(கட்டுரை) எழுத்தாளர்களின் கனவு இல்லம்

எழுத்தாளர்களுக்கு உள்ள சவாலே, நினைத்ததை எழுதுவதற்கு நேரமும் சூழலும் சரிவர அமைவதில்லை என்பதுதான். இந்தியாவிலுள்ள அர்ஷியா, அமெரிக்காவிலுள்ள கிப்ஸன் என்ற இரு எழுத்தாளர்கள் இதை மனத்தில்கொண்டு 2008ஆம் ஆண்டில் தொடங்கியதுதான் ‘சங்கம் ரெசிடென்சி’ (Sangam Residency) எனும் திட்டம். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் உள்ள ‘தி ஜாமூன்’ (The Jamun) என்ற இல்லத்தில் செயல்படும் இந்த வசிப்பிடம், எழுத்தாளர்களின் எண்ணங்களுக்கு வண்ணமளிக்கப் பெரிதும் துணைபுரிகிறது.

சங்கம் உறைவிடத் திட்டத்தின்படி நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் சர்வதேச எழுத்தாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்று அதிலிருந்துதான் ஒரு மாதத்திற்கு ஆறு எழுத்தாளர்கள் வீதம் மொத்தம் 18 எழுத்தாளர்களைத் தேர்வு செய்கின்றனர். படைப்பாளி என்ற அடிப்படை ஒன்றே இவர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமையாகும். வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் ஒரே கூரையின் கீழ் தங்கி எழுதவும் கலந்துரையாடவும் நல்ல வாய்ப்பைப் பெற முடிகிறது. பல்வேறு மொழி எழுத்தாளர்களுடன், பிரபல தமிழ் எழுத்தாளர்கள் தேவிபாரதி, ஜி.குப்புசாமி, சல்மா, பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், சா.கந்தசாமி, சுகுமாரன், ஜே.பி.சாணக்யா போன்றோர் இங்குச் சென்று தங்கள் படைப்பை எழுதியுள்ளனர்.

இதற்காகத் தேசியக் கலை மன்றம் ஜூலை மாதத்தில் விண்ணப்பத்தை வெளியிடுகிறது. எழுத்தாளர்களின் சுய விவரம், எதனால் சங்கம் வசிப்பிடத்திற்குப் போக விரும்புகின்றனர் என்பனபோன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அங்கிருக்கும் ஒரு மாதகாலம் எதைப்பற்றி எழுதப் போகிறோம் என்பதையும் எழுதி தேசியக் கலை மன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நாம் எழுதப் போகும் படைப்புதான். எந்தவொரு செயலை எடுத்துக்கொண்டாலும் வழக்கமாக எல்லாரும் செய்வதையே செய்யாமல் சற்று மாறுபட்டு செய்யும்போதுதான் தனித்துவம் கிடைக்கும். தேர்வு செய்யப்படும் எழுத்தாளரின் போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தேசியக் கலை மன்றமே வழங்குகிறது.

வெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்களது கலாசாரப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இம்மாதிரியான அனைத்துலக வசிப்பிடங்கள் பெரும் பங்காற்றுகின்றன. பிற நாட்டு எழுத்தாளர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள, நமது எழுத்தின் தரத்தை உயர்த்திக்கொள்ள இது நல்வாய்ப்பாக உள்ளது. தேசியக் கலை மன்றம், சங்கம் வசிப்பிடத்திற்கு 2022இலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு தமிழ் எழுத்தாளரை அனுப்பி வைக்கிறது. இந்தப் பட்டியலில் எழுத்தாளர்கள் அழகுநிலா, ஹேமாவிற்கு அடுத்து  நான் சென்றுள்ளேன்.

சங்கம் இல்லத்திற்குச் செல்வதற்கு நான் தேர்வாகியிருப்பதாக தேசியக் கலை மன்றத்தின் அதிகாரி குமாரி ரச்சனா சொன்னார். அதைக் கேட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தீபாவளி அன்று வெடிச் சத்தத்துடன் பெங்களூர் என்னை வரவேற்க, சங்கம் இல்லத்திற்குச் சென்றேன். எழுது… எழுத்தாளர்களுடன் பேசு… அவ்வளவுதான் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு? இப்படி ஒரு நாள் கிடைத்தாலே பெரிய விஷயம். இத்திட்டத்தின் வழி கிடைத்த நான்கு வாரங்களும் என் வாழ்வில் மறக்க முடியாதவை!

