சூபிஞானியர்களின் தமிழ் படைப்புக்கள்

பீர் முஹம்மது அப்பாவை முன்வைத்து ஒரு மாற்று உரையாடல்

முனைவர் எச் முஹம்மது சலீம் (மூத்த இயக்குநர், சமய நல்லிணக்கப் பணி, ஜாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்)

சூபிகள் எனப்படும் இஸ்லாமிய சமயம் சார்ந்த மெய்ஞ்ஞானியர்களை இரு குழுவினர்களாகக் காணமுடிகிறது. இறைநேசச் செல்வர்கள் எனப்படும் பெருமக்கள் ஒரு குழுவினராகவும் இறைஞானம் பேசும் தமது கவிதைகளால் அறியப்படும் சூபி ஞானியர்களை மற்றொரு குழுவினராகவும் வகைப்படுத்திக் காணமுடிகிறது.

காலத்தால் முந்திய தமிழ் சூபிகள்  என்று தமிழகத்தின் காயல் பட்டினத்தில் மறைவிடம் கொண்டுள்ள செய்யிது அஹ்மது வலியுல்லா, திருச்சி நத்தார் வலியுல்லா, முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது வலியுல்லா, நாகூர் செய்யிது சாகுல் ஹமீது நாயகம் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

சூபி ஞானத் தமிழ்க் கவிஞர்களாக தக்கலை ஷெய்கு பீர் முஹம்மது அப்பா வலியுல்லா, கோட்டாறு ஷெய்கு முஹியித்தீன் மலுக்கு முதலியார் என்னும் ஞானியார் சாஹிபு  வலியுல்லா, குணங்குடி மஸ்தான் சாஹிபு, ஆத்தங்கரை செய்யிது அலி பாத்திமா, தென்காசி ரசூல் பீவி, கீழக்கரை ஆசியா உம்மாள், இளையான்குடி கச்சிப் பிள்ளை அம்மா, கீழக்கரை ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா, கோட்டைப் பட்டினம் ராவுத்தர் சாஹிபு வலியுல்லா, காயல்பட்டினம் அப்துல் காதிரு தைக்கா சாஹிபு வலியுல்லா, கடைய நல்லூர் ஷெய்கு உதுமான் வலியுல்லா, சூரங்குடி தர்வேஷ் மீரான், மேலப்பாளையம் பஷீர் ஒலி, பூவாறு நூஹ் வலியுல்லா, காயல் பட்டினம் உமர் வலியுல்லா, காலங்குடியிருப்பு மச்சரேகைச் சித்தர், இளையான்குடி முஹம்மது மஸ்தான், அட்டியக்கமங்கலம் ஷெய்கு முஹம்மது பாவா, மேலப்பாளையம் பூ அலி ஷாஹ் மதார், தொண்டி ஷெய்கு மஸ்தான், முத்துப்பேட்டை பீர் முஹம்மது மஸ்தான் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த சூபித் தமிழ்க் கவிஞர்களின் தனித்த இயல்புகளாகச் சிலவற்றைக் பார்க்கலாம்.

1. சமயப் பின்புலம்:

இசுலாமய நெறியைப் பின்பற்றும் உண்மை முஸ்லிமாக வாழக்கிடைத்த வாய்ப்பு, தான் பெற்ற பெரும் பேறு என்று சூபி ஞானி பீர் முஹம்மது அப்பா கருதுகின்றார்கள். முதல் மனிதரான ஆதமின் வழித்தோன்றல்களாய் பிறப்பெடுத்த மனிதர்கள் செல்நெறிகள் பற்பலவாயிருக்க அவற்றுள் செம்மை நெறியாகிய அண்ணல் முகம்மது நபி காட்டிய இசுலாமிய மார்க்க நெறியில் தம்மை தோன்றச் செய்த பரம்பொருளை தலை கீழாய் நின்ற நிலையில் பத்து நூறாயிரம் வருடங்கள் போற்றிப் புகழ்ந்தாலும் அப்பேருதவிக்கு இணையாகாது என்று கூறுகிறார்.

