கடாரம் கண்டேனே!

பொன்.சுந்தரராசு

நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவன். தமிழின் சிறப்பு, தமிழரின் வரலாறு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பழக்க வழக்கங்கள் முதலியவற்றைப் படிக்கும்போது தமிழரின் உயர்நிலையையும் உயர்நாகரீகத்தையும் அறிந்து உவகையுற்றேன்; உன்மத்தம் கொண்டேன். ‘கங்கை முதல் கடாரம் வரை கட்டியாண்டவன் தமிழன்’ என்று படித்திருக்கிறேன்.

பின்னாளில் பெருமையோடு நெஞ்சுயர்த்தி மாணவர்களுக்குப் படிப்பித்திருக்கிறேன். அத்தொடர்களைச் சொல்லும்போதும் படிக்கும்போதும் பெருமையைப் பற்றிக் கொண்டு வானில் பறப்பேன்! அதனால் – தமிழரின் வீரத்தின் தொடக்கமாம் கங்கைநதி தீரத்தைப் பார்க்கச் சென்றேன். அங்கு கங்கை நதியில் நீராடி கரங்களை உயர்த்திக் கதிரவனை நோக்கி வழிபட்ட மக்கள் ஒருபுறம். ஈரத்துணியோடு படியில் அமர்ந்து இறந்து போனவர்களுக்குரிய அந்திமச் சடங்கை நிறைவேற்றியோர் வேறொருபுறம். ஆணும் பெண்ணுமாகக் கங்கைநீரில் முக்குளித்து மகிழ்ந்தோர் இன்னொருபுறம்.

இப்படியாகக் கங்கை நதியோரம் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக இயங்கிக் இருந்தது. கங்கைநதியைத் தாயாகப் போற்றி வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏராளம்! அவர்களுக்கு மத்தியில் நான் தமிழர் காலடிபட்ட வரலாற்று தடங்களைக் கணக்கிட்டு உருகிக்கொண்டிருந்தேன். இப்பகுதியைத்தானே தமிழர்கள் ஆக்கிமித்திருப்பார்கள்! இந்நிலப்பகுதியையும் தாண்டி மேற்சென்று கனகவிசயரை வென்று அவர்கள் தலைமேல் கல்லைச் சுமக்க வைத்துக் கொணர்ந்து கண்ணகிக்கு கோயில் எழுப்பியிருக்கிறார்கள்! என்னே தமிழர்களின் வீரம்! விரிந்துரைக்க மறந்து வியந்து சிலையென நின்றேன்!


என் நாடு திரும்பிய பிறகு, கடாரம் காணவேண்டுமே என்ற எண்ணம் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. கடாரம் என் அண்டை நாடான மலேசியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் அதனைக் கெடா என்றுதான் நிலநூல் பாடத்தில் படித்திருக்கிறேன். அந்த மண் வீரம் செறிந்த இரத்த நாளங்களையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னன் இராசேந்திர சோழன் காலடி வைத்த பூமி! சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டு இவ்வளவு காலம் கடாரத்தைக் காணாமல் இருந்திருக்கிறோமே என்ற எண்ணம் மேலிடும் போதெல்லாம் நான் நாணிக் குறுகிப் போயிருக்கிறேன். கடாரத்தைக் கண்டேயாகவேண்டும் என்ற உந்துதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. இன்றைய மின்னிலக்கக் காலம் என் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள வசதியாக இருந்தது. உடனே மலேசியாவின் வட மாநிலத்திற்குப் புறப்படத் தயாரானேன். என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் கெடா மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார் என்பதை நானறிவேன். அவரிடம் ஆலோசனை கேட்க முடிவெடுத்தேன்.


