
பர்வதவர்த்தினி
“தான் ஊன்றி நிற்க உதவும் அதே வேர்கள்தான், தன்னை விட்டுச் சுதந்திரமாகப் பறந்துச் செல்ல சிறகுகளையும் தருகின்றது”
எழுத்தாளர் திரு.மகேஷ் குமார் படைத்த இந்தப் புத்தகத்தில் அவரின் வேர்களின் இனிமையையும், சிந்தனைச் சிறகுகளின் வலிமையையும் நாம் உணரலாம். கட்டுரை மற்றும் சிறுகதை வடிவில் அமைந்திருக்கும் இந்நூலை சுவாரசியமான வகையில் தொகுத்திருக்கிறார்.
அ,ஆ என்று அகர என்ற வரிசையில் வருபவை அவரின் நினைவுகள் மற்றும் அனுபவக்கட்டுரைகள். மற்றவை அவர் பார்த்த மனிதர்கள், பழகிய உறவுகள் மற்றும் உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகள்.
அதிவேகத்தில் மாற்றம் கண்டு மாறி வரும் இந்தப்புது யுகத்தில்,அறுபது நொடிகளில் நம் கவனத்தைத் தூண்டில் போட்டு இழுத்துச்செல்கின்றன ரீல்ஸ் வடிவிலான தகவல் பகிர்வுத்தளங்கள். அதுபோன்ற தூண்டில்களே நாம் ஒரு புத்தகத்தை எடுக்கும் நேரத்தையும் முடிக்கும் நேரத்தையும் முடிவு செய்கின்றன. உடுமலைக்காரன் கதைகள் ஒரு அனுபவம்! தூண்டில் என்று தெரியாமல் சிக்கிக்கொண்டால் அது அதீத தகவல் நுகர்வு! தூண்டில் என்று உங்களுக்குத் தெரிந்தும் சிக்கிக்கொண்டால் அறியாததை ஆராயும் அற்புதப் பயணம் தானே?
‘வேர் அதன் வியாசம்’ என்றார் ஜெனீவ தத்துவஞானி ரூசோ. “உச்சரிப்பு என்பது ஒரு மொழியின் ஆன்மா என்றும் அது மொழிக்கு உணர்வையும் உண்மையையும் தருகிறது” என்றும் நம்பினார்.
உடுமலைக்காரன் கதைகள்-கட்டுரைகளில் ஆசிரியரின் வட்டார மொழியிலேயே அவரின் மனமும் மனம் சார்ந்த இடத்தைப் பற்றியும் நாம் அறிகிறோம். வட்டார வழக்கிலேயே தன் கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்தி இருப்பதால் கட்டுரைகளை நாம் படிக்கும் போதும், மனதினுள் கேட்கும் போதும் அந்த மண்ணைச் சேர்ந்த ஒரு நண்பனோடு பேசும் உணர்வையே கொடுக்கிறது! அவர் நம்மை அழைத்துச் செல்லும் அப்பயணத்தில் ரூசோ நம்பியதும் புரிகிறது!
“இஸ்கோல் பசங்க எல்லா கலர் நோட்டீசையும் பொறுக்கிட்டே யானை பின்னாலயே போவோம்….”
“பின்னுக்கே போயி…நல்லா இருட்டி…யானை கண்ணுக்கே தெரியாது…அப்பதான் ஊட்டு நாவகம் வரும்!
“கோடவே அப்பா கைல ரூல் தடி, அம்மா கைல துண்டுப் பைப்பு,அக்காவும் அண்ணனுஞ் சிரிக்கிறது எல்லாஞ் சேந்து யாவகம் வரும்”
வட்டார மொழி
வரலாற்று தொடர்புகளால்,சமூக விதிமுறைகளால், கலாச்சாரத்தால்,புவியியல் தனிமை போன்ற காரணிகளால் சொல்லகராதி, இலக்கணம் மற்றும் உச்சரிப்பில் வேறுபட்டு மொழி பல்வேறு வட்டார மொழிகளாக உருவம் கொண்டிருக்கிறது.
இப்படி உருவாகிய வட்டார மொழியில் படைக்கப்படும் நூலைப் பரந்த வாசகர்களால் உணர்ந்தும் புரிந்தும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? நம்மை பணிவாக கூட்டிச் செல்லும் வரிகள் பெருமையின் எல்லைக்கு அருகில் சென்று தொடும் வரைதான்!
அந்த எல்லையைத் தாண்டாத வண்ணம் நாமும் ரசிக்கும் படியாக இன்னும் அதை பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலாக அம்மொழி கூறும் மெய்யறிவில் தடைகளை உடைத்து கட்டுரையின் கருத்துக்கள் உயர்ந்து நிற்கிறது!
