கோட்பாடுகளுக்காக இலக்கியமில்லை இலக்கியத்திற்காகத்தான் கோட்பாடுகள்

0
694

நேர்காணல்: பேரா.றமீஸ் அப்துல்லாஹ், இலங்கை

ஷாநவாஸ்

தங்கள் பிறந்து வளர்ந்த சூழல், எத்தகைய கல்வி, இலக்கிய பின்புலம் கொண்டது? உங்கள் குடும்பத்தில் பண்டிதர்கள், உண்டா?

இப்படி ஒரு பேட்டிக்காக என்னை அழைத்தமைக்கு ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஆசிரியருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இலங்கையின் தென்கிழக்கு மூலையில் உள்ள சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அக்காலத்தில் ஊரின் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் பயின்றவன். ஊருக்கு வெளியே செல்லாது கிராமத்திலே படித்து வளர்ந்தவன். பள்ளிக்காலத்திலே பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் ஆர்வம் காட்டியவன். எனது பாடசாலை ஆசிரியர்கள் இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பாவலர் பஸீல் காரியப்பர். மன்சூர் ஏ.காதர், எம்.ஐ.பௌஸ்தீன் முதலானோர். பல்கலைக்கழகத்தில் சர்வதேச புகழ்பெற்ற கவிஞர் எம்.ஏ.நுஃமான் எனது ஆசிரியர். ஆய்வாளர்கள் வரிசையில் பேராசிரியர்களான சி.தில்லைநாதன், திஸ்ஸகாரியவசம், வ.மகேஸ்வரன் ஆகியோர் எனக்கு வாய்த்த ஆசிரியர்கள். எனது மூத்தப்பாதான் ஊரின் முதல் வாத்தியார். எனது தந்தையார் ஒரு தமிழ் வாத்தியார். இந்த பின்புலம் என்னை வளர்த்திருக்கும்தானே. முதலில் விஞ்ஞானக் கல்வியை மேற்கொண்ட நான் பின்னர் ஒரு வருட காலம் கலைத் துறையில் பயின்று பல்கலைக்கழகம் சென்றேன்.

எங்கு படித்தீர்கள்? பேராசியராக எத்தனை ஆண்டுகள் இருக்கிறீர்கள்?

நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1990களில் படித்தவன். அப்போது பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் முதலானவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். அங்குதான் சென்று பயில வேண்டும் என்ற ஆசை என்னைத் தொற்றி இருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்துக்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் துண்டறுந்திருந்த காலம் அது. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முதலாவதாக விண்ணப்பிக்க முடியாமல் போனது. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேதான் எனது படிப்பைத் தொடர்ந்தேன். அங்கும் எனக்கு நல்ல ஆசிரியர்கள் வாய்த்தமை எனது அதிர்ஷ்டமே. அதே நேரம் வடக்கு முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம், அவர்கள் அங்கிருந்து முற்றாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். அப்படித் துரத்தப்பட்டவர்களில் ஒருவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும்தான். அதனால் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அவரிடம் அங்கு கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரின் மாணவன் என்பது ஒரு பெருமைதானே. படித்து முடிந்தவுடன் அந்தப் பல்கலைக்கழகத்திலே தற்காலிகமாக கடமை புரியும் வாய்ப்பும் கிடைத்தது.

தாங்கள் பணி புரியும் பல்கலைக்கழகம் பற்றி விரிவாகச் சொல்லவும்.

1995இல் தமிழ் முஸ்லிம் பிரச்சினை பூதாகரமாகிவிட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைப் போல அப்போது கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் முஸ்லிம் மாணவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த முஸ்லிம் தலைவர் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தென்கிழக்குப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ ஆவன செய்தார். அது தொடங்கப்பட்ட காலத்தில் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்றே பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியல்ல. அங்கு 5000க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அது ஒரு தேசியப் பல்கலைக்கழகம். அரைவாசிக்கும் மேலாக பிற சமூகத்தவர்கள் படிக்கிறார்கள். பல சமூகத்தையும் சேர்ந்த ஆசிரியர்களும் ஊழியர்களும் பணி புரிகிறார்கள்.

