(விமர்சனம்) நூல்கள் அறிமுகம்

செல்லாத பணம் – இமையம் 

அறிமுகம் செய்பவர்: பாத்திமா ரிஸ்வானா

2020ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். வீட்டிற்கு பிடிக்காத திருமணமும் குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளால் தற்கொலை முயற்சியும் கதையில் சொல்லப்பட்டாலும் மருத்துவமனையும் அதன்பின் நிகழும் நிகழ்வுகளும் ஒருங்கே நம் மனதை கனக்கச் செய்கின்றன.

குடும்ப வாழ்வில் பெண்களின் இயலாமையும், முடிவுகள் ஆண்களைச் சார்ந்து இருப்பதையும், சுற்றத்தாரின் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும், தன்மானத்தை இழந்தும் குடும்ப உறவுகளைப் பேண வேண்டிய நிர்பந்தத்தையும் எளிய மொழியில் விவரிக்கிறார். குடும்பத் தகராறுகளால் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளைப் பற்றிய காவலரின் வார்த்தைகள் மனதை வலியால் நிரப்புகின்றன.

தன்மகள் படும் வேதனை தாளாமல், தன் வாழ்வையும், செயல்களையும் சுயபரிசோதனை செய்துகொள்ளும் தந்தையின் மனமும்,அவசரச் சிகிச்சைப்பிரிவில் நடக்கும் சிறுநிகழ்வுகள் கூட நோயாளியின் குடும்பத்தினரை பதற வைப்பதையும், நோயாளியின் நிலையைப்பற்றி அறியமுடியாத வலியையும் வார்த்தைகளால் உணர்த்துகிறார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் உறவினர்களின் கேள்விகளை எதிர்கொள்வதும் அவர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் உதவிகரமாக இருப்பதற்கு பதில் மூச்சுத்திணற வைக்கின்றன. அவசரச் சிகிச்சைப் பிரிவில் வேலை செய்யும் மருத்துவர்கள், தாதியர்கள், பாதுகாவலர்கள் அனைவருக்கும் திட்டமிட்டு பயிற்சியளிக்கப்பட்டதுபோல் இறுக்கமான மனநிலையுடன் வேலை செய்வதை குறிப்பிடுகிறார்.

குடும்பத்திற்குள் நிகழும் அரசியலால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை வார்த்தைகளால் வடித்திருக்கிறார். சண்டைக்கான காரணத்தை கருத்து வேறுபாட்டோடு மட்டும் தொடர்புபடுத்தாமல், பின்னணி, மதிப்பீடு, கண்ணோட்டத்தோடு கலந்து வலிமையாக சொல்லி இருக்கிறார்.

இந்நாவல் படித்தபோது தாங்க இயலாத மனபாரத்தையும், ஒருகட்டத்தில் பணம் உதவாததையும், இறுதியில் ஒரு இறப்பு விடுதலை உணர்வைத் தருவதையும் மறுக்க இயலாது.

உருகுமோ உறைபனி – சாரா

அறிமுகம் செய்பவர்: விமலாரெட்டி

அமெரிக்காவிலிருந்து நித்தியகல்யாணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறான். ‘ஹாய் மிஸ் யுனிவெர்ஸ்!’ செய்தியை பெறும் கதையின் நாயகியான நித்தியாவுக்கு சிலிர்க்கவும் இல்லை. குறுகுறுக்கவும் இல்லை. பதிலுக்கு அதிர்ச்சியான படம் ஒன்றை வரைந்து அனுப்பினாள். இப்படிதான் ஒருவரை ஒருவர் வசை பாடியே நட்பு வளர்கிறது. மனதிற்குள்ளே ஆசைகள் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உணர்வுகளை அடக்கியாளும் விக்ரமிடம் மனதைப் பறிகொடுத்த பெண்ணாக வலம் வருகிறாள். விக்ரம் அமெரிக்காவாழ் இந்தியனாய் இருந்து தமிழகம் வந்து தன் வாழ்வை அமைத்துக்கொண்டவன். காலப்போக்கில் அவள் மனதிற்குள் ஆராதனை செய்தவனையே கரம் பிடிக்கிறாள். திருமணம் ஆன பிறகும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்திற்கு வரவில்லை. இருந்தாலும் அவனுக்கோ அவளை விட்டால் வேறு யாருமில்லை. அதே கதைதான் அவளுக்கும். இருவருமே விட்டுகொடுத்து சமரசம் ஆகிறார்கள். அங்கு அழகான காதல் இருவரிடமும் மலர்ந்தது என்பதை விட அழகான புரிதலோடு வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு சென்றனர்.

சில வருடங்களுக்குப் பிறகு விக்ரம் நித்தியா தம்பதியருக்கு ஒரு குட்டி தேவதை பிறக்கிறாள். அவளின் மழலைச்சொல் கேட்டு மதி மயங்கிப் போகிறார்கள் பெற்றோர். பெற்றவர்கள் மட்டுமின்றி அங்கு விக்ரம் நித்தியை பார்க்க வருவபர்களும் மழலையின் பேச்சில் தங்களையே மறந்து மகிழ்ச்சியடைகிறார்கள். குட்டி தேவதையின் பேச்சில் உறைபனி உருகி கரைந்து கடலோடு கலந்தது.

