(நேர்காணல்) வேர்களின் வியர்வையும் களமாடிய சொற்களும்

கவிஞர் கி.கோ.கோவிந்தராசு அவர்களுடன் அவருடைய படைப்புகள் குறித்த கலந்துரையாடல்.

வேர்களின் வியர்வை – கேள்விகள்: ப்ரியா ஜெய்குமார்

வேர்களின் வியர்வை கவிதைத்தொகுப்பில் எல்லா உறவுகளுக்கும் இடம் தந்திருக்கிறார். அப்பா, அம்மா, உடன்பிறப்புகள், சொந்தம் பந்தம் என்று கவிதைகள் எழுதியவர் காதலைக் கைவிட்டது ஏன்?  இத்தொகுப்பில் மனைவியைப் பற்றியோ தான் நேசித்த அல்லது தன்னைக் கவர்ந்த பெண்ணைப் பற்றியோ எழுதாமல் போனதன் காரணம்  என்ன?

மனைவியைப் பற்றி இந்தத் தொகுப்பில் பாடவில்லை என்பது உண்மைதான். நூலின் கடைசிக் கவிதையில் சிறிளவு மனைவி பற்றிச் சொல்லியிருப்பேன். ஆனால் என்னுடைய அடுத்த இரண்டு தொகுப்புகளில் விரிவான கவிதையைப் பார்க்க முடியும்.

காதல் கவிதை எழுதியதில்லை காரணம் காதல் என் வாழ்வில் திருமணத்திற்கு முன்பு வரவே இல்லை. ஆண்கள் மட்டுமே பயிலும் அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்ததால் பெண்களை நிமிர்ந்து கூடப் பார்த்தது கிடையாது. கல்லூரியும் ஆண்கள் மட்டுமே பயிலும் கல்லூரி (மதுரை யாதவர் கல்லூரி). இதனால் கூட காதலும் காதல் கவிதையும் வராமலே போயிருக்கலாம்.

ஏழாம் வகுப்பு படித்தபோது அங்கே என் வகுப்பு தோழியோடு ஒரு விதமான அன்பு இருந்தது அது காதலா வேறு ஏதேனும் ஒன்றா சொல்லத் தெரியவில்லை. (முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி).  ஒருமுறை கவிஞர் கண்ணன் என்னைப் பற்றிய  வாழ்த்துக் கவிதை ஒன்றில் “இவன் எதைப்பற்றிப் பாடச் சொன்னாலும் பாடுவான், ஆனால் காதலைப் பற்றிப் பாடு என்று சொன்னால் காத தூரம் ஓடிச் சென்று திரும்பிப் பார்ப்பான்” என்று எழுதி இருந்தார். அடுத்து வர இருக்கிற பெருங்கனவு என்ற தலைப்பிலான  கவிதை தொகுப்பில் காதல் பற்றிய கவிதை இரண்டு இடம் பெற்றுள்ளன என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

மரபுக் கவிதை மற்றும் புதுக் கவிதை என்று இரண்டிலும் நன்கு எழுதக்கூடிய கவிஞரின் நவீன கவிதையைப் பற்றிய பார்வை என்னவாக இருக்கிறது?

புதிதாக ஒன்று வரும் பொழுது பழமையைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் எதிர்ப்பார்கள் என்பது வழக்கம். மருத நிலம் உருவானபோது குறிஞ்சி நிலத்தவர்கள் எதிர்த்தார்களலாம் இதுவே பாரதப் போர் என்ற மகாபாரதத்தின் கருப்பொருள்.

அன்று தொடங்கி இன்று வரை இது இயல்பே. அப்படி நவீன கவிதைகளை மிகவும் கடுமையாக எதிர்த்தவன் நான். ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சம் அந்தக் கவிதையின் வாசனையை நுகர ஆரம்பித்து இருக்கிறேன். நான் கொஞ்சம் பழமைவாதி என்பதனால் முழுமையாக நவீனத்தின் பக்கம் செல்ல விரும்பவில்லை, முயற்சியும் எடுக்கவில்லை. மரபு கவிதைகள் எழுதுவதில் எனக்கு ஒரு போதை. உறவுகள் போல புதுக்கவிதை நவீன கவிதை போன்றவை இருந்தாலும் மரபுக் கவிதை என்பது தாய் .தாயை மறப்பது தவறு. தாயைப் போற்றுவதே தலையாய கடமை என்ற நோக்கில் மரபை மதிக்கிறேன் மற்ற கவிதைகளைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

ஒரு நிகழ்வில் கவிஞர் நவீன கவிதைகளை அனுகுவதற்கு (அதிலிருக்கும் படிமம் குறியீடுகள் இருண்மை போன்றவற்றை) புரிந்துக்கொள்ளத் தொடங்கியருப்பதாக சொன்னார். தமிழ்மொழியில் நன்கு புலமை உள்ள கி.கோ அவர்களிடமிருந்து நல்ல நவீன கவிதைகளை கூடிய விரைவில் எதிர்ப்பார்க்கலாமா?

