(வாசிப்பு) பாவத்தின் சம்பளம்

0
1476

சவிதா ராமசாமி

பாவத்தின் சம்பளம் (ஆசிரியர்: சரவணன் சந்திரன்)

எனக்கு எழுத்தாளர் சரவணன் சந்திரனை ஆனந்த விகடனில் அவர் எழுதிய அன்பும் அறமும் தொடர் மூலம்தான் அறிமுகம். அந்த தொடருக்காகவே வாராவாரம் விகடனுக்காகக் காத்திருந்திருக்கிறேன். பின்பு அவருடைய புத்தகங்களை அறிந்துக் கொண்டேன். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெண்ணிற ஆடையின் தொடர்ச்சிதான் பாவத்தின் சம்பளம்.

இரு புத்தகங்களும் வாசித்தப் பின் சில நாட்கள், அவற்றுள் அவர் அறிமுகப்படுத்திய மனிதர்கள் எனக்குள் உலாவினார்கள். நான் அவர்களிடம் இருந்து விடுபடப் பல நாட்கள் ஆயின. எழுத்தாளர் சரவணன் சந்திரன், எளிய மனிதர்களிடம் அன்றாடம் புழங்கி, அவர்களின் அன்றாட வாழ்வை தன் எழுத்துக்கள் மூலம் நம்மிடம் மிக நேர்மையாக அழைத்து வருவதாக நம்புகிறேன்.

இந்த புத்தகத்தில் மனித உறவுகளின் சிக்கல்களை வகைப்படுத்துகிறார், எழுத்தாளர். மனிதனின் ஒவ்வொரு செயலும் – அது நல்லதோ கெட்டதோ- உணர்வுகளாலும், உணர்வுகளின் நிமித்தம் எழும் கோணங்களாலும் தூண்டப்படுகிறது என்பதே இந்த புத்தகத்தின் தனிப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் இணைக்கும் நூல். இந்த புத்தகத்திலுள்ள எழுத்தின் தனிச்சிறப்பு, பெயர் தெரியாத கதாபாத்திரங்கள் மூலம் வாழ்க்கைக் கதையை உணர்த்தும் திறன். பெரும்பாலான கதைகளில், அவர்கள் “என்னிடம் கொண்டுவரப்பட்டனர்”  “சம்பவம் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது”  “உதவி செய்ய முடிவு செய்தோம்” போன்றவை உள்ளன.  சில சந்தர்ப்பங்களில், கதை சொல்பவருக்கு உதவ வழியின்றியும் செல்கிறார். – இவை கதை சொல்பவர் மற்றும் அவரது சுயவிவரம் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

புத்தகத்தின் ஆரம்பமே அதகளம்தான். முன்னுரையிலேயே இந்த கதைகளை சுமப்பதன் பாரத்தைப் பற்றி அங்கலாய்க்கிறார் எழுத்தாளர். இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நம்மால் அவருக்கு சற்று இளைப்பாறுதல் தர முடியுமா என ஆதரவு கரம் நீட்டுவதற்காகவே புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது முன்னுரை.

தொடர்ந்து வரும் எண்ணே இல்லாத அத்தியாயத்தில், “நாய்களுக்கு மனசாட்சி உண்டா?” என ஆரம்பிக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் அழுக்கு மூட்டை சித்தர், “நீங்கள் குறிப்பிடும் என்லட்மெண்ட் என்பதைத் தாண்டிய காலத்தில் அவை வாழ்கின்றன.” எனக் கூறுவது நக்கலோ? சித்தர்களும் நக்கல் அடிப்பார்களோ? “பிரச்சனை என்னிடம்தானா?,”  என வினவுபவரிடம், சித்தர், “உன்னிடமும் இல்லை. காலத்தின் மனசாட்சிதான் எல்லாரும்.” என மிக ஆழமாக பதில் அளிக்கிறார். தொடர்ந்து, “நிகழ்காலத்தில் வாழ்வது சாத்தியம்தானா?,” என இயலாமையில் தகிக்கும் ஆசிரியரிடம், “சுமந்து கொண்டு அலைபவனால் நிகழ்காலத்தில் வாழவே முடியாது. உன்னில் இருக்கும் காலத்தில் ஒரு சிறுதுளியை இறக்கிவைத்துவிடு. இது சாத்தியம்தான்.” எனக் கூறும்போது நமக்கே சற்று ஆசுவாசமாய் இருக்கிறது.

புத்தகத்தின் சிறுகதைகள் பெரும்பாலும் பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் இழுப்பறிகளே! உதாரணமாக, தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க முடியாது என நினைத்து, தங்கள் சிறு

குழந்தைகளை அனாதை இல்லத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்கள், பெரியவர்களானப் பின்னர் மீண்டும் அவர்களுடன் சேர விரும்புகிறார்கள்; குழந்தைகளோ திரும்பி வர மறுக்கிறார்கள். அப்பெற்றோரை இப்படி அறிமுகப்படுத்துகிறார்: “எறும்புகளுக்குக் கூட பாதுகாப்பாய் புற்று இருக்கும்போது எளிய மனிதர்களான இவர்களுக்கு ஏன் துயரமில்லாத வாழ்வு சாத்தியப்படவில்லை?” அந்த அறிமுகத்திலேயே அவர்கள் மீது அளவில்லாத இரக்கம் ஓங்குகிறது. இவர்களுள் யார் பாவம் என எப்படி சொல்ல இயலும்? ஆனால் இதனடியில் இருக்கும் பெற்றோர்களின் உடன்பிறந்தோரும், அனாதை இல்லத்தின் பேராசையையும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.

