கவிமாலைக் குயில்களின் கானங்கள்
தொகுப்பு பதிவு மணலி அப்துல் காதர்

கவிமாலைக்கு நான் அறிமுகம் ஆன ஆண்டு 1999. கவிமலையை ஒரு பசிற்சிக் கூடமாக எடுத்துக் கொள்ளலாம். 1950களின் பிற்பாதியில் கவிதை எழுத ஆரம்பித்தேன். முதலில் எழுதிய கவிதை நினைவில் இல்லை. சிங்கப்பூரில் கவிதை எழுதப் பொருளும் வாய்ப்பும் ஏராளம் உள்ளன.
பிடித்த ஒரு குட்டிக் கவிதை :
நினைவு வைத்துக் கொள்வதுதான் கடினம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், மறப்பதும் கடினம் என்று நீ கற்றுத் தரும்வரை.

செப்டம்பர் 2003இல் தொடர் வாசிப்பு இயக்கமும், வழக்கறிஞர் அருள்மொழியின் சிறப்பு வருகையும் கவிமாலையில் ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்வன்றுதான் கவிமாலைக்கு நானும், எனக்குக் கவிமாலையும் அறிமுகமானோம். பிறகு டிசம்பர் மாதம் ஒரு கவிதையோடு சென்றேன்.
படித்த, பிடித்த, வடித்த கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்பில் கவிமாலை இயங்கியது. (நான் தாயகம் திருப்பி விட்டதால் கவிமாலையில் கலந்து கொண்டு நீண்டகாலமாகி விட்டது. எனவே கடந்த காலத்தில் சொல்கிறேன்) மாதாந்திர கவிதைப் போட்டிகளும் நடைபெற்றன. கவிதையின் ஆரம்ப நிலையில் இருந்தவர்கள், கவிதையை மிக ஆழமாக அணுகுபவர்கள் அணுகுபவர்கள் என பல்வேறு வகைமையினர் அங்கிருந்தனர். நம்மை நாமே தர மதிப்பீடுகள் செய்து கொள்ளவும் நம் வாசிப்புகளை மேம்படுத்தவும் கவிதை பற்றிய புரிதலை உயர்த்திக் கொள்ளவும் அங்கு வாய்ப்பிருந்தது. அதற்கும் மேலாக அந்தச் சூழலே என்னை கவிதையை நோக்கி நகர்த்தி வைப்பதாக அமைந்தது. எந்த ஒரு கலைத்திறனையும் முற்றிலுமாக பிறர் கற்றுக் கொடுக்க முடியாது. நம்முடைய சுய ஆர்வம், ஈடுபாடு, வாசிப்பு இணைந்தால் மட்டுமே அதில் வளர்ச்சி அடைய முடியும் என்பது அனைவரும் அறிந்ததேயெனினும் என்னைப் பொருத்தவரை கவிமாலை என் கவிதைகளுக்கான அடிப்படைப் பயிற்சிக் களமாக அமைந்ததோடு, நாமே அறியாமல் நம்மிடம் இருக்கும் திறனைத் தூண்டிவிடும் களமாகவும் கவிமாலை அமைந்தது. நாம் எந்த அளவு உயர்கிறோம் என்பது அவரவர் நீர்மட்டம் எவ்வளவு கை கொள்கிறோம் என்பது அவரவர் கை மணல் .
கவிமாலையின் மாதாந்திர கவிதைப் போட்டிக்காக ‘சிறை‘ என்ற தலைப்பில் நான் எழுதிய முதல் கவிதை டிசம்பர் 2004
முழங்கால் கால்சட்டை அரைக்கை மேல்சட்டை சிறைக்கம்பிகளுக்குள் ஆனந்தமாய் நான் உலா வர கண்காணிப்பு கருவிகள் சூழ குண்டு துளைக்காத சட்டைக்குள் காவலர்கள் புடை சூழ தலைவா நீ சிறையிருப்பது நீயா?நானா?