ஆதம் பெறும் மக்கள் எல்லாரிலும் நம்மையன்பு கொண்டே
வேத நபியிரசூலுக் கும்மத்தாக்கினானந்த வெகுநன்றிக்குப்
பாதங்கள் மேலும் சிரங்கீழுமாய்ப் பத்து நூறாயிரமாண்
டோதித் தவஞ்செய்தாலும் போதாதா மவனன்று கந்ததுக்கே  (ஞானப் புகழ்ச்சி: 29)

2.இறைக் கொள்கை:

இசுலாமிய மார்க்க நெறி நிற்கும் பீர் முஹம்மது அப்பா ஓரிறைக் கொள்கையாளர், படைத்துப் புரக்கின்ற இறைவன் ஒன்று ‘அல்லா ஒருவனென்றும்’ (ஞானப் புகழ்ச்சி: 33), ‘ஆதி ஒருவனை’ (ஞானப் புகழ்ச்சி: 24), ‘ஒப்புவமையற்ற ஒரு பெரியோன்’ (ஞானப் புகழ்ச்சி: 74), ‘ஒளிசேர் இறைவன் ஒருவன்’ (ஞானப் புகழ்ச்சி: 78), ‘இறை ஓரிறை’ (ஞானப் புகழ்ச்சி: 322), ஏகனே (ஞானப் புகழ்ச்சி: 509) என்பது அவர்கள் ஓரிறை குறித்துப் பேசும் சில வரிகள்.

சூஃபி ஞானிகள் இறைவனுக்கு ‘அகதியத்’, ‘வகதத்’ ‘வாகிதியத்’ என்று மூன்று நிலைகளைக் கூறுவர். ‘அகதியத்’ என்பது பரம்பொருள் தன்னை மறந்த நிலை. குணங்குறியற்று, கால, இட, எல்லை கடந்து தன்னில் தானாய் அகண்ட பரிபூரணமாய் இருந்த நிலை. வகதத் என்பது பரம்பொருள் தன்னுள் அடங்கியிருந்த குணங்களை வகுக்காமல், தொகுக்காமல் உணர்ந்த நிலை. வாகிதியத் என்பது இறைவன் தனது ‘தாத்’ எனப்படும் சத்தையும் ‘சிபத்’ எனப்படும் பண்புகளாகிய சித்தையும், அனைத்துப் படைப்புக்களையும் வகுத்து விவரமாக உணர்ந்த நிலை. இச்சச்சிதானந்த நிலையில் இறை சித்தப்படி படைப்புகள் தோன்றுகின்றன. இந்நிலையில் இறை பண்புகள் விளக்கமுறுகின்றன. இவற்றின் அடிப்படையில் இறைப் பெயர்களும் அமைகின்றன.

3. நபிமார்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் சமயக்குரவர்கள் பற்றிய புரிதல்:

நபி முஹம்மதுவைக் குறித்து பீர் முஹம்மது அப்பா தனது எல்லா நூல்களிலும் குறிப்பிடுகின்றார்கள்.

பரமா நபியைப் படைத்தில்லையாகிற்
படைப் பொன்றுமில்லையென்
றுரமாய் மொழிந்த வென்னுத்தமனே (ஞானப் புகழ்ச்சி: 183)

உடலொளி சிறந்த ஹபீபை யலதொன்றும்
அமைசெய்திலேனென்றுள் மகிழ்பவனே (ஞானப் புகழ்ச்சி: 264)

கொடையாலுயர்ந்திரசூல் நயினாரைக் குதரத்தினால்
படையாதபோ தொன்றும் படையேன் (ஞானப் புகழ்ச்சி: 403)


வேததுவக்கம் விரிவாயனைத்தும் விளங்கு முதல்
ஆதத்துவக்கம் அஹ்மரோடு(ஞானப் புகழ்ச்சி: 407)