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் “

என்ற குறளுக்கு ஏற்றவாறு எனக்கு மரபுக் கவிதை நன்றாக எழுதத்தெரிகிறது. அதை மட்டுமே நான் செய்துவிட்டு போகிறேன். “புதிதாக ஒன்றை முயற்சி செய்து தோற்பதை விட நன்றாகதா தெரிந்ததைசா செய்வதே நல்லது” என்பதனால் நான் நானாகவே இருந்துவிட விரும்புகிறேன். அதனால் நான் ஒருபோதும் நவீன கவிஞர்களுக்குப் போட்டியாக வர மாட்டேன்.

களமாடிய சொற்கள் – கேள்விகள்: க.பாலமுருகன்

வேண்டுவன எனுந்தலைப்பில் எழுதிய கவிதைக் கனவு பலித்ததா?

வேண்டுவன என்ற தலைப்பில் நான் கேட்ட நல்ல மனைவி, மக்களைப் பெற்று விட்டேன். மற்றவை எல்லாம்  கனவாகவேதான் இருக்கின்றன.

“காணி நிலம் வேண்டும் – நானே

காட்டை உழ வேண்டும்

கேணி ஒன்று வேண்டும் – மீன்கள்

கிணற்றில் வளர்க்க வேண்டும்”

காணி நிலமும் இல்லை காடு உழ மாடுமில்லை. கேணியும் இல்லை மீன்களும் இல்லை.

“வீட்டின் முற்றத்திலே – இரண்டு வேப்பமரம் வேண்டும்

வெட்கை  கிளம்பும் எனில் – வேம்பு

விசிறி விட வேண்டும்”

5 சென்ட் நிலத்தில் வீடு கட்டத்தான் இடமிருந்தது. மரம் வளர்க்க இடம் இல்லை. இப்படி எல்லாம் நனவாகாமல் நழுவிக் கொண்டே தான் செல்கிறது.

⁠பள்ளிக்கூடம் வான்மீதும், படுக்கை கடலுக்குள்ளேயும் என்ற கற்பனைக்குப் பின்னாலுள்ள சிந்தனையின் தூரத்தைப்பற்றிக் கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன்.

கல்வி என்பது மிக உயர்ந்த  செல்வம். அதைத் தரக்கூடிய பள்ளிக்கூடம் என்பது உயர்ந்த இடம் என்பதைக் குறிப்பதற்காக “பள்ளிக்கூடம் வான் மீதும்” என்று குறிப்பிட்டேன். உயர்ந்த ஒன்றைச் சொல்லிவிட்டு அடுத்ததாக இன்னொன்றைச் சொல்லும்பொழுது கொஞ்சம் தாழ்வானதாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்காக “படுக்கை கடலுக்குள்ளேயும்” படுக்கை என்பது உறக்கம் சார்ந்த ஒன்று; அது அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஆழ்கடல் அமைதியானது என்பதால் அந்த உவமையைக் கையில் எடுத்துக்கொண்டேன். எதுகை மோனைக்காகக் கையாண்டதுதான் என்றாலும் இவ் வரிகள் எந்தவித இடர்பாடும் இன்றி இயல்பாகத் தோன்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் பல அமைப்புகளிலும் கவிதை படைத்த அனுபவத்தில் இருந்து, சிங்கப்பூரின் கவிதை இலக்கியப் புலப்பாட்டுத் தொலைவின் எல்லைகளைப் பற்றிக் குற்றிப்பிட வேண்டுகிறேன்.

சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலும் சில அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களிலும் கவிபாடிய அனுபவம் எனக்கு உண்டு. சிங்கப்பூரைக் காட்டிலும் கவிதையை, குறிப்பாக மரபுக் கவிதையை ரசிக்கும் மக்கள் மலேசியாவில் அதிகம் உண்டு.