மூக்குத் துறவு  –  கே.பாலமுருகன்

அறிமுகம் செய்பவர்: செவியின்பம் சங்கீதா

‘மூக்குத் துறவு’ சிறுகதை தொகுப்பின் தலைப்பே நமது மூளைக்குள் ஒரு சிறு நமைச்சலையும் மூக்குக்குள் ஒரு சிறு குறுகுறுப்பையும்  ஏற்படுத்துகிறது. மொத்தம் பன்னிரெண்டு  அறிவியல் புனைவு சிறுகதைகளை கொண்ட ஒரு வித்தியாசமான படைப்பு. ஒவ்வொரு கதையும் வேறு ஒரு புது உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

‘மூக்குத் துறவு’ என்ற பெயரிலேயே உள்ள சிறுகதையின் மையப்புள்ளி, ஆக்சிஜன் அளவு ஒரு நகரத்தில் குறைந்து விடுகிறது; அதை அந்த அரசும் அந்த மக்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே. படிப்பதற்கு மிக சுவாரசியமாகவும் அதே சமயத்தில் அந்த கதையோடு பயணிக்கும்பொழுது நாம் அவர்களாக இருந்தால் என்ன ஆவோம்  என்ற பயத்தையும் நமக்குள் விதைக்கிறது.

‘சடங்கு’ என்று தொடங்குகிற முதல் கதையே சற்று அமானுஷ்யம் கலந்த ஒரு கதையாக நம் முன் வருகிறது அதில் வரும் அந்த சுகந்தி கதாபாத்திரம் நம்மை ஈர்க்கிறது. மெலாவாத்தி என்ற அந்த மலையும் அதில் கடைசியாக ஏறவிருக்கும் கந்தசாமியும் என்ன ஆகிறார்கள்?

‘மிசாகி’ ஒரு ஜப்பானிய பெண்ணை பற்றியும் போன்சாய் மரங்களின் வரலாற்றையும் அவற்றின் பேரழகையும் சொல்லும் ஒரு கதை.

‘கடைசி ஸ்பைடர் மேன்’, ‘கடவுளின் வாய்’, ‘மாலை 7.03’   எனப்  பல வித்தியாசமான தலைப்புகளைக் கொண்ட அறிவியல்  படைப்பான ‘மூக்குத் துறவு’ சுவாரஸ்யமான சுவாசம்.

சொர்க்கத்தின் பறவைகள் – ஆங்கிலத்தில் – அப்துல்ரசாக் குரானா / தமிழில் – லதா அருணாசலம்

அறிமுகம் செய்பவர்: ஆதவன் சரவணபவன்

யூசெப் என்ற சிறுவன் தந்தையின் கடனுக்காக வர்த்தகர் மயித்திடம் பிணையாக விடப்படுகிறான். மஜித் உடனான அவனின் வாழ்க்கை பயணிக்கிறது. மஜித்தின் கடையில் வேலை செய்யும்போது இவனைப் போலவே இன்னொரு சிறுவனுடன் பழகி நண்பனாகிறான். ஒருகட்டத்தில் கிராமம் கிராமமாக கூட்டமாக செல்லும் பயண வியாபாரிகள் குழுவில் மஜித்தால் அழைத்துச் செல்லப்படுகிறான். பயணத்தில் எதிர்கொள்ளும் இடர்களை காட்சிப்படுத்தியிருக்கும் முறை நாவலின் இன்னொரு சிறப்பு.

கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்போதைய தான்சானியா பகுதியின் நிலவியல் மற்றும் பூர்வகுடிகளின் பண்பாடுகள் நிறைந்த சித்திரமாக விரிகிறது இந்த சொர்க்கத்தின் பறவைகள். பல காலனிய ஆதிக்கங்களால் குறிப்பாக வலிமைமிக்க மேலை நாடுகளால் தமது சுயத்தை இழந்து சோர்வுறும் பழங்குடிகள் வலுக்கட்டாயமாக கப்பங் கட்டவும் அடிமைகளாக படையில் சேரவும் பணிக்கப்படுகிறார்கள். 

ஒவ்வொரு கதைமாந்தர்களின் படைப்பும் மனதில் தெளிவாகப் பதிந்துவிடுகிறது. அடங்கிய தொனியில் உரையாடல்கள் மூலம் நகரும் புதினம் முழுமையாக பல தகவல்களை கதையோட்டத்தின் ஊடே எமக்குக் கடத்துகிறது. 

ஆக்கிரமிப்பால் துயருறும் மனிதர்கள் இனங்களுக்கிடையில் ஏற்படும் காழ்ப்புகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துவது அவர்களின் பக்க நியாயங்களை எந்தப் பூச்சுமில்லாமல் தந்து யூசெப்பின் நிறைவேறாத காதலுடன் நிறைவடைகிறது. தமிழாக்கம் என்ற உணர்வு இல்லாமல் கதையுடன் ஒன்றிக்க வைக்கிறது லதா அருணாசலம் அவர்களின் மொழிபெயர்ப்பு நாவல்.