என்னும் பாடல் வரிகளில் நபி முகம்மதுவின் படைப்பின் இரகசியங்களையும் முழுமுதற் தொன்மையையும் கோடிட்டுக் காட்டுகிறார். இறைவனது தீர்க்கதரிசிகள் என்று திருமறை குர்ஆன் இருபத்து ஐவரைக் குறிப்பிடுகிறது. இவர்கள் மனுக்குலத்தை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள், இவர்களுள் பலரைக் குறித்து தனது நூல்களில் பீர் முஹம்மது அப்பா குறிப்பிடுகின்றார்கள்.

நபிகள் பலர் இறைஞ்சவரும் நாயகனும் நீயே (ஞானப் புகழ்ச்சி: 54) என்னும் பாடல் குறிப்பு தீர்க்கதரிசிகள் எண்ணிறந்தோர் எனச் சுட்டி நிற்கக் காண்கிறோம். முதல் மனிதரென்றும் முதல் தீர்க்கதரிசியென்றும் கருதப்படும் நபி ஆதம் ஞானப் புகழ்ச்சி நூலில் மட்டும் பதினான்கு இடங்களில் குறிப்பிடப்படுகிறார்.

அள்ளி மண்ணெடுத்துச் சென்று
ஆதிமுன் அமரர் வைக்க
ஒள்ளிய ஆதமென்றே
உயிர் விடுத் தொழும்புங்கோவே (ஞானப் புகழ்ச்சி: 201)

என ஆதமின் துவக்கம் பேசப்படுகிறது. ஆதமுதலாமுயிர் அமைத்த பெரியோனே (ஞானப் புகழ்ச்சி: 45) எனக் கூறி ஆதமே மானுட உயிர்களுக்கெல்லாம் முதல் என நிறுவுகின்றார். அரம்பையர் பதியாகிய சுவனத்தில் வாழ்ந்த ஆதமும் அவர்தம் துணை ஹவ்வாவும் ஆண்டவன் கட்டளையை மீறியதால் வியனுலகினின்றும் வெளியேற்றப்பட்டு மண்ணகத்தில் ஆயிராமாண்டுகள் வாழ்ந்தனர் என்ற செய்தியை அரம்பையர் பதிவிட்டாதம் ஹெளவாவும் ஆயிரக்கால் மண்ணில் பெருஞ்சிறை படாமல் எங்கள் பெரியவா பிழைபொறு (ஞானப் புகழ்ச்சி: 215) என்பதாகப் பதிவு செய்கிறார்.

பெண்ணினத்தின் தலைமகள் ஹவ்வா என்னும் மனுக்குலத்தின் அவ்வை குறித்து சபியாதமுல்லா தம்மோடரிய ஹவ்வா (ஞானப் புகழ்ச்சி: 49) அரம்பையர் பதிவிட்டாதம் ஹவ்வாவும் ஆயிரக்கால் மண்ணில் (ஞானப் புகழ்ச்சி: 215) ஆதம் சபியுல்லாவுக்கு நீதானம் ஹவ்வாவுக்கு (ஞானப் புகழ்ச்சி: 571) ஆதமொடு ஹவ்வாவை ஆவென்றுருவாயமைத்து (ஞானப் புகழ்ச்சி: 602) எனப் பல்வேறு பாவரிகளில் பீர் முஹம்மது அப்பா குறிப்பிடுகின்றமை காண்கிறோம்.

தீர்க்க தரிசி தாவூத குறித்து கீத மொழி தாவூது நபிக்கிரும்பை கீலாக்கும் விதம் நீ கொடுத்த பேறு (ஞானப் புகழ்ச்சி: 103) நாதர் சுலையுமான் நபிக்களித்த நலவும் பெருவாழ்வும் ராஜதமும் (ஞானப் புகழ்ச்சி: 103) ஏதமணுகா யூசுபு நபிக்களித்த எல்லையினிலுற்ற கெதியும் வாழ்வும் (ஞானப் புகழ்ச்சி: 216), சுழிதரும் புனலில் நூஹூ (ஞானப் புகழ்ச்சி: 216) என்ற வரிகளில் நபி தாவூது, சுலைமான், யூசுப், நூஹு ஆகியோர்தம் வரலாற்றுச் செய்திகளைச் சுட்டிக் காட்டியுள்ள பாங்கு மிளிரக் காண்கிறோம்.

