வணக்கம்

வணக்கம் சிங்கப்பூர்!!

பயணங்கள் எப்போதும் நமக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் மட்டுமல்லாது விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் உட்பட அனைத்து இயங்கக்கூடிய உயிரினங்களும் இடம் பெயர்தலை பற்பல காரணங்களுக்காகச் செய்துகொண்டிருக்கின்றன. மற்ற உயிரினங்கள் உணவு தேடி, தண்ணீரைத் தேடி, கடுமையான பருவ நிலையைச் சமாளிக்க, இனப்பெருக்கம் செய்ய வசதியான சூழல் இருக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக ஓரிடம் விட்டு மற்றொரு இடம் தேடிச் செல்வது இயற்கையின் நியதி. ஆனால் மனிதன் எவ்வளவு வசதியான சூழல் இருந்தாலும், அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தாலும் பயணம் செய்வதை சாகச உணர்வின் ஒரு நீட்சியாகக் கொண்டிருக்கிறான்.

தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இரண்டு பயணங்களைத் தாண்டி இன்றைய நவீன உலகில் கடந்த நூறாண்டுகளாக வான்வழிப் பயணம் மிகப் பிரபலமடைந்து வந்துள்ளது. கடலோடிகளாக, நாடோடிகளாக நாடு விட்டு நாடு சென்று, கண்டம் விட்டு கண்டம் கடந்து புதிய நாடுகளைக் கண்டடைந்து   ஆக்கிரமிப்புச் செய்த சரித்திரங்கள் அனைவரும் அறிந்ததே. திக்கு திசை தெரியாமல், நடுக்கடலில்  தத்தளித்து, காட்டு வழியில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைத்து மீண்டும் தன் தாய் நாடு திரும்பினாலே அதிசயம் என்ற நிலை மாறி இன்று பாதுகாப்பான பயணம், சொகுசான தங்குமிடம், உல்லாசமான விடுமுறைக்காலம் என்று திட்டமிட்டுச் செல்கிறார்கள்.

இன்று பயணம் என்றாலே அதில் பல அபாயங்கள், கண்டறிய முடியாத ஆபத்துகளும் நிறைந்தவை என்று யாரும் நினைக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் பல உள்ளன. இவற்றையும் மீறி சாலை விபத்துகள், விமான விபத்துகள் என்று தொடர்ந்து பல செய்திகள் வரும்போது வாழ்க்கை குறித்த அவநம்பிக்கை ஏற்படுகிறது. இயற்கையை மீறி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்ற கையறு நிலை! ஆனாலும் நம் வாழ்க்கைப் பயணத்தில் பயணங்கள் தவிர்க்க இயலாதைவையாக ஆகிவிட்டன. பாதுகாப்பான பயணம். இனிமையான விடுமுறைகள் இவற்றை நினைத்து பயணத்தைத் தொடர்வோம்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.

சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.

ஆசிரியர் குழு, தி சிராங்கூன் டைம்ஸ்