எந்த நாட்டில் இருந்தாலும் மனிதனும் மனித உணர்வுகளும் உள்ளவரை அகக்கவிதைகளுக்குப் பஞ்சம் வராது. மண் சார்ந்த கவிதைகள், சாதிப் பிரச்சனை, நடைபாதை மனிதர்கள், அனாதரவாய்த் திரியும் ஆடு மாடுகள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், மாநில சுயாட்சி, மொழிப் பிரச்சனை, அரசியல், லஞ்சம், ஊழல் போன்ற கருப்பொருள்களில் சிங்கப்பூரில் கவிதைகள் எழுதும் வாய்ப்பு இல்லாத சூழலோ அல்லது இந்தியாவில் போல் எழுத இயலாத சூழலோ உள்ளது. நிலவெளிகளின் நீல அகலங்கள் குறுகிய சிங்கப்பூர் போன்றதொரு நாட்டில் கவிதைகளும் தன் வெளிகளை குறுக்கிக் கொள்வதாகவே நினைக்கிறேன். ஒரு நாட்டின் மேம்பட்ட வாழ்க்கை முறையுமே கவிதையின் பல சாளரங்களை அடைத்து விடுகின்றன என்பது என் நிலைப்பாடு.
பிடித்த கவிதை என்பதும் எப்பொழுதும் நம் அக உணர்வுகளுக்கு ஏற்ப மாறும் தன்மையதுதானே! இப்போதைக்கு இந்த வரிகளின் முனைப்பு மனதிற்குள் சம்மணமிட்டு மிகப் பிடித்தமாய் அமர்ந்திருக்கிறது .
எதுவும் தாமதமாகிவிடவில்லை இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு நம்மால் போய்விட முடியும் -கவிஞர் வண்ணதாசன்
மீசை நீண்ட உறு பசி பூனைக்குப் பால் வடிவம் நான்
போன்று என் கவிதைகளில் எனக்கே பிடித்த சில கவிதைகளும் எப்பொழுதும் உண்டு.

2010 காலக்கட்டம் முதலே “கவி மாலை”யைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு. அதன் தொடர்ச்சியாக, முகநூல் வாயிலாக அவர்களது நிகழ்வுகளை அறிந்துகொள்வதுண்டு. அதிலொரு முத்தாய்ப்பாகக் கடந்த ஆண்டு 2023இல் ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் வெளியான “இணைந்த கைகள்” நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பளித்தார் இயக்குனர் ஷாகுல். அந்நிகழ்ச்சிக்காக கவிமாலை தலைவர் கவிஞர் இன்பா அவர்களை சந்தித்து உரையாடுவதுபோல் ஒரு காட்சி. அந்தக் காட்சிக்காக இன்பா அவர்களை சந்தித்து உரையாடியபோது கவிமாலையைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இன்றைய சூழலில் ஒரு அமைப்பை உருவாக்குவதோ, அதனை தொடர்ந்து நடத்துவதோ இலகுவான காரியம் இல்லை. ஆனால் 25 ஆண்டுகளாகத் தொடர்வதற்கு வியப்பான வாழ்த்துக்கள். அதில் மாதந்தோறும் சந்திப்புகளும், வாரந்தோறும் முகநூலில் கவிதைப் போட்டிகளும் நடத்துவது, எழுத மறந்தவர்களையும் எழுதத்தூண்டக் கூடியதாக இருக்கிறது.
சிங்கப்பூரில் எழுதப்படாத பக்கங்களும் இருக்கின்றன. அதிலொன்று தமிழ்ச் சமூகம் நடத்தக்கூடிய உணவங்காடிகளில் வேலை செய்யும் மக்களின் வாழ்வியல்கள். அதில் ஒரு பகுதியாக ஷாநவாஸ் அவர்கள் எழுதிய “சுவை ஒரு பொருட்டன்று” எனும் கவிதைத் தொகுப்பு. புரோட்டாக்காரர்களின் உள்ளடுக்குகளைப் புரட்டிப் போட்ட கவிதைகள் அவை. இதுபோன்ற சாமானியர்கள் வாழ்வியல் இன்னும் எழுதப்படவேண்டும் என ஆவல் கொள்கிறேன்.