நபி மூஸா பற்றிய குறிப்பு, மிடுக்குற்ற பிறுவூன் செய்த விதனத்தால் மூசா தாமும் (ஞானப் புகழ்ச்சி: 217) என்ற வரிகளிலும், மூசா நபிக்கரிய மொழியும் தௌராத்தனில் (ஞானப் புகழ்ச்சி: 653) என்னும் பாடல் வரிகளிலும் தரப்படுகின்றன. நபி இபுறாஹீம் குறித்து சீறுவாய் நம்ரூது செய்யும் தீவினை பொறாமல் அன்று இபுறாஹீம் நான் ஏழை நீ சற்றிரங்கி டென்றிசைத்த (ஞானப் புகழ்ச்சி: 218)” என்னும் நபி யூனுஸ் பற்றிய குறிப்பு பெருந்தினரைக் கயல் யூனூசைப் பிடித்து விழுங்கும் நேரம் வருந்தியென் பொருளே மீனின் வயிற்றினுள் காவல் (ஞானப் புகழ்ச்சி: 219) என்னும் பாவடிகளிலும் பதிக்கப்பட்டுள்ளமை காண்கிறோம்.

தீர்க்கதரிசிகளாகிய நபிமார்கள் பற்றிய வரலாற்றறிவும் அணுக்கமும் பீர் முஹம்மது அப்பா கெண்டிருப்பது உணர முடிவதோடு நபித்தோழர்கள் அபுபக்கர், உமர், உதுமான், அலி ஆகிய நால்வர் குறித்து பேச்சைச் சிறந்துள்ளான் திருத்தூதனார் பிரியமுறுந்தோழர் நால்பேரையும் (ஞானப் புகழ்ச்சி: 19) பேசக் காண்கிறோம்.

நபி முகம்மதுவின் திருமகளார் பாத்திமாவை மதலை பீ பாத்திமா (ஞானப் புகழ்ச்சி: 221) எனக் குறிக்கின்றார். நபி முகம்மதுவின் மருமகனாரும் தோழருமாகிய அலியைக் குறித்து ‘அலி தனக் குதவ வேண்டி (ஞானப் புகழ்ச்சி: 221) எனக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். வரலாற்றில் இடம் பெற்ற முகம்மது நபியின் பேரப் பிள்ளைகள் ஹசன், ஹுசைன் ஆகியோர் குறித்தும் ஹசனோடு ஹுசைனை அன்பாலுவந்து (ஞானப் புகழ்ச்சி: 19) என்று பாடியுள்ளார் பீர் முஹம்மது அப்பா. நபிநாயகத்தின் வளர்ப்புத்தாய் ஹலீமா பற்றி ஹலீமா முலைதனிற் பால முதுண்ட அஹ்மதென்னும் புலிமான் தனக்குப் பிணையாக நின்றவர் (ஞானப் புகழ்ச்சி: 178) எனக் குறிப்பிடுகிறார்.

இசுலாமிய ஆன்மீகப் பாட்டையின் ஞானக் குரிசிலாய்க் கருதப்படுபவர் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்னும் சூஃபி ஞானப் பெரியார். காதிரியா தரீகா என்னும் சூஃபிய நெறி நிலையை உருவாக்கியவர். இப்பெரியார் குறித்து ஞானப்புகழ்ச்சியில் ஐந்திடங்களில் பீர் முஹம்மது அப்பா குறிப்பிடுகின்றார்.

