
கவிஞர் மகுடேசுவரன்
மொழிக்குத்தான் ஓரிடத்தைப் பற்றுணர்ச்சியோடு அணுகச் செய்யும் ஆற்றலுண்டு. நாம் சென்றடைகின்ற நாட்டில் முற்றிலும் விளங்கிக்கொள்ள முடியாத மொழி நிலவுமெனில் அது நமக்கு வேற்று நாடே. சிங்கப்பூரில் நான் அவ்வாறு உணர்வதற்கு இம்மியளவும் வாய்ப்பிருக்கவில்லை.
முதற்கண் சாங்கி வானூர்தி நிலையத்துக் குடிவரவில் அமர்ந்திருந்த சீனர்களைக் கண்டபோதும் மிரட்சி ஏற்படவில்லை. அவர்கள் நம்மை வரவேற்கும் முகத்தான் அமர்ந்திருக்கிறார்கள் என்பது விளங்கிற்று. நான் வந்தபோதுதான் குடிவரவில் நேரடி அணுகுமுறை இருந்தது. தற்போது அதற்கும் தானியங்கிக் குடிவரவுச் செயல்முறைகள் நடைப்பாட்டுக்கு வந்துவிட்டன.
இணைய ஊடகங்களிலோ செய்திகளிலோ நாம் ஒன்றைப் பார்த்திருக்கிறோம். ’மிக அழகாகத் தமிழ் பேசும் சீனப்பெண் பாரீர்’ என்று காட்டுவார்கள். காணொளியில் தோன்றும் சீனப்பெண்மணி ஒருவகையான கொஞ்சுதமிழில் நன்றாகவே தமிழ் பேசுவார். எங்கோ சீன நாட்டில் இருக்கின்ற பெண்ணொருத்தி பேசுகிறார் என்று நாம் கற்பனையில் மகிழ்ந்திருப்போம். உண்மையில் அவ்வாறு தெளிவாகத் தமிழ்பேசுகின்ற பெண்மணி சிங்கப்பூர் வாழ் சீனப் பெண்மணியாகவே இருப்பார். சிங்கப்பூரில் தமிழும் சீனமும் ஆங்கிலமும் மலாயும் கலந்து வாழ்கின்ற மொழிகள். அம்மொழி மக்களில் யார் வேண்டுமானாலும் இந்நான்கில் எம்மொழியையேனும் சிறப்பாகக் கற்றுவிடலாம். அவ்வாறுதான் சிங்கப்பூர்வாழ் சீனர்கள் தமிழையும் நன்றாகக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். தமிழை அழகாகப் பேசி மயக்குகிறார்கள். சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்களும் சீனத்தையோ மலாயையோ கற்றுக்கொண்டு சிறப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் அருகில் இருக்கின்றன. ஒருவேளை நான் சிங்கப்பூரில் வாழ்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருப்பேன் எனில் சீனமொழியை முதல் வேலையாகக் கற்று முடித்திருப்பேன். விருப்பப்பட்ட மொழியைக் கற்பதற்கு அம்மொழி மக்களின் அண்மை மிகவும் உதவும். சீனமொழியை நன்கு கற்ற தமிழ்மக்களும் இருக்கக்கூடும். தமது உணவு விடுதியின் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் சீனர்களே என்று சிங்கையில் உணவகம் நடத்தும் நண்பர் பனசை மணியன் குறிப்பிட்டுச் சொன்னார். அவரைப் போன்றவர்கள் சீனத்தையும் கற்றறிந்திருப்பது தவிர்க்க இயலாதது.
இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சுற்றியலைந்த வகையில் ஒரு நிலத்தின் மொழிச்சூழல் ஒற்றைப்படைத் தன்மையானது என்று மட்டுமே என் மனத்தில் இருந்தது. ஒடியாவிலோ ஆந்திரத்திலோ கருநாடகத்திலோ மகாராட்டிரத்திலோ அம்மக்கள் அவர்தம் மாநில மொழியைத்தான் அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் ஓரிடத்திற்குச் செல்வதற்கு வழிகேட்டால் கையாட்டலில் உணர்த்தும்படியாகத்தான் விடை சொல்வார்கள். நாமும் குறிப்பாக உணர்த்தி நமக்கு வேண்டிய விடையைப் பெறவேண்டும். மொழி தெரியாத நிலத்தில் உலவுவதாகவே மனப்பதிவு ஏற்படும். தமிழ்மொழிச் சூழலும் பிறமொழிச் சூழலும் கலந்தவாறுள்ள சிங்கப்பூரின் நான்மொழிச் சூழல் எனக்கு முற்றிலும் புதிது. தமிழும் ஆங்கிலமும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எவ்வகை வேறுபாட்டுணர்ச்சியும் தோன்றாது என்றே என்னால் கணிக்க முடிகிறது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய இணையவழிச் செயல்பாடுகள் யாவும் மிகவும் பொருட்படுத்தத் தக்கனவாக மாறியிருந்தன. முகநூலில் எழுதுகின்ற தமிழ்மொழியியல், இலக்கணம் சார்ந்த பதிவுகள் உலகெங்கும் உள்ளோரால் விரும்பிப் படிக்கப்பட்டன. திடுமென்று என்னைப் பின் தொடர்வோரின் தொகை ஐம்பதாயிரத்தினரையும் தாண்டி ஏறியது. வலைப்பூக்களின் காலத்தில் ஓர் ஆயிரத்தினர் இருந்தால் போதும், அவர்கட்காக நாம் எழுதுவது பொருண்மையுடைத்து என்று நான் நினைத்தது உண்டு. திடுமென்று பல்லாயிரத்தினரைக் கண்டதும் திக்குமுக்காடிப் போய்விட்டேன். இவ்வாறு பெருகும் கூட்டத்தினரைக் கண்டு பெரிய புனைவெழுத்தாளர்களே தலைதெறிக்க விலகி ஓடுகின்ற சூழலில் நான் இவர்களை ஆக்கவழியில் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன். அவ்வழியே உருவானவன்தான் இன்றைய நான்.
தமிழ்நாட்டுச் சூழலில் இணையத்தில் அரசியல் அக்கப்போர்களைத் தொடர்ந்து எழுதுவோரும், நகைப்பழிகைகளைத் (memes) தொடர்ந்து பகிர்வோரும்தாம் மிகுதியாய்ப் பின்பற்றப்படுவர். தமிழ் இலக்கண இலக்கியங்கள் சார்ந்து செயல்படுகின்ற ஒருவரை இத்துணைப் பெருந்தொகையினர் பின்பற்றியது வியப்பூட்டிய நிலைமையே. உண்மையில் எளியநிலைக் கலகலப்புகளைத் தாண்டி ஆழ்ந்த பொருள்களில் அறிவதற்கு மக்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர் என்பதனையே அந்நிலைமை எடுத்துