(சிறுகதை) மைலோ

0
657
உமா கதிர்

இந்த வேலையை செய்வதற்காக அவர்கள் மூன்று பேரை தேர்வு செய்திருந்தார்கள். நான் கடைசி ஆள். எனக்கு கிடைத்ததற்காக நான் அதிர்ஷ்டசாலி என்றே உணர்கிறேன். முதலில் அவர்கள் விஜி அக்காவை தேர்வு செய்தார்கள். அவள் நான்கு நாட்களுக்கு கேட்ட தொகையானது அவர்களைப் பொருத்தவரை சொற்பம்தான் ஆனாலும் அவளை வேண்டாம் என்று விலக்கிவிட்டார்கள், இரண்டாவதாக டேனியல் லிம் அவனை எனக்குத் தெரியாது ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். பிராணிகள் காப்பகத்தில் இருப்பவன். அவனுக்கு பெண்களில் விருப்பமில்லை. சிணுங்கிக்கொண்டே நடப்பான். மேலும் சென்ற விடுமுறையில் அவனிடம் மைலோவை விட்டுச்சென்றபோது சரிவர பார்த்துக்கொள்ளவில்லை. வீடியோ காலில் மைலோ சோர்ந்திருப்பதைக் கண்டு ஐரோப்பிய பயணத்தை பாதியிலேயே விட்டு வந்தார்கள். அதைவிட மைலோ இயல்புக்குத் திரும்ப மூன்று மாதமானது. மூன்றாவதாகத்தான் என்னிடம் வந்தது. 

நான் இஞ்சினியரிங் கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்து ஊரில் தெண்டமாக சுற்றிக்கொண்டிருந்தபோது என்னுடைய அப்பா அரும்பாடுபட்டு நான்கு வருட இஞ்சினியரிங் படிப்புக்கும் அதிகமான செலவில் மெக்கானிக் வேலை என்று சொல்லி சிங்கப்பூருக்கு ஏற்றி விட்டார். சாங்கி விமான நிலையத்தில் இருந்து மிதப்பாக வெளியே வந்த என்னை என் முதலாளி கையில் பிரஷ் கொடுத்து  ஷெல் பம்பில் கார் கழுவவிட்டார். அது ஆயிற்று மூன்று வருடம். ஆயிரத்து சொச்ச நாட்களில் நான் ஒரு பகலையும் அதிகம் கண்டதில்லை, வந்த நாள் முதல் இந்த நொடி வரை இரவு வேலை மட்டுமே. ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஒழுக்கமாக வேலை செய்தது எனக்கே ஆச்சரியம்தான். இத்தனை ஒழுங்கோடு நான் படித்திருந்தால் இங்கே கார் கழுவிக்கொண்டிருந்திருக்க மாட்டேன். எங்காவது கார் உற்பத்தி தொழிற்சாலையில் நல்ல வேலையில் இருந்திருக்கக் கூடும். யார் கண்டது டெஸ்லாவில் கூட வேலை கிடைத்திருக்கும். இப்படித்தான் என் பகல்பொழுது கனவுகள் இருக்கும். 

ஒருநாள் அதிகாலை மூன்று மணி அளவில் ஒரு கார் பெட்ரோல் நிறப்ப வந்து நின்றது. காரை ஓட்டி வந்த இந்திக்காரரும், அவர் மனைவியும் நிறைபோதையில் இருந்தனர். அவர்களை நான் அறிவேன். வழக்கமாக அவர் இங்கேதான் பெட்ரோல் அடிப்பார். அருகில் உள்ள தரைவீட்டில் குடியிருக்கிறார். எப்போதாவது இரண்டு வெள்ளி டிப் தருவார். கார் கழுவச்சொல்லி முடித்தபோது அவர் தூங்கியிருந்தார். எவ்வளவு எழுப்பியும் எழவில்லை. சூபர்வைசரிடம் சொல்லிவிட்டு அவர்களை பின்னிருக்கையில் அமரவைத்து வீட்டில் இறக்கி விட்டு நடந்து பம்ப் ஸ்டேஷனுக்கு வந்தேன். 

