
நான் டான் டொக் செங் மருத்துவ மனை உணவகத்தினுள் நுழைந்தேன். அங்கு தெளசுவான் (உளுந்து கஞ்சி) குடிப்பதில் எனக்குப் படு விருப்பம்! வெள்ளைச் சதுர கிண்ணத்தில் விளிம்பு தளும்ப நிரப்பப்பட்ட கஞ்சியின்மேல் துண்டு துண்டாக நறுக்கிய ஈச்சாக் குவே துண்டுகளைப் போட்டுக் கடைக்கார்ர் கிண்ணத்தைத் தரும்போதே கண்கள் விரிந்து படபடக்கும். கஞ்சியின் மணம் மூக்கைத் தன் வசப்படுத்திக் கொள்ளும். நேற்றும் அப்படித்தான் தெளசுவான் கஞ்சிக் கிண்ணத்தைக் கையில் ஏந்திக் கொண்டு திரும்பிப் பார்த்தபோது துணைவியார் கையை உயர்த்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தை அறிவித்தார். வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்த மேசைகளில் ஒன்றில் என் துணைவியார் அமர்ந்திருந்தார். அது யோங் தாஃபூ கடைக்குப் பக்கத்தில் இருந்தது. அங்குச் செல்லும்போது இடையில் ஒரு மேஜையில் தமிழர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு அவரைக் கடந்து சென்றேன். துணைவியாருக்கு முன்னால் அமர்ந்தேன். துணைவியார் மஞ்சள் மீ கலந்த யோங் தாஃபூ சூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பசுமை மாறா இளம் கைலான் கீரையும் மீன் சதை நிரப்பப்பட்ட பாகற்காய்த் துண்டு, வெண்டிக்காய், மீன் உருண்டை முதலிய உணவு வகைகள் சூப்பில் மிதந்து கொண்டிருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ‘நல்ல ஆரோக்கியமான’ உணவுதான் என்று மனம் முனுமுனுத்தது. மனைவியுடன் பேசிக்கொண்டே முன்னமே வாங்கி இருந்த சீஸ் ரொட்டியை உளுந்து கஞ்சியில் தோய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சற்று முன்னர் நான் பார்த்த மனிதர் என் அருகில் வந்து நின்றார். நான் நிமிர்ந்து பார்த்தேன்.
‘உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…’ அமைதியாகக் கேட்டார். எங்கே பார்த்திருப்பார் என்பதைத் தெளிவுபடுத்த அவர் வசிக்கும் இடத்தைக் கேட்டேன். ‘கிளமெண்டி’ என்று சொன்னார். ‘நான் அங்கு அடிக்கடி போவதில்லை. ஏதாவது நிகழ்ச்சியில் பார்த்திருக்கக்கூடும்’ என்றேன். அதிலும் அவருக்கு நிறைவில்லை. பிறகு ‘நான் ஒரு முன்னாள் செய்தி வாசிப்பாளன்; தொலைக்காட்சியில் பார்த்திருக்கக்கூடும்’ என்று தயக்கத்துடன் கூறினேன். ஒரு கணத்தில் அவர் முகம் முல்லைக் காடாய் மாறியது. ‘ஆமாம் தம்பி.. இப்போது நினைவுக்கு வருகிறது’ என்று சொல்லி என் பெயரைக் கேட்டார். பெயரைச் சொன்னேன். அவர் சட்டென என் பக்கத்தில் காலியாய் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். என் குரலும் பழக்கப்பட்டதாகவே இருக்கிறது என்று சொல்லி என் கையைக் குலுக்கினார். எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
‘என் பேரு பதி. எனக்கு 75வயதாகிறது. நீங்க செய்தி வாசித்தா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க தமிழ் உச்சரிப்பு தெளிவா இருக்கும்’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். தலையில் கொஞ்சம் வெள்ளை மயிர்கள் மீதமிருந்தன. அதே நிறத்திலேயே தாடி. ஓரளவு தளர்ந்த உடல் தோற்றம். நான் மருத்துவமனைக்கு வந்த காரணத்தைக் கேட்டார். என் துணைவியாரை இரத்தப் பரிசோதனைக்கு அழைத்து வந்தததைக் கூறினேன். அவர் என் மனைவியைப் பார்த்து வணக்கம் கூறினார். நான் கேட்பதற்கு முன்னர் அவரே முந்திக் கொண்டு தான் வந்த காரணத்தைக் மடமடவெனக் கூறினார்.
