
ஜஹாக் பீவி ..நூர்ஜஹான் சுலைமான்
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிருந்தாலும் சிங்கப்பூரில் ஆண்களே படைப்பிலக்கியத் துறையில் அதிகம் பங்காற்றினர். பத்திரிகைகளுக்கு எழுதிய பெண்கள் மிகச் சிறுபான்மையினரே. இந்த நிலையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நூர்ஜஹான் சுலைமானின் இலக்கியப் பயணம் 1966ஆம் ஆண்டு வானொலியில் ஒலிபரப்பான அவரது முதல் கட்டுரையுடன் தொடங்கியது. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பல தளங்களில் இயங்கிவரும் நூர்ஜஹான் சுலைமான், ‘ஜஹாக் பீவி’ என்னும் புனைபெயரிலும் எழுதிவருகிறார். ‘உயிர் நிலவு’ என்ற கவிதைத் தொகுப்பினை 2011இல் வெளியிட்டு சிங்கப்பூரில் கவிதை நூல் வெளியிட்ட முதல் முஸ்லீம் பெண் படைப்பாளி என்ற பெருமை பெருகிறார்.
எல்லோருக்கும் புரியும் எளிய மொழியில் தமது வாழ்வின் அனுபவத்தையே கவிதையாகவும் கதைகளாகவும் வடித்துள்ளார். நூர்ஜஹான் தனது இளமைக் காலக் கனவுகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தொடர்ந்தாலும் தமிழ் மீது கொண்ட காதல் குறையவில்லை. அதன் தாக்கத்தை இவரின் படைப்புகளில் காணலாம். இவரின் ‘உயிர் நிலவு’ அதற்கு ஒர் உதாரணம். மற்றொரு வெளியீடான ‘பொழுது புலருமா?’ உடல் சார்பற்ற, மனத்தளவில் ஒன்றிய, காலவெள்ளத்தையும் கடந்து நிற்கும் ஒரு காதல் கதையை கருப்பொருளாக்கிச் சிறப்பாகப் படைத்துள்ளார்.
இவரது ‘வேர்கள்’ குறுநாவல் இருபத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் முஸ்லீம்களின் புலம்பெயர்தல் தொடங்கிவிட்டது. தொழில்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் நசிவுற்ற மக்கள் பிழைப்புத் தேடி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மலாயாவுக்கு வர ஆரம்பித்தார்கள். அவர்களில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கடையநல்லூர், தென்காசி போன்ற ஊர்களிலிருந்து குடியேறியவர்கள் இன்று சிங்கைத் தமிழ் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அப்படி தென்காசியிலிருந்து புலம்பெயர்ந்த ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் கதையைப் பேசுகிறது இந்த குறு நாவல்.
இஸ்லாமியர் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சொற்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தக் கூடியதாக இந்நாவலின் மொழி அமைந்திருப்பது சிறப்பு. மய்யத் – சடலம், இத்தா – தனிமைப்படுத்துதல் (கணவன் இறந்தபிறகு மனைவியை நாற்பது நாட்கள் தனிமைப்படுத்துவர்), ஸபுரு – பயணம், தாத்தா – அக்கா, மௌத் – மரணம், துஆ – பிரார்த்தனை, நகரா – தொழுகைக்கு முன் அறையப்படும் பறை, சுபுஹி – அதிகாலைத் தொழுகை, மக்ரிப் – முன்னிரவுத் தொழுகை, தப்ரூக் – பிரசாதம் போன்ற இஸ்லாமிய வழக்குச் சொற்கள் இந்த நாவலில் காணக் கிடைக்கின்றன.
நூர்ஜஹான் சுலைமான் இன்றும் சுறுசுறுப்பாக இலக்கிய வெளியில் வலம் வருபவர். ‘தையல் மிஷின்’ (2014) சிறுகதைத் தொகுப்பில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையின் வாழ்க்கையையும் அவர்களின் வெவ்வேறு மனநிலைகளையும் சிறுகதைகளாகப் பிரதியெடுத்துப் படைத்துள்ளார் .
உலகம் முதலில் கண்ட தற்கொலைத் தீவிரவாதி!
சிக்கிமுக்கிக் கல்லுக்கும் சிகார்லைட்டருக்கும்
இடைக்கால நிவாரணி!
ஒல்லிக்குச்சி போல உடலிருந்து என்ன பயன்?
உப்பிய தலையால் அழிவு!
ஆக்கவும் உதவுகிறாய்… அழிக்கவும் உதவுகிறாய்
நீ பிரம்மனா? எமனா?
உரசினால் பற்றிக்கொண்டு உயிரையே விடுகிறாயே…
உனக்கும் காதல் நோயோ..!
தீக்குச்சி!!!
தன்னுடைய 12 வயதில் சுடர்விட்ட இந்த எழுத்தார்வத்தை இன்றளவும் அதே பிரகாசத்துடன் வைத்திருக்கிறார் திருவாட்டி நூர்ஜஹான் சுலைமான். தன்னுடைய இளம்வயதில் வெளியுலகைப் புத்தகங்கள் மூலமாவே கண்டார். பெண்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த நூர்ஜஹான், தன் எழுத்துப் பயணத்தைக் குடும்ப உறுப்பினர்கள் உறங்கிய பின்னர் ஒவ்வொரு நாளும் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார்.
புத்தகப் புழுவான இவர், குடும்பச்சூழலினால் ஆறாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். பின்னர் அவர் கணவரின் ஒத்துழைப்போடு எழுத்தை தொடர்ந்ததாக குறிப்பிடுகிறாஎ . கடும் முயற்சியும் தளராத மனமும் இருளுக்குள் புதைந்து கிடந்த இவரது திறமையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு எழுத்துலகு பணிமானங்களைத் தொட்ட இவர் பத்திரிகைகள், வானொலி நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து தடம் பதித்தவர்
இன்றளவும் வாசிப்பைக் கைவிடாத இவர், தன் ஒவ்வொரு நாளையும் புத்தத்துடனே தொடங்கி புத்தகத்துடனே முடிக்கிறார். கவிமாலையின் ‘கணையாழி விருது’ உட்பட பல்வேறு விருதுகளை இவர் வாங்கியுள்ளார். இவரின் படைப்புகளுக்கு பெருமை சேர்த்த விருதுகள்:
- 2016 நீண்ட கால சமூக சேவை விருது
- தென்காசி முஸ்லிம் சங்கத்தின் 2011 இலக்கிய விருது
- 2009 தமிழ் பண்பாட்டுக் கழகம் வழங்கிய சாதனையாளர் விருது
இவரின் இலக்கியப் பயணம் தொடர ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