அந்த சம்பவத்திலிருந்து கத்தரிப்பூ நிற இரண்டு வெள்ளி தாளிலிருந்து மாறி சிவப்பு நிற பத்து வெள்ளி தாளை டிப்பாக தந்தார்கள். அதுபோக பகல் வேலைகளில் வீட்டில் மராமத்து வேலை இருந்தால் அழைப்பார்கள். மூன்று திருகலில் ஒரு குண்டு பல்பு மாற்றுவதாக இருந்தாலும் 100 வெள்ளி தருவார்கள். தோட்டம் முழுக்க கூட்டி வாரி களை எடுத்தாலும் அதே நூறுதான். மாதத்தில் இருமுறை அழைப்பார்கள். நான் ஏன் என்றெல்லாம் கேட்பதில்லை. ஒரு சிரிப்போடு வாங்கிக்கொள்வேன். இருவரும் ஐடியில் பெரிய வேலையில் இருப்பதாக கணிக்கிறேன். ஸ்டேஷன் டிப், மற்றும் இதுபோன்ற வெளி வேலைகளால் ஒரு கணிசமான தொகை கிடைத்தது. 

மூன்றே வருடங்களில், புஷ்டியாக இருந்த எனது கன்னங்கள் டொக்கு விழுந்தன, மலர்ச்சியாக இருந்த என் கண்கள் பொலிவிழந்து ஆந்தைக்கண் போலாகியது. பற்களுக்கிடையே மஞ்சள் பரவி இடைவெளி விழுந்தது. எவ்வளவு தேய்த்தும் விடவில்லை. தலையில் பாதி முடி காணாமல் போய் கிருதாவில் பல முடிகள் வெளுத்திருந்தன. இவையெல்லாம் கண்ணாடியில் நான் கண்டவை அல்ல. எப்போதாவது ஊர்க்காரர்கள் பார்த்து சொல்லும்போது அறிந்துகொண்டவை. எனக்கேது கண்ணாடி பார்க்க நேரம்? அதில் எனக்கு விருப்பமேயில்லை.

இந்த சீனப்பெருநாளுக்காவது எனக்கு விடுமுறை வேண்டும் என்று முதலாளியின் நான் கேட்டேன். இந்த மூன்று வருடத்தில் நான் விடுமுறையே கேட்டதில்லை என்பதால் நல்ல மனநிலையில் இருந்த முதலாளி பெருந்தன்மையாக மூன்று நாட்கள் விடுமுறை அளித்தார். ஏன் கேட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கேட்டதுதான். கிடைத்தால் மலை, கிடைக்காவிட்டால் அதே ப்ரஷ் என்றுதான் நினைத்தேன். “எடுத்துக்கோ” என்றபிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிங்கப்பூரில் பல இடங்கள் சுற்றிப்பார்க்க இருப்பதாக அறிவேன். பல வெளிநாட்டவர்கள் அதற்குதான் வருகிறார்கள். நான் ஸ்டேஷன் தெருவைத் தாண்டி வேறெங்கும் சென்றதில்லை. சிங்கம் வாயிலிருக்கும் வற்றாத நீரூற்றைக் காணவேண்டும் என்ற ஆசை உண்டு. உண்மையில் நான் பகல் தூக்கத்தை தியாகம் செய்தால் இவற்றையெல்லாம் கண்டிருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் ஏதோ ஒரு வைராக்கியம். அடிமை வேலையில் இருந்து மீண்டேழுந்து நல்ல வேலையில் கம்பீரமாக பார்க்கலாம் என்ற வெறி. அப்படியென்ன ஒரு கம்பீர வேலை எனக்குக் கிடைக்கப் போகிறது?

அறை நண்பர்களிடம் மூன்று நாளில் என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஜொகூருக்குப் போ, பாதாம் தீவுக்குப் போ, மசாஜ் செய், நல்ல சரக்கை வாங்கிக் குடி, அறையெடுத்துக் கூத்தடி, ரீசார்ஜ் செய்தபிறகு திரும்பி வா என்றார்கள். இச்சில ஆண்டுகளில் பணத்தின் அருமை நன்றாக விளங்கிக்கொண்டேன். இரண்டு வெள்ளி டிப்புக்காக வழக்கத்தை விட கூடுதல் பளபளப்புடன் காரைக் கழுவி விட்டாலும் கூட பலர் கண்ணாடியைக் கீழிறக்காமல் கிளப்பிக்கொண்டு போவார்கள். போதையில் இருந்தால் தவிர மற்ற நேரங்களில் கத்தரிப்பூ நிற இரண்டு வெள்ளித்தாள்தான். எனக்கு மட்டும் நாட்டின் உரிமை கொடுத்தால் ஓரிரவில் இரண்டு வெள்ளித்தாள்களை சிங்கப்பூரில் தடை செய்துவிடுவேன். அந்த நோட்டை நான் விரும்பவேயில்லை, ஆனால் என் கைகளில் அதுதான் திணிக்கப்படுகிறது. 