இன்னொரு புறம், குருடனாய் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒருவரை நிராகரிக்கும் அவரது குடும்பம். அவரும் முட்டி மோதி, ஆசிரியர் பயிற்சி முடித்து பணிக்கு அமர்கையில், காதல் பூ பூக்கிறது. தனக்கு வாழ்வே இல்லை

என தன்னைத் தானே கைவிட்ட ஒருவன் வாழ்வில் வசந்தத்தின் வாசம் வீசுகிறது. தன் இயலாமை அறிந்தும் தன்னைக் காதலிக்கும் பெண்ணிற்காக அளவில்லாமல் செலவு செய்கிறார். இறுதியில் ஏமாற்றம் முகத்தில் அறைகையில், அவரின் கேவலை ஆசிரியர் இவ்வாறு பதிவு செய்கிறார், “அந்த அறைக்கு வெளியில் மொழி தெரியாத இயலாமையில் குரலெழுப்பும் விலங்கொன்றின் ஓங்காரம் ஒலிக்கக் கேட்டேன். தன்னைவிட பலம் கொண்ட விலங்குகளோடு போட்டியிட்டுத் தோற்ற கையறு நிலையில் எழும்பிய கேவல் அது.” என்னால் அந்த மனிதனிடமிருந்து விடுபடவே முடியவில்லை. அவர் என்ன பாவம் செய்தார்? தாவரங்கள் பற்றிப் படரக் கூட வழி இருக்கையில், ஏன் இவர் வாழ்வில் தொடர்ந்து இத்தனை கைவிடப்படல்?

வயது முதிர்ந்த தந்தையைத் தேடிச் செல்லும் மகனைப் பற்றிய ஒரு கதை. தன் தந்தையைக் கண்டுபிடிக்க அவரிடம் இருக்கும் ஒரே தடயம் அவர் தன் சங்கிலியில் கோர்த்திருக்கும் வளையம். இந்த நிராதரவான சூழ்நிலை, “எக்கிப் பறிக்க எதையாவதொன்றைத் தேடுபவனுக்கு எல்லாமே கொக்கிகள்தான்” என அழகாக விவரிக்கப்படுகிறது. அவர் தந்தையைத் தேடி கண்டுபிடிக்க நூலாசிரியர் மிகவும் பிரயத்தனப்படுகிறார். கண்டுபிடித்தக் களிப்பில் திரும்பும் விவரிப்பாளரிடம், மகன், “எனக்குத் தேவை மற்றவர்களுக்குக் காட்டுவதற்கு இப்படி ஒரு ஆள் இருந்தான் என்கிற செய்தி தான். அது புகைப்பட ஆதாரமாகவும் கிடைத்துவிட்டது. இனி அவர் எனக்கு தேவையில்லை.” எனக் கூறும்போது யாரைக் குற்றம் சொல்ல இயலும்? இவர்களுள் யார் பாவம்?

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, பெற்ற மகள் காதலிக்கும் பையனிடம் இருந்துப் பெண்ணை சூழ்ச்சி செய்து பிரித்து, அவள் தற்கொலை செய்யும் அளவு தூண்டி, அவள் இறந்தப் பின் தான் திருமணம் செய்து குழந்தையை சுமக்கும் ஒரு தாயை விவரிக்கும் ஆசிரியர், இவ்வாறு விவரிக்கிறார், “கொல்கிற வார்த்தைகளைக் கொண்டலைபவர்களைப் பலிவாங்கும் ஆவிகள் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்”. எனக்கு அந்த அத்தியாயம் வாசிக்கையில் மிகவும் அங்கலாய்ப்பாய் இருந்தது,

இத்தனையும் நாம் வாழும் இதே உலகில் தான் நடந்துக் கொண்டிருக்கின்றன என எனக்கு மிக மிக அங்கலாய்ப்பாய் இருந்தது. ஒருவரின் வாழ்க்கை முறையில் எண்ணங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நான் நம்பினாலும், பாவத்தைச் செய்பவர்கள் அதன் பின் விளைவுகளைச் சந்திப்பார்கள் என என்னால் நம்ப இயலவில்லை– அப்படியிருப்பின் பெரும் முதலாளிகள் இன்னும் உயிர் பிழைத்து, உலகில் பெரும் பங்கு வகிக்க முடியுமோ? ஒன்றுமறியாத சிறு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவோர் உயிர் வாழ முடியுமோ? இவற்றையெல்லாம் உற்றுக் காணும்போது, பாவத்தின் சம்பளம் மனசாட்சியின் மரணம் மட்டும் தானோ? மிகவும் பிணைக்கப்பட்ட இவ்வுலகில் இத்தனை மனசாட்சிகளின் மௌனமோ, மரணமோ எங்கு இட்டு செல்லும்?

ramasamy.savitha@gmail.com