அந்தப் பல்கலைக்கழகம் தொடங்கிய நாளிலிருந்து நான் அதில் கடமையாற்றுகின்றேன். சின்னஞ்சிறு வயதிலே தமிழ்த் துறை நிர்வாகத்தை கையில் ஏந்த வேண்டியதாயிற்று. என்னைச் சூழ்ந்திருந்த படைப்பாக்கத்திறன் மெல்ல அகலத் தொடங்கியது. தொழில் நெருக்கடி அப்படியானதோர் நிலைமைக்கு என்னைத் தள்ளி விட்டது. ஆனால் பல்கலைக்கழகப் பணியை நான் நிறைவாகவே செய்திருக்கின்றேன். அந்த நிறைவு எனக்குள் எப்போதும் திருப்தியாகவே இருக்கின்றது. ஆனால், பலருக்கு எனது அந்த நிறைவும் உயர்வும் கனலாக எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தப் பல்கலைக்கழகம் ஆழ வேரூன்றி வளர்ந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் பேராசிரியராக வரும் வாய்ப்பும் எனக்கே கிடைத்தது. பேராசிரியராகி ஒரு தசாப்த காலம் கடந்திருக்கின்றது. கனல் கொழுந்து விட்டு எரிகின்றது. அந்தப் பல்கலைக்கழகம் ஆறு பீடங்களை கொண்டுள்ளது. அதனை உருவாக்கிய அஷ்ரபின் கனவுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அவர் தனது கவிதை ஒன்றில் பல்கலைக்கழகம் அமைந்த சூழலையும் தனது கனவுகளையும் இவ்வாறு பதிவு செய்கிறார்.

கல்லோயா வருவாள் கடலினிலே உடல் கழுவ

பல்நாட்டுக் கப்பல்கள் பொருளிறக்கப் போட்டியிடும்

பல்கலை வேந்தர்கள் பகலிரவாய் வலம் வருவார்

வெல்லமெனக் காதில் விழும் வேத குர்ஆன் ஓதும் ஒலி

கோயில் மணியோசை நெஞ்சை நிறைக்கும்

தேவனருள் தவழ்ந்து வரும் ஆலயங்கள்

தித்திக்கும் தீகவாபி புத்தபிரான் புகழ்பரப்பும்

இன்று கலாநிதிகளும் பேராசிரியர்களும் என்று பலர் இங்கு பணியாற்றுகின்றனர். அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய தலைவர் அஷ்ரஃப் அவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஹெலி விபத்தில் இறந்து விட்டார். ஆனால் அவரின் கனவு நிறைவேறிக் கொண்டிருக்கின்றது. அந்தச் சம்பவம் மிகத் துயரமானது. அதற்குப் பின்னாலும் பல சொல்ல முடியாத கதைகள் உள்ளன.

சிறுவயதில் இலக்கியம் போன்ற விஷயத்தில் உங்களுக்கு முன்னுதாரணமாக யாராவது இருந்திருக்கிறார்களா? எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எப்படி ஏற்பட்டது? முதல் படைப்பை எப்போது எழுதினீர்கள்?

ஆம். எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள்தான் எனக்கு இந்த ஆசையை ஊட்டி இருக்கின்றார்கள். நான் சிறுவயதிலே பத்திரிகை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அது இரண்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அந்த பத்திரிகை வாசிப்புத்தான் எனக்கு இலக்கியத்திலே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்தக் காலத்தில் பத்திரிகையில் சம்மாந்துறை அஸீஸ்,  மன்சூர் ஏ.காதர்,  (காயல்பட்டணம் சென்று அறிஞர் அண்ணாவிடம் ‘ஈழமேகம்’ என்று பெயர் வாங்கியவர்), அ.ஸ.மருதூர்க் கொத்தன், ஜூனைதா ஷரீப் முதலானோர் புனைகதை எழுதினர். அப்போதே அவற்றையெல்லாம் வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.