நான் எப்போது எழுதத் தொடங்கினேன் என யோசித்தபோது உச்சிக் கிளையொன்று,ஆணி வேரை நோக்கி பயணிப்பதுபோல் நான் என்னையே தேடிச் சென்றேன். 90 காலக்கட்டத்தில் இருந்த பாடல் கேசட்டில் “காதல் ஒரு இனிமையான விஷம்” என எழுதி வைத்ததுதான் எனது முதல் கவிதையாக இருக்கும் எனத் திண்ணமாக எண்ணுகிறேன். எனக்குப் பிடித்தமான பல கவிதைகள் ஏராளம் உண்டு. அந்த ஏராளத்தில் தாராளமாகச் சொல்ல விரும்புவது “கவிக்கோ” அப்துல் ரகுமான் அவர்களையும் அவர்களது கவிதைகளையும். கவிக்கோ தொகுப்பு “மின்மினிகளால் ஒரு கடிதம்”. அதில் வரும் ஒவ்வொரு கவிதையும் என்னை காதல் செய்ய, கவிதை எழுதத் தூண்டும். அதில் பிடித்த கவிதையொன்று
நீயும் நானும் கரைகள் நடுவே ஓடுகிறது காதல்.

2016ல் எனக்கு கவிமாலை அறிமுகம்
கவிதைகள் குறித்த உரையாடல்களும், சக நண்பர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கக் கிடைக்கும் வாய்ப்பையும் கவிமாலை சந்திப்பு ஏற்படுத்துகிறது. இத்தகைய தொடர் நிகழ்வுகள் கவிதை குறித்த புரிதல்களுக்கான பயிற்சிக்களம் எனலாம். கவிதைக்கான கருப்பொருள் உலகில் எங்கும் நிறைந்திருக்கிறது. அவற்றைக் கண்டடைதல்தான் கவிஞனின் முயற்சியும் பயிற்சியும்.
இடம் பெயரும் முகிலினத்தவளே, உன் ஒற்றை வானம் நான், என்னைப் பிரிந்து எங்கே போய்விடுவாய்?

கவி மாலை 2004 ல் எனக்கு அறிமுகமானது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது மிகவும் பிடித்தமான தளம். இங்கிருந்து பலர் கவிஞர்களாக ஆகியிருப்பதும் அறிவேன். சிங்கப்பூரில் எல்லாமே கவிதைக்கான கச்சாப்பொருள்கள்தான். என்றாலும் அதை பெரும்பாலோர் உணர்வதில்லை
அந்த மான் தப்பித்தாலென்ன அடுத்ததைத் துரத்தும் புலி

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு கவிமாலை தொடங்கிய நாள். கடற்கரைச்சாலையில் கவிமாலை என்ற பெயரில் அறிமுகமானது. நண்பர் பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள் எழுதி வாருங்கள் வாசிக்கலாம் என்று அழைத்தவுடன் ஒரு கவிதையுடன் புறப்பட்டேன். பீச் ரோட்டில் இருந்த சமூக மன்றத்தில் இரண்டாம் தளத்தில் இருந்த அறையில் கவிமாலையின் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று பதினைந்து பேர் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். தொடர்ந்து மாதாமாதம் கவிமாலை நிகழ்ச்சியை அவர் நடத்தி வந்தார்.