மனத்திற்கு இதமானக் குளிர், குழந்தைபோலக் கொஞ்சும் வெயில் எனச் சிறப்புபெற்ற அருமையான நகரம் பெங்களூர். மேலும், தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற பரபரப்பிலிருந்து சற்றே உள்ளடங்கி ஜாமூன் இல்லம் உள்ளது. இரண்டு தளங்கள் உள்ள வீட்டில் ஆறு அறைகள் உள்ளன. சிறிய நூலகம், பெரிய கூடம், சமையலறை, பால்கனி ஆகியவை உள்ள அழகிய இல்லம். மரங்கள் அடர்ந்த பகுதியில் வீடு இருப்பதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் இயற்கை நம்மை வசீகரிக்கும். வீட்டுக்குப் பக்கத்திலே பெரிய பூங்கா உண்டு. பகலில் துள்ளித் திரியும் அணில்களும் இரவானால் மரத்திற்கு மரம் பறக்கும் வௌவால்களும் மனத்திற்கு இதமூட்டும். பால்கனிக்குப் பக்கத்தில் உள்ள அறை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கதவைத் திறந்து வைத்துவிட்டால் இயற்கையோடு ஒன்றிவிடலாம். மேலும், வாசிப்புக்குத் தீனி போட, ஏற்கனவே சங்கம் வசிப்பிடத்திற்கு வந்து சென்ற எழுத்தாளர்களின் நூல்களும் உள்ளன.

ஒரு வீடு தள்ளியிருக்கும் ஜாமூன் இல்லத்தின் உரிமையாளர் திருமதி துருப்தியின் வீட்டிலிருந்து மதியம் ஒரு மணிக்கும் இரவு ஏழரைக்கும் அருமையான உணவு வந்துவிடும். நமக்கு விருப்பப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம். இரவு உணவை மட்டும் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டால் நன்றாகயிருக்கும் என்றார்கள். நாங்கள் அனைவருமே எப்போதுமே ஒன்றாகதான் சாப்பிட்டோம். எங்களை வழிநடத்துவதற்காக திரு. வினோத்  என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

காலை உணவையும்  ஞாயிறு உணவையும் மட்டும் நாமே தயாரித்துக்கொள்ள வேண்டும். எல்லாப் பொருட்களும் சமையலறையில் இருக்கும். ரொட்டியும் ‘கார்ன் ஃபிளேக்சும்’ பசியாறுவதற்கு எனக்குக் கைக்கொடுத்தன. ஞாயிறுகளில் அனைவரும் ஒன்றாக வெளியில் சென்று சாப்பிட்டோம். பொழுதுபோக்கிற்காக ஒரு சிலர் அவ்வப்போது சமைத்தாலும், மறந்தும் அடுப்பைத் தொடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்!

போபால், டெல்லி, காஷ்மீர் என இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்து Teji Grover, Nicholas Rixon, Aashna Jamal; ஆஸ்திரேலியாவிலிருந்து Michelle Cahill மற்றும் கனடாவிலிருந்து கவிஞர் சேரன் ஆகிய எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.

இதில் இருவர் நாவலை முடித்துவிட்டு கடைசி கட்டமாகச் செப்பனிடுவதற்காக வந்திருந்தனர். இருவருமே முப்பதுகளில் இருப்பவர்கள்தான். இந்த வயதில் இவர்களால் நாவல் எழுத முடிகிறதே என எனக்கு வியப்பாய் இருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர் நாவலின் இறுதிப் பகுதியை எழுதி முடிக்க வந்திருந்தார். அவர் ஒரு மருத்துவரும்கூட. மருத்துவம் தொழில் முறை, அதில் சவால் அதிகமில்லை. எழுதுவதில் பல்வேறு சவால்கள் உள்ளன என்பார். போபாலிலிருந்து வந்தவரும் சேரன் அவர்களும் கவிதை எழுதுவதற்காக வந்திருந்தனர்.

வேற்று மொழி எழுத்தாளர்களுடன் சரளமாகப் பேச முடியுமா என்ற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அது ஒரு குறையாகத் தெரியாமலே நாட்கள் போயின. எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்பற்றி நிறைய பேச்சு அடிபட்டது. முக்கியமாகப் பதிப்பாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் நிலவும் கருத்து வேறுபாடுகள் பேசப்பட்டன. சிங்கப்பூரில் பெரும்பாலும் சுய பதிப்பில் நூல்கள் வெளியிடுவதால் இத்தகைய சிரமங்களை நான் படவில்லை என்றேன். பதிப்பாளர் மூலமாகப் புத்தகம் போட்டால் பல்வேறு நாடுகளுக்கு நமது படைப்புகள் போக வாய்ப்புண்டு. மேலும், எழுத்தாளர் ஏன் செலவு செய்து நூலை வெளியிட வேண்டும் என்றும் கேட்டனர்.

என்னுடைய கதைகளை ஏன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. அங்குப் போன பிறகுதான் இதைச் செய்யவில்லை என்பது பெரிய குறையாக எனக்குப் பட்டது. தமிழில் எழுதினால் சிறிய பரப்பில்தான் போகும். அதுவும் சிங்கப்பூரில் உள்ள நீங்கள் சொந்தப் பதிப்பில்தான் வெளியிடுகிறீர்கள். எத்தனை பேருக்கு உங்கள் நூல்கள் சென்றடையும் என்றும் வினவினர். இனி அதற்கான வேலையில் ஈடுபடுவதாகச் சொல்லியுள்ளேன்.