நூலகம் எனது வாழ்விடமானது. கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினேன். ஆனால் பிரபலமான கவிஞர் பாவலர் பஸீல் காரியப்பர் குறிப்பிடுவது போல எனது பிரச்சாரப் பகுதி இயங்குவதில்லை. 90களில் எழுதத் தொடங்கி விட்டேன். மிக ஆச்சரியம் முதல் முதலான ஆக்கம் ஒரு நூலாகவே வந்தது. அது ஒரு கூட்டு முயற்சி. அப்போது அந்த நூலை எழுதிவிட்டு நாங்கள் எங்களை மறைத்துக்கொண்டோம். அக்காலச் சூழ்நிலை அப்படித்தானிருந்தது. அந்நூலின் பெயர் ‘ஈழத்தின் இன்னுமொரு மூலை’. அவ்வப்பொழுது எழுதிய சிறு சிறு கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தொண்ணூறுகளிலிருந்து பத்திரிகைகளுக்கு இலக்கிய கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கிவிட்டேன்.

இலக்கியத்திலிருந்து ஒரு படைப்பாளியின் கவனம் திசை திரும்புவது என்பது வெறுமனே புறச்சூழல் சார்ந்த விஷயம் அல்ல. அவனது நம்பிக்கைகளில், நுண்ணுணர்வில் ஏற்பட்ட மாற்றம் அல்லவா? ஆய்வுக் கட்டுரைகள் படைக்க தங்களை தூண்டியது எது?

இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு படைப்புணர்வு நம்பிக்கை முன்னுணர்வு சார்ந்த விஷயம்தான். ஆனால் அதனை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும் அல்லவா? படைப்பு பிரம்மனின் தொழில் அல்லவா? நமக்கு அதனை முதற் பிரதியிலே பிரசுரிக்க முடியாதே… அதனைச் செப்பனிட வேண்டும். அந்தச் செப்பனிடலுக்கு எனக்கு நேரம் வாய்க்கவில்லை. பல்கலைக்கழகப் பணி, பரீட்சைப் பணி, ஆய்வுப் பணி என்பன இளவயதிலே என்னைச் சூழ்ந்து கொண்டன. கட்டுரைகளில் இயல்பாக இருந்த ஈடுபாடும் சமூகத்தில் ஆய்வுக் கட்டுரைகளுக்கான தேவைப்பாடும் தொழில் ரீதியிலான தேவைப்பாடும் ஆய்வுக் கட்டுரைகளை எழுத அதிகம் தூண்டின. அது இன்று வரையிலும் தொடர்கிறது. நான் எப்பொழுதுமே கற்பிப்பவனாக மாத்திரம் இருக்க விரும்பவில்லை. எல்லா வழிகளிலும் கற்பவனாக இருக்கவே விரும்புகிறேன். அந்த கற்கும் பணிதான் எனக்கு ஆய்வுக் கட்டுரைகளை படைக்கத் தூண்டியது எனலாம். கற்கக் கற்க எழுத வேண்டும் என்ற ஆர்வம்தான் மேற்கிளம்புகிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் எழுதுவதற்கான அவகாசம் கிடைப்பதில்லை.

நவீன இலக்கியத்துடன் எப்படி அறிமுகம்? பிடித்த படைப்பாளிகள் யார்?

நவீன இலக்கியம் தொடர்பாக எனக்கு கிடைத்த அனுபவம் அற்புதமானது. ஒரு நாள் எங்களுடைய தமிழ்ப் LUITL ஆசிரியர் கரும்பலகையில் வெண்கட்டியால் மஹாகவியின் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்ற கவிதையை எழுதிவிட்டுச் சென்றார். இதற்கு முதல் பல கவிதைகளை வாசித்து இருக்கின்றேன். ஆனால் இந்தப் பதிவு முக்கியமானது. மஹாகவிதான் ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வர். இதுபோல பத்திரிகை வாசிப்பதிலிருந்து புனைகதைகள் பற்றிய அறிமுகமும் நவீன இலக்கியத்தை எனக்கு மிகவும் நெருக்கமாக்கியது. சமூக இயங்கியலை புரிந்து கொள்ள அது மிகவும் உதவியது. நவீன இலக்கியத்தில்தான் எனக்கு அதிக ஈடுபாடும் பரிச்சயமும் உருவானது. எனக்கு மகாகவியைப் பிடிக்கும்; புதுமைபித்தனைப் பிடிக்கும்; அந்த வழி வந்தவர்களில்தான் ஈடுபாடு அதிகம். ஈழத்தில் மஹாகவி, எம்.ஏ.நுஃமான், வி.ஆனந்தன், செ.கணேசலிங்கம், டானியல், நீலாவணன், சோலைக்கிளி என்று ஒரு நீண்ட தொடர் எனக்குள்ளே இருக்கின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஏனைய நாட்டுத் தமிழ் இலக்கியத்தில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. அதன் பொருண்மை வேறு. அந்த அனுபவம் ஈழத்துக்கேயுரியது.