கதைக்கு வருவோம். தரைவீட்டு குப்தா சீனப்பெருநாளை ஒட்டி விடுமுறையை திட்டமிட்டிருந்தார். அவருடைய மைலோவைப் பார்த்துக்கொள்ள ஊரிலிருந்து அவருடைய அப்பாவை அழைத்திருக்கிறார். மைலோவாவது ஒன்றாவது என்று அவர் முடியாது என்றிருக்கிறார். பேரன் பேத்தியென்றால் ஒருவேளை வந்திருப்பார்கள். குப்தாவும் அவர் மனைவியும், மைலோவும் தவிர அந்த ஐந்தறை வீட்டில் யாருமில்லை. பிள்ளைகள் இருந்தால் போட்டோவாவது இருக்கும். அதுகூட இல்லை. 

ஆக கடைசி முயற்சியாக என்னிடம்  மைலோவை பார்த்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டார்கள். அவர்கள் வாசகத்தை முடிக்கும்முன்னரே நான் சம்மதித்துவிட்டேன். எத்தனை நாட்கள் என்றேன். ஐந்து நாட்கள் என்றார்கள். சமாளிக்கலாம் சரி என்றேன். முன்பணம் என்று சொல்லி சிவப்பு நிற அங்பா உறை ஒன்றை கையில் அழுத்திச் சென்றார்கள். அவர்கள் அகன்ற பிறகு உறையைப் பிரித்துப்பார்த்தேன். ஐந்து 100 வெள்ளி தாள்கள். வரிசைக்கிரம எண்ணில் இருந்தன. இவையெல்லாம் எனக்கு அபூர்வம். பொங்கலுக்கு அம்மா கொடுத்துவிட்ட புதுச்சட்டையின் மடிப்புக்கிடையில் அவற்றை பத்திரப்படுத்தினேன். 

மைலோவைப் பற்றிச் சொல்ல வேண்டும். என் கண்களுக்கும் அவன் கண்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எங்கோ பனிப்பிரதேச நாய் இனத்தைச் சேர்ந்தவனாயிருப்பான் என்று நினைத்தேன். ஜப்பானின் அகிடா இனம் என்றார் குப்தா. ஜப்பானில் பனியுண்டுதானே? முதலாளிக்கு மிகவும் விசுவாசமான இனமாம். விசுவாசமில்லாத நாய் இனமும் உலகில் உண்டோ எனத் தோன்றியது. 

என்னைப் பெரிதாக கண்டுகொள்ளாது. வந்துட்டியா? என்பதுபோல மேலும் கீழுமாக வாலை அசைத்து வரவேற்கும், குரைப்புமில்லை, இளைப்புமில்லை. இது ஒன்றும் பெரிய சாகச வேலையில்லை. அவர் வீட்டிலேயே அறை ஒன்றில் தங்கிக்கொள்ளச் சொன்னார். வீட்டில் எதெது எங்கிருக்கிறது. மைலோவுக்கான உணவு அட்டவணை, உணவுப்பொருட்கள் தனியறையில் இருந்தது. அவற்றுக்கான பாத்திரங்கள். நாயின் சமிக்ஞைகள், எமர்ஜென்சி என்றால் யாரை அழைக்கவேண்டும், மிருக வைத்தியசாலை எங்கிருக்கிறது, எனக்கான உணவுகள். நாயை எங்கெங்கு அழைத்துச் செல்ல வேண்டும், அத்ற்கான பிரத்யேக அப்பாயிண்ட்மெண்ட். எல்லா விவரங்களும் நேர்த்தியாக பிரிண்ட் செய்து பதினைந்து பக்கத்தில் ஸ்டேப்ளர் இடப்பட்ட காகிதங்களைக் கொடுத்தார்கள். 

