(தொடர்) ஆதிமனிதனின் வேற்றுகிரக குறிப்புகள் – 2

0
672

வ.கீரா

“அன்பே சூரியனையும் நட்சத்திரங்களையும் இயக்குகிறது.”

இத்தாலியக் கவிஞரும் இத்தாலிய மொழியின் தந்தையுமான டாந்தே அலிகியெரியின் கூற்றை இந்திய, தமிழக வாழ்வியலில் சிக்குண்ட எவராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. சிங்கப்பூரின் நீண்ட நெடிய வரலாற்றில் ரோம கணியன் தொலொமி பயணக் குறிப்புகளில் அடர்வனத் தீவாக இடம்பெற்ற இந்த சின்னஞ்சிறு நாடு உலகின் முன் மாதிரியாக வளம்கொழிக்கும் நாடாக வலம்வர எது காரணமாக இருந்திருக்கும்? உலகைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த சிறு தேசமான ஆங்கிலப் பேரரசு கையாண்ட எந்த முன்மாதிரி உத்தியும் இல்லாமல் வெறிகொண்டு நாடுபிடிக்கும் அடிமையாக்கும் சிந்தனை ஏதுமில்லாமல் உலகின் சிறந்த நாடாக சிங்கை மிளிர காரணம் என்னவாக இருந்திருக்கும்? டாந்தே சொன்னது போல அன்பே சூரியனையும் நட்சத்திரத்தையும் இயக்குவது போல லீகுவான் என்னும் மாமனிதன் தனது சொந்த மக்கள் மீது கொண்டிருந்த அன்பால்தான் இது சாத்தியமாகி இருக்க முடியும்.

விமானப் பறவையில் மிதந்து வந்து தரையிறங்கும்போதே சிங்கையின் உயர் அடுக்கு கட்டிடங்கள் மேகத்தை கிழித்தபடி வான் பரப்பில் இன்னும் இடமிருக்கிறதாஎன்று என்று தேடிக் கொண்டிருந்தன. வானில் மட்டுமல்ல; பூமியை அகழ்ந்து அதனுள்ளேயும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன.

உலகில் மிக வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடக்கக் கூடியவர்கள் என பட்டியலிட்டால் சிங்கையர்கள் முதலில் வருவார்கள்.எதிர்வரும் முகங்களைக் கூட கவனிக்காமல் விரைந்துகொண்டிருந்தார்கள். குறைவான வாகனங்கள் வழுவும் தரைகளில் சீராகப் பாய்ந்துகொண்டிருந்தன. வாகனங்கள் அளவாக போக்குவரத்து நெரிசலற்று இருந்தால் குறைவான மனிதர்கள்தானே இருக்க முடியும். அப்படியான இந்த தேசத்திற்கு எதற்கு இத்தனை நட்சத்திரங்களை மோதும் கட்டிடங்கள் என என்னுள்ளே வியந்து கொண்டிருந்தேன். பாண்டித்துரை நீதிப்பாண்டி அழைத்திருந்தார். உறவல்லாத முதல் சிங்கையின் வெளி அழைப்பு.

நலம் விசாரித்துவிட்டு எப்பொழுது சந்திக்கலாம் என்றார். லிட்டில் இந்தியாவில் இறங்கி சூழல் தெரிந்து அழைக்கிறேன் என்று சொல்லி முடிக்க, லிட்டில் இந்தியாவிற்குள் நுழைந்தேன். வழியெங்கும் ஒழுங்கு செய்யப்பட்ட அலங்கார  தோரணங்கள். தைப்பூசம் என்றால் நம்ம ஊரைப் போல வருமா என்று பாடமுடியாதபடி ஒழுங்கு செய்யப்பட்ட வரிசைகளில் மஞ்சள் ஆடைகளில் முருகனுக்காக தமிழர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். காவலர்கள் ஒவ்வொரு கட்டுப்பாட்டு சைகையிலும் நின்று குழு குழுவாக பிரித்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் பரபரப்பாக பார்க்காத தமிழ் முகங்கள் யாவும் சீன முகங்களை போல மலாய் முகங்களை போலவே அவையும் பரபரப்பாகவும் தீவிரத் தன்மையோடும் இருந்தன. வாகன நிறுத்துமிடத்தில் சில நொடிகளே நிற்க முடியும். வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்த வேண்டும் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில்தான் நிற்கமுடியும். மீறி கண்ட இடத்தில் நிறுத்தினால் மகிழுந்து ஓட்டுனருக்கு அபராதத் தொகை தானே பிடித்துக்கொள்ளும் என்றார்கள். ஏனெனில் யாரும் எங்கும் தப்பித்துக்கொள்ள முடியாதபடிக்கு எங்கும் கண்காணிப்பு ஒளிக்கருவிகள் இருந்தன. அசந்தும் தவறு செய்துவிட முடியாதபடிக்கு உறுதியான முறையில் கவனித்து, தகவல் அனுப்பும் வகையில் நூறாயிரம் கருவிகள் மனிதர்களின் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தன.