முற்றாகவே இலக்கிய அரசியலுடன் தொடர்பற்றிருக்கிறீர்கள்? ஏன்? அது ஒரு நிலைப்பாடா? உங்களுக்கு என்று கருத்துகள் இல்லையா? கோபதாபங்கள் இல்லையா?

இந்த கேள்வி சர்ச்சைக்குரியது என்றுதான் நினைக்கிறேன். ஏன் இப்படி ஒரு கேள்வி வந்ததென்று தெரியவில்லை. இல்லை! எனக்கு இலக்கிய அரசியலுடன் தொடர்பு இருக்கிறது. நான் என்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்திருக்கிறேன். இலக்கிய அனுபவத்தின் சாரமும், காலமும் எல்லைகளைக் கடந்தது. அது தெளிவானது; புரிதல் மிக்கது; அழகியல் குணாம்சங்கள் மிக்கது. இலக்கியம் தொடர்பான தெளிவான கருத்து என்னிடம் உண்டு. அதனால் நான் நிறைய கோபதாபங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் எனது கட்சிக்காரர்கள்தான் இலக்கிய உலகில் அதிகம் இருக்கிறார்கள். சிலர் மாயைகளுக்குள் இருந்து கொண்டு தங்களை ஜாம்பவான்களாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். அது நீடித்து நிலைக்காது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. காலம் அவற்றை புறந்தள்ளிவிடும்; சங்க இலக்கியம் இன்னும் இருக்கிறதுதானே. பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் எல்லோரும் இன்னும் இருக்கிறார்கள்தானே. பிச்சமூர்த்தி நமக்கு முன்னுதாரணம்தானே. கவிக்கோ அப்துல் ரகுமானை இன்னும் கொண்டாடுகிறோம்தானே. இடையில் சிற்சில படைப்பாளிகள் வந்து போவார்கள். காலம் எல்லோரையும் சுமப்பதில்லை. அது சிலரைத்தான் சுமந்திருக்கிறது. அதற்காக இடையில் வருபவர்கள் எல்லாம் படைப்பாளிகள் என்றும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களுடைய படைப்புகள் காலத்தை வெல்லாதிருக்கலாம். அந்தக் காலத்தில் மாத்திரம் ஜொலிக்கலாம்.

இலக்கிய விமர்சனக் கருத்துக்கள், கொள்கைகள் ஆகியவற்றை கவனிப்பீர்களா? அவற்றால் பயனுண்டு என எண்ணுகிறீர்களா?

நான் காலத்தைக் கடந்திருக்கின்ற படைப்புக்களையும் அதன் அனுபவத்தையும் அறிவையும்தான் நேசிக்கின்றேன். ஆம்! இந்த இடத்தில் இந்த கேள்வி முக்கியமானதுதான். இலக்கியம் என்ற ஒன்று வருகின்றபோது அது தொடர்பான விமர்சனங்களும் கொள்கைகளும் வருவது தவிர்க்க முடியாதது. அதுதான் முக்கியமானதாகும். அதனைப் பற்றிப் பேச வேண்டும். அந்தப் படைப்பில் பேசுவதற்கு விசயம் இருக்க வேண்டும். சமூக யதார்த்தம். பாலினம், இனத்துவம், சமூக அடுக்கு இப்படியான பின்னணியில்தான் அடிப்படையில் பேசத் தொடங்குவோம்.