மலைப்பாக இருந்தது. சொந்த பிள்ளைக்கும் பார்க்க கூடுதல் அலங்காரத்துடன் மைலோவை வளர்க்கிறார்கள். என் சம்பளத்தில் கண்டிப்பாக மைலோ ஜீவிக்க முடியாது என்று தோன்றியது. 

நான் வேலை முடிந்து காலை ஏழு மணியளவில் அவர்கள் வீடடைந்தேன். முருங்கை மரக் கிளையில் சாவி மாட்டியிருந்தது. அவர்கள் அதிகாலை விமானத்தைப் பிடித்து கிளம்பிவிட்டார்கள். கார் நிறுத்தம் அருகிலேயே கட்டப்பட்டிருந்தது. கேட்டைத் திறந்ததும் முதல் வேளையாக மைலோவின் கழுத்துப்பட்டையோடு சங்கிலியை விடுவித்தேன். பல்லாண்டுகளாக விரலை நெருக்கிக்கொண்டிந்த மோதிரத்தை அகற்றியதும் தென்படும் வெண்கோடு போல அதன் கழுத்தில் ஒரு கோடு தென்பட்டது.

உடலை ஒரு சிலுப்பு சிலுப்பி அண்ணாந்து என்னைப் பார்த்தது. நான் அதை கண்டுகொள்ளாமல் நேராக பிரிட்ஜில் இருந்து ஒரு பியரை எடுத்து சோபாவில் அமர்ந்து நிதானமாக குடித்தேன். மைலோ என் எதிரில் அமர்ந்து புதிராக தலையை சாய்த்துப் பார்த்தது. என்னிடம் அதற்கான கட்டளை ஒன்றும் இல்லை. மைலோவுக்கு ஜப்பானீஸ் தெரியுமா, அல்லது ஹிந்தி புரியுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்கு தமிழில் சொன்னேன். “உனக்கு குப்தா முதலாளி, எனக்கு சீன முதலாளி. நீயும் நானும் அவங்களுக்கு அடிமை. இந்த நாலைந்து நாள் மட்டும் நம்ம ரெண்டு பேருக்கும் விடுதலை. வேணும்னா நீ எனக்கு முதாளியா இருந்துக்கோ” நான் கையை பின்பக்கமாக வால் போல பாவனை செய்து மைலோவிடம் தெரிவித்தேன். குத்துக்காலிட்டு அமர்ந்தபடி என் முகத்தைப் பார்த்தது. இரண்டாவது பியரை எடுத்து மைலோ மூக்கில் தட்டி சியர்ஸ் சொல்லிக் குடித்தேன். எப்போது உறங்கினேன் என்று அறியவில்லை. இரவு முழுக்க வேலை செய்த களைப்பு, ஆள் புதையும் சோஃபா என்றிருந்ததால் என்னையறியாமல் உறங்கினேன். 

எழும்போது மைலோ என் தலையணையாயிருந்தது. நான் அசைந்ததும் எழுந்து குத்துக்காலிட்டு அமர்ந்தது. அதன் கண்களில் பசி. எனக்குமே நல்ல பசி.

ஓவனில் சூடுபத்திய சிக்கனை இரண்டு பீங்கான் தட்டில் போட்டு வந்து மைலோவுக்கு ஒன்று நான் ஒன்றுமாக சாப்பிடத்துவங்கினேன். வழக்கமான தட்டு இல்லாததால் மைலோ குழம்பியது. இந்த ஐந்து நாட்களுக்கு உனக்கும் எனக்கும் எந்த சட்டதிட்டமும் பொருந்தாது. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யலாம். தைரியமா சாப்புடு மைலோ என்றேன். உத்தரவுக்கு காத்திருக்கும் வீரனைப்போல இருந்தது. தரையோடு அமர்ந்து கோழியை ஊட்ட அரைமனதாக தின்ன ஆரம்பித்தது. 