சாலையில் இறங்கி ஐம்பது அடிக்குள் அங்காடிகள். அதில் ஈக்கள் வாழ அனுமதியில்லாத சிங்கையில்  மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். வாசலில் தோரணம். கல்யாணக்களை. தமிழ்நாட்டில் இருந்தே பதினைந்துக்கு மேற்பட்ட உறவினர்கள் வந்திருந்தார்கள். சிங்கையிலும் மகள் சினேகாவின் பெரியப்பாக்களும் அவர்களது மகன்களும் மகள்களும் குட்டிப் பூக்களும் கூட குழுமியிருந்தார்கள். விமானம் தரைதொட்டதிலிருந்து வேற்றுகிரகத்தில் பயணப்பட்ட என்னை சொந்த வீட்டிற்குள் கவிதா அழைத்துச் சென்றார். மீண்டும் நான் தமிழ்நாட்டிற்குள் வந்த ஆதி மனிதனாகி விட்டதால் மகளின் நலங்கு சடங்கில் முழுமையாக கரைந்து விட முடிந்தது. தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த உறவினர்களின் புருவத்தில் என்னைக் கண்டதும் கூடுதல் மச்சங்கள் முளைத்தன. உறவல்லாத உறவு நான் எப்படி திருமணத்திற்காக சிங்கைவரை வர முடிந்தது என்று தோன்றியிருக்கலாம். தனியே அறை எடுத்து தருவதாகத்தான் மகள் சொல்லியிருந்தார். ஆனால் சிங்கையின் வெள்ளிகள் தமிழகத்தின் தங்கம் போல மின்னிவதை முன்பே அறிந்திருந்ததால் மறுத்து காகத்தின் கூட்டுக்குள் பருந்து முட்டைகளும் அடைகாக்கப்பட்டதுபோலவே கூட்டுக்குள் அடைந்தேன். மறுநாள் திருமண வேலைகளில் குடும்பமே பம்பரமாக சுழன்று கொண்டிருந்தது.

சிங்கை வந்த செய்தியை முனைவர் இரத்தின வெங்கடாசலம் அவர்களுக்கு தெரிவித்தேன். பிறகு அன்பழகன் அய்யாவை அழைத்து மாலை தேக்கா வளாக சந்தையில் சந்திக்க ஏற்பாடானது. தேக்கா வளாகம் அந்த சுற்று வட்டாரத்தில் அனைத்தும் நிறைந்த பல்பொருள் சந்தையைக் கொண்டிருந்தது. நான் தங்கிருந்த குடியிருப்பை ஒட்டியேதான் அதன் வால் நீண்டிருந்தது.

சாலையில் காணாத பெருங்கூட்டம் சந்தையை நிரப்பி இருந்தது. காய்கறிகள் எதுவுமே நம்முடைய ஊரில் விளைவதுபோல இல்லை.சென்னையின் காய்கறிக் கடைகளில் நான் கண்ட பெரிய அளவிலான காய்கள் என்றால் முட்டைக்கோசும் காலிபிளவர் மட்டும்தான். ஆனால் அங்கே கத்தரிக்காயே முட்டை கோசின் அளவில் இருந்தது. அங்கு எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட மிகத் தரமான காய்கறிகள். உணவுக்கடைகள். உணவுப் பொருள்களில் ஆளும் அரசு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வது தெரிந்தது. எப்படி சாலைகளும் நடைபாதைகளும் பூங்காக்களும் கூடவே மனிதர்களும் பளபளப்பாக இருந்தார்களோ அப்படித்தான் கடைகளும் இருந்தன. சீன உணவுகள் விதவிதமாக காட்சியளித்தன. மலாய்களும் சீனர்களும் ஒன்றுபோலவே எனக்குத் தெரிந்தன. நூற்றுக்கணக்கான உணவுவகைகள் ஆசியன் பெயிண்ட் விளம்பரம்போல பல வண்ணக் கலவையில் ஒன்றுபோலவே தோற்றமளித்தன.

வால் வழியே வழிபிடித்து தெரியாத கிரகத்தில் சிக்கிய ஆதிவாசியாகிய நான் யாரிடம் என்ன கேட்பது எனத் தெரியாமல் அன்பழகன் அய்யா சொன்ன இடம் போக தடுமாறுகையில் ஒரு முரட்டுக் குரல் தமிழில் உறுமியது.

”எங்கே போகனும்?’  கடை எண் சொன்னேன்.