‘நான் ரெண்டு வருசமா இங்க வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறேன். என் மனைவிக்கு கால் மூட்டு வலின்னு அழைச்சிகிட்டு வந்தேன். அதை ‘செக்’ பண்ணினப்போ இனிப்புநீர் இருக்குன்னு கண்டுபுடிச்சாங்க. என் மனைவி மூப்பைக் கருதி முட்டியில ஆபரேசன் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. முட்டியில கத்தி வைக்கிறதில எனக்கும் சம்மதமில்ல. இந்த வயசில அதெல்லாம் செய்யிறது பொருத்தமா இருக்காதுன்னு என் மக சொல்லிட்டுச்சி. இப்ப தடுமாறித் தடுமாறி நடக்கிறாங்க. அதுவும் இல்லாம போயிட்டா? ‘வீல்’ சேர்ல உட்காருர மாதிரி ஆயிட்டா? மருந்து மாத்திரை கொடுத்தே குணப்படுத்துங்கன்னு வேண்டிக்கிட்டேன். இப்ப என்னடாண்ணா இரத்தத்தில ‘கொலஸ்ட்ரால்’ இருக்குன்னு அதையும் கட்டுப்படுத்தணும்னு சொன்னாங்க. அதுக்கு மருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது போன வாரம் என் மனைவி குளியல் அறையில வழுக்கி விழுந்திட்டாங்க… அரை மயக்க நிலையில ஆம்புலன்ஸ் வண்டியில இங்க கொண்டு வந்தேன். அவுகளுக்கும் சின்ன வயது இல்ல. எழுபது வயசாகுது! அதுக்குச் சிகிச்சை கொடுக்கும்போது ‘பிரஸ்ஸர்’ அதிமாக இருக்குன்னு சொல்றாங்க. ‘மினி’ பக்கவாதம் ஏற்பவும். ‘மினி இருதயப் பாதிப்பு’ வரவும் வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. நமக்கு என்ன தெரியுது? டாக்டருங்க சொல்றதைத்தான் கேக்க வேண்டியிருக்கு. உள்ளே ‘செக்’ பண்ணிகிட்டு இருக்குறாங்க. என் மக கண்மணி அங்க உட்காந்திருக்கு. வயசான காலத்தில விழுந்தா பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி கீழே மட்டும் விழக்கூடாதுன்னு சொல்லுவேன். எதிர்பாராம ஒரு விபத்து ஏற்பட்டா என்ன செய்யுறது? நான் ஒரு வாய் காப்பிக் குடிக்க வந்தேன்’ நிறுத்தினார்.
காப்பி குடித்துவிட்டாரா என்று கேட்டபோது இல்லை என்று சொல்லி காப்பிக்கடைக்கு முன்னால் நீண்டிருந்த வரிசையைக் காட்டினார். வரிசை நேநீர்க் கடையில் தொடங்கி கழிவறை இருக்கும் மூலை வரை நீண்டிருந்தது. வரிசையைப் பார்த்து நான் மிரண்டு போனேன்.
‘வாங்க வரிசையில நிற்போம். இங்க பேசுறதை அங்கேயே பேசலாம். பத்து அல்லது பதினைஞ்சு நிமிசத்தில கடையை நெருங்கிடலாம். நான் உங்களுக்கு ஒரு காப்பி வாங்கிக் கொடுக்க விரும்பறேன்’ என்று சொல்லி எழுந்தேன். என் மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். கஞ்சிக் கிண்ணம் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. அவரும் என்னுடன் வந்தார்; வரிசையில் நின்றோம். ‘மருத்துவச் செலவுகள எப்படிச் சமாளிக்கிறீங்க?’ நான் தயக்கத்துடன் கேட்டேன். அவர் பேசத் தொடங்கினார்.
‘அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை தம்பி. என் ‘மெடிசேவ்’லே இருந்து பணம் கட்டாயிடும். இன்னும் மெடிஷீல்ட், மெடுஃபண்ட். மெர்டேகா ஜெனரேஷன்னு பல உதவிகள் கிடைக்க வழி இருக்கு. நான் மூனு ரூம்ல குடியிருக்கிறதுனால அரசாங்க அனுகூலங்க எல்லாம் மொத்தமா கெடைக்குது. என் மகனுங்க ரெண்டுபேரும் வெளிநாட்டில வேலை செய்யிறாங்க. ஒருத்தன் ஆஸ்திரேலியாவில இருக்கான். இன்னொருத்தன் இங்கிலாந்தில இருக்கான். ரெண்டு பேருமே எங்க செலவுக்குப் பணம் அனுப்பிகிட்டு இருக்கிறாங்க. மெடிசேவ்ல பணமும் நிரப்பிடுவாங்க. மக கண்மணியும் மெடிசேவ்ல பணம் போடுது. பணம் ஒரு பிரச்சினை இல்ல. என் மனைவி குணமாகி வீட்டுக்கு வந்திட்டாங்கன்னா போதும். மீதிக் காலத்தை நிம்மதியாக் கழிச்சிடலாம். பணம், வீடு, பிள்ளைங்கன்னு எல்லா வசதிகளும் இருந்தாலும் மனைவி பக்கத்தில இருக்கிற மாதிரி ஆகுமா தம்பி?’ என்னைப் பார்த்தார். முகத்தில் வறண்ட சிரிப்பு!
‘ரொம்ப உண்மை. வாழ்க்கையில மனைவி இடத்த யாராலும் நிரப்ப முடியாது’ நான் என் அனுபவத்தில் தோய்ந்த வார்த்தைகளை ஆறுதல் மொழியாகச் சொன்னேன். நாங்கள் கடையை நெருங்கினோம். நான் அவருக்கு காப்பி வாங்கியதோடு வதக்கிய ரொட்டி வேண்டுமா என்று கேட்டேன். காப்பியே போதும் என்றார். நான் எனக்கு ஒரு வறக்காப்பியும் அவருக்கு ஒரு காப்பியும் என் மனைவிக்கு சர்க்கரை இல்லாத ‘காப்பி சீ’யும் வாங்கினேன். மேசையில் உட்கார்ந்து அவர் வெண்ணிறக் காப்பிக் குவளையைக் கையிலெடுத்தார். அந்த நேரம் பார்த்து ஒரு பெண் ஓடிவந்தாள். ‘அப்பா, உங்களை மருத்துவர் கூப்பிடுறாரு. வாங்க…’ அவசரம் அப்பெண்ணின் வார்த்தைகளைக் குத்தகை எடுத்திருந்தது. அவள் கண்மணியாகத்தான் இருக்க வேண்டும். கையிலெடுத்த காப்பிக் குவளையை மேசையில் வைத்துவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டே மகளைப் பின் தொடர்ந்தார்.
அவர் முகத்தில் முற்றாகக் கலவரம் ஆக்கிரமித்திருந்தது.


