
தமிழ்நாட்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலத்தை 16ம் நூற்றாண்டு காலம் என கூறலாம் கார்டு வெல், வீரமா முனிவர், போப்பையர் போன்றவர்கள் தமிழ்நாட்டில் குடியேறி முறையாகத் தமிழ் கற்று இலக்கிய இலக்கணம் செய்த அந்தக் காலத்தில் தமிழை தங்கள் பிறப்புரிமை மொழியென மதித்து பேரார்வம் கொண்டு கற்றுத் தேர்ந்த முஸ்லிம்கள் பலர் பெரும் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஒன்றின் பின் ஒன்றாய்ப் படைத்துள்ளனர். இவ்வாறு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் படைத்த முஸ்லிம் புலவர்கள் எவ்வளவு பேர் என்ற விபரக்குறிப்புக்கள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டு மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.
மத நூல்களில் ஆழமான பற்றுடைய எழுத்தாளர்கள் பொதுத் தளத்தில் படைக்கும் நூல்களின் பொருட்செறிவு, சொல் இனிமை, இலக்கண அமைதி ஆகியவை தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்த நிலை நாம் இன்றைய நிலையில் நினைத்துக்கூட பார்க்க இயலாது. பல முஸ்லிம் புலவர்கள் ஆசுகவிகளாகவும் கண்டசித்தி பாடுவோராகவும் அவதானம் செய்கிறவர்களாகவும் இருந்திருக்கின்றனர். நூறு அவதானம் செய்து அவையோரைப் பிரமிப்பில் ஆழ்த்திய செய்குத் தம்பிப் பாவலர் கோவை உலா, தூது, அந்தாதி, வண்ணம், பரணி, கலம்பகம், சந்தப்பா, திருப்புகழ், சித்ரகவி, நாகபந்தம், அம்மானை சதகம், பிள்ளைத் தமிழ் போன்ற இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் அறிஞர்கள் பற்றி அச்சில் பதிப்பிக்கப்பட்ட நூல்களாக இப்போது நம்மிடையே இருப்பவை மிக மிக குறைவானவைகளே ஆனாலும் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் பண்பாட்டையும் இலக்கிய ஆர்வத்தையும் தான் புலம்பெயர்ந்த நாடுகள் அனைத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து தென்கிழக்காசிய நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அச்சுத் தொழிலில் முத்திரை பதித்து தங்கள் வாழ்வாதரத்துடன் இலக்கியத்தையும் எப்படி வளர்த்தெடுத்தார்கள் என்று வியக்கவைக்கும் செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். வெடிமருந்து, திசைமானி, அச்சுஊடகம் போன்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உலக சரித்திரப் போக்கை மாற்றிக் கொண்டிருக்கும்போது அதை பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு அதிகாரமும் சேர்ந்துகொண்டிருந்த காலத்தில் ஐரோப்பியர்கள் உலகெங்கும் பரவி தங்கள் வணிக நலன்களையும் ஆட்சியதிகாரத்தையும் நிறுவ அச்சுத் தொழிலை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் போன்ற குறிப்புகள் காலனியாதிக்கத்திற்கு பிறகு வந்த ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் முஸ்லீம்களின் அச்சு ஊடக முயற்சிகளை அதன் தொடக்க நிலையிலிருந்து விரிவாக ஆய்ந்தவர் ஜே.பி.பி.மோரே. அடிப்படையான பல தரவுகள் அவர் குறிப்புகளிலிலிருந்தே பலரும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அதிலும் தென்கிழக்காசியாவில் இதழியல் துறையில் முஸ்லிம்களின் பங்கு தமிழகத்திற்கு முன்னரே தமிழ் முஸ்லிம்களால் அறிமுகப் படுத்தப்பட்ட செய்தியை சிங்கப்பூர் ஆய்வாளர் திரு.பால பாஸ்கரன் அவரது நூல்களில் பதிவு செய்துள்ளார்.
திரு.டார்ஸ்டன் (Tschacher-institute of Islamic studies – பெர்லின் பல்கலைக் கழகம்) 2006இல் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் பற்றி The impact of being Tamil on Religious life among Tamil Muslims in Singapore ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் சரளமாகப் பேசத் தெரிந்த ஜெர்மானியர். சிங்கப்பூர் வரலாற்றை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி பன்னாட்டு கருத்தரங்குகளில் பதிவு செய்து வருபவர். புலம்பெயர் தமிழ் முஸ்லிம்களின் வரலாறு இவர்களை போன்ற ஆய்வாளர்களின் உதவியால் நமக்கு அறியக் கிடைக்கிறது.