“என்னமோ உலகத்துல தொளிலெல்லாம் இன்னுமு மந்தமாகும்கிறாங்க. ஆனா ஒண்ணுங்க…இந்த கொங்குக் காரவிக எல்லாம் தொழில் வெறி புடிச்ச ஆளுங்க.எதயாச்சும் தட்டிக் கொட்டி தலகீளாத் தண்ணி குடிச்சாச்சும் மேல வந்துருவாங். அது நம்ம ரெத்தத்துலயே இருக்குதுங். அதுல மட்டும் நம்ம பக்கத்தாடி கூட ஆரும் வரமுடியாதுங்”
அனுபவங்களும் நினைவுகளும்
நம் பிள்ளைப் பருவ நினைவுகள் மிகவும் வலிமையானவை. அவை நமது நம்பிக்கைகள்,பழக்க வழக்கங்கள் மற்றும் நமது எதிர்காலத்தை கூட ஆழமான வழிகளில் வடிவமைக்கும் திறனைக் கொண்டுள்ளவை!
“இருந்திருந்தால்” என்ற கண்ணோட்டத்தில் (இந்த வாய்ப்புகள் இருந்திருந்தால் இவை கிடைத்திருக்கும், இந்த வசதிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும்)கொண்டு போகாமல் “என்ன இருந்தது” என்பதை வைத்து மட்டும் ஆசிரியரின் சிறு வயது நினைவுகள் பயணிக்கிறது! நம்மையும் அந்த காலத்துக்கு கொண்டு செல்கிறது! அந்த அப்பாவித்தனமான தன்மைகளில் தான் எவ்வளவு எளிமை! எவ்வளவு வலிமை!! விளையாடிய மைதானம்,ஏறிய மரங்கள்,துரத்திய ஆட்டுக்குட்டி,நீந்திய கிணறுகள் குளங்கள்,பாடிய பாட்டுகள்,அந்தப் பிள்ளைகளின் சண்டைகள் அழுகைகள்…
“இப்பத்தான் எங்களுக்குள்ள சண்டை ஆரம்பிக்கும்.யாரு தேங்கா ஒடைக்குற எடத்துல நிக்கிறது,யாரு கோயில் வாசல்ல நிக்கிறதுன்னு.தேங்கா ஒடைக்கிற எடத்துல நின்னா எளநி குடிக்கலாம். கோயில் வாசல்ல நின்னா பூசை முடிஞ்சு வெளிய வரவங்க மொதல்ல நமக்குத்தான் பிரசாதம் குடுப்பாங்க”
மாற்றங்களுக்கு முன் ஒரு வாழ்க்கை
நகரத்தில் வாழும் இன்றைய குழந்தைகள் கனவிலும் காண முடியாத ஒரு வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர்!
புளியங்கா சட்னி, எலுமிச்சம்பழம் இஞ்சி புதினா வச்சி கரும்பு ஜூஸ், மார்கழி மாத விடியற்காலை பஜனை, ஆட்டுப்பால் கறப்பது, கற்றாழை முட்டி வைத்து நீச்சல் கற்றுக்கொள்ளுதல், மூங்கில் கூடை முடைவதை ரசித்தல், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சர்க்கஸ், நாடகம், இசை, சொற்பொழிவு, பட்டம், கில்லி, தவளைக்கல்லு முதல் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து வரை எல்லாம் அந்த நாட்களுக்கு நாமும் சென்று அனுபவிக்க வேண்டும் என்ற ஏக்கத்தைத் தருகிறது!
“அந்த சப் ஜெயில்ல ஒரு புள்ளயார் கோவில் இருக்கு.புது செல வெச்சுட்டு,பழய செலய ஒரு ஓரமா வேப்ப மரத்துல சாச்சு வெச்சுருந்தாங்க.ஆஹா…சரியான எடம்னு,புள்ளயார குப்பறப் போட்டு,முதுகுல எல்லா ஐட்டத்தையும் வெச்சு,மூஞ்சூரால நல்லா மேல கீழ மசாலா அரைக்கிற மாதிரி அரைச்சு, புளியங்கா சட்னி எடுத்து சாப்டா…அட அட அட பழனி பஞ்சாமிர்தம் தோத்துது…அம்புட்டு டேஸ்ட்…”
நெல்லிக்கனி
ஆசிரியர் கட்டுரையின் தலைப்புகளை அணில்,ஆடு,இலை என்று வரிசைப்படுத்தியிருப்பது புதுமை! அந்த தலைப்பிலேயே வாசகர்களை அர்த்தத்தைத் தேட வைத்திருப்பது சுவாரசியம்! எந்த அளவிற்கு கொடுத்தால் தெவிட்டாமல் இருக்குமோ அந்த அளவுக்கு சுருக்கமாகவும் சுவையாகவும் நம்மை சிந்திக்கவும் வைக்கிறது அவர் கட்டுரைகள்.
‘ஓடம்’ என்ற தலைப்பில் அவர் வடித்த நினைவுகள் ஒரு பக்கம்தான். ஆனால் உலகமய மாற்றலில் சிக்கி சில சமயம் வழி மறக்கும் சமூகத்தின் மேல் அவர் காணும் ஆற்றாமை நம்மை ஒரு நொடி நிறுத்தி சிந்திக்க வைத்திருப்பது ஒரு ஆறுதலே!
“மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி.நாம எந்தத் திக்குக்கும் போல.நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு,மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்புறப் படுத்து குறட்டை விட்டாச்சு.”
