்றும் தத்துவ இயல்களை போதிக்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தயங்கி நிற்பதையே கண்டுவருகிறோம்.


ஆய்வுவெளியில் ஏற்பட்டுள்ள இத்தகைய போதாமையை இட்டு நிரப்பக்கல்வியாளர்கள் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்கள் இத்துறையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். இத்தகைய சவால்களை எதிர்கொண்டு நமது தமிழ் சூஃபிச இலக்கியச்செல்வங்கள் குறித்த அறிதலும் ஆய்வும் அதைப்பற்றிய பரப்புரையும் அனைத்துத்தளங்களிலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இம்முயற்சியில் கலை இலக்கியச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சமூகத்தலைவர்கள், புரவலர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முனைவர் சலீம் தமது உரையில் குறிப்பிட்டார்.


எண்ணென்ப மற்றும் அப்பாயிரம் என்னும் இருதலைப்புக்களில் அமைந்துள்ள இந்நூல் தமிழ்மெய்யியல் சிந்தனையாளர்களான பீர்முஹம்மது அப்பா போன்ற மெய்ஞ்ஞானியர் எவ்வாறு எண்களை சூச்சும மெய்யியல் சொல்லாடல்களாகத் தமது தமிழ்படைப்புக்களில் முன்வைத்துள்ளார்கள் என்பதை ஓர் அறிமுகவிளக்கமாக இந்நூல் பதிவு செய்கிறது.
பேராசிரியர் சுப.திண்ணப்பன் தக்கலை எம்.எஸ்.பஷீர் மற்றும் ஊடகவியலாளர் சதக்கத்துல்லா ஆகியோர் நூலுக்கு அணிந்துரையும் நோக்க உரையும் தந்துள்ளனர். ஜாமியா அற நிறுவனத்தின் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் முஹம்மது ஹஸ்பி அபுபக்கர் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.


தமிழிலக்கியக்கடலில் விளைந்து கிடைத்துள்ள நன்முத்துக்களான சூஃபிச இலக்கியங்கள் குறித்த ஆர்வத்தையும் தேடலையும் தூண்டிவிட இந்நூல் பயன்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக நூல்வெளியீட்டின் ஏற்புரையில் முனைவர் சலீம் குறிப்பிட்டார்.