நாதன் முகியித்தீன் திருவுள்ளமும்  (ஞானப் புகழ்ச்சி: 103)
மின்னத்துறு நயினாரொடு முகியித்தீனுக்கும் (ஞானப் புகழ்ச்சி: 426)
அருள் பெருகி நின்ற கௌதுல் அஃலம் (ஞானப் புகழ்ச்சி: 578)
மின்னிடை மலுகரொடு வெய்யவனும் முகியித்தீனும் (ஞானப் புகழ்ச்சி: 612)
விண்ணவர்க்கும் ஆதம் முகியித்தீனுக்கும் (ஞானப் புகழ்ச்சி: 662)

என்னும் பாவரிகளில் முஹியித்தீன் ஆண்டகை குறித்துப் பேசுகின்றார்.

இறை நேசச் செல்வர்களாகிய ஒலிமார்கள் குறித்த அப்பாவின் உயரிய மதிப்பீடுகளும் அவர்தம் பாடல்களில் பார்க்கக் காண்கிறோம்.

நல்ல ஒலிமார்கள் பெறும் கீர்த்தியும் (ஞானப் புகழ்ச்சி: 103)
அன் அம்த என்றொலி மார்க் காகவரும் நிஃமத்தில் (ஞானப் புகழ்ச்சி: 673)
அலைகிமெனவே அவுலியாக்களொடும் எங்களை நீ (ஞானப் புகழ்ச்சி: 674)
நலமாம் அவுலியாக்களுடன் அடியேனையும் சேர்த்து (ஞானப் புகழ்ச்சி: 676)

என்றும் ஞானப் புகழ்ச்சி பாடல்கள் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

இவை தவிர பீர் முஹம்மது அப்பா சமயப் பேரறிஞர்களான இமாம்கள், மௌலானா ரூமி, சதக்கத்துல்லா அப்பா முதலியோரது அகமிய ஞானக் கருத்துக்களிலும் தெளிவு பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நினைவுடன் பொருளும் நிறைந்திடும் வகையும்
நீதியும் பிஸ்மிலோடும்
அனந்தமுந் தெரிய அஹ்மதருரைக்க
ஆதிதன் கிருபையாலே
கன ஜெயமாரும் மவுலானா ரூமி
கழறினார் அஹதியத்திலே
மனது மகிழ அறிவையும் அறிந்து
வழுத்தினார் சதக்கத்துல்லாவே

வாரையும் பலமுறை வகையையும் அறிந்து
வரைந்திடும் முறையதின் வளமையும் அறிந்தோர்
தேறிய கலை நெறி முறையொருவனை
ஏத்தியே பலவகை தெளிந்தோர்
கூறிய விசளம் குதாயிர சூலும்
கோர்வை இமாமொடு கொலுவையும் அறிந்தோர்
பாரினில் உரைப்படி ஹுக்கும் கொடுத்தார்
பகர் சதக் கத்துல்லா ஒலிகுருவே (திரு நெறி நீதம்: 16)

என்னும் பாடல் வரிகள் இதனை நிறுவும்.

4. பிறசமயப் புரிதல்:

பீர் முஹம்மது அப்பாவின் காலமெனக் கருதப் பெறும் 16ஆம் நூற்றாண்டில் பிற்பகுதி தமிழிலக்கிய வானில் பத்திமை இலக்கியங்கள் பல்கிப் பெருகிய பொற்காலம். குமரகுருபரர், சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர், அந்தகக்கவி வீரராகவர், படிக்காசுப் புலவர், கோரமுனி, சுப்ரதீபக் கவி, உமறுப்புலவர் போன்ற பெருமக்களின் ஒப்பற்ற நூல்கள் உருவான காலச் சூழல். பீர் முஹம்மது அப்பா இசுலாமிய மார்க்கம் பற்றிய ஆழிய ஞானம் பெற்றுத் திகழ்ந்தவராயினும் வேதங்கள், உபநிடனங்கள், சைவ சித்தாந்தச் செம்மலர்களின் படைப்புக்கள், காவியங்கள், புராண இலக்கியங்கள் இலக்கணங்கள் போன்றவற்றிலும் நிறை ஞானம் மிக்க நிபுணராய்த் திகழ்வது அவர்தம் நூல்களில் தெரிகின்றது. சைவம் மற்றும் சனாதனச் சமையிகள் புழங்கும் தெய்வக் குறியீட்டுப் பெயர்களில் பல அவர்தம் நூல்களில் மெஞ்ஞானச் சூக்குமக் குறியீட்டுச் சொற்களாய் குறிக்கப் படக் காண்கிறோம்.

