வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !! இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வார நாளில் வந்தாலும் வழமை போல மக்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர். விடாத மழையினூடேயும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் லிட்டில் இந்தியா பகுதியிலும் தீவின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளிலும் குறைவின்றி நடந்தேறின. நாட்டின் பல்லின பன்மத நல்லிணக்கத்தின் சான்றாக ஆண்டின் துவக்கத்தில் பொங்கல் விழா நிலைத்து நிற்கிறது.

மேலும், உலக அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பெரு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. புதிய அமெரிக்க அதிபரின் அதிரடியான வர்த்தகம் தொடர்பான அறிவிப்புகள் அனைத்து பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன. மத்திய கிழக்கில் தற்காலிகமானது என்றாலும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு இருதரப்பிலும் பரிமாற்றங்கள் நிகழும் நிலையில் அந்தப் பகுதியில் அமைதிக்கான வழியாக அமெரிக்காவிலிருந்து எழுந்துள்ள மற்றொரு அதிரடி அறிவிப்பு உலகத்தை வியப்பிலும் விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது. இவை பலவகைப்பட்ட உலகளாவிய பேரங்களில் தன் கை ஓங்கி இருக்க அமெரிக்காவின் தந்திரங்களா அல்லது உண்மையிலேயே அறிவிக்கப்பட்ட திசையில் நகர்வுகள் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.
சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.

