
வித்யா அருண்
சுந்தருக்கு இந்தியா போகப்பிடிக்கும்.ஆனால் சில விஷயங்கள் உதறல் எடுக்கச்செய்யும். அதில் முதலாவது தெருநாய்கள். கழுத்தில் சங்கிலி இல்லாமல் தெருவில் நின்று முறைக்கும் அல்லது குரைக்கும் அவற்றைக்கண்டால், கிலியில் தொண்டை அடைத்துக்கொள்ளும். தாத்தாவும் பாட்டியும் இவன் பெரிதாய் அலட்டிக்கொள்வதாய்ச் சொல்லும்போதெல்லாம் சுந்தருக்கு ஏன் இங்கே வந்தோமோ என்றாகிவிடும்.
“சுந்தர்! நடந்து போகும் போது உன் பின்னாடி வந்து குரைச்சுச்சுனு வெச்சுக்க. நீ ஒரு சின்ன கல்லை எடுத்து அது மேல போடு. ஓடிரும்” என்று சொல்லிச் சிரிக்கும் பாட்டி அப்போது அவனுக்கு வில்லியாகத்தெரிவார். பாட்டிக்கு அறிவே இல்லை. மோட்டார் வாகனங்கள் மிகுந்திருக்கும் தெருக்களில் கூட அரை டஜனுக்கு குறையாமல் சுற்றும் அவற்றை எப்படி ஒரு சின்னக் கல்லைக்கொண்டு ஓட வைக்கமுடியும்?
சிங்கப்பூரில் சுந்தர் பள்ளிக்குக்கிளம்பும் ஏழு மணிக்குக்கூட அவற்றுக்கும் பள்ளி இருப்பதைப்போல அவையும் வந்துவிடுகின்றன. பன்னிரண்டு அடி அகல நடைப்பாதையை நாய்களோடு பகிர வேண்டிய நிர்பந்தம்.
நாய்களில் சில அவன் நெஞ்சு உயரம் கூட இருக்கின்றன. சில அவன் முட்டிக்கு கீழே இருக்கும் சாக்ஸ் அளவோடு நின்று விடுகின்றன. சில, நான்கு கால்களிலும் சிகப்பு நிற ஷூ அணிந்து, வருகின்றன. சில டீ-ஷர்ட் அணிந்திருக்கின்றன. சிலவற்றுக்கு முடி இல்லை. சிலவற்றின் காதுகள், இரட்டை சடை போல நீண்டு தொங்குகின்றன. சில மிகக் கருமையான நிறத்தில், பீதியை ஏற்படுத்தும் பழுப்பு நிற கண்களோடு அலைகின்றன.
ஒரு நாய் இன்னொரு நாயைப்பார்த்து விட்டால் நகர மறுக்கிறது. ஒரு உரிமையாளர் மற்றவரை, மிகுந்த அன்போடு பார்த்துப்பேசத் தொடங்கிவிடுகிறார். அவர்களுக்குள் நாயை வைத்து ஒரு பெரிய உரையாடல் நீள்கிறது. நாய் உரிமையாளர்கள் கையில் ஆளுக்கு ஒரு நெகிழி பையை வைத்திருக்கின்றனர்: நாயின் மலத்தை அள்ளிப்போட!
அப்பா அவ்வப்போது விளையாட்டாக நாமும் ஒரு சின்ன நாய்க்குட்டியை வளர்க்கலாமா என்று கேட்பார். இந்த வேலையை தன்னிடம் கொடுத்துவிடுவார்களோ என்ற அசூயை வருகிறது. அம்மா அவன் பயத்தைப்போக்க கோயிலில் உள்ள பைரவரைக்காண்பித்தாள். இரவில் எல்லா சந்நிதிகளும் பூட்டிவிட்டு சாவியைப் பைரவரிடம் கொடுப்பார்கள் என்றாள். நாயின் நல்ல குணங்கள் அவன் அறியாததல்ல என்றாலும், அதைப்பல முறை போதித்துவிட்டார்கள்.
கோவிட்க்கு பின், முருகன் கோயிலில் எப்போதும் சேவல்கள் அலைகின்றன. கோயிலில் கொடுக்கிற வடையைக்கூட அவசர அவசரமாய் விள்ளவேண்டிய நிலை. தரையில் உட்கார்ந்து வேண்டிக்கொள்பவர்களின் பாதத்தை சேவல்கள் அலகால் நோண்டுகின்றன. அம்மா முருகன், முனீஸ்வரர், மாரியம்மன், பைரவர் என்று எல்லாரும் காப்பாற்றுவதாகச் சொன்னதாகச் சொல்கிறாள்.