இவற்றிற்கு மேற்கத்தேய, கீழைத்தேய சிந்தனையாளர்கள் பல பெயர்களை உச்சரிக்கலாம். அவற்றை நாம் வலிந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்படியான கொள்கைகளையும் நாம் விமர்சனக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும். எதையும் அப்படியே நாம் நம்புவதற்கு அது சமயம் அல்ல. ஆகவேதான் இலக்கியம் பற்றிய கோட்பாடுகள், விமர்சனங்கள் அந்த இலக்கியத்தைப்பற்றிய வாழ்க்கையைப்பற்றிய அனுபவத்தைப் பற்றிய பல்வேறுபட்ட வியாக்கியானங்களைத் தருகின்றன. அது மார்க்சிசமாக இருக்கலாம்; அல்லது பெண்ணிலையாக இருக்கலாம்; தலித்தியமாக இருக்கலாம்; நவீனத்துவம் எனப் பல்வேறுபட்டவையாக இருக்கலாம். யதார்த்த வாதம், மாய யதார்த்த வாதம், அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் இப்படிப் பல வகையில் அமையலாம். எதுவாக இருந்தாலும் கோட்பாடுகளுக்காக இலக்கியமில்லை. இலக்கியத்திற்காகத்தான் கோட்பாடுகள். அந்த நோக்கில் பலவாறு வியாக்கியானம் பண்ண முடியும். அதில் நமக்கு தெளிவு வேண்டும். பிரபலத்துக்காக விவாதங்களை முன்வைக்கத் தேவையில்லை; மொழி ஜாலங்களை காட்டத்தேவையில்லை. அதனைக் கண்டு தெளிதலும் அனுபவிப்பதும் வியாக்கியானப்படுத்துவதும்தான் வாசகர்களினதும் விமர்சகர்களினதும் பங்கும் பணியும் ஆகும். மாறாக அந்த நோக்கு அந்த இலக்கியத்தை கொன்றுவிட முடியாது. அல்லது படைப்புகளால் படைப்பாளிகள் நம்மை கொன்றுவிடவும் கூடாது. இந்த இடைவெளிகளுக்குள்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

எளிமையாகவும் நேரடியாகவும் எழுதுகிறீர்கள். அப்படி ஒரு கொள்கை கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்கள் இயல்பா? புதுக்கவிதை படிப்பீர்களா? (என் பார்வையில் இது நவீன எழுத்தாளரின் மொழிப்பிரக்ஞையை அளக்கும் அளவுகோல்.) எந்த வகைக் கவிதைகள் பிடிக்கும்? உதாரணமான பெயர்கள்.

முன்னைய வினாவுக்கான விடையிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். எவையும் எளிமையாகத்தான் இருக்க வேண்டும். தான் சொல்ல வந்ததை விளங்கக்கூடியதாகவே சொல்ல வேண்டும். இதற்கு நான் இயல்பாகப் பழக்கப்பட்டுள்ளேன். கவிதை, புனைகதை அதற்குரிய பண்பிலே அமையும். அவற்றில் நேரடித்தன்மை இல்லாமல் இருக்கலாம். இந்த இடத்தில் பேராசிரியர் நுஃமானுடைய கூற்று ஞாபகத்துக்கு வருகிறது. மொழி புரிதலுக்குரியது; அது புரியாவிட்டால் தொடர்பாடல் சாத்தியமில்லை.

ஒரு பிரதியில் மொழி, வாசகர், படைப்பாளி என்ற மூன்றும் சம்பந்தப்படுகின்றது. சங்க இலக்கியத்தை பற்றிக் குறிப்பிடும் அவர், அது இரண்டாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட மொழி. அந்த மொழியில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அது புரியாது. அந்த இலக்கிய மொழியில் பயிற்சியும் பரிச்சயமும் உள்ள வாசகர்களுக்குதான் அதன் நுண்பொருள் புரியும் எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் சிலர் புரியாமல் எழுதுவதையே உத்தியாகக் கொண்டுள்ளனர். பரிச்சயம் உள்ள வாசகருக்கு அது புரியவில்லை என்றால் அது படைப்பாளியில் உள்ள பிரச்சினைதான். சில இலக்கியக் கொள்கைகளை விபரீதமாக புரிந்து கொண்டதன் விளைவு. இப்படி ஒரு கவிஞன் எழுத அதனைப் பின்பற்றி பல கவிஞர்கள் எழுதுகிறார்கள்.