என்னால் தொடர்ந்து அவர்களுடன் பயணப்பட இயலவில்லை. ஆனாலும் அவர்கள் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு வந்தேன். படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு மாபெரும் கவிஞர்கள் குழுவாகவும் கவிதை அனுபவங்களைத் தரும் மாபெரும் இயக்கமாகவும் வளர்ந்துள்ளது. தலைமைகள் மாறி பல புது நிகழ்ச்சிகளையும் புதுமைகளையும் கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் கவிமாலை சிங்கப்பூர் இலக்கியக் குழுக்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. கவிமாலை கவிதை இயற்றக் கற்றுத் தருகிறதா? எதுகை, மோனை, சந்த நயம், பா வகைகளை அறிமுகப்படுத்துகிறதா? மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் கவிதைப்பாலம் அமைக்கிறதா? நவீனக்கவிதைகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறதா? எது கவிதை என்று தீர்வுகள் தருகிறதா? கவினுற அமையும் கவிதைகள் அனைத்தும் கவிதையாகும் என்று தமிழ்ச்சங்கப்பலகையாய் விரிவடைந்து அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில்தான். அது “கவிமாலை”. நான் முதல் கவிதை எழுதிய போது வயது பதினொன்று இருக்கலாம். என் தோழி நூர்ஜஹானுக்கு ஆட வேண்டும் என்று மிகுந்த ஆர்வம். அவர்கள் வீட்டில் நடனம் ஆட இடமிருக்காது. அனுமதியும் கிடைக்காது. எனவே பள்ளி விட்டு வீடு திரும்பும் மாலை நேரங்களில் எதாவது பாடல் போல் எழுதித் தருவேன். அவள் அதற்கு நடனம் ஆடுவாள். குழந்தைமையின் பேதைமை நிறைந்த ரகசியப் பொழுதுகள் அவை.
குயில் கூவ மயில் ஆடினாள் அவள் ஒயிலில் மயங்கியது இந்த உலகம்
இதுதான் என் முதல் கவிதை என்று சொல்லலாம். இதைப் போல் ஏதாவது எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். பிறகு தொடர்ந்து கவிதைகள் எழுதி சில வெற்றி கண்டன. கால ஓட்டத்தில் பல காணாமலே போயின. எனக்குச் சற்று விரிவாக எழுதுவது பிடித்தமானதாக இருந்தது. அதற்குக் கவிதையை விட கதைகள் பொருத்தமாக இருந்தன. அதனால் சிறுகதைகள் எழுதி எழுத்தாளராக ஆகி விட்டேன். என்னுள் இருந்த கவிஞர் அவ்வப்போது எட்டிப் பார்த்துப் புன்னகைப்பார். வாழ்க்கையின் நுட்பங்களைச் சொல்ல கவிதையை விடச் சிறந்த பொருள் வேறு இல்லை என்ற தீர்மானமான எண்ணம் உண்டு. ஆனால் கைவரப் பெறாத பொருளாக அது என்னை விட்டு விலகி விலகிச் செல்கிறது.

2007இல் எனக்குக் கவிமாலை அறிமுகம் ஆனது. நகைச்சுவைப் பேச்சு “கீழை அ.கதிர்வேல்” என்று என்னை கவிமாலையில் உரையாற்ற வாய்ப்புக் கொடுத்து மேடையேற்றி சிங்கப்பூர் இலக்கிய நண்பர்கள் பலரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ . கவிமாலை நிகழ்வுகள் பார்வையாளர்களாக வருகின்ற பலரையும் எழுதத்தூண்டி அவர்களையும் கவிஞராக்கி உள்ளது. நகைச்சுவை எழுத்தாளரான என்னையும் கவிதைகள் எழுத வைத்ததும் பலமுறை அதில் நான் பரிசுகள் பெற்றதும் மறக்கமுடியாத அனுபவங்கள்.
எல்லைச்சாமி பிரேக்கர் அடிக்கும் போது தட தடத்த கைகளின் வலி பத்து நாளைக்கு நீடித்தபோதும் சீனக் கங்காணி தெரியா மொழியில் திட்டித் தீர்த்தபோதும் அசந்து தூக்கம் வரும் ஐந்து மணிக்கு தினமும் அலாரம் அடிக்கும்போதும் கடைசியாக இடம் மாறியபோது கடித்த மூட்டைப் பூச்சி தடம் புரளாமல் கடிக்கும்போதும் ஊருக்கு போயிடலாம்னு தோணுவது என்னவோ உண்மைதான்... ஆனால் ஊரெல்லாம் கடன் வாங்கி ஏஜெண்டுக்கு பணம் கட்டி பெட்டி கடையிலே என்னோட பாக்கியை கொடுத்திட்டு ப்ளைட் ஏறுன்னு குறுக்கால நின்னு மறிச்ச பங்காளிதான் எல்லைச்சாமியா எல்லாக் கஷ்டத்தையும் மறக்க வைச்சு இங்கேயே இருக்க வச்சான்.