எழுத்தாளர் புண்ணியவானுடன் பேசியபோது, ‘‘நான் சுங்கை பெட்டானியில்தான் வசிக்கிறேன். ‘பூஜாங் வேலி’ பக்கத்தில்தான் இருக்கிறது. நான் அழைத்துப் போகிறேன்.’’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறினார். 06.08.24 அன்று நான் என் துணைவியார் சரோஜா, நண்பர் கோ.செல்வராஜூ அவர் துணைவியார் இந்திராணி ஆகிய நால்வரும் ‘ஏர் ஏசியா’ விமானத்தில் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் பினாங்கு விமான நிலையத்தை அடைந்தோம். குடியேற்றப் (இமிகிரேஷன்) பகுதிக்குள் நுழைந்தபோது நாங்கள் நால்வருமே அரண்டுவிட்டோம். வரிசை வரிசையாக ஏகப்பட்ட கூட்டம். பெருங்கூட்டம் ‘கலவரபூமி’யை நினைவுபடுத்தியது. நண்பர் புண்ணியவான் அவர்கள் எங்களை எதிர்கொண்டு வரவேற்க பினாங்கு விமானநிலையத்தில் காத்திருந்தார். அவர் காரில் ஏறி ஒன்றரை மணி நேரத்தில் சுங்கை பெட்டானியை அடைந்தோம். ஏற்கெனவே என் நண்பர் செல்வராஜூ இணையம்வழி ‘எமரால்ட் புத்திரி ஹோட்டலில்’ இரண்டு அறைகளைப் பதிவு செய்திருந்தார். அங்கு சென்று இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டுச் சுங்கை பெட்டானியைச் சுற்றிப் பார்ப்பதாகத் திட்டம். எங்கள் பயணம் குறைந்த நாள்கள் கொண்டதாக அமைந்திருந்ததால் அந்தக் குறைந்த நாள்களை நிறைந்த பயனுள்ளவையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று இரண்டு பெண்களும் துடித்துக் கொண்டிருந்தனர்.


பிற்பகல் 2.30 மணிக்கு புண்ணியவான் எங்களைப் பிறை முனீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அவ்வாலயம் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்தது. சாலையிலிருந்து பார்க்கையில் சதாரணமாகத் தோன்றியது. உள்ளே நுழைந்தவுடன்தான் அதன் விசாலத்தை அறிய முடிந்தது. கோயில் அமைப்பைக் கண்டு வியந்து போனோம். வண்ண வண்ண மாலைகள் தோளில் தவழ முனீஸ்வரர் முறுக்கிய மீசையோடு நிற்கிறார். அருகில் காவல் தெய்வமான மதுரைவீரன் கையில் கத்தியுடன்! நிறைவான வழிபாட்டைப் பெண்கள் நிறைவேற்றினர்.


பிற்பகல் 3.30 மணிக்கு ஜாலான் ஹாஸ்பிட்டலில் இடம்பெற்றிருந்த சித்தி விநாயகர் தரிசனம். 4.30 மணிக்குத் தாமான் கோலக்கட்டிலில் தலம் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் வழிபாடு. இதுவும் மிகப்பெரிய கோயில்தான். மலேசியாவில் தமிழர்களிடையே ஆன்மீக உணர்வு மிகுதி என்பது நானறிந்த செய்திதான்! மாலை 4.30 மணியளவில் தாமான் ரியாவில் அமைந்திருந்த நண்பர் புண்ணியவான் வீட்டில் தேநீர் உபசரிப்பு! அவருடைய தனியார் வீடு தேநீர் அருந்திக் கொண்டே பெரிய அளவிலான மென்னிருக்கையில் அமர்ந்து பேச வசதியாக இருந்தது. அவர் மனத்தைப் போலவே வீடும் விசாலமாக இருந்தது. புண்ணியவானின் துணைவியார் ஜானகி அம்மையார் குறுகிய நேரத்தில் கேசரி, வடை, அகார்கா முதலிய பலகாரங்கள் செய்திருந்தார். எங்களின் வயிறும் மனமும் நிறைந்தது.


மாலை 6.00 மணி முதல் தாமான் ரியாவில் நடைபெற்ற ‘பாசார் மாலாம்’ (இரவுச் சந்தை) பார்க்கச் சென்றோம். வலப்பக்கம் நீண்ட சாலை இருந்தது. அதையொட்டிப் பல கிலோமீட்டர் நீளத்திற்குக் கடைகள், கடைத்தொகுதிகள் போடப்பட்டிருந்தன. அத்துடன் இடது பக்கமும் வரிசை வரிசையாகக் கடைகள்! மிகப் பெரிய பசார் மாலாம் என்றுதான் சொல்ல வேண்டும். வகை வகையான பொருள்கள் பரப்பி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன! பொரித்த உணவுப் பொருள்கள், பழுத்த வாழைத்தாறு, ரம்புத்தான், லொங்கான், பலாப்பழத்தின் சக்களத்தி ஜூம்பிட்டா, மங்குஸ்தீன் முதலிய பழங்கள் பல கடைகளை நிறைத்திருந்தன. கொரேங் பிசாங், பொரித்த கிழங்கு வகைகள் இருந்தன. மாவில் நனைத்து பெரிய வாணலியில் பொரித்த ஜூம்பிட்டா பழங்களை சூடாக ஒருபுறம் ஒரு மலாய் மாது கொட்டிக்கொண்டிருந்தனர். ஐஸ் கச்சாங், விதம்விதமான ஐஸ்கிரீம், இனிப்பு மிட்டாய்கள் போன்றவை தாராளமாகக் கிடைத்தன. அத்துடன் துணிவகைகள், உடைகள், செருப்பு என எல்லாப் பொருள்களும் இடம்பெற்றிருந்தன. ‘‘பெரிய பாசார் மாலாம்ங்க! எவ்வளவு ஜாமான்க! வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்குதே!…’’ என்று என் மனைவி தன் வியப்பை வார்த்தைகளுக்குள் அடக்க முடியாமல் வெளிப்படுத்தினார்.