போனில் மூன்று தவறிய அழைப்புகள். குப்தாவிடமிருந்து. மாலை ஐந்து மணிக்கு மைலோவுக்கு நகம் வெட்டவும், முடி கழிக்கவும் அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாக குறுஞ்செய்தி. விலாசம் பிரிண்ட் செய்யப்பட்டு மேசையில் இருந்தது. பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டே மைலோவைப் பார்த்தேன், அது கால்களை நீட்டி நீண்டதொரு கொட்டாவி விட்டு அயர்ந்தது. உண்மையிலே இது நாய் இனம்தானா? அல்லது ஓநாய் கலப்பினமா என்பதுபோல பயங்கரமாயிருந்தது. கொட்டாவி விடாமலிருந்தால் இவன் அழகுப்பிள்ளை. 

மறுபடி பியர் எடுத்து மிடறுகளை விழுங்கியபடியே மைலோவிடம் சென்று அவன் எதிரில் சம்மணமிட்டு அமர்ந்தேன். இமைக்காமல் அவன் கண்களையே பார்த்துக்கோண்டிருந்தேன். ஒளி மிகுந்த கண்கள், தொங்கிய காது, வியர்த்த மூக்கு, இள செந்நிற வர்ணத்தில் நாகு. பியரை ஓரமாக வைத்துவிட்டு அவனை ஆரத்தழுவிக்கொண்டேன். மிகவும் இறுக்கமாக. சில நொடியிலேயே என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. மெல்லிய விசும்பலோடு அவனை மேலும் இறுகக் கட்டிக்கொண்டபோது என் அழுகை அடங்காது பெருங்குரலெடுத்தது. எனக்கே நான் அந்நியமாகும்படி உடைந்து அழ ஆரம்பித்தேன். மைலோ மிகவும் அணக்கமாக என் பிடியிலிருந்து கொஞ்சமும் விலகாது தன்னை ஒப்புக்கொடுத்தான். அவனுக்கு நான் முத்தமிட்டேன். கரிப்புடனிருந்த என் கண்ணீரை அவன் நாவால் துழாவினான். இருவரும் சாய்ந்து உறங்கிப்போனோம்.

நான்கு மணி அளவில் வீடே அதிரும்படியாக அலாரம் அடிக்க திடுக்கிட்டு விழித்தேன். நக வெட்டலுக்கான நினைவூட்டல். குப்தாவின் முன்னேற்பாடு. சோம்பலுடன் எழுந்து முகம் அலம்பி அப்பாயிண்ட்மெண்ட் பேப்பரை டவுசரில் சொருகிக்கொண்டு புறப்பட்டோம். குப்தாவின் கறுப்புக்கண்ணாடி. கார், காருக்குள்ளே உயர் ரக நாய். இரண்டு பட்டன் கழட்டி விடப்பட்ட தென்னை மர படச்சட்டை, ஆறு பாக்கெட் உள்ள டவுசர் என விடுமுறைக்கு வந்த வெள்ளைக்காரன் போல இருந்தேன்.

நாய்களுக்கென்றே முடிவட்டவும், நகம் கழிக்கவும், மசாஜ் செய்யயும் என அந்த பார்லர் செயல்படுகிறது. மனிதர்களுக்கு முடிவெட்டும் கடையை விட மிக உயர்ந்த தரத்தில் இருந்தது. ஆறு வெள்ளிக்கு ஐந்து நிமிடத்தில் நான் வெட்டிக்கொள்ளும் தனபால் சலூன் கடையை இதனுடன் ஒப்பிடவே முடியாது. நாம் ஏன் அகிடா இனத்தில் ஒரு நாயாக பிறந்திருக்கக் கூடாது என்ற எண்ணமும் தோன்றியது. மைலோவைப் பார்த்தேன். நன்கு பழக்கப்பட்டவன் போல பிரத்யேக வடிவத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து காலை நீட்டினான். இரண்டு அழகிய ஒய்யாரப் பெண்கள் மைலோவின் கால்களைத் தங்கள் கைகளில் ஏந்தி அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.

மயிர்க்கழித்து, நுரை பொங்க அவனை ஓரிரு முறைக் கழுவி உலர்த்தி என்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவனில் வீசிய நறுமணம் என் வாழ்நாளில் நான் நுகர்ந்திடாதது. பட்டுபோன்ற மயிர்கற்றைகளில் தெரிந்த  மினுக்கம். நான் ஒரு பெண் நாயாக இருக்கும்பட்சத்தில் இந்த நொடியே ஊர் உலகம் குறித்த கவலையின்றி பிணைந்திருப்போம். 

