வெளிர் மண்ணுக்கு வண்ணமேற்றிய தமிழ்

பொன்.சுந்தரராசு

ஒரு நாட்டிற்குச் சுற்றுலா செல்வது பல வழிகளில் ஒருவரின் அறிவுக் கண்களைத் திறந்து பொது அறிவுப் பரப்பை விரிவுப்படுத்துகிறது. அப்படி ஓர் அரிய அனுபவம்தான் அண்மையில் கடந்த 03.12.2024 முதல் 11.12.2024 வரை துபாய்க்கு ஓர் இன்பச் சுற்றுலா சென்ற போது ஏற்பட்டது. குடும்ப நண்பர் சுரேஷ் தன் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொண்டபோது நானும் என் துணைவியார் சரோஜாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். எங்கள் இருவரின்  உடல் நலனைக் கருத்திற்கொண்டு தனியாகப் பயணம் செய்வது பொருத்தமாக இருக்காது என்ற மருத்துவரின் ஆலோசனையை ஏற்று துபாய் பயணத்தில் சேர்ந்துகொண்டோம். சுரேஷ் குடும்பத்திலிருந்து அவருடன் அவருடைய மனைவி சுஜாதா, பிள்ளைகள் அனிசா, அக்செத், தாயார் தையல்நாயகி  ஆகியோர் வந்திருந்தனர். பயணம் நெடுகலும் சுரேஷ் என்னையும் என் மனைவியையும்  கவனமாகப் பார்த்துக்கொண்டார். அதனால், ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் பயணம் அமைந்தது .

பாலைவனத்தில் முளைத்திருக்கும் பார் போற்றும் ஒரு பாங்கான நாடு துபாய். பாலைவனம் என்றால் நமக்கு உடனே தமிழர்கள் நிலத்தை அடிப்படையாக வைத்து வகுப்பட்ட நிலத்திணைதான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலத்திணைகளைக் கொண்டதாகத் தொடக்கத்தில் இருந்தது. பின்னர் ‘குறிஞ்சியும் முல்லையும்  முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிமம்’ கொண்டது. அப்போது நிலப்பகுதி ஐந்தாக எண்ணப்பட்டது. பாலை நிலப் நிலப்பகுதிகள் வறண்ட வறட்சி மிகுந்த பகுதிகள் என்று என்று மட்டுமே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வு அவலச்சுவை நிறைந்தததாக இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த எண்ணத்தை, அத்தகைய நினைவுப் படிமத்தை உடைத்து பாலைவனப் பகுதியும் மக்கள் வாழும் சோலைவனப் பகுதியாகலாம் என்பதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை இக்காலப் பாலைவனத்தில் தோன்றியுள்ள அரபு நாடுகள். 

அவற்றுள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துக் கவர்ந்திழுக்கும் வல்லமை பொருந்தியதாய்  துபாய் என்னும் நாடு இருக்கிறது என்று கூறலாம். துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா உலகத்தின் ஆக உயரமான கட்டடம். அது 163 மாடி உயரம் கொண்டது. வானத்தை முட்டி நிற்கும் நெடிதுயர்ந்த கட்டடம்! தலை நிமிர்ந்து பார்த்தால் கழுத்துவலி ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. அதனைத் துபாயின்அடையாளம் என்று சொல்வது பொருந்தும். அது மட்டுமா? மரங்கள், யானை, குதிரை போன்ற விலங்குகள், கட்டடங்கள் எனப் பல உருவங்கள் பூக்களாலே அலங்கரிக்கப்பட்ட மந்திரத் தோட்டம் (Magical Garden),  எதிர்கால மின்னலக்கத்தை நோக்கிச் செல்லும் பொருட்காட்சியகம் (museum for Future), துபாய்ச் சட்டம் (The Frame village) முதலியவை பாரோரைப் பிரமிக்க வைக்கின்றன. 

அபுதாபியில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான  ஷேய்க் ஜாயித் கிரேண்ட் பள்ளிவாசல் (Sheik Zayed Grand Mosque) பிரம்மாண்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு! ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் அமர்ந்து தொழுகை நடத்துவதற்கு ஏற்ற பரந்து விரிந்த  கூடம்!  உலகில் எல்லாவற்றிலும் முதன்மை நிலையில் இருக்க வேண்டுமென்ற துபாய் அரசாட்சியின் செயல் வடிவங்கள் இவை! இந்தப் பள்ளிவாசலும் துபாயில் உள்ள ஏனைய இடங்களும் நம்மை அற்புத உலகிற்கு இட்டுச் செல்லும் அதிசய இடங்கள்! அதனால், அவை சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் வியப்பில்லை. வார நாளிலேயே அலை அலையான மக்கள் கூட்டம்! ‘விண்டுரைக்க மாட்டாத விந்தையடா’ என்ற பாவேந்தரின் கவிதை வரிகளுக்குரிய ஆதாரங்கள் துபாயில்தான் காணக்கிடக்கின்றன. வார்த்தை வலைக்குள் அடக்க முடியாத அற்புத உருவாக்கங்கள் அவை!