சிறுகதையின் சிறகுகள்
நூலாசிரியரின் கட்டுரைகள் மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்த நிலையிலிருந்து சற்று மாறி நம் மனதை உருக்கி உலுக்கி தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரங்களை சிறுகதையில் தருகிறார்!
வெள்ளிங்கிரி, செக்குமாடு, நாயம், ஏழுமலை, எல்லோரும் நல்லவரே! போன்ற கதைகளில் சாமானிய மக்கள்; அம்மக்கள் படும் இன்னல்கள்; அந்த இன்னல்களுக்கு இடையில் நடக்கும் அவர்களின் எளிமையான வாழ்க்கைகள்! ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு அழுத்தமான தாக்கத்தைக் கொடுத்தாலும் தொடர்ந்து புத்தகத்தைப் படிக்கும் போது சிறுகதைக்குப் பின் வரும் நினைவுக் கட்டுரைகள் நம்மை ஓர் நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது!
இயலாமை, ஏமாற்றம், வெறுப்பு, சதி, விதி என்ற எதிர்மறை உணர்ச்சிகளைச் சுற்றி நகர்கிறது இந்த கதைகள். நாம் அவ்வப்பொழுது சந்திக்கும் மனிதர்கள், அடிக்கடி செல்லும் இடங்கள், மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றலாம். அவர்களின் இருப்பு தவறவிட்டவுடன், அவர்களின் சிறிய தொடர்புகள் கூட நமது அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை எவ்வளவு ஆழமாகப் பாதித்துள்ளன என்பதை நாம் உணர்வோம்..
“எல்லோரும் நல்லவரே” என்ற சிறுகதை இக்கருத்தினை வெளிப்படுத்தி விழிப்புணர்வு கதையாக முடிகிறது!
எண்ணங்களின் பரிமாணங்கள்
பசங்க மற்றும் பீசு என்ற தலைப்பில் உள்ள சிறுகதைகள் “நகைச்சுவை” பாணியில் அமைந்திருக்கிறது! ஆங்கிலத்தில் Fear of missing opportunity (FOMO) என்ற உணர்வைச் சுற்றும் வேடிக்கையான சுவையான கதைக்களங்கள்.
தனக்கென்று ஒரு அடையாளத்தைத் தேடியும் உணர்ச்சிகள் கொண்டே செயல்களைச் செய்ய முடிவெடுக்கும் துடிப்பான இளைஞர்களின் ஆசை ஒரு கதையிலும், தெளிந்த பார்வை இருந்தும் அறியாமையில் சிக்கி, எளிதாக முட்டாளாக்கப்படும் பகட்டான நண்பர்களின் பேராசை ஒரு கதையிலும், நம்மை விறுவிறுபாகக் கொண்டுசென்று குறைவில்லாமல் சிரிக்க வைக்கிறது!
புலியும் புலி சார்ந்த வனமும், மனத்திரை, சும்மா ஒரு கதை, நினைப்பதெல்லாம் போன்றவை எல்லாம் அறிவியல் புனைகதைகள்! அக்கதைகளைப் படிக்கும்போது எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புத்தகங்கள் வாசிப்பதைப் போல் உணரலாம். பல் வேறு மண், மொழி மற்றும் மக்களோடு பயணப்பட்டிருக்கும் மனிதரின் எண்ணத்தில் உதித்த கற்ப்பனைகள் எப்படிப் பரிணமித்திருக்கும் என்று நாம் அறியவே இந்த ஒப்பீடு!
இனிமையான சிம்பொனி
“குழப்பம் இல்லாத நிலையில் நம்பிக்கை பிறப்பதில்லை; அது, எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தில் உருவாகிறது”
கிறிஸ்ணன் கதையில் Christopher எப்படி கிறிஸ் ஆனான் என்று படித்து உணரும் நமக்கும் அப்படியே தோன்றும்! மாற்றமும் தடுமாற்றமும் நிறைந்த நிலையில்லாத ஓர் வாழ்க்கையில் நாம் காணும் நம்பிக்கையே கிறிஸ்.
சுதந்திரச் சிறகுகள் பெற்ற பறவை எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம் ஆனால் சிறகொடியும் நேரம் அது பற்றிக் கொண்டு இளைப்பாற வலிமை கொண்ட வேர்கள் இருக்கும் மரத்திற்குத்தான் மீண்டும் வர வேண்டும்! கடைசி கட்டுரையில் அவர் வேர்களுக்கு நன்றி சொல்லி பெருமிதத்துடன் முடிக்கிறார்!
நமது வேர்களைப் புரிந்துகொள்வது, நாம் எங்கிருந்து வந்தோம் என்று அறிவதை விட நாம் இன்னும் கடந்து செல்லும் பயணத்தின் நோக்கத்தை நமக்குக் கொடுக்கிறது.
“உடுமலைக்காரன் கதைகள்”எழுத்தாளர் திரு.மகேஷ் குமார் அவர்களின் சீரிய பயணத்தின் ஒரு அற்புத வெளிப்பாடுதான்!
viyuramsg@gmail.com

