(குறுங்கதை) உலக மயக்கம்

பொன்.சுந்தரராசு

விண்ணில் விசித்திர ஒளி வெள்ளம்! ஒரு தேவன், ஒரு தேவி இருவரும் வான மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு பூமியில் மீத்திர மனிதன்போல் கால்களைச் சாய்வாக நீட்டிப் பறந்து வந்து பூமியில் கால் பதித்தனர். அவர்கள் இலேசாகக் கால் பதிப்பதுபோல் தோன்றினாலும்  காலடி பட்ட அதிர்வு பூமியில் நூறு கோடி அளவில் வேகமாகப் பரவிப் புழுதிக் காற்றை மேலெழுப்பியது. புழுதி மண்டலம் திடீரெனத் தோன்றியதைக் கண்டு அடுக்குமாடி வீடுகள் ஒருகணம் அதிர்ந்து ஓய்ந்தன. ஆயிரம் தலைகள் தாழ்வாரத்தில் ஒருசேரத் தோன்றிக் கீழ்நோக்கின. ஆரவாரம் ஓய்ந்தது! பாதித் தலைகள் கீழே வந்தன.

ஒரு சீன முதியவர் தேவன் தேவியர் அருகே  சென்று ‘நீங்கள் யார்? தோளில் றெக்கை முளைத்த உருவங்கள்! பளிங்குபோல வெண்ணிறத்தில் உடலைப் பிரிக்க முடியாதபடி ஒட்டிய கண்களைக் கூசச் செய்யும் ஒளிபொருந்திய ஆடைகள்! கண்களைச் சுற்றிக் கருவளையங்கள். எங்கள் நாட்டு ஆசாமிகள்போல் தோன்றவில்லையே!’ என்று மாண்டரீன் மொழியில் கேட்டார்.

‘நாங்கள் தேவலோகத்தில் இருந்து வருகிறோம்’ தேவனின் கை மேல் நோக்கி உயர்ந்தது.

‘தேவலோகம் என்றால்?’

‘சொர்க்கம்!  புண்ணியம் செய்தவர்களுக்குரிய உலகம்’ பெண் தேவதை பதில் கூறியது.

‘அந்த உலகத்தைவிட்டு நீங்கள் ஏன் வந்தீர்கள்? எப்படி வந்தீர்கள்?’ முதியவரின் வியப்பு ஓயவில்லை.

‘புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோ லோகம், மகலோகம், சத்திய லோகம் முதலிய லோகங்களைக் கடந்து பூலோகத்தை வந்தடைந்தோம்’ தேவன்.

‘ஆ!..’ பல நூறு குரல்கள் ஒரே நேரத்தில்!  அவர்கள் எழுப்பிய அந்த ஒலி சத்தியலோகத்தினை அடையும் தூரத்தில் கோடியில் ஒரு பங்குகூட இல்லை!

‘எதுக்காக வந்தீங்கடாப்பா?’ தமிழ் மூதாட்டி நடுங்கும் கைகளில் கோல்பிடித்துக் கொண்டு கேட்டார்.

‘உங்க உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வந்தோம்’ என்றாள் தேவி.

‘என்ன தெரிஞ்சுக்கப் போறீங்க?’ தலையில் சிவப்பு முண்டாசும் இடையில் கைலியும் உடுத்திய நடுத்தர வயதுக்காரன் ஒருவன் கேட்டான்.

‘இங்க தூய்மையான ஆட்சிமுறை நடக்கிறதாமே! எல்லாரும் ஒருநிகராகப் பார்க்கப்படுகிறார்களாமே!  பணக்காரன், ஏழை, மந்திரி, அரசதந்திரி என்றில்லாமல் எல்லாரும் ஒரே விதமாக நடத்தப்படுகிறார்களாமே! இது ஒரு அதிசயத்தீவு என்று சொர்க்கலோகம் வரை பரவியுள்ளது ‘ என்றான் தேவன்.

‘எஸ். செட்டன்லி!’ திடகாத்திரமான ஒருவன் பதில் சொன்னான்.

‘அவை உண்மைதானாவென்று ஆராய வந்தோம்!’

‘ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக்கு!  அதுதான் ஊரறிந்த, உலகமறிந்த உண்மையாச்சே!’ எல்லாரும் காட்டுக் கூச்சல் போட்டனர்.

‘வருவோம். நீங்கள் சொல்வது உண்மையாயின் திரும்ப வருவோம்!’ கண்மூடித் திறப்பதற்குள் அவர்கள் மறைந்து போயினர்.

ஒரு நாட்டில்  மக்கள் வளமாகவும் நலமாகவும்  வாழுவதற்குத் தேவைப்படுவது இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு என்றிருந்தது ஒரு காலம். இப்போது எல்லாவற்றையும் மீறி  மகிழ்வான வாழ்க்கை வாழ, உடல்நல மேம்பாடு தேவைப்படுகிறது. விதம்விதமான புதுப்பது நோய்களால் பீடிக்கப்பட்டு பூலோகவாசிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, அவர்கள் இருவரும் அந்நாட்டில் ஒன்றாவது நிலையில் வைத்து மதிக்கப்படும் மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவமனை  நாட்டின் சற்று  ஒதுக்குப் புறமான பகுதியில் அமைந்திருந்தது. பெரிய மருத்துவ வளாகம். பெண்கள் மகப்பேறு, குழந்தை நலப் பிரிவு, இதயம் சம்பந்தப்பட்ட நிலையம், பல்சுகாதாரத் துறை, கண் சிகிச்சைப் பகுதி முதலிய பல்துறைகள் அமைந்திருந்ததோடு எல்லாவற்றிற்கும் மேலாக  நுழைவாயிலை ஒட்டி, அவசர சிக்கிச்சைப் பிரிவு விசாலமாக அமைந்திருந்தது. அங்கு மருத்துவ ஊழியர்கள் எல்லாரும் சக்கரத்தைக் காலில் கட்டிக்கொண்டு அவசரகதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். அந்த அறையில் சொல்லிமாளாத கூட்டம். எல்லாரும் ஒரு வரிசை எண்ணைக் கையில் வைத்துக்கொண்டு தங்கள் முறைக்காகக் காத்திருந்தனர். 