இரவுச் சந்தையில் பயங்கரக் கூட்டம். கூட்ட நெரிசலில் நானும் என் மனைவியும் நண்பர்களைத் தவறவிட்டுவிட்டோம். வெளியில் வந்து சாலையோரத்தில் இருந்த ஒரு சீனர் கடைக்கு முன் நின்றுகொண்டு நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்களும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். கைப்பேசியின் கருணை! இரவு ஒன்பது மணியை நெருங்கியது. புண்ணியவான் தம் காரில் ஆனந்த பவன் உயர்தர சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். இரவு 10 மணியளவில் எமரால்ட் புத்ரி ஹோட்டலுக்குத் திரும்பினோம். முதல் நாள் இரவு இன்பமாகச் சுங்கை பெட்டானியில்!


பூஜாங் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும்? இராஜேந்திர சோழன் காலடி பதித்த முதல் இடம் என்கிறார்களே! அதனாலன்றோ அது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.
பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் சோழர் ஆட்சி மீண்டும் வந்து உச்சத்தை அடைந்தது. இந்த ஆட்சி தென்கிழக்காசியாவுடன் வணிக உறவுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், கலாசாரக் குடியிருப்புகளையும் அமைத்தன. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் எனும் காப்பியம் இந்த தென்கிழக்காசிய வணிகத்தை மிகத்தெளிவாக வருணித்துள்ளது. (கடாரம், வீ.நடராஜன், 2011).
புகழ்பெற்ற ராஜராஜனின் ஆட்சியின்போது (985–1014) அவர் தம் மகன் முதலாம் ராஜேந்திரனை இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை ஆக்கிரமிக்குமாறு பணித்தார். முதலாம் இராஜேந்திர சோழன் (1014 – 1044) ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின்மீது 1025 முதல் 1030 வரை படையெடுத்தார். அது நாட்டை அபகரிக்க நடத்தப்பட்ட படையெடுப்பல்ல. மாறாகத் தன் வலியைமையைப் புலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பாகும். படையெடுப்பு முடிந்ததும் இராசேந்திர சோழன் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் யாரையும் ஆட்சியில் அமர்த்தவில்லை. அடங்கி நடக்கவும் திறை செலுத்தவும் ஒப்புக்கொண்ட உள்ளூர் அரசர்களை தொடர்ந்து அரசாள அமர்த்தினார். ராஜேந்திரன் மலாயா தீவுக்கூட்டத்தில் 13 அரசுகளை வீழ்த்தியதாக மஹூம்தாரை மேற்கோள் காட்டி வீ.ராஜேந்திரன் குறிப்பிடுகிறார்.


அவ்வண்ணம் ராஜேந்திர சோழன் கடாரத்தை (கெடாவை) நெருங்கினான். அலைகடல் நடுவில் பல கப்பல்களை அனுப்பி கடார மன்னன் சங்கரம-விஜயதுங்கவர்மனைச் சிறைபிடித்து அவன் யானைகளையும் படையையும் வென்று அந்த மன்னனின் குவிந்த செல்வத்தையும் கைப்பற்றினார் என்று கடாரம் என்ற நூலில் படித்த விவரங்களை மனத்தில் ஏத்திக் கொண்டேன். என்னால் உறங்க முடியவில்லை. பொழுது எப்பொழுது புலரும் என்று காத்திருந்தேன்.