சிவன் (ஞானப் புகழ்ச்சி: 4,5, 15, 54, 314, 358, 382, 397, 404, 440, 564, 587, 611, 662), சக்தி (ஞானப் புகழ்ச்சி: 4), பரமன் (ஞானப் புகழ்ச்சி: 4, 79, 173, 307), காலன் (ஞானப் புகழ்ச்சி: 6), பிரணவச் சொல்லாகிய ஓம் (ஞானப் புகழ்ச்சி: 14, 676), திருமகளைச் சுட்டும் சீதேவி (ஞானப் புகழ்ச்சி: 46), அருணன் (ஞானப் புகழ்ச்சி: 54, 64, 101, 143, 172, 240), அரி (ஞானப் புகழ்ச்சி: 109, 382), மாயன் (ஞானப் புகழ்ச்சி: 113, 417), மதன் (ஞானப் புகழ்ச்சி: 152), சூமன் (ஞானப் புகழ்ச்சி: 47, 205, 215), வசுமன் (ஞானப் புகழ்ச்சி: 267, 411), மால் (ஞானப் புகழ்ச்சி: 272, 374), ஆணிலி பெண்ணுமேயல்லான் (அர்த்தநாரி) (ஞானப் புகழ்ச்சி: 286, 347), இடகலை (ஞானப் புகழ்ச்சி: 299), அரக்கர் (ஞானப் புகழ்ச்சி: 285), தேசிகன் (ஞானப் புகழ்ச்சி: 358), தேவர் (ஞானப் புகழ்ச்சி: 357), கைலாசம் (ஞானப் புகழ்ச்சி: 358), பார்த்திபன் (ஞானப் புகழ்ச்சி: 367, 392, 523) நான்முகம் (ஞானப் புகழ்ச்சி: 369), ஹரி (ஞானப் புகழ்ச்சி: 382), நம (ஞானப் புகழ்ச்சி: 423), துசுமன் (ஞானப் புகழ்ச்சி: 423), நந்தி (ஞானப் புகழ்ச்சி: 385, 430, 441) திருமந்திரம் (ஞானப் புகழ்ச்சி: 441), முருகன் (ஞானப் புகழ்ச்சி: 445), அண்ணாமலயன் (ஞானப் புகழ்ச்சி: 513), பசு (ஞானப் புகழ்ச்சி: 523, 598, 682), பாசம் (ஞானப் புகழ்ச்சி: 523, 598, 682), பதி (ஞானப் புகழ்ச்சி: 682), நாரணன் (ஞானப் புகழ்ச்சி: 550), திருமால் (ஞானப் புகழ்ச்சி: 568), வேல் பிடித்த குருபரன் (ஞானப் புகழ்ச்சி: 569, 381), திருப்பதி (ஞானப் புகழ்ச்சி: 580), ஆனந்த ரூபம் (ஞானப் புகழ்ச்சி: 604), சங்கரன் (ஞானப் புகழ்ச்சி: 610), ஐங்கரன் (ஞானப் புகழ்ச்சி: 610), முண்டகம் (ஞானப் புகழ்ச்சி: 623), சதுர்ஞானம் (ஞானப் புகழ்ச்சி: 632), வசுமன் (ஞானப் புகழ்ச்சி: 423) நமக்காரம் (ஞானப் புகழ்ச்சி: 395, 396), சிவகுரு (ஞானப் புகழ்ச்சி: 397), அருப ரூபம் (ஞானப் புகழ்ச்சி: 400) என்பன போன்ற சொற்கள் அப்பாவின் ஞானப் புகழ்ச்சி நூலில் மட்டும் பல் வேறிடங்களில் ஆளப்படுவது காணலாம்.