காரில் மிக பொறுமையாக வீடு வந்து சேர்ந்தோம். மறுபடி பியர் எடுத்து மேசையில் அடுக்கி வைத்துக் குடித்தபடியே ஒரு ராமராஜன் படம் பார்த்தோம்.  80 இஞ்சில் டீவி கண்டுபிடிக்கப்பட்டதே குப்தா வீட்டிற்கு வந்தபோதுதான் அறிந்துகொண்டேன். என் வீட்டில் இப்போதும் கலைஞர் டீவிதான். தலையில் தட்டினால் கோடில்லாமல் ஓடும். அகன்ற திரையில் உதட்டுச்சாயத்துடன் நாயகனைப் பார்க்க எனக்கே காமம் சுரந்தது. அதன் நீட்சியில் வயிறு பசித்தது. மைலோவும் நானும் இந்த இரவில் நீண்ட தூரம் போனால் என்ன எனத்தோன்றியது. பின்பக்க பாக்கெட்டில் இரண்டு பியர் கேன் சொருகிக்கொண்டு மைலோவோடு கிளம்பினேன். எதிர்ப்படும் எதாவது ஒரு கடையில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது மிகப்பெரும் தவறாகிப்போனது. நாயோடு உணவருந்த எந்தக்கடையிலும் அனுமதிக்கவில்லை. 

பார்சல் வாங்கிக்கொண்டு வழியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருவரும் சாலையோரப் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டோம். அலைந்து திரிந்ததாலோ என்னவோ உணவு அவ்வளவு ருசியாக இருந்தது. மைலோ இப்படிப்பட்ட உணவை ருசித்திருக்க வாய்ப்பில்லை. அவன் அறையில் உரச்சாக்கு மூட்டை போல பல வண்ணத்தில் சீன, சப்பானிய எழுத்துக்கள் கொண்ட அவனுக்கான உணவுகள் இருந்தன. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிக்கன் கொத்து பரோட்டா வழித்து எடுத்து சாப்பிட்டான். போதாக்குறைக்கு என் கைகளையும் நன்றிப்பெருக்கில் நாவால் துடைத்தெடுத்தான். பின்புறம் துடைத்துக்கொண்டு வீடடைந்தபோது அதிகாலை நான்கு. 

மறுநாளைக்கான அட்டவணையில் நீச்சல் குளம் என்றிருந்தது. மனிதர்கள்தான் நீச்சலைப் பழகவேண்டும். ஏனைய பிராணிகள் அவசியமான நேரத்தில் தன்னாலே நீந்தும் ஆற்றல் பெற்றவை. நான் மைலோவைப் பார்த்தேன். பிராணிகளுக்கென்று நீச்சல் குளம் இருப்பதை அறிந்துகொண்ட நாள் இன்று. நீச்சல் குளங்களை நான் சினிமாவில் கண்டதோடு சரி. வில்லன்கள் கோப்பையை ஏந்திக்கொண்டிருக்கும் காட்சி, அல்லது வாழைத்தண்டு கால்களோடு நாயகி நீரிலிருந்து மேலேழும்பும் காட்சி,  உடனடியாக நினைவுக்கு வருவது இவைதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மைலோவோடு நாமும் நீராடலாம் என்றிருந்தேன். பிறகுதான் தெரிந்தது அங்கே நாய்களுக்கு மட்டுமே அனுமதி. 

அங்கே பெரும்பாலும் பணிப்பெண்களே நாய்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். நாய்கள் நீச்சலடிப்பதை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். வேடிக்கையாக இருந்தது. தவ்வியும், இடை புகுந்தும், எகிறிக்குதித்தும், ஒவ்வொரு முறை மேலெழும்பி வரும்போது உடலை சிலுப்புவதுமாக இருந்தது. நான் ஒரு கட்டையில் சாய்ந்து அயர்ந்துபோனேன். 

ஜீவிதத்தில் எவ்வளவு நாள் பெண் சுகம் காணாதிருந்தானோ தெரியவில்லை. ஒரு சீனப்பெண் தன் நாயை மைலோ தொந்தரவு செய்வதாக என்னை எழுப்பி புகார் செய்தபடி இருந்தாள். என்ன பதில் சொல்வதென குழம்புகையில் ஒருவர் வந்து காப்பாற்றினார். அவருக்கு நன்றி சொல்லி மைலோவை இழுத்தேன். அவன் சிலைபோல அதே இடத்தில் நின்றான்.