காயல் என்பது நதி கடலில் கலக்கும் இடத்துக்கு இடப்பட்ட பெயர். நதியும், கடலும் சேர்ந்தால் காயல் பிறப்பெடுக்கிறது. ஆற்றின் நன்னீரும் கடலும் சேருவதால் பிறப்பெடுக்கும் தனித்துவத் தாவரங்கள், தனித்துவ உயிரினங்கள் செய்யும் மாயங்கள் பல சிங்கப்பூர் கவிமாலை ஒரு காயல் புலம்பெயர் கவிஞர்களையும் சிங்கப்பூரர்களையும் இணைக்கும் தோற்றுவாய். அந்த முகத்துவாரத்தை முத்தமிட்டு இலக்கிய வெளிக்குள் பிரவேசித்தவர்களில் நானும் ஒருவன். அந்த அமைப்பிற்கு முழுதுமாக நிற்பவர் திரு.மா.அன்பழகள் அவர்கள். கவிதை எழுதினால் கையில் காசு கிடைக்கும் என்ற சங்க காலத்தை மீட்டுக் கொண்டு வந்தவர். நான் பரிசு பெறும் தருணங்களில் எல்லாம் முதல் வாழ்த்துடன் விழா எடுத்து சிறப்பித்தவர். கவிமாலை பல முகங்களின் அடையாளம்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களில் அதிகமானோரின் முதல் இலக்கிய சந்திப்பு கவி மாலையில்தான் நிகழும். எனக்கும் அவ்வாறுதான் நிகழ்ந்தது. முகமறியா கவிஞர்கள், எழுத்தாளர்களை ஒவ்வொரு மாத அமர்விலும் காண்பதும் அவர்களின் நட்பு வட்டத்தில் பதியன் போட்டதும் இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. வாழ்க்கையில் நாம் எதுவோ, அது மட்டுமாக நாம் இருக்கும் தருணங்களில் நம்மில் நிறையும் குதூகலம். அப்படி உணரும் பலரைச் சந்தித்த கவிமாலைப் பொழுதுகளை உருவாக்கிய ஒர் ஆளுமை என்றும் மறையாத புன்சிரிப்புடன் தன் அன்பால் கட்டிப்போட்டுக் கவித்தடத்தை வழி நடத்தும் திரு.மா.அன்பழகன் அவர்கள்.
கவிஞர் சத்தியமூர்த்தி, விசயபாரதி, பனசை நடராஜன், சித்ரா, மாதங்கி, இறை மதியழகன், பாண்டித்துரை என்று இன்றும் தொடரும் நண்பர்கள் அறிமுகம் ஆன தளம் கவிமாலை. இன்னொரு குறிப்பிடவேண்டிய செய்தி கவி மாலை நண்பர்கள் குடும்ப உறவுகளாக மாறி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது. திரு.அன்பழகன் அவர்கள் தலைமைக் கயிற்றை இளையர்களுக்கு மாற்றி விடும் முதல் அடியை அமைப்புகளில் ஏற்படுத்தினார். தமிழகத்திலிருந்து படைப்பாளர்களையும் சொற்பொழிவாளர்களையும் வருவித்து அவர்கள் தாயகம் மீளும் வரை சிறப்பாக கவனித்து வழியனுப்பும் குணத்தை இன்று வரை தளராமல் தொடர்கிறார். புதிய குடியேறிகளையும், புலம் பெயர் தொழிலாளர்களையும், சிங்கப்பூரர்களுடன் ஒன்றினைக்கும் சமூகப் பணியும் இந்த இலக்கிய அமைப்பின் மூலம் நடைபெறுவது வெகு சிறப்பு. மேன்மேலும் கவிஞர்கள் உருவாகட்டும். அத்துடன் கவிதைகள் பற்றிய விமர்சன அரங்குகளையும் உருவாக்கி அபுனைவில் ஒரு தொடக்கத்தை இப்போது பொறுப்பில் உள்ளவர்கள் உருவாக்க வேண்டும்.