தெருவில் நாய், கோயிலில் சேவல். எங்கே போனாலும் யாரோ ஒருவர் இம்சிப்பது சுந்தருக்கு சகிக்கமுடியாமல் இருக்கிறது. நாய் குரைப்பதைப்போலவோ, கூரிய பற்களைக்காட்டுவதைப்போலவோ, சேவல்கள் இல்லை. அவற்றை ஓரளவு சகித்துக்கொள்ள முடிகிறது. குமோன் வகுப்புக்குப்போனால், பக்கத்தில் நாய்களின் சிகை அலங்கார நிலையம் இருக்கிறது. தலைமுடி வெட்ட மனிதர்களுக்கு பன்னிரண்டு டாலர். நாய்களுக்கு நாற்பத்தி இரண்டு டாலர். நாக்கைத்தொங்க போட்டுக்கொண்டு, ஆ ஆ ஆ என்றபடியே மூச்சுவிட்டுக்கொண்டு ஓடும் அவற்றைக்கண்டால் நின்று வழிவிட்டு செல்ல வேண்டியிருக்கிறது.
“டூ மச் யா” என்று மனதுக்குள் திட்ட மட்டுமே அவனால் முடிகிறது.
பக்கத்து வீட்டில் சந்தன நிறத்தில், நெடியவராக, மெலிந்த உடல் வாகுடன் இருக்கும் சூசன் ஆன்டியை சுந்தருக்குப் பிடித்திருந்தது. எப்போது வீட்டுவாசலில் பார்த்தாலும் பேசுவார்.
“வெரி ஸ்மார்ட் பாய்” என்று சொல்லி, முகம் நிறைய புன்னகையோடு சுந்தரைக்கடப்பாள்.
சுந்தர் பிறந்தது, சீனப்புத்தாண்டின் முதல் நாளில். அந்த ஆண்டு முயலுக்கானது. அவர்கள் சீனப்புத்தாண்டுக்காக அலங்காரம் செய்ய ஆரம்பிக்கும்போது, வாசலில் சிவப்பு நிறத்தோரணங்கள் இருக்கும். சீன எழுத்துகளில் புதுவருட வாழ்த்தை மரக்கதவில் ஒட்டிவைத்திருப்பார்கள். சூசன் எல்லா புத்தாண்டின்போதும் அன்னாசி பழத்தில் செய்த டார்ட்களும், வெண்ணைப்போட்டு செய்த ருசியான குக்கீஸும் சுந்தரின் அம்மாவிடம் தருவார். சுந்தரின் அம்மா, சுந்தரின் கைகளில் அவன் பிறந்த நாள் கேக்கை சூசன் வீட்டில் இருக்கும் சமயம் பார்த்து கொடுத்தனுப்புவார். அவர்கள் விருதுக்காக வெளியே சென்று வந்துக்கொண்டிருப்பார்கள்.
சூசன் டான் வீட்டிலிருந்தபடியே கொரிய நாட்டு சருமப்பொருட்களை விற்பனை செய்கிறார். அவருடைய மகன் தேசியசேவையில் இருக்கிறான்.கணவர் நிக்கோலஸ் டான் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
“ஆண்ட்டி அம்மா கொடுக்க சொன்னாங்க” என்று நீட்டும் சுந்தரை அமர வைத்து ஜூஸ் கொடுத்தார் சூசன்.
சுந்தரின் கண்கள் வீட்டில் அலைந்தன. அவர்கள் குடும்பப் புகைப்படம், பெரிய சண்டெலியேர் விளக்குகள், பெரிய அளவிலான டிவி, வசதியாக கால்களை நீட்டிக்கொள்ள வசதியான இத்தாலியன் சோஃபா என்று பலவும் இருந்தன.