அதை இன்னும் கொஞ்ச நேரம் நீராட அனுமதி, அதைத்தான் உன்னிடம் கேட்கிறாது என்றார். நான் அட்டவணையை மீண்டும் சரிபார்த்தேன். ஒருமணி நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. மடித்து மீண்டும் பாக்கெட்டுக்குள் சொருகி மறுபடி கண்ணயர்ந்தேன். அவனாகவே சோர்ந்துபோய் வரட்டும் எனக்காத்திருந்தேன். அதன்படியே கண்கள் சொருக அயர்ந்தேன். நீண்ட நேரம் கழித்து மைலோ என்னிடத்தில் குழைந்து அமர்ந்தபோதுதான் வீட்டுக்குக் கிளம்பினோம். 

மறுநாள் அட்டவணையில் ஊசி போடுவதற்கென்று நேரம் பதியப்பட்டிருந்தது. குப்தாவின் மேல் எரிச்சலாக வந்தது. பலமாதங்கள் தள்ளிப்போட்டுவந்த நாய்ப்பணிகள் எல்லாவற்றையும் என் தலையில் கட்டிவிட்டுப்போனதுபோலத் தோன்றியது. குப்தாவும் அவர் மனைவியும் வேலைக்கு செல்பவர்கள். நாள்முழுக்க இவன் தனியாகவே இருப்பான். என்னைப்போலவே பகலில் உறங்குவானாக இருக்கும். பிறகு இரவில் வீட்டைப் பாதுகாப்பானா?

சமையலறையில் இருந்த டப்பாக்களில் இருந்த எல்லாவற்றிலும் ஒரு கைப்பிடி எடுத்து எதோ ஒன்றை சமைத்து சாப்பிட்டேன். ஆச்சரியமாக அது அத்தனை ருசியாக இருந்தது. மைலோவும் நன்றாகவே சாப்பிட்டான். 

ஊசி போடும் இடம் ஒன்றுதான் இலகுவான வேலையாக இருந்தது. கையில் உறையிட்ட அந்த டாக்டர் தன் மனைவியிடம் கூட இத்தனை இனிமையாக பேசியிருப்பாரா என்பது சந்தேகம்தான். என் வாழ்நாளில் ஒருவர்கூட இத்தனை அன்போடு என்னிடம் பேசியதில்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த சில வருடங்களில் நான் பேசியவை மிக சொற்பமான வார்த்தைகள்தான். மொய்நோட்டில் எழுதினால் கூட சில பக்கங்கள் மிச்சமிருக்கும். மைலோ என்னை விட மிக உயர்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்கிறான். அவன் மீது பொறாமை அதிகரித்தபடியே இருந்தது. விளக்கிலிருந்து வரும் பூதம் என்னிடம் என்ன வரம் வேண்டும் எனக்கேட்டால் நான் மைலோவாகவும், மைலோ நானாகவும் மாற வேண்டுவேன். அவன் நாளையிலிருந்து கார் கழுவுவான். நான் சொகுசாக 80 இஞ்ச் டீவியில் ஸ்லோமோஷனில் ஓடிவந்து மானைப் பிடிக்கும் சிறுத்தையினை ரசிப்பேன். 

டாக்டர் வாக்சின் ரிப்போர்ட்டை உறையிலிட்டு, நீ புதுசா இருக்கியே யார் என்று கேட்டார். குப்தாவுக்கு மச்சான் என்று அந்த நொடி தோன்றியதை சொல்லிவிட்டுக் கிளம்பினேன். 

நான்காவது நாள் முழுக்க பீரும் பேருமாக குடித்து உழன்று உறங்கினோம். பல வருட தூக்கத்தின் மிச்சங்களை தூங்கித் தீர்த்தேன். பசிக்கும்போதெல்லாம் மைலோ அருகில் வந்து பாதத்தை நிமிண்டுவான். எதையாவது செய்து தின்று மீண்டும் உறங்கினோம்.

