
“விளிம்பு தாண்டாப் பொங்கல்”
விழாக்கள் பண்டிகைகள் உருவாக்கப்பட்ட காரணமே உறவுகள் ஒன்றுகூடி மகிழ்வதற்குத்தான். பணியின்பொருட்டு வெளியூரில் குடியிருக்கும் உறவுகள் எல்லோரும் தமது பிறந்தவூருக்கு வருவதற்கும் எல்லோரையும் பார்த்து மகிழ்வதற்கும் குடும்பத்தினரோடும் விருந்தினரோடும் ஒன்றாய்ப் பகிர்ந்துண்டு உண்ணவும் விழாக்கள் அடிப்படைக்காரணிகளாய் இருக்கின்றன. விருந்தோம்பலை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டவைதாம் பல்வேறு விழாக்கள், திருநாள்கள், பண்டிகைகள் எல்லாமும். அன்பைப் பகிர்தல் அக்கறையைப் பகிர்தல் நட்பைப் பகிர்தல் காதலைப் பகிர்தல் உரிமையைப் பகிர்தல் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றுதான் உணவைப் பகிர்ந்துண்ணல். அவ்வாறான விழாக்களில் முதன்மையானதாகத் தமிழர் பண்பாட்டினில் இருந்து வருவது தைத்திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் திருநாள்.
ஐவகை நிலமும் இருக்கின்ற தமிழ்நாட்டினில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பல்வேறு வகையான மகிழ்கொண்டாட்டங்களை உள்ளடக்கியிருக்கும். பொருளீட்டுதலுக்காகத் தமிழகத்தைவிட்டு அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களுக்கு எப்போதும் பிறந்தவூர்க்குச் சென்று பொங்கல் கொண்டாடும் வாய்ப்பு கிட்டிவிடாது. அவரவர் இருக்கும் இடத்தின் வாய்ப்புவசதிகளைப் பொறுத்தே பொங்கல் கொண்டாட்டம் அமைகின்றது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் பொங்கலுக்கும் தேக்கா பகுதியில் வண்ணவிளக்குகளால் ஒளியூட்டு செய்கிறது அரசாங்கம். கடைத்தெருக்கள் எங்கும் பொங்கல் விழாவுக்கான பொருள்களால் நிரம்பியிருக்கும். குறிப்பாகச் சிராங்கூன் முதன்மைச்சாலையிலிருந்து கிளைத்திருக்கும் கிளைச்சாலைகளுள் ஒன்றான கேம்பெல் லேன் சாலையில் கடைகள் எங்கும் பொங்கல்விழாவின் முன்னோட்டத்தினைக் கண்முன் கொண்டுவருமளவு பொருள்களால் நிறைந்திருக்கும். தேக்காவின் ஒரு பகுதியில் பொங்கல்விழாவுக்கென்றே ஒரு பெருங்கூடாரம் அமைத்து அங்கே மாடுகளைக் கன்றுகளோடு கட்டிவைத்திருப்பர். அவற்றைக் காண்பதில் குழந்தைகளுக்குப் பெருமகிழ்ச்சி.
ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதியின் சமூக மன்றம் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கும். அந்தந்தப் பகுதி மக்கள் ஒன்றுகூடிப் பொங்கலிட்டு உண்டு மகிழ்ந்திருப்பர். பொங்கலை முன்னிட்டுப் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் போட்டிகளும் பரிசளிப்புகளும் நடைபெறும். இம்மாதிரியான கொண்டாட்டங்கள் மக்களின் கூட்டுறவுக்கு வலிமையான காரணிகளாகவும் பிள்ளைகளுக்குத் தமிழரின் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த அறிமுகமும் புரிதலும் தருபவையாகவும் அமைகின்றன. நிறைய இடங்களில் அப்பகுதியின் அமைச்சர்களும் அதிகாரிகளும்கூடக் கலந்துகொள்வர். சீனர், மலேயர் எனப் பல்லின மக்களும் தமிழரைப்போல் உடையணிந்து பொங்கலிட்டு மகிழ்வது நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் உறுதியாக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் குடும்பமாய் இங்கே வாழ்பவர்களுக்கு அமைந்திருக்கும் பொன்னான வாய்ப்புகள் என்றே சொல்லலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் மகிழ்வின் கொண்டாட்டக் கரும்புக்கணங்கள். இன்னொரு பக்கமும் இருக்கிறது. குடும்பத்திற்காகக் குடும்பத்தைவிட்டுத் தனியே இங்கே வந்து பணிபுரிகின்ற ஊழியர்களின் பக்கம்தான் அது. வேலைக்கான அட்டை வைத்திருப்போர் பெரும்பாலும் தனியாளாய்த்தான் இங்கே இருப்பர். வீடுகளில் தங்கியிருந்தாலும் விடுதிகளில் தங்கியிருந்தாலும் அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் இங்கே இருக்கின்றன. இங்கே பொங்கல் திருநாளுக்குப் பொதுவிடுமுறை இல்லை என்பதால் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்க்குப் பொங்கலும் மற்றநாளைப்போல் ஒருநாள் அவ்வளவுதான்.