தமிழகத்தின் தாதுவருடப் பெரும்பஞ்சத்திற்கு பிறகு, நீராவிக்கப்பல் போக்குவரவு ஆரம்பித்த பின்னர் மலாயாவில் அதிக தினக்கூலி கிட்டியது போன்ற பலகாரணங்களால் மலாயாவின் ஆட்தேவையைக் கணிசமாக நிரப்புவதற்கான முகாந்திரங்களும் தமிழர்களுக்கு இருந்தன.
இக்காலகட்டத்தில் தமிழ் முஸ்லீம்கள் சிங்கப்பூரில் வியாபாரங்களில் ஈடுபட்டுவந்துள்ளதோடு நூல்களை அச்சிட்டு வெளியிடுதல், பத்திரிகைத் தொழில் ஆகியவற்றிலும் ஆர்வம்காட்டியுள்ளனர். இப்பின்புலத்தில் சிங்கப்பூரிலிருந்து பிரசுரிக்கப்பட்ட தமிழ் வார இதழே ‘சிங்கை நேசன்’. மூன்றாண்டுகள் (27ஜூன்1887 – 23ஜூன்1890) பிரதி வாரம் திங்கட்கிழமை இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. தீனோதயவேந்திரசாலை அச்சகத்திலிருந்து சி.கு.மகுதூம் சாயபு என்பாரின் ஆசிரியத்துவத்தில் மொத்தம் 150 இதழ்கள் வெளியாகியுள்ளன. தீனோதயவேந்திரசாலை சாயபுவால் 1873ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுத் தமிழ், மலாய், ஆங்கில நூல்களை வெளியிட்டு வந்துள்ளது. 1875இல் சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் பத்திரிகை என்று அறியப்படும் ‘சிங்கைவர்த்தமானி’, பிறகு ‘தங்கைநேசன்’, அதன் பிறகு ‘ஞானசூரியன்’ ஆகிய மூன்று பத்திரிகைகள் சிறிது காலம் சாயபுவால் வெளியிடப்பட்டுப் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டதை சிங்கைநேசனில் சாயபு எழுதியுள்ள ஒரு குறிப்பைக்கொண்டு அறியமுடிகிறது. இம்மூன்று பத்திரிகைகளின் ஒருபிரதிகூட இன்று காணக்கிடைக்கவில்லை. ஆயினும் நல்வாய்ப்பாகச் சிங்கைநேசனின் அனைத்து இதழ்களும் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இணையவழியாகவும் இவ்விதழ்களை வாசிக்கமுடிகிறது.
1912இல் பினாங்கில் ஒரு பத்திரிகை தோன்றியது. அதன் பெயர் ‘பினாங்கு ஞானாச்சாரியன்’. முதலில் வாரம் இருமுறையாக வந்து நான்கு மாதம் கழித்துத் தினசரியாக மாறியது. அந்த நான்கு பக்கப் பத்திரிகையை வெளியிட்டவர் சம்சுகனி ராவுத்தர். ஞானாச்சாரியன் தோன்றிய சமயம் பினாங்கில் வசித்த பனைக்குளம் மு.அப்துல் மஜீது எனும் இளைஞர் 47 ஆண்டுகளுக்குப் பிறகு அக்காலப் பத்திரிகை உலகத்தை ‘தமிழ் முரசு’ 1959இல் வெளியிட்ட வெள்ளி விழா மலரில் நினைவு கூர்ந்ததும் இன்று நமக்கு தரவுகளாக எஞ்சியுள்ளது. அவர் முதன்முதலாக 1906இல் பினாங்கு மண்ணில் கால் வைத்தவர். பின்னாளில் பெரிய கவிஞராகத் திகழ்ந்து பல நூல்களை வெளியிட்டவர். தமிழ் முரசு ஆசிரியர் கோ. சாரங்கபாணியின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்.
பொதுவாக வரலாறு சார்ந்து ஒரு நூலை உருவாக்குவது ஒரு கடினமான பணி. ஏனென்றால் நம்மிடையே சமநிலையில் நின்று வரலாற்றை எழுதும் வழக்கம் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் வரலாறு சார்ந்த பல முக்கியமான நூல்கள் மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. திரு.ராஃபில்ஸுடன் பயணம் செய்த முன்ஷி அப்துல்லா பற்றிய குறிப்புக்கள்.ஆங்கில நூல்களிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டவை.