ஆண்டுகள் சரியாக நினைவில்லை. ஆனாலும் கவிமாலையின் தொடக்க காலத்திலேயே நான் அந்த அமைப்புடன் தொடர்பு கொண்டு வந்திருக்கிறேன். திரு.பிச்சினிக்காடு இளங்கோ காலத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றி என்னை உரையாற்ற அழைத்தது இன்னும் என் நினைவில் உள்ளது. வானொலியில் 1968இல் நான் தயாரித்த நிகழ்ச்சிக்குக் கவிமாலை என்று பெயர் இருந்த காரணத்தால் இயல்பாகவே கவிமாலை மீது எனக்கு நாட்டம் உள்ளது. உண்மையில் கவிமாலை புதிதாக கவிதை எழுத வருவோருக்கு ஒரு கவிச்சோலையாக, ஒரு பயிற்சிப் பட்டறையாகத்தான் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. அது உண்மையான கவிதைக்குரிய பயிற்சிப் பள்ளிதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. நான் 1974இல் தேசிய நாளுக்காக கவிஞர் கா.பெருமாளிடம் கவிதை எழுதிக் கொடுத்தேன். அதுதான் என் முதல் கவிதை. அதை அவர் சிங்கப்பூர் வானொலியில் வாசித்தார். பிறகு பல்வேறு ஏடுகளில் கவிதைகள் எழுதினேன். பல புனைப்பெயர்களில் அவை வெளியிடப்பட்டன. பெரும்பாலும் உரை வீச்சுகளை அப்போது எழுதி வந்தேன்.
நாற்காலியில் மூட்டைப்பூச்சி இருப்பதாகத்தான் கேள்வி. ஆனால் இப்போதெல்லாம் மாய மந்திர சக்திகளும் உள்ளனவோ என அஞ்சத் தோன்றுகிறது. இல்லையென்றால் சொன்ன சொல் தவறாத உத்தம புத்திரரும், ஏகப்பத்தினி விரதர்களும் நாற்காலியில் போய் அமர்ந்ததும் வசனம் மாறுகிறது பழக்கங்கள் மாறுகின்றன நடை மாறுகிறது உதடு ஊதுகிறது ஒன்றுமே புரியவில்லையே சாமி
என்பது செ.பக்கிரிசாமி எனும் பெயரில் நான் எழுதிய உரை வீச்சுக்களில் ஒன்று. எனக்குப் பல கவிதைகளைப் பிடிக்கும். எனக்குப் பிடித்த என் குட்டிக் கவிதை:
ஒன்றை வேண்டாமென்றால் அதற்குரிய மாற்றை நீ அழகாகத் தராத வரையில் அடடா தம்பி ! இந்தக் காரண காரிய உலகில் உன் சொல்லும் செயலும் காற்றோடு பறந்து போகும் காய்ந்த இலைதானப்பா
இந்தச் சிங்கப்பூர் நாட்டில் கவிதைக்கான மூலப் பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாம்தான் தேடிக் கண்டுணர வேண்டும்.

2012 ல் கவிமாலை எனக்கு அறிமுகம். கவிதை எழுத பயிற்சிக் களமாக எனக்கு உதவியது. கவிதை மட்டுமல்ல கனிவான நண்பர்கள் குழுவும் அறிமுகமான இடம். படித்ததில் பிடித்தது அங்கத்தில் வாசித்த கவிதை.
எந்த நேரமும் நிற்கப் போகும் இதயத்தின் மீது ஏன் இத்தனை கல்லெறிதல்? அன்பை எறியுங்கள் மேலும் சில காலம் துடித்துக் கொள்ளட்டும்.