சிங்கப்பூரில் கவிமாலை, சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், மக்கள் கவிஞர் மன்றம், மாதவி இலக்கிய மன்றம், சொல்லாடும் முன்றில், இலக்கிய வட்டம், சிங்கை தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 வசந்தம் தொலைக்காட்சி என்று பல இடங்களில் கவி பாடி உள்ளேன். மேடைக் கவிதைகளுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இன்றும் இருக்கிறது. பொதுவாக கவியரங்கக் கவிதைகள் எதுகை மோனை இயைபு என்று மரபில்  இருந்தால் அதற்கு மதிப்பு அதிகம்.

நாம் படித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகத்தில் எழுதப்படும் கவிதைகள், மற்றும் அதன் வடிவம் மேடைக் கவிதைகளில் இருந்து சற்று மாறுபட்டது. கவிஞரேறு அமலதாசன், பாத்தென்றல் முருகடியான், பாத்தேறல் இளமாறன்,ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் போன்று மரபுக் கவிதைகளில் சிறந்து விளங்கிய  கவிஞர்களைக் கொண்ட சிங்கப்பூர் இன்று புதுக்கவிதை நவீன கவிதை இவற்றையும் கடந்து பின் நவீன கவிதை என்ற வகையில் கவிதையின் போக்கு மாறி வருவதைக் காண முடிகிறது. எளிமையும் புதுமையும் சேர்ந்த கவிதைகளைக் படைக்கின்ற பல கவிஞர்கள் சிங்கப்பூர் தமிழ்க் கவிதை வட்டத்துக்குள் உள்ளனர். “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்கிற முறையில் இது வரவேற்க தகுந்த ஒன்றே.

பிரிவுத்துயரைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது பிரிவை உணரவைக்கும் கவிதைகளாக உள்ளனவே, நீங்கள் பிரிவை முழுமையாக கவிதைகளில் வடித்ததாக உணருகிறீர்களா?

சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபு தேசங்களில் பணிபுரிகின்ற அயல்நாட்டு ஊழியர்களின் கவிதைகளில் நிறைந்து கிடக்கும் பொதுவான கருப்பொருள் பிரிவுத்துயர் மட்டுமே. வெளிநாட்டு ஊழியர்களாக இருக்கும் கவிஞர்கள் இந்தக் கருப்பொருளில் பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் சில வரிகளைப் பாடி இருக்கிறேன். ஆனால் பிரிவு துயரைப் பற்றி முழுமையாகப் பாடியதாகக் கருத முடியாது. போகிற போக்கில்  தொட்டு விட்டுச் சென்றிருக்கிறேன் அவ்வளவுதான். சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களின் கவிதைகளை விட மிக ஆழமாக அரபு தேசங்களில் பணி புரிகின்ற ஊழியர்களின் பிரிவுசார் படைப்புகள் இருக்கின்றது என்பது என் கருத்து. “எங்கே வலியும் வேதனையும் அதிகமாக இருக்கிறதோ, அங்கேதான் மிகச் சிறந்த படைப்புகள் வெளிவரும்” என்கிற கோட்பாடு பொய்யில்லை. இங்கே அது குறைவு தான் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். பிரிவுத் துயரின் வலிகளைக் குறைப்பதற்கு இதுபோன்ற கவிதைகள்  மருந்தாக அமைகிறது என்பதும் உண்மையே.

“முல்லையே உன் முகம் பாரேனோ- எந்தன்

மூச்சினை உன் மடி சேர்ப்பேனோ

கல்லிலா ஆனது மனித மனம் – அது

காதலின் செல்களால் செய்ததன்றோ”

என்ற இந்த வரிகள் எனையே வியக்க வைக்கும் சொந்த வ(ரி)லிகள் .

கம்பம் பழனிவேல் என்ற கவிமாலையின்  முன்னாள் கவிஞர் ஒருவர்

“ஊரிலே வெல்லம் என்றால்

நிவாரண செலவெனக்கு

உறவுகள் பிள்ளை பெற்றால்

பேறு காலச் செலவெனக்கு” என்று தொடங்கி

“என் பிள்ளை எனைப் பார்த்து மாமா என அழைத்தது தான் மிச்சம்” என்று முடித்திருப்பார். இதை எல்லாம் பார்க்கும் போது என் கவிதை சுமார் தான்.

ப்ரியா ஜெயக்குமார்க.பாலமுருகன்கி.கோவிந்தராசு