(மொழிபெயர்ப்புக் கவிதை)

இருந்தும் நான் எழுகிறேன்! (மாயா ஏஞ்சலோ / ஆங்கிலம் / Still… I Rise ! )

கசப்பான திருகப்பட்ட பொய்களைக் கொண்டு 

வரலாற்றில் என்னை நீங்கள் கீழ்மைப்படுத்தினாலும்,

சகதியில் என்னைச் வீழ்த்தி மிதித்தாலும்

ஒரு தூசினைப் போல் நான் எழுவேன்.

எனது துடுக்குத்தனங்கள் உங்களைக் கலங்கடிக்கிறதா?

உங்களின் முகங்கள் ஏன் இருண்டிருக்கின்றன?

என் வீட்டினுள் எண்ணெய்க்கிணறுகள் கொண்டவளைப் போல நான் நிமிர்ந்து நடப்பதாலா?

நிலவையும் சூரியனையும் போல,

அலைகளின் வருகை உறுதியென்பது போல, 

நம்பிக்கைகள் துள்ளி எழுவதைப் போல 

நான் எழுவேன்.

குனிந்த தலையும் தாழ்த்தப்பட்ட கண்களோடும்

கண்ணீர்த்துளிகளைப் போல 

கீழ் இறங்கிய தோள்களோடும்

பலவீனமான எனது ஆன்மா அழுதபடி 

உடைந்திருப்பதை நீங்கள் காண விரும்புகிறீர்களா?

எனது கர்வம் உங்களைப் புண்படுத்துகிறதா?

என் வீட்டுக் கொல்லையில் தங்கச் சுரங்கங்கள் தோண்டுவது போல் நான் சிரிப்பதாக எண்ணி

அவ்வளவு கடினமாக எடுத்துக்கொள்ளாதீர்.

என்னை உங்களது சொற்களால் சுடலாம்.

உங்களது கண்களால் என்னை வெட்டலாம்.

உங்களின் வெறுப்பால் என்னைக் கொல்லலாம். 

எனினும், காற்றைப் போல நான் எழுவேன்.

எனது கவர்ச்சி உங்கள் அமைதியைக் குலைக்கிறதா?

எனது கால்களுக்கிடையில் வைரம் இருப்பதைப் போல நான் நடனமாடுவது

உங்களுக்கு வியப்பை அளிக்கிறதா?

வரலாற்றின் அவமானகரமான குடில்களிலிருந்து நான் எழுகிறேன்

கடந்த காலத்தில் வேரூன்றிய வலிகளில் இருந்து 

நான் எழுகிறேன்

கருப்பு நிறப் பெருங்கடல் நான், வேகமாக உயர்ந்து என் எல்லைகளை விரிவாக்கி

அலைகளின் தத்தளிப்புகளைத் தாங்கி மேன்மையுறுகிறேன்.

பயங்கரமானதும் அச்சம் மிகுந்த இரவுகளை விடுத்து 

நான் எழுகிறேன்.

ஒரு தெளிவான அற்புதமான விடியலில் 

நான் எழுகிறேன்.

எனது மூதாதையர் அளித்த பரிசுகளைக் கொணரும் நானே ஒரு அடிமையின் கனவும் நம்பிக்கைவும்.

நான் எழுகிறேன்.

நான் எழுகிறேன்.

நான் எழுகிறேன்.

mpriya.be@gmail.com