எப்போதும் அவன் வந்து போகும் வீடு தான் என்றாலும் அந்த வீட்டின் நேர்த்தி அவனுக்குப்பிடிக்கும். எதிர் சுவரில் புதிதாக ஒரு ஆர் லாங் ஷென்னின் ஓவியம் மாட்டப்பட்டிருக்கிறது. ஆர் லாங் ஷென்னுக்கு பின்னால் இருந்த வெள்ளை நாய் அவரைப்பார்த்தது. காலம் காலமாக மக்களை துர்சக்திகளிலிருந்து காக்கும் தன்னைப்பார்த்து இந்த பையன் பயப்படுகிறான் என்று நினைத்து வேதனைப்பட்டது. அவர்கள் இருவரையும் பார்த்த சிறுவனின் கண்கள் வேறு திசை சென்றதை அவர்களும் கண்டனர். இருவருமாகச் சேர்ந்து பக்கத்துவீட்டிலிருக்கும் இந்தியச் சிறுவனின் மனமாற்றத்திற்கு வழிசெய்ய ஆரம்பித்தார்கள்.
* * *
சீ ஷீ திருவிழா
17 ஆகஸ்ட்
“எனக்கு சீனா ஞாபகமா இருக்கு” என்றது வெள்ளை நிற நாய்.
ஆர் லாங் ஷென் சிரித்தார்.
சீன நாள்காட்டியின் ஏழாம் மாதத்தின் ஏழாம் நாள்.
சீன நாட்டின் காதலர் தினம். அவருடைய தாய்மாமன் மகளான சீனு மற்றும் அவள் கணவன் நியூலங்கின் நினைவாகக்கொண்டப்படும் பண்டிகை.
நியூலங் மனதில் துக்கத்தோடு, தன் அண்ணி கொடுத்த கிழட்டுப்பசுவோடு நடந்துக்கொண்டிருந்தான். அவன் இனி வீடுதிரும்ப முடியாது. வீட்டை விட்டு அவனை விரட்டிவிட்டார்கள். அவன் துக்கத்தை அசைபோட்டபடி கூடவே பசுவும் வந்துகொண்டிருந்தது.
பசு எப்படியாவது அவனுக்கு உதவ நினைத்தது. “எஜமானரே. இன்று இரவு அருகில் இருக்கும் இந்த குளத்தில், தேவதைகள் இரவில் நீராட வருவார்கள். அவர்கள் அதிகாலையில் திரும்பவில்லை என்றால் அவர்களால் மீண்டும் விண்ணுலகம் செல்ல முடியாது. நீங்கள் தேவதை ஒருத்தியோடு வாழ்வீர்கள்” என்றது. நியூலங் பசு பேசியதை நம்பமுடியாமல் அதன் பழுப்பு நிற தோலில் கைவைத்தபடி விண்ணைப்பார்த்தான்.
சற்று நேரத்தில் சில தேவதைகள் விண்ணிலிருந்து வந்தார்கள். அவர்களில் சீனு என்ற தேவதை, மிக அழகாக உடைநெய்யும் திறமை பெற்றவள். அவளைக்கண்டதும் காதல் கொண்டான் நியுலாங். நீரில் இறங்குமுன் விட்டுச்சென்ற அவளின் அழகிய ஆடைகளை ஒளித்தான். விண்ணகம் திரும்பமுடியாமல் திகைத்த தேவதை, தன் சக்தி இழந்து நின்றாள். நியூலங்கைய்க்கண்டதும் அவளுக்கும் காதல் பிறந்தது. மணமுடித்து, வாழ ஆரம்பித்தவர்களின் வாழ்க்கை திசை மாறலாயிற்று.
விண்ணுலகில் அரசரான ஜேட் பேரரசர் பல குள்ளர்களை அனுப்பி, சீனுவை விண்ணுலகம் வரப்பணித்தார். நியூலங் மீண்டும் பசுவோடு தனித்து நின்றான். கண்களில் கண்ணீர் வழிய நின்றவனிடம் பசு, தன் தோலை எடுத்துக்கொள்ள சொன்னது. அந்த தோலில் அமர்ந்தால் விண்ணுலகம் செல்லலாம் என்றது. காதலுக்கு ஐந்தறிவு ஜீவன் செய்யும் உதவியை நினைத்து நெகிழ்ந்தான் நியூலங். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. விண்ணுலகம் நோக்கி பறந்தவனை வழியில் சீனுவின் அம்மா வெள்ளி ஆறு ஒன்றை ஏற்படுத்தி, அவன் விண்ணுலகம் வந்து சேராமல் தடுத்தாள்.
