(நிகழ்வு) 11 நூல்கள் அறிமுகம்

ஆன்மீகமும் இலக்கியமும் – சிங்கப்பூரின்  நல்லிணக்க முகங்கள் 

தமிழறிஞர் அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் எழுதிய பன்னிரு பாடல், ஈழவள நாட்டில் பயிர்பெருக்க வாரீர், குறிஞ்சி சுவை, பாலைவனம், சிறார் பாடல்கள், பாத்திமா நாயகியார் மாலை, அப்பாஸியாக்கள், உமர் ரலி புராணம், அற்புத அகில நாதர், குத்புகள் திலகம் யாஸின் ரலி வரலாறு, மஹானந்தலங்கார மாலை உள்ளிட்ட 11 நூல்களின் அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர் சுல்தான் பள்ளி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்த குழுவில் அனைவரும் இளையர்களே என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. பற்று என்பது நாம் பயிலும் துறைமேல் கொண்டுள்ள பற்றின் இன்னொரு வடிவம். நாம் கொண்டுள்ள இலட்சியங்களின் மேல் இருக்கும் இன்னொரு பிடிப்பு, அந்தப் பற்றின் வழியாகவே நாம் நம் முன்னோடிகளை அணுகி அறிகிறோம். ஒவ்வொரு கணமும் நம் முன்னோடிகளையே தியானித்து, அவர்களையே எண்ணி, அவர்களிடமிருந்து நமக்குரியவை அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம் என்பதை ஆத்மார்த்தமாக குருவின் மேல் உள்ள பற்றுடன் இவ்வளவு ஆர்வமாக அபு சுப்ஹான் உள்ளிட்ட இளையர்கள் முன்னெடுத்த விஷயங்கள் என்னை வியக்க வைத்தன. இந்த நூல் வெளியீட்டு விழாவில் இன்னொரு வியப்பு இதில் உரையாற்றிய பெருந்தகைகள் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் தன் பெருமை பேசாமல் தமிழறிஞர் மவுலானா அவர்களின் சிந்தனைகளை முன்னிலைப் படுத்தினார்கள். 

இந்நிகழ்வில் பங்கேற்ற சிராங்கூன் டைம்ஸ் இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான ஷாநவாஸ் அவர்களின் ஆய்வுரை இளையர்களுக்கு பல புதிய செய்திகளை வழங்கியது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிங்கப்பூர் பல்வேறு வகையில் உதவி வருகிறது. நாம் அதை முறையாக அறிந்து பயன்படுத்த தவறி வருவதை வருத்தத்துடன் பதிவு செய்ததோடு, ஊடக அரங்கில் வளர்ந்து வரும் இளம் தமிழ் மொழி ஆர்வலர்களை ஊக்கப்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வழங்க எல்லோரும் முன்வர வேண்டும் என்ற ஆதங்கத்துடன் அவர் வெளிப்படுத்திய வேண்டுகோளை அவசியமானதாக அரங்கத்தில் அனைவரும் கருதினர்.

சிங்கப்பூரின்  ஆரம்பகால தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிய பெருமக்களை  நினைவு கூர்ந்து அதில் இன்றளவும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வரும் தமிழர் அமைப்புகளை மீண்டும் நினைவு கொள்ளத்தக்க வகையில் அவர் வெளிப்படுத்தியது பலரும் அறிந்துகொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருந்தது. தமிழறிஞர்  அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள்  இலக்கிய நூல்கள், காலத்திற்கும் பேசப்படும் வகையில் கருத்துக்கள் பொதிந்துள்ளதை விவரமாக எடுத்துரைத்து அத்தகைய நூல்களை இளைஞர்கள் படிக்கவும் பிறகு அவர்கள் அது போன்ற நூல்களைப் படைக்கவும் வேண்டும் என்ற பெரும் பேரார்வத்தை அந்த உரை வெளிப்படுத்தியது .

மனிதர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப்பாயும் சொல்லாற்றல் கொண்டவராக, இஸ்லாமிய போதகராக, திருக்குர் ஆன், ஹதீஸ், மார்க்கச் சட்டங்களுக்கு விளக்கம் கூறுபவராக, கவிஞர்கள் போற்றும் கவிஞராக வாழ்ந்த மவுலானா அவர்களை பொறுத்தமான முறையில் தங்கள் உரைகளில் வெளிப்படுத்திய முனைவர் சலீம், புதுமைத் தேனி அன்பழகன், முகம்மது அலி ஆகியோர் தாங்கள் கண்ட தமிழ் அறிஞரின் உன்னத குணங்களை அவையோருக்கு வெளிப்படுத்தினர் 

அறம் என்பது ஒரு சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள பொதுவான அடிப்படை. அச்சமூகத்தையே உருவாக்கியுள்ள அறத்தை பற்றிய ஞானிகளின் கருத்துக்கள் நூல்களில்  வாசிக்க கிடைத்தாலும், தான் பயணம் சென்ற இடத்தில் கண்ணில் பட்ட  சொற்களை மனதில் சுமந்து ஒரு சொல் மாறாமல் மவுலான அவர்களின் இயைந்த எண்ணங்களோடு பொருத்தி அவையோர்களை வியப்பில் ஆழ்த்தினார்  முனைவர் காதர் அவர்கள்.

அறிவைத் தேடுவதில் நதியை போல் இரு

கருனையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு 

பிறரின் குறையை மதிப்பதில் இருளாகிவிடு

கோபத்திலும் சீற்றத்திலும் மரணித்து விடு

பணியிலும் அடக்கத்திலும் பூமியைப் போல் இரு.

தாங்கிக் கொள்வதில் கடலை போல் இரு

என்னவாக இருக்கிறாயோ அதுவாக இரு….

இஸ்லாம் ஓர் மெய்யியல் வெளிப்பாடு. மெய்மை எங்கு எப்படி வெளிப்பட்டாலும் அதை அறிவது ஒரு ஞானத்தேடல் கொண்டவரின் இயல்பு. தமிழறிஞர் மவுலானா அவர்களின் நூல்களும், வாழ்வும் போற்றத்தக்கவை. என்றும் நினைவில் கொள்ளத்தக்க அவர்தம் வாழ்வைக் கொண்டாடிய சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

mrcttp@gmail.com