மறுநாள் பொழுது விடிந்ததும் காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜாங் பள்ளத்தாக்கை நோக்கிப் பயணப்பட்டோம். சாலையின் இருபுறங்களிலும் பசுமை சூழ்ந்திருந்தது. மலேசியாவின் இயற்கையழகைச் சொல்ல வேண்டுமா?! என் மனமெங்கும் பட்டாம்பூச்சிக் கூட்டங்கள்! ஏறக்குறைய ஒரு மணிநேரக் கார்ப் பயணத்திற்குப் பிறகு பூஜாங் பள்ளத்தாக்கை அடைந்தோம். பாறைக் கற்களால் அமைக்கப்பட்ட படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. பெண்கள் இருவரும் கீழே படிக்கட்டில் அமர்ந்து கொண்டனர். நாங்கள் மேலே ஏறிச் சென்றோம். அப்படி ஒன்றும் பெரிய குன்று இல்லை. வலப்பக்கத்தில் ஒரு செவ்வக வடிவில் அழிந்து மீதமிருந்த ஒரு கட்டத்தின் அடிப்பகுதி தென்பட்டது. பாறைக்கற்களாலான கட்டடப் பகுதியின் எச்சம்! இரும்புபோல் கடினப் பட்டுப் போன செம்மண் நிறத்திலான நான்கு பக்கச் சுவர். சுமார் மூன்றடி அடிக்குள் சுவர்கள். அதே போல் இடப்பக்கம் ஒரு கட்டட அடிப்பகுதி காணப்பட்டது. மற்றவை தற்காலத்தில் உருவாக்கப்பட்ட செங்கல் கட்டடத் பகுதிகள். ராஜேந்திர சோழன் இந்தப் பகுதியில்தான் காலடி வைத்திருப்பார்; நடந்து வலம் வந்திருப்பார்; கோயில் கட்ட ஆணையிட்டிருப்பார்; கப்பலில் தன்னோடு வந்த தமிழர்களை இந்நிலப்பகுதியில் குடியமர்த்திருப்பார் என்று வரலாற்றுக் காலத்திற்கு எண்ணப் பறவை சிறகடிக்கத் தொடங்கியது.


‘‘இது என்ன தெரிகிறதா?’’ நாங்கள் நின்ற உயரப் பகுதிக்குச் சரிவிலிருந்த சிறு பள்ளத்தாக்கைக் காட்டி நண்பர் புண்ணியவான் கேட்டார். தெரியவில்லை என்று தலையாட்டினேன். நண்பர் செல்வராஜூ அவ்விடங்களைத் தன் கேமிராவில் சிறைபடுத்திக் கொண்டிருந்தார்.


‘‘இங்கு பெரிய ஆறு ஓடிக் கடலில் கலந்ததாகச் சொல்கிறார்கள். அந்த ஆற்றில் ஓடங்களும் சிறிய கப்பல்களும் அணைய வசதி இருந்ததாகவும் கூறுகிறார்கள். ஆய்வாளர்கள்தான் மெய்ப்பொருள் கண்டறிந்து உண்மையை நிலைநாட்ட வேண்டும்’’ என்று புண்ணியவான் கூறினார். இன்னும் சில கற்சிதைவுகளையும் பார்த்தோம். மலாக்கா கோட்டையைப்போல் இடிந்த கோட்டை அல்லது பாழடைந்த அரண்மனை எஞ்சி இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. கடாரத்தில் கட்டடங்களும் கோயில்களும் கண்டிப்பாக இருந்திருக்கும். கோயிலில்லா ஊரில் தமிழர்கள் குடியிருக்க மாட்டார்களே! அப்படியாயின் அவை என்னவாயின? அழிந்து விட்டனவா? அழிக்கப்பட்டனவா? பதில் சொல்ல முடியாத கேள்வி சரக்கென்று மண்டைக்குள் புகுந்து குடைந்தது.


‘‘இந்தப் பள்ளத்தாக்கில் 10கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆய்வு மேற்கொள்ள புதைபொருள்கள் இருக்கின்றன. அகழ்வாய்வு செலவுமிக்கது என்பதால் அரசு ஆய்வை கைவிட்டதாகத் தெரிகிறது’’ என்று புண்ணிவான் மேலும் விளக்கினர். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சுங்கை பத்து என்று ஓரிடம் இருக்கிறது. அங்குதான் பூமியினுள் புதையுண்ட கப்பல் ஒன்றைத் தமக்குக் காட்டினார்கள் என்றும் அவர் கூறினார். அது ராஜேந்திர சோழன் வந்த கப்பலாக இருக்குமோ?! அவர் தம் கப்பலை இங்கு விட்டுவிட்டுத் தென்னிந்தியாவிற்கு எப்படிப் போயிருப்பார்? இருக்காது. அது அவரைத் தொடர்ந்து வந்த போர்க்கப்பலில் ஒன்றாக இருக்கலாம்.