மாட்டை மேய்க்கும் ஒருவன் எப்படி மாப்பிள்ளை ஆவது? கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும் வண்ணாத்திக்குருவிகள், உலகத்து நியுலெங்கும், விண்ணின் சீனுவும் ஒன்று சேரத் துடித்தார்கள். அவை ஒன்று கூடி வெள்ளி ஆற்றின் மேல் ஒரு பாலம் போல நின்றன. அவற்றின் செயலைக்கண்ட பேரரசர் மனம் இளகினார். ஏழாம் மாதத்தில், ஏழாம் நாளில் மட்டும் காதலர்கள் இருவரும், அந்த பாலத்தில் ஒன்று சேர அனுமதித்தார். இன்றும் அழகான விளக்குகளை ஆற்றில் விட்டு மக்கள், காதலர்களைப்போற்றுகின்றனர். சீ ஷீ திருவிழா அன்பின் அடையாளம் ஆகிவிட்டது.
சீனு ஆர் லாங் ஷென்னின் தாய் மாமன் மகள். ஆர் லாங் ஷென்னின் அம்மா ஜேட் பேரரசரின் தங்கை யூன் ஹுவா. மூன்று குழந்தைகளுக்குதாயான அவளை, பேரரசர் ஒரு மலையின் அடியில் பதுக்கி சிறைவைத்தார். தன் கையில் இருக்கும் வலிமையான திரிசூலம் போன்ற ஆயுதத்தால், மலையைப்பிளந்து அம்மாவை சிறை மீட்டார் ஆர் லாங் ஷென். தன் தாய்க்கும், மாமன் மகளுக்கும் அவர்கள் காதலித்ததால் அடைந்த கஷ்டங்களை அவரால் மறக்க முடியவில்லை. அவரால் விண்ணுலகத்தில் சுகித்திருக்க முடியாது. அன்பும், வீரமும் கொண்டவர். எப்போதும் நீதியை நிலைநாட்ட நினைப்பவர்.
* * *
பக்கத்து வீடு சுந்தரின் நாய் பயம் ஆர் லாங் ஷென்னிடம் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. நாயைப்போல தன் எஜமானருக்கு விசுவாசம் காட்டும் விலங்கு இல்லை. அது தன் எஜமானனை முழுதாய் நம்பி தன்னையே ஒப்படைக்கிறது.
சுந்தர் அன்பான பிள்ளை. அவனுக்கு எல்லா உயிர்களின் மீது அன்பும் இருக்கிறது. இந்த நாய் பயத்தை அவன் கடப்பது எப்படி? தன்னை வழிபடும் சூசனை ஒரு காரணியாக்கத்துணிந்தார்.
சன்னூசர் எனப்படும் ஜெர்மனிய வகை நாயாக உருமாறி நின்றது அவரது நாய். “இன்னும், இன்னும்” என்று அதன் காதைத் தொட அது இன்னும் வயதான தோற்றம் கொண்டது. “லாய்” என்றார். முன்னே வந்தது. ஹோக்கியன் மொழி கற்ற ஒரு நாயாக உருமாறியது. அதற்கு பொத்தான் என்று பெயரிட்டார். தன் மாமன் மகள் செய்த சிறப்பான நெசவை நினைவுப்படுத்துவதால், அந்த பெயர் அவருக்கு மிகவும் பிடித்தது.
சூசனின் அப்பா, மிகவும் முடியாமல், புற்றுநோயாளியாக அசிசி இறப்புநிலை உதவி மருத்துவமனையில் தன் இறுதிநாள் எதிர்பார்த்துக்காத்திருக்கிறார். சூசனால் அவரது வலியைத்தாங்க முடியவில்லை. அன்று பொத்தான் அசிசி மருத்துவமனையில், சிகிச்சை நாயாக நின்றது. சூசன் இது வரை சிகிச்சைக்கு உதவும் நாயைப் பார்த்ததில்லை. பொத்தான் சூசனின் அப்பாவின் மடியில் அமைதியாக இருந்தது. தளர்ந்த அவர் கரங்கள், பொத்தானைத் தடவிக் கொடுத்தன.அமைதியின் வடிவாக இருந்த நாயும் அவரைப்போலவே வயதாகி இருந்தது.