வீட்டில் தங்கியிருப்போர்கூடச் சற்று நேரமொதுக்கி வெண்பொங்கலோ இனிப்புப்பொங்கலோ வைத்து உண்டுமகிழலாம். ஆனால் விடுதியில் தங்கியிருப்போர்க்கு அந்த வாய்ப்பும் கிட்டாது. விடுதி வளாகத்துக் கடையில் விற்பனைக்காகச் செய்துவைத்திருந்தால் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை திறன்பேசியே கடவுள்போலத்தான். குடும்பத்தினரை வீட்டினை கால்நடைகளை ஊர்ப்புறத்தை என எல்லாவற்றையும் காணொளிவழியே காட்டிவிடுகின்றது. அவரவர் வீட்டில் பொங்கல் திருநாளில் பால் பொங்கியதையும் சூரியப்படையலையும் குலவையொலியையும் மாட்டுப்பொங்கலையும் நேரடிக்காணொளி வழியாகவோ பதிந்தனுப்பிய காணொளி வழியாகவோ கண்டு மகிழ்கின்ற வாய்ப்பினைத் திறன்பேசிதான் அளிக்கின்றது.
தானும் அங்கே இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருக்கும். அதைவிடவும், தான் இங்கிருந்து சம்பாதிப்பதால்தான் அங்கே தன்னுடைய குடும்பம் மகிழ்வாக இருக்கிறது என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். அவர்களின் மகிழ்வும் நிம்மதியும் பொங்கிப் பெருகுவதற்காக இங்கே தனிமையென்னும் நெருப்பில் இவர்கள் தன்னையே எரித்துக் கொள்கின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கலன்று ஒருவாய்ப்பொங்கல் கூடத் தின்ன வாய்க்காத எத்தனையோ ஊழியர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
தியாகம் என்ற பெயரில் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளும் வித்தையைப் பெரும்பாலும் எல்லோர்க்கும் கற்றுக்கொடுத்து விடுகிறது காலம். தைப்பொங்கலும் மாட்டுப்பொங்கலும்தான் இவர்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லையே தவிர இவர்கள் எல்லோர்க்கும் காணும் பொங்கல் கட்டாயம் உண்டு. ஆம் பொங்கலுக்கு முன்பே தேக்காவில் கடைகளைக் கண்டு மகிழ்வதும் நண்பர்களோடு கூடி அவரவர் வீட்டுப்பொங்கல் முறை ஊர்ப்பொங்கல் முறை பற்றிப் பேசிமகிழ்வதும்தான் இவர்களின் காணும் பொங்கல். குடும்பத்தோடு கொண்டாடுவோரின் கொண்டாட்டம் என்பது வாசலில் பானைவைத்துப் பொங்கலிடுவதைப் போன்றது. ஒவ்வொரு படிநிலையினையும் கண்கூடாகக் கண்டு பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உரக்கச்சொல்லி மகிழலாம். தனியாய் இருக்கும் ஊழியர்களின் கொண்டாட்டம் என்பது அழுத்தவிகலனில் (அழுத்த அவிகலன் = Pressure Cooker ) பொங்கல் வைப்பதைப் போன்றது. உள்ளே நடப்பது எதுவுமே தெரியாது. எப்போதாவது உள்ளம் கொதித்துப் பெருமூச்சு விட்டால் பட்டென்று குடும்பப்பொறுப்பு என்னும் எடையினைத் (Cooker weight) தலையில் போட்டு மூச்சையடக்கிவிடுகிறது காலம்.
பிள்ளைகள் என்னும் குருத்தோலைகளுக்காகவும் பெற்றோர் என்னும் காவோலைகளுக்காகவும் உடன்பிறந்தோர் இணையர் என்னும் விளைந்த ஓலைகளுக்காகவும் தம்மைத்தாமே சீவிக்கொண்டு பொருள்நீர் வார்க்கின்ற பாளைகளாய் வாழ்கின்ற ஒவ்வொரு ஊழியனுக்கும் கொண்டாடி மகிழ வாய்ப்பதில்லை பொங்கல். தமது குடும்பம் கொண்டாடுவதைக் கண்டு மகிழ்ந்திடத்தான் வாய்த்திருக்கிறது. ஒருநாட்டினைவிட்டு வேறொரு நாட்டுக்குப் பணியின்பொருட்டுச் செல்லும்போது வானூர்தியில் இவ்வளவு எடைதான் பொருள்கள் கொண்டுசெல்லலாம் என்று கட்டுப்பாடு உண்டு. எந்த எடை இயந்திரமும் கணித்திடவியலாத் தனிமை என்னும் சுமையினை ஒவ்வொரு ஊழியனும் சுமந்துகொண்டுதான் பயணம் செய்கிறான் என்பதுதான் உண்மை. அது கரும்பைப்போன்று இனிப்பதன்று. கரும்புத்தோகை போன்று கிழித்துக் காயங்கள் கொடுக்கும் ஒன்று. புலம்பெயர்ந்தோரின் பொங்கல் கொண்டாட்டம் வெளிப்பார்வைக்குக் கரும்பைப்போன்றது. உள்ளுக்குள் கரும்புத்தோகை போன்றது. வாழ்க்கையும்கூட அப்படித்தான்.
prabha14devi@gmail.com