தேவனும் தேவியும் அங்கு சென்று எந்த உருவில் மாறி உளவறியலாம் என்று யோசித்தனர். கொசுவாக மாறிச் சுவற்றில் யாருக்கும் தெரியாமல் ஒட்டிக்கொள்ளலாமா என்றால், அந்த நாட்டில் கொசுவைத் தங்கவெட்டாமல் ஒழித்துக் கட்டத் தீவிரமான நடைமுறை அமலில் இருந்தது. மக்கள் கண்களுக்குப் புலப்படாமலிருக்க என்ன செய்யலாம்? சரி பதிவுக் ‘கவுண்டர்’ மேசைமேல் இருக்கிற செயற்கை ரோஜாவின் பூவாக மாறுவதற்கு முடிவு செய்தன. அவ்வாறே மாறவும்  செய்தன. அங்கு அழகான மஞ்சள் நிறப்பெண்கள், சற்று நிறம் குறைந்த வளமான பெண்கள், சற்று கருத்தநிறப் பெண்கள் வரிசையாக அமர்ந்து பதிவு செய்யும் பணியில் மூழ்கி இருந்தனர். அவர்கள் முன் இருந்த எல்லா இருக்கைகளிலும் நோயாளிகள். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டோர் அடிவயிற்றைப் பிடித்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். தலைநோவால் பாதிக்கப்பட்டோர் தலையைத் தாங்கியபடியும்,  காலில் அடிபட்டோர் காலைத் தடவிக்கொண்டு முனகியபடியும், தலையில் அடிபட்டோர் தலையில் சுற்றிய இரத்தம் கசியும்  துண்டோடும் இருந்தனர்.! குழந்தைகளை மடியில் ஏந்தித் தேம்பியபடி மகளிர். இன்னும் பலரும் பலரும் நல்ல நேரத்தை எதிர்நோக்கி நம்பிக்கையைக் கண்களில் தேக்கி அமர்ந்திருந்தனர். அங்கு பதிவு செய்த பிறகுதான் சிகிச்சைக்குரிய பகுதிக்குச் செல்ல வேண்டும். நல்ல ஏற்பாடு. அப்போது….

திடீரென்று அப்பிரிவில் ஒரு கலவரம். தாதிமார் வண்டி ஒன்றைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினர். அத்தள்ளுவண்டியில் படுத்திருந்தவரின் முகத்தில் மூக்குப் பகுதி பிளாஸ்டிக் மூடியால் மூடப்பட்டிருந்தது. தாங்கியிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த ‘டிரிப் வாட்டர்’ செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதனைத் தள்ளிக் கொண்டு ஒரு தாதி ஓடிக்கொண்டிருந்தார். படுத்திருந்தவர் உடலைச் சுற்றி வெண்ணிறப் போர்வை. ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர்.

‘மந்திரி மனைவி….’ கவுண்டரில் பரபரப்பு!

‘அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது மந்திரியின் மனைவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.  தகுந்த மரியாதையோடு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லையாம்! உடனே ஒரு தனியார் விமானம் ஏற்பாடு செய்து மந்திரியின் ஏற்பாட்டில் இங்கு வந்திருக்கிறார்கள். மந்திரியும் மற்றவர்களும் வேறு வழியாக சிகிச்சை அறைக்கு வந்து சேர்வார்களாம்…’ தாதி ஒருத்தி அருகிலிருந்த மற்றொரு ஆண்தாதியிடம் இரகசிய குரலில் கிசுகிசுத்தாள். அந்த அறையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் ‘நற்பண்புள்ள பொது மக்கள்’. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

‘அந்தக் கூட்டத்தில் வந்தவர்கள் யாரும் பதிவு செய்யவில்லையே…?’ வியந்தான் ஆண் தேவன்.

‘வரிசை எண்ணும் எடுக்கவில்லையே…’ என்று பெண் தேவதையும் வியந்தாள்.

‘சொர்க்கலோகத்திலும் தேவாதி தேவர், படைக்கும் பிரம்மன், காக்கும் திருமால் என்று தேவர்களின் படிநிலை பகுக்கப்பட்டிருந்தாலும் நம்மில் பெரும்பாலும் வர்க்கப் போராட்டம் வருவதில்லை. நாம் கண் இமைப்பதில்லை. நமக்குப் பசி எடுப்பதில்லை…’ தேவனை இடைமறித்து ‘பின் எதற்குப் பூலோகவாசிகள் நமக்குப் பல்சுவை பதார்த்தங்களும் உணவும் செய்து பரிமாறுகிறார்கள்?’ பெண் தேவதை கேட்டது.

‘அவர்கள் சாப்பிடுவதற்குத்தான்!’ என்று சிரித்தான் தேவன்.

ஒரு கணமும் தாமதிக்காமல் இரண்டு தேவதைகளும் விண்ணுலகை நோக்கிப் பறந்தன. பூவுலகில் ஒரு கோடியில் அந்த அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் மக்கள் நடமாடுகையில் தேவனும் தேவதையும் வருவார்களா என்று கவனித்துக் கொண்டுதான் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தனர்.