நாயின் அருகாமை, சூசனின் அப்பாவின் முகத்தில் புன்னகையைக்கொணர்ந்தது. அந்த நாயை அதற்குப்பிறகு சூசன் பார்க்கவில்லை. அன்று இரவே அவள் அப்பா காலமானார். நாய்களைப்பற்றி புரிதல் இல்லாத சூசனுக்கு, அன்று முதல் அதே வகை நாயை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
சிங்கப்பூரில் பெரும்பாலும் மக்கள் நாய்க்குட்டிகளைத்தான் வளர்க்க விரும்புகின்றனர். இது இங்கே பெருகி வரும் ஒரு சொகுசுச் சின்னம். பெண் நாய்கள் இவ்வகையான நாய்குட்டிகளை விற்பவர்களிடம் சிக்கினால், அவை ஆண்டுக்கு இருமுறையாவது குட்டிகளை ஈனக் கட்டாயப்படுத்தப்படுகின்றன. வேண்டிய மட்டும் பயன்படுத்திக்கொண்டபின் இந்த நாய்கள் நிர்கதியாக விடப்படுகின்றன. அரசாங்கம் சட்டதிட்டங்களைக் கடுமையாக்கினாலும், சில குரூரர்கள் இருக்கவே செய்தனர்.
பசியோடு எலும்பும் தோலுமாய் நிற்கும் நாய்கள் அடிக்கடி சூசனின் கண்களில் தென்படலாயின. சூசன் அவற்றுக்கான உணவுக்கென, அங்கங்கே உள்ள ரொட்டிக்கடைகளிலும், ஈரசந்தைக் கடைக்காரர்களிடம் மீதம் இருக்கும் உணவைக்கேட்க ஆரம்பித்தார்.
அது பள்ளி விடுமுறை மாதம்.
“சுந்தர். நான் சுங்கய் கதூத் பக்கம் போகப்போறேன். நீயும் வா” என்று சுந்தரின் பெற்றோரின் அனுமதியோடு கூட்டிச்சென்றாள்.
லிம் சு காங் பகுதியில் செல்கையில் இருவருமாகக்கண்ட காட்சிகள் திகைக்க வைத்தன.
“ஆன்ட்டி. இதென்ன? ஏன் நாயை இப்படி வெச்சிருக்காங்க?” என்று அலறினான் சுந்தர்.
சிறிய சிறைபோன்ற அமைப்பில் அடைத்துவைக்கப்பட்டிருந்த வளர்ந்த நாய்கள், மனிதர்களின் கருணையை எதிர்பார்த்தன.ஒரு நாய் கூட அவனைப்பார்த்து குரைக்கவில்லை. அவற்றின் கண்களின் குரூரம் இல்லை. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் தன்னை ஒப்புக்கொடுக்கும் பாவனை மட்டுமே இருந்தது.
“பாவம் ஆன்ட்டி!” என்றான் சுந்தர் தன்னை மறந்து.
வண்டி அடுத்த சாலையில் நகர்ந்தது. கிழடு தட்டிப் போய் பல பற்களை இழந்து நின்ற சன்னூசர் மீண்டும் வழியில் தென்பட்டது.
விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைத்தவிர்ப்பவர்கள் என்னும் அமைப்பில் சூசன் சேர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. வண்டியில் போகும்போது, கணினி வருடியை எடுத்துச் செல்வதும் சூசனின் வழக்கம் ஆகிவிட்டது. சன்னூசரின் உடலில் மைக்ரோ சிப் எதுவும் இல்லை. யாரும் உரிமை கொண்டாட மாட்டார்கள்.
சூசன், “இந்த நாயை நான் வீட்டுக்கு எடுத்துட்டு வரப்போறேன்.” என்றார்.
“சரி ஆன்ட்டி, நானும் பார்த்துக்க உதவி செய்யுறேன்” என்றான் சுந்தர்.
அவனாக முன்வந்து நாயின் மேல் கை வைத்தான். சில மாதங்களுக்கு முன்பு வரை நாய் என்ற சொல்லுக்கே அலறிய சுந்தர், இப்போது நாயின் அருகில் நிற்கிறான். தன் மனதிலிருந்த பயத்தை விட்டு, மனதைரியம் என்னும் விடுதலை பெற்று நிற்கும் அந்த இந்தியச் சிறுவனுக்கு, ஆர் லாங் ஷென் போல தைரியம் வந்ததாக சூசன் நினைத்தார்.
அவர் கண்கள் வீட்டறையில் இருந்த படத்தை நோக்கின.
“ஆமாம், நான் தான்” என்றார் சூத்ரதாரியான ஆர் லாங் ஷென். அவரது நாய் வாலை ஆட்டியது.
kavidhya@gmail.com