பூஜாங் பள்ளத்தாக்கு மட்டுமன்றி கெடாவின் பல இடங்களிலும் அகழாய்வு செய்து இந்தியத் தொடர்புடைய பல பொருள்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அவற்றை அகழ் வாழ்வியல் ஆதாரங்கள் என்று வீ.நடராஜன் குறிப்பிடுகிறார். அவ்வாறு கெடாவில் ஆய்வு செய்யப்பட்ட இடங்களாவன:
செபராங் பிறை தளம், புக்கிட் மிரியம் தளம், சண்டி புக்கிட் சோராஸ் செரோக் தெக்குன் கல்வெட்டு (இது பல்லவர் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது) சண்டி சுங்கை பத்து எஸ்டேட், சண்டி பத்து பகாட், சண்டி பெண்டியாட், சண்டி புக்கிட் பெண்டியாட், சண்டி பெங்காலான் பூஜாங், சண்டி பெர்மாத்தாங் பாசிர், கம்போங் சுங்கை மாஸ் தளம், சண்டி திலாகா செம்பிலான், சண்டி பெண்டாங் டாலாம் முதலிய இடங்களிலும் அகழாய்வு நடந்திருக்கிறது. சண்டி என்றால் சமஸ்கிருதத்தில் கோயில் என்று பொருள்படுமாம்.


மேலே குறிப்பிட்டுள்ள இடங்களையும் உள்ளடக்கிய 87 இடங்களில் அகழாய்வு நடைபெற்றிருக்கிறது. அவ்வாய்வுகளின்வழித் தங்க நாணயங்கள், பாறைக் கல்லில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், துர்கா தேவி மஹிஷாசுரனை வெற்றிகொள்ளும் சிலை, கருங்கல் கணேசர், கருங்கல் லிங்கம், கருங்கல் நந்தி, விமானம், மண்டபம் உட்பட்ட ஆலயப் பகுதி, மண்ஜாடி, தூண் நிறுத்துவதற்கான துளை இடம்பெற்ற சதுரக் கருங்கல், திரிசூலம் போலச் செய்யப்பட்ட தங்க ஏடுகள், பல்வகை புத்தர் சிலைகள், பானை ஓடுகள், போதி சத்துவர் சிலை, பீங்கான் சிதைவுகள், யானையும் மீனும் இணைந்த கற்சிற்பம் முதலிய பொருள்களும் இன்னும் இன்னோரன்ன பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை யாவும் இந்திய மயமானவை. அதில் எங்களுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி! அதன் காரணமாகத்தான் பூஜாங் பள்ளத்தாக்கு மட்டுமன்று கெடா மாநிலமே கடாரம் என்று வழங்கப்படுகிறது என்று புண்ணியவான் கூறினார். அது தமிழர்களுக்குப் பெருமை தரக்கூடிய செய்திதான். அதனால்தான் அம்மாநிலத்தைச் சேர்ந்த சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் தம் வசிப்பிடத்தைக் குறிப்பிடும்போது ‘கடாரம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.


08.08.24 அன்று காலை பசியாறலுக்குப் பிறகு பினாங்கு நோக்கிப் பயணமானோம். அங்கு ‘வாட்டர் ஃபால் ஹோட்டலில் ஓரிரவு தங்கினோம். மறுநாள் காலை தண்ணீர்மலை முருகன் கோயில் தரிசனத்தை முடித்தோம். அன்று இரவு 8மணிக்குச் சிங்கப்பூருக்குப் பயணமானோம். மலேசியாவைவிட்டுப் பிரிவது சங்கடமாக இருந்தது. 06.08.24 முதல் 09.08.24வரை எங்களுடனே இருந்து எங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் திறந்த மனத்தோடு செய்து உதவிய எழுத்தாளர் நண்பர் கோ.புண்ணியவானைவிட்டுப் பிரிவது மிக மிக வருத்தமாக இருந்தது. ‘சிலாமாட் பூலான் மலேசியா!’ (சென்று வருகிறோம் மலேசியா)