இது சிதம்பர சக்கரம்தான். இப்படி ஒரு குழுவே உருவாகி இருக்கின்றது. இதனைத்தான் நுஃமான் தமிழ் அன்றி தமிழ் போல் ஒரு பாஷையை எழுதுபவர்கள் என்று சொல்கின்றார். இதனை நான் ஆமோதிக்கின்றேன். இதுதான் என்னுடைய தாரக மந்திரமும். புதுக்கவிதை என்ன எல்லாக் கவிதைகளையும் படிக்கின்ற பழக்கம் உள்ளது. ஆனால் தட்டிப் பார்த்துவிட்டு உள்ளே செல்ல வேண்டுமென்றால்தான் செல்வது வழக்கம். எல்லோருடைய கவிதைகளும் எல்லா நேரங்களிலும் நன்றாக வருவதில்லை. நல்ல கவிஞனுடைய கவிதைகளும் சில வேளைகளில் தரமற்றதாக இருக்கும். அதனால் ஒரு கவிதையை வைத்துக்கொண்டு அந்த படைப்பாளியை தாழ்த்தி விடவும் முடியாது. எனக்குப் பல கவிஞர்களைப் பிடிக்கும். பிச்சமூர்த்தி முதல் மனுஷ்யபுத்திரன் வரை, அப்துல் ரகுமானைப் பிடிக்கும். சோலைக்கிளியைப் பிடிக்கும். இன்று எழுதுகின்ற பல புதுக்கவிஞர்களையும் பிடிக்கும். ஆனால் இருண்மை எனக்குப் பிடிப்பதில்லை. அதே நேரம் நவீன கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்குமான வரம்புகளும் வேறு உண்டு என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

பேராசிரியர் பணிக்கு பின் உங்கள் அடுத்த திட்டம் என்ன?

இருக்கின்ற திட்டங்களையே முடிக்க முடியவில்லை. எழுதிய கட்டுரைகள் நூலுருவாக்கம் பெறவில்லை. செப்பனிடப்படாத கவிதைகள் செப்பனிடப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்படாத நாவல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஓய்வு இல்லாத வேலைக்குள் வாசிக்க முடியாதிருந்த சோகத்தை இனித் தீரக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர் பிரச்சினையை பார்க்கின்ற ஒரு முக்கியமான நூல் ரஜினி திராணகம எழுதிய ‘முறிந்த பனை’ என்பது. அது போன்று முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஒட்டி ‘உதிர்ந்த நட்சத்திரம்’ என்ற நூலொன்றினை எழுத வேண்டும் என்கின்ற ஆசை இருக்கின்றது. அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் அதனை மன நிறைவான பணியாகவே கருதுவேன். தமிழ் மொழி நமக்கும் தாய் மொழிதான். நமது முஸ்லிம் சகோதரர்கள் நிறையத் தமிழில் பணி செய்திருக்கின்றார்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்தில் முன்னிலை படைப்பாளிகளாக இருந்திருக்கிறார்கள். ஈழத்தில் நான் அப்பணியை மதிப்பீடு செய்திருக்கின்றேன்; வெளியிலே கொண்டு வந்திருக்கின்றேன். அதேபோன்று ஈழத்துக்கு வெளியே தமிழகத்திலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நம்மவர்கள் தமிழில் இலக்கியங்களை எழுதி அதிகம் சாதிக்கிறார்கள். அவை வெளிக்கொண்டுவரப்படவும் அதிகம் பேசப்படவும் வேண்டும் என்று நான் ஆதங்கப்படுகிறேன். அது தொடர்பாக எழுத வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் மிக்க மகிழ்ச்சியடைவேன். இப்படி பல எண்ணங்கள், கற்பனைகள் வருகின்றனதான் திட்டமிடுவது நாம் இல்லையே. நமக்கு மேலே ஒருவன் திட்டமிடுகிறான் அல்லவா.

முஸ்தபா அறக்கட்டளை தங்கள் பல்கலைக் கழகத்துடன் இணைந்து இலக்கிய முன்னெடுப்புகள் எடுக்கும் காரியத்துக்கு தாங்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளீர்கள் உங்களுடன் இந்தக் காரியத்தில் துணை நின்ற பெருமக்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடவும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து தமிழ்த் துறையில் பல பணிகளைச் செய்ய எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் ரஹ்மத் அறக்கட்டளை மூலம் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் ஒரு பாக்கியம் என்றுதான் சொல்லுவேன். கடந்த மூன்று நான்கு வருடங்களாக அறங்காவலர் முஸ்தபா அவர்களோடு எனக்குத் தொலைபேசி தொடர்புகள் இருந்தன. அச்சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆய்விருக்கை தொடர்பாக என்னுடன் அவர் பேசி இருக்கின்றார். அது தொலைபேசி உரையாடல் என்ற அளவில்தான் இருந்து வந்தது.