ஐந்தாவது நாள். அன்று விடிந்தபோது உண்மையில் எனக்கு மிகுந்த கலக்கமாக இருந்தது. நாளையிலிருந்து நான் யாரோ மைலோ யாரோ என்றாகிவிடும் என்று நினைத்தபோதே மனம் கலக்கமுற்றது. கண்ணில் நீர் பெருகியது. நாய்க்காகவெல்லாம் நான் கலங்குவேன் என்று நான் நினைத்ததேயில்லை. இத்தனிமை வாழ்க்கை என்னை எத்தனை பலவீனமாக மாற்றிவிட்டிருக்கிறது. போர்வைக்குள் மைலோ அணக்கமாக இருந்தான். கைபொறுக்கும் சூடு போல அவன் உடலில் இருந்த தண்மையை எனக்குள் கடத்தியிருந்தான். என் மீதிருந்த டீசல் வாசம் அவனுக்குப் பிடித்திருக்குமோ என்னவோ. இருவருமே ஒன்றாகவே உறங்கி எழுந்தோம்.

அட்டவணையில் இன்று எதுவும் இல்லை. இரவு குப்தா வீடு திரும்புவார். நான் ஸ்டேஷனுக்கு சென்று கார் கழுவும் வாளி, ப்ரஷை கையில் எடுப்பேன். அவரவர் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குள் புகுந்துகொண்டாக வேண்டும். இந்த கடைசி நாளை மறக்க முடியாதபடி என்ன செய்யலாம் என்றபோதுதான் கடற்கரை நினைவுக்கு வந்தது. கடல்தாண்டி வந்திருக்கிறேன் ஆனால் வாழ்வில் கடலைக் கண்டதில்லை. உடனடியாக காரை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை பூங்காவுக்கு சென்றோம். 

ஏராளமான மனிதர்களால் நிறைந்திருந்தது. மெல்லிய அலைகளோடு தூரத்தில் கப்பல்கள் தெரிய கடல் அழகாயிருந்தது. அதை ஒட்டியபடி சென்ற சாலையில் நான் நடந்துகொண்டிருந்தேன். கால்கள் ஓய்வைக் கெஞ்சும் வரை நடக்க வேண்டும் என்ற வெறியோடு அதே சமயம் மிக மிக சாவதானமாக நாங்கள் நடந்தோம். ஐஸ்கிரீமை விரும்பிச் சாப்பிட்டான் மைலோ. ஒன்றாக கோலா அருந்தினோம். காது விடைத்தபடி அலையில் கால் நனைத்தோம். பர்கரை அவன் ஒரு கடி, நான் ஒரு கடி என பகிர்ந்தோம். ஓராயிரம் புதிய பொருட்களை நுகர்ந்து தன் நினைவுப் பெட்டகத்தில் சேமித்துக்கொண்டான். பலநூறு சக நாய் இனங்களை நுகர்வின் மூலம் தோழமை கொண்டான். நாய்களின் ஆதி குணமான கால் தூக்கி சிறுநீர் கழிப்பதை விருப்பத்தோடு நொடிக்கொருமுறை செய்தான். சில சமயம் ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்துசெல்வதுபோல மைலோவைத் தூக்கிக் கொண்டு நடந்தேன். ஓடினோம். உருண்டோம். களைத்து வீடடைந்தோம். 

குப்தா மறுபடி செந்நிற அங்பா உறையை கையில் திணித்தார். என்னையறியாமல் அதை வாங்கிப் பையில் திணித்துக்கொண்டபடி  கழுத்தோடு சேர்த்தணைத்து நான் மைலோவுக்கு விடை கொடுத்தேன். 

நான் திரும்பவும் என் ஸ்டேஷனுக்கு வந்து நுரை பொங்குகிற சிவப்பு நிற வாளியையும், தேய்த்து தேய்த்து பல்லிளித்த ப்ரஷையும் எடுத்துக்கொண்டு என் உலகத்தில் நுழைந்தேன்.

ஒரு நாள் அசதியாக சேரில் அமர்ந்தபடியே உறங்கியிருந்தேன். சரியாக ஒருவாரம் கழிந்திருந்தது. இருள் பிரிந்து வெளிச்சம் பிறக்கப் போகிற அதிகாலை நேரத்தில் புகைமூட்டமாக என் எதிரே மைலோ குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான்.