ஓர் எழுத்தாளரின் படைப்பை இன்னொரு எழுத்தாளர் படித்து அதிலுள்ள குறைபாடுகளைத் திறந்த மனத்துடன் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. ஓர் எழுத்தாளர் ஏற்கனவே தான் எழுதிய நாவலின் களத்தை விரிவுபடுத்தி எழுத வந்திருந்தார். என்னுடைய ‘நாலெழுத்து அறியாதவ’ சிறுகதையை வேறு வகையில் எழுதிப் பாருங்கள் என எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்லியிருந்தார். என்னுடைய சோம்பேறித்தனத்தால் அதை நான் இன்னும் செய்யவில்லை. அந்த எழுத்தாளர் ஒரு நாவலையே மாற்றி எழுதுகிறார் என்பது எனக்கு வியப்பளித்தது.

பெற்றோரை விபத்தில் பறிகொடுத்து தாத்தா பாட்டியிடம் வளரும் சிறுமியைப்பற்றி ஒருவர் நாவல் எழுதுகிறார். கேள்விப்படும் செய்திகள் எப்படித் திரிந்து உருமாறுகின்றன என்பதை மையப் புள்ளியாக வைத்துக் கதை எழுதுகிறார். அவர் சொன்ன கதையைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

‘குட்டிப் பை’ என்ற தலைப்பில் ஒருவர் நாவல் எழுதி முடித்துவிட்டார். அதைப் பெரிய எழுத்துகளில் நகலெடுத்து அதிலுள்ள குறைபாடுகளைக் களைந்து செம்மைப் படுத்திக்கொண்டிருந்தார். கருவிலிருக்கும் ஆட்டின் குட்டியைச் சமைத்து தயாரிக்கப்படும் உணவு ‘குட்டிப் பை’ என்பது. இது ஒரு ஆங்கிலோ இந்திய உணவாகும். எனக்கு இப்படியொரு உணவு இருப்பது அப்போதுதான் தெரிந்தது. இந்த உணவை சில நாடுகளில் தடை செய்தும் உள்ளனராம். தனித்து விடப்பட்ட ஆங்கிலோ இந்திய சிறுவனைபற்றி கதை எழுதுவதாகச் சொன்னார். அவரும் தனிமையில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன்தான். இலக்கியம் மனவுணர்வுகளை எந்தளவுக்கு வெளிப்படுத்துகிறது என்பதை நான் உணர்ந்த நெகிழ்வான வேளை அது.

இன்னும் விலகாத ஈழத்தின் வலிகளை கவிஞர் சேரனின் பேச்சில் உணர முடிந்தது. தானாகவே முன் வந்து என் கதையை மொழிபெயர்ப்பு செய்ததை என்னால் மறக்கவே முடியாது.

நான் சங்கம் இல்லத்தில் இருந்தபோது, மூன்று வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவரவர் எழுதிய மற்றும் எழுதிக்கொண்டிருக்கும் படைப்பிலிருந்து சிறு பகுதியை வாசிக்க வேண்டும். அதன் பிறகு அதுகுறித்த கலந்துரையாடலும் நடக்கும். என்னுடைய கதைகளிலிருந்து சில பகுதிகளை கவிஞர் சேரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். மற்ற மொழியினர் கதையைப் புரிந்துகொள்ள இது நல்வாய்ப்பாக அமைந்தது. இரண்டு நிகழ்ச்சிகள் ஜாமூன் இல்லத்திலேயே நடைபெற்றன. அந்நிகழ்ச்சிகளுக்கு, சக எழுத்தாளர்களின் நண்பர்களும் ஏற்கனவே சங்கம் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும் வந்திருந்தனர்.

மூன்றாவது நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள IIHS (Indian Institute for Human Settlements) கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. வார நாளில் நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்துரையாடலும் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சங்கம் இல்லத்தில் எழுதிய என்னுடைய படைப்பை ஓரளவு நிறைவு செய்துள்ளேன். இன்னும் அதைச் செப்பனிடும் பெரிய வேலை எஞ்சியுள்ளது. என்னாலும் கதை எழுத முடியும் என்று எனக்கு உணர வைத்ததே சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம்தான். 300 சொற்களுக்குள் கதை எழுதத் தொடங்கிய பயணம், தேசியக் கலை மன்றத்தின் வழி சங்கம் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்பதை நன்றியுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு இந்த நல்வாய்ப்பினை நல்கிய தேசியக்கலை மன்றத்திற்கும் சங்கம் இல்லத்திற்கும் நன்றி கூறப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

மணிமாலா மதியழகன்