1971இல் அபுதாபி (Abu Dhabi), துபாய் (Dubai), ஷார்ஜா (Sharjah), அஜ்மான் (Ajman), உம் அல் குவாய்ன்(Umm Al–Quwain),  ஃபுஜைரா (Fujairah) ஆகிய ஆறு நாடுகள் அமீரகம் என்ற குடையின்கீழ் இணைந்தன. 1972இல் ராஸ் அல் கைமா (Ras Al-Khaimah)வும்  இணைந்ததால் அமீரகத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை ஏழு ஆயிற்று. அபுதாபியே பெரியதும் செல்வ வளமும் பெற்ற அமீரக இணைப்பில் உள்ள நாடாகும். அதுவே அமீரகத்தின் தலைநகரமும்  ஆகும்.

என்னைப்போல் முதல் முறை துபாய் செல்வோர் வியப்பிலாய்ந்து உறைந்து போவதில் வியப்பபேதுமில்லை! மரம், செடி கொடிகளை நட்டு நகர்ப்புறத்தையும் நாட்டையும் நாம் அழகுபடுத்துகிறோம். ஆனால், துபாயில் விதம் விதமான வடிவங்களில் அமைந்து நெடிதுயர்ந்து நிற்கும் கட்டடங்களே அந்நாட்டை அழகுபடுத்துகின்றன. காணும் இடமெங்கும் கண்களை விட்டகலாக் கட்டடங்கள்! கோபுரங்கள்! இவை அனைத்தும் பாலைவனத்திலா பரந்து விரிந்து கிடக்கின்றன என்று வியந்து போகிறோம்!  அத்துணை  சிறப்பு பெற்ற துபாய் பயணத்திற்கிடையில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்புக்கும் மரியாதைக்குமுரிய முனைவர் சலீம் அவர்கள் முனைவர் ஜெயந்திமாலாவிடம் என் பயணம் பற்றிக் கூற, அவர் என்னுடைய இணக்கத்தைப் பெற்று நிகழ்ச்சி நிரலில் என் பெயரைச் சேர்த்து நானும் மற்ற தமிழ் அறிஞர்களோடு பேசுவதாகப் போட்டுவிட்டார். என்னுடைய பலம் பேசுவதும் எழுதுவதும் என்பதால் எனக்கு அந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியே.

2024ஆம் ஆண்டு அமீரகத் தமிழ்க் கலை விழா துபாயில் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஏர்போர்ட் மில்லினியத்தில் டிசம்பர் 8 ஞாயிறு அன்று மாலை 4:00 மணி அளவில் வெகுசிறப்பாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த  திரு.நாஞ்சில்நாடன், இளம் எழுத்தாளர் திரு.அஜிதன்,  அ.வெண்ணிலா, திரைத்துறை பிரபலம் நடிகர் ராஜேஷ், மேலும் பல முக்கிய பிரமுகர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருக்கும் ஜெயமோகன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் விழாவில் பங்கேற்க முடியாமல் போனதால் குவியத்தில் நேரலையில் தோன்றி விழாவில் குழுமியிருந்த அனைவரிடமும் உரையாற்றினார். கவிதைப் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கதைப் புத்தகங்கள் எனப் பல புதுப் படைப்புகள் பரணியின் சான்யோ டாஃனி தலைமையில் அனைத்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன. அமீரகத்திலேயே தமிழ் இலக்கியத்திற்காகச் செயல்படும் முன்னோடிக் குழுவான பரணிக் குழு ஒவ்வொரு வருடமும் எழுத்தாளுமைகளைக் கௌரவித்து வருகிறது. உலக அளவிலான இணையவழிக் கவிதைப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசும் பங்குபெற்ற கவிதைகளைப் புத்தக வடிவிலும் வெளியிடுகிறது. பத்திற்கும் மேற்பட்ட மழலை எழுத்தாளர்களை உருவாக்கி அவர்களின் புத்தக வெளியீடும் சிறப்பாக நடந்தேறியது.

பரணியின் நிறுவனர்கள் Dr.ஜெயந்திமாலா சுரேஷ், சானியா டாஃனி ஆகியோர் குறிப்பிடுவது “கலைக்கு வயது ஒரு தடைஇல்லை. கடல் கடந்தாலும் தமிழுக்கு முடிவில்லை!” என்பதாகும். ஒவ்வோர் ஆண்டும் ஐந்திற்கும் அதிகமான புதிய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்குவதும் தமிழின்பெருமையை உலகறியச் செய்வதுமே பரணியின் நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை நோக்கியே நிகழ்ச்சி பயணித்து நிறைவுபெற்றது. முதுபெரும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.