பின்வழியாக வந்திருக்கிறீர். .உள்ளே நுழைந்து முன் வழிக்கு அருகில் ஏறும் மின் நடை மேடை அருகே கடை இருக்கிறது என்றார் அவர். சிங்கை நேரத்தில் மாலை ஐந்து மணியிருக்கலாம். அங்கேயே அமர்ந்து மதுவருந்திக் கொண்டிருந்தார். கிழடு தட்டிய டைனோசர் போல அவரிருந்தார். அவருடன் மூன்று கிழட்டு ஓட்டக சிவிங்கிகள் அமர்ந்திருந்தன. அவர்களும் மதுவருந்திக் கொண்டிருந்தனர். அவர்களுடன் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் சந்திப்பைத் தவிர்க்க முடியாது. நன்றி பகிர்ந்து விடைபெற்றேன். அதன் பிறகு இருந்த எல்லா நாட்களிலும் அவர்களை அதே இடத்தில் கண்டேன். ஏனோ ஒரு முறைகூட பேசவில்லை. அந்த சந்தைப் பகுதியில் அவர்கள் மட்டும்தான் மதுவருந்தினர். முன்பு எல்லோரும் தேக்கா சந்தையில் மது அருந்துவார்களாம். பின் ஒரு தீவிர நடவடிக்கை ஒன்றினால் மதுவிற்கு சந்தையில் தடை இருந்தது. ஆனால் அவர்களுக்கு மட்டும் அனுமதி மீறப்பட்டிருந்தது. முன்பொரு காலத்தில் அடாவடியாக வீரதீர செயல்கள் செய்தவர்களாம். வாழ்க்கைக்கு அடங்கியோ அரசிற்கு அடங்கியோ புயலைக் கடந்த அமைதிக்கு திரும்பிவிட்டார்கள் என அறிந்து கொண்டேன்.

அன்பழகன் அவர்கள் வருமுன்பு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களை முதலில் சந்தித்தேன். அவர் கையில் மக்கள் மனம் என்கிற மாத இதழ் தவழ்ந்து கொண்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தமிழக அரசின் வேளாண்துறையில் அதிகாரியாகவும். தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வானொலியில் பணியாற்றி நாடகங்கள் இயற்றிய கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், இதழாளர். தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் செழித்து சிங்கப்பூர் நிரந்தரவாசியாக நிலைகொண்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சிங்கப்பூரில் நடக்கும் கவிமாலை என்னும் அமைப்பின் தோற்றுனர் என்றும் அறிய முடிந்தது. அந்த கவிமாலைக்காகத்தான் கவிஞர் இன்பா அவர்கள் அன்பழகன் அவர்களின் தொடர்பில் என்னோடு சென்னையில் இருக்கும்பொழுது தொடர்பு கொண்டிருந்தார்.

தேனீர் தற்சேவையில் எடுத்து வர வேண்டும்.அந்த நேரத்திற்குள் இவரை அறிமுகப்படுத்துகிறேன் என சொல்லி, அய்யாவின் பெயர் இக்பால் கவிஞர் என்றார்.

’வணக்கம்..க.மு.து. இக்பால் அய்யாவா’

’வணக்கம்.. க.து.மு.இக்பால் ‘

புரிந்தது.இந்த வயதிலும் தெளிவாக முப்பத்தாறு பல்லில் பேசினார். கிட்டதட்ட எழுபதிற்கு மேல்தான் இருக்கும். வெடவெடப்பான உயரத்தை உடம்பில் வாங்கியவர்.எனது நண்பன் உமர் அடிக்கடி இவரது கவிதை ஒன்றை சொல்லி அது என்னுள் ஆழப் பதிந்திருந்தது.

சிலர்

வாழும்போது கல்லாயிருந்து

மரித்தபின் உயிர்பெற்றுவிடுகிறார்கள்

எனக்கும்

கல்லாயிருக்கவே பிடிக்கிறது

அதை அப்படியே சொன்னேன். அவரின் முகத்தில் சிறிய குழைவு இழையோடியது. அப்பொழுது அன்பழகனும் வந்து சேர்ந்து கொண்டார். குமரி நாவல் இரண்டு படிகள் தான் கையில் எடுத்து சென்றிருந்தேன். இளங்கோ அவர்களுக்கும் அன்பழகன் அவர்களுக்கும் கொடுத்தேன்.

கவிமாலை நிகழ்வு மாதத்தில் கடைசி சனிக்கிழமை தான் நடக்கும் அன்று குமரியை வெளியிட்டு விடலாம் என்றும் கவிஞர் இன்பா நிகழ்வை ஒருங்கிணைப்பதாகவும் சொன்னார்கள். பேச்சு தமிழக அரசியல் பக்கம் திரும்பியது. என் சார்பை முதலில் கேட்டதும் நான் சீமான் பக்கம் என்றதும் அந்த இடமே வார்த்தை போரில் வெடித்தது. வந்த இடத்தில் முதல் சந்திப்பிலேயே நீளும் அன்பின் கையை உதறுவது அழகல்ல. அவர்களின் நிலைப்பாடு. நீண்ட நெடிய திமுக குடும்ப பிண்ணனி கொண்டிருப்பவர் அன்பழகன் அய்யாவும் இளங்கோ அய்யா அவர்களும்.

அவர்களிடமிருந்து நீண்ட அந்த அன்பின் குழைவை அப்படியே சற்றும் குறையாமல் குன்றாமல் நானும் பகிர்ந்தேன். தற்சேவையில் எடுத்துவந்த தேனீர் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது.

“அன்பே சூரியனையும் நட்சத்திரங்களையும் இயக்குகிறது.” -தொடரும்