2019/2020 கோவிட் காலகட்டத்தில் இணைய வழி கவிமாலை அமைப்புக் குறித்து அறிந்துகொண்டேன். தொடர்ந்து 25 ஆண்டுகளாய் கவிதையை மட்டுமே நோக்கமாய் கொண்டு இயங்கும் அமைப்பு. மாதா மாதம் போட்டிகளின் மூலம் பல புதியவர்களுக்கு கவிதைகள் எழுதத்தளம் அமைத்து ஊக்கப்படுத்துவதோடு, பல சிறந்த கவிஞர்களை அடையாளப்படுத்தியும் இருக்கிறது. நிச்சயம் சிறந்த பயிற்சிக்கூடம் எனலாம்.
எந்த ஒரு படைப்புக்கும் அடிப்படையானது உணர்வுகள். அது எப்போதும் மாறாது. எந்த நாடாக இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை மன உணர்வுகள் ஒன்றாகவே இருக்கும். அதை சிங்கப்பூருக்கு என்று இருக்கும் சில குறிப்பிட்ட சிக்கல்களோடும், சமூக உணர்வோடும் பொருத்திப் பார்க்கையில் கவிதைக்கான கருப்பொருள் புதிது புதிதாய் கிடைத்துக்கொண்டிருக்கும். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் பிடித்தது கவிஞர் மதிக்குமார் அவர்களின் ‘யாமக்கோடங்கி’ தொகுப்பிலிருந்து
கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவனின் காலில் வந்து விழுகிறது கோபுர நிழல்

கவிதையின் காலம் என்று பிறந்தது என்றறியவியலாத தொன்மையது. உரைநடை தோன்றியபின் கவிதைகள் மறைந்துவிடும் என்று பேசப்பட்டதுண்டு. ஆனால் கவிதை தனது வடிவத்தையும் கொண்மையையும் மாற்றியபடித் தனது இருப்பைத் தொடர்ந்து வலுவாக இன்றுவரை தக்கவைத்து வருகிறது. தமிழ் இலக்கிய வெளியிலும் இந்த நிதரிசனம் நன்கு புலப்படக் கண்டுவருகிறோம்.
சிங்கப்பூரில் கால்நூற்றாண்டு காலமாகப் பயணிக்கும் கவிமாலை ஒரு கவிதை அடையாளத் தளமாகச் செயல்பட்டுவருகிறது. மூன்று வகைகளில் கவிமாலை அமைப்பின் பணி முக்கியமாகக் கருதமுடிகிறது. இளைய கவிதைப் படைப்பாளிகளின் கற்பனையையும் கவிபுனையும் ஆற்றலையும் தொடர்ந்து கொண்டாடி வரவேற்கிறது கவிமாலை. பல்வேறு துறைசார்ந்த அலுவல்களில் தொழில்புரியும் இளைஞர்கள், மகளிர் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் கவிதை குறித்த நோக்கையும் போக்கையும் கூர்தீட்டிச் செம்மைப் படுத்திச் சிறப்பிக்கும் பட்டறையாகக் கவிமாலை திகழக் காண்கிறோம். சிங்கப்பூரின் கவிதைவெளியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அவற்றின் தரம் குறித்த நம்பகத்தன்மையையும் போற்றிப் பேணிவளர்க்கும் மேடையாகக் கவிமாலை அமைந்து சிறக்கப் பார்த்துவருகிறோம் . கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிஞர் பிச்சினியார், கவிஞர் இன்பா, இறை மதியழகன் போன்றோர்களின் உழைப்பும் உற்சாகமும் நீரூற்றாய் அமைய இங்கு கவிதைமலர்கள் பூத்துச்செழிக்க கவிமாலை அமைப்புமூலம் அரும்பணியாற்றிவருகின்றனர். கவிதைநேசன் என்ற முறையில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் கவிமாலைக்கு இத்தருணத்தில் பதிவுசெய்வதில் மகிழ்கிறேன்.