கடந்த வருட இறுதியில் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு சிங்கப்பூர் முஸ்தபா ஹாஜியார் வந்திருக்கின்றார். அவரை ‘பை கபே’ எனும் இடத்தில் சந்திப்பதற்காக அழைத்திருந்தார். அங்கு நாம் சந்தித்தபோது ரஹ்மத் பதிப்பகம் மூலம் முஸ்தபா அவர்கள் வெளியிட்டிருக்கின்ற ‘ஸிஹாஹ் ஸித்தா’ என்ற அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்ற ஆறு கிரந்தங்களையும் இலங்கையில் வெளியீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். தலை நகரிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்திலும் அதனை நிறைவேற்ற வேண்டுமென்றனர். என்னைப் பல ஆச்சரியங்கள் சூழ்ந்து கொண்டன. ஒன்று இப்போதுதான் இந்நூல்கள் தமிழில் வெளிவருகின்றன என்பது. மற்றது அவற்றை இலங்கையில் வெளியிட வேண்டுமென்ற முஸ்தபா ஹாஜியின் விருப்பம். இதன்படி கொழும்பில் ஷாஹிரா கல்லூரியிலும் கிழக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் வெளியிடுவது என்றும் அதற்குரிய பணிகளை நானும் பி.எச்.அப்துல் ஹமீது அவர்களும் மேற்கொள்வது எனவும் பொருந்திக் கொண்டோம்.

அடுத்தது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆய்விருக்கை’ அமைப்பது தொடர்பாக பேசிக்கொண்டோம். அதனைப் பல்கலைக்கழகத்தில் பேசி செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் நான் எடுத்துக்கொண்டேன். இந்த ஆண்டு மார்ச் 4ஆம் திகதி இந்த ஆறு கிரந்தங்களின் வெளியீட்டு விழாவிற்காக முஸ்தபா ஹாஜியும் ரஹ்மத் அறக்கட்டளையின் பணிப்பாளர் யாசின் அவர்களும் பி.எச்.அப்துல் ஹமீது அவர்களும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தனர். ஏலவே நான் பல்கலைக்கழக நிர்வாகத்தோடு இது தொடர்பான முற்படுகளத்தினை ஏற்படுத்தியிருந்தேன். அதன் அடிப்படையில், உபவேந்தரோடு கலந்துரையாடலில் ஈடுபட்டு பூர்வாங்க முடிவுகளுக்கு வந்தோம். பின்னர் நாங்கள் பேசிக்கொண்டபடி கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆய்விருக்கை மூலம் தமிழ் இலக்கியம், வரலாறு, சமூக, அரசியல், பொருளாதார ஆய்வுகளுக்கு பங்களிப்புச் செய்த பேராசிரியர் சிவத்தம்பியின் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குதல், கவிதை, சொற்பொழிவு மற்றும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்தமைக்கான கவிக்கோ அப்துல் ரஹ்மான் விருது வழங்குதல், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு புலமைப் பரிசினை வழங்குதல், பேராசிரியர் உவைஸ் நினைவுக் கருத்தரங்குகளை நடாத்துதல், இஸ்லாமிய தமிழ் மொழி இலக்கியம் தொடர்பாக சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்தல் முதலானவற்றை வருடம் தோறும் நிறைவேற்றுவதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன் பேரில் பி.எச்.அப்துல் ஹமீத், சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸ், ரஹ்மத் அறக்கட்டளை நிர்வாகப் பணிப்பாளர் யாசின், உதவியாளர் அனஸ் ஆகியோரின் பணிகளும் பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கன. இதற்காக பல்கலைக்கழகத்தோடு ஒப்பந்தமும் கடந்த நவம்பர் 12ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கென ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனம் 50 000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. காலகெதியில் பல்கலைக்கழகம் இதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கும். நாடுகள் கடந்து தமிழ்ப் பணி புரியும் பல்தேசியப் புரவலர் அறங்காவலர் எம்.ஏ.முஸ்தபா அவர்களின் அர்ப்பணமிக்க சேவையை தமிழ் கூறும் நல்லுலகம் தமிழ் உள்ளளவும் பேசும்.