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை
பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை  (திருவேகம்ப மாலை: 7)

என்னும் பட்டினத்தடிகளின் பாடலை ஒத்த

மெய்யாகவேதும் கொடுவந்ததில்லை
வினை துலைந்தால் பொய்யாமலேதும்
கொடுபொவதில்லை (ஞானப் புகழ்ச்சி: 8)

என்னும் அப்பாவின் பாடலும்

சுந்தரர் தேவாரத்தின் ‘நாயேனுனை நாளும் நினைக்கிறேன் மனத்துன்னைஎன்னும் வரிகளையும், மணிவாசகரின் நாயிற் கடையாய் கிடந்த அடியற்கு (திருவாசகம்: 60) என்ற பாடல் வரிகளையும் நினைவு கூரும் வகையில் அப்பாவின்

நாயனேன் நானுனை நல்கி இரக்குகிறேன் (ஞானப் புகழ்ச்சி: 251)

நாய்போய் ஒதுங்கிநின் வாயல் வந்தேன்(ஞானப் புகழ்ச்சி: 134)  என்னும் பாடல்களும்,

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து தாயினுமன்பனே நீதானிரங்கு (ஞானப் புகழ்ச்சி: 251) என்னும் பீர் முஹம்மது அப்பாவின் பாடல் வரிகளும் கானகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல் வரைவானா காயமானாய் நீயே என்னும் அப்பர் தேவாரப் பாடலொடு (அப்பர் தேவாரம் – ஆறாம் திருமுறை: 252) ஒப்பிடுவது போல் பீர் முஹம்மது அப்பாவின் கானுமெழு காடுமுயர் கானகமும் நீயே காசினியும் வானுலகும் கடன்மலையு நீயே (ஞானப் புகழ்ச்சி: 70) என்னும் பாடல் வரிகளும் அமைந்து சிறக்கக் காண்கிறோம்.

அகர முதல எனத்துவங்கும் வள்ளுவத்தை ஒத்த அகரமுதல் நின்ற ஹறுபதனை விண்ட (ஞானப் புகழ்ச்சி: 257) என்னும் பாடலும், புகழேந்தியாரின் கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப் போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ என்னும் நளவெண்பா வரிகளை (நள வெண்பா: 209) நினைவூட்டும்.

‘காரிருளில் கானகத்தில் காரிகையைக் கைப்பிடித்தங்காரும் அறியாமல் அரசாள்பவனே’ (ஞானப் புகழ்ச்சி: 594) என்னும் வரிகளும் பீர் முஹம்மது அப்பா தண்டமிழிலக்கிய கர்த்தாக்களும் சமயப் பெரியார்களுமாய பட்டினத்தார், சுந்தரர், அப்பர், மற்றும் ஆழ்வார்கள், நாயன்மாரின் படைப்புகள், நைடதம் போன்ற காப்பியங்களைக் கற்றுணர்ந்த இலக்கண இலக்கியத் தெளிவு பெற்ற சமரசச் சன்மார்க்கச் சைதன்யராய்த் திகழ்கின்ற பான்மையைக் கண்டுணர முடிகிறது. (இன்னும் வரும்)

*திருச்சி ஜமால்முகம்மது கல்லூரி முதுகலை & தமிழாய்வுத்துறை மற்றும் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணைந்து தமிழிலக்கியங்களில் சமயமும் சமுதாயமும் என்னும் பொருண்மையில் டிசம்பர் 11ஆம் தேதி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் நிகழ்த்திய உரையின் தொடர்.