
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு எட்டு மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்குவது எப்படி? இரட்டை உத்தி (Dual strategy). சாதாரணமாக நிறுவனங்கள் ஒரு மாதம் அல்லது இரு மாத சம்பளத்தை மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கும் போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டும் ஆறு மாதம், எட்டு மாதம் சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்குவது எப்படி சாத்தியமானது?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரட்டை உத்தியை பயன்படுத்தி தங்கள் செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கிறது. பயனாளர்களின் சேவைகளை தரமாகவும் அதே சமயம் நிறுவனத்தின் செலவுகளை குறைவாகவும் செய்வதே இரட்டை உத்தி. இது எப்படி சாத்தியம்?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் பயனாளர் சேவைக்கு பெயர் போனது, அதன் வரவேற்பு அலுவலகங்கள் (front office) நகரின் முக்கியமான இடங்களில் ஆடம்பரமாக அழகாக இருக்கும். அவர்களின் ஓய்வறைகள் (lounges) தரமாகவும், உயர் ரக பானங்கள், உணவுகள், ஓய்வு எடுக்கும் இடம் என சிறப்பாகவும் இருக்கும். பயனாளர்கள் பயன்படுத்தும் இடம் ஆடம்பரமாகவும் சிறப்பான சேவைகளை கொண்டதாகவும் இருக்கும்.
அதே சமயம் அவர்களுடைய பின் நிலை செயல்பாட்டு அலுவலகங்கள் (back office) குறிப்பாக பயனாளர்கள் வராத அதே சமயம் பல முக்கிய வேலைகளில் நடைபெறும் அலுவலகங்கள் நகருக்கு வெளியே அதிக முக்கியத்துவம் இல்லாத இடத்தில் இருக்கும். இதன் மூலம் அலுவலகத்திற்கான இடத்திற்கான செலவு குறைவாக இருக்கும். அந்த இடங்களில் உள்ள உணவுக்கூடங்களில் (cafeteria) 3-in-1 தாயாரிக்கப்பட்ட காபியும், சாதாரண வகை பிஸ்கெட்டுகளுமே இருக்கும். வேறு குளிர்பானங்கள், கொரிக்கும் பண்டங்கள் (snacks) வேண்டுமெனில் நீங்கள்தான் காசு போட்டு தானியங்கி இயந்திரங்களில் (vending machine) எடுக்கவேண்டும். வேலை இடம் நன்றாக வேலை செய்ய ஏதுவாக இருக்கும். அதே சமயம் செலவு குறைவாகவும் இருக்கும். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல விசயங்களில் கவனமாக பயனாளர்கள் சேவை தவிர மற்ற அனைத்தையும் சிக்கனமாகவே செய்வார்கள். இது மட்டுமின்றி தங்களின் விமானங்களை பிற விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் காலத்தை விடவும் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பராமரிப்பு செலவு குறைகிறது. எரிபொருள் செலவும் குறைவது மட்டுமின்றி விமானங்கள் பராமரிப்புக்காக பறக்காமல் நிற்கும் நேரம் வெகுவாக குறைகிறது. விமானங்கள் தரையில் நிற்கும் ஒவ்வொரு மணித்துளியும் தேவையற்ற செலவு.
ஒரு பிரபலமான அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் அதன் அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பணம் அல்லாத பிற சலுகைகள் அதிகம். நான் அவர்களின் பெங்களூர் அலுவலகத்தில் பார்த்த காட்சி என்னவெனில் மூன்று வேளையும் தரமான வகை வகையான உணவு வழங்குவார்கள். இளநீர், பழச்சாறுகள் என கொடுப்பார்கள். பொதுவாக வேலை செய்பவர்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைவிட அங்கே வேலையழுத்தமும் சற்று குறைவுதான். ஆனாலும் அந்த நிறுவனத்தை விட்டு பலரும் தொடர்ந்து வெளியேறத்தான் செய்கிறார்கள்.
அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி என்னுடன் உரையாடும்போது பல வசதிகள் செய்து தருகிறோம், பிற நிறுவனங்களை விட நல்ல சம்பளம் தருகிறோம், ஆனாலும் ஏன் பணியாளர்கள் வெளியேறுகிறார்கள்? காரணம் என்னவாக இருக்கும் எனக் கேட்டார். அதற்கு நான் சொன்னது, அமெரிக்க கலாச்சாரம் வேறு, இந்திய / ஆசிய கலாச்சாரம் வேறு. வேலை இடத்தில் அமெரிக்கர்கள் சம்பளத்தை தாண்டி வசதிகளை அதிகம் எதிர்பார்ப்பவர்கள். ஆனால் இந்தியா / ஆசியாவில் பணம் முக்கியம், நீங்கள் உணவு வழங்குங்கள், நல்ல காபி, பிஸ்கட் கொடுங்கள் என்ன வேண்டுமானுலும் செய்யுங்கள், அதெல்லாம் அதிக பொருட்டு இல்லை, காசு எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் நிறுவனத்தில் சேருபவர்கள் அதி திறமைசாலிகள் ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் மட்டுமே கூடுதலாக கொடுப்பது போதாது, அவர்கள் இதைவிட அதிக சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களுக்குத்தான் செல்வார்கள். சாப்பாடு இலவசமாக தராமல், வேலையை சற்று அதிமாக்கினால்கூட சம்பளம் இன்னும் கூடுதலாக கொடுத்தால் பொறுத்துக்கொண்டு தங்குவார்கள் என்றேன்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தங்கள் பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்கிறது, அது பயணாளர்களுக்கு சிறப்பான சேவைக்கு பெரும் அளவில் உதவியாக உள்ளது, அதே சமயம் அவர்களின் பின் நிலை செயல்பாட்டு அலுவலகங்கள் (back office) உட்பட பல செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த லாபத்தை ஊழியர்களுக்கு சம்பளமாக, ஊக்கத்தொகையாக அளிக்கிறது. விளைவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சில் வேலை செய்ய பலர் போட்டி போடுகிறார்கள், ஊழியர்கள் பலர் நீண்ட காலம் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இந்தியா / ஆசியாவில் உங்கள் ஊழியர்கள் உங்களிடம் நீண்ட காலம் வேலை செய்ய வேண்டுமெனில் மற்ற சலுகைகள் முன்ன பின்ன இருந்தாலும் பணத்தை அதிகம் கொடுங்கள். நம்ம ஊருக்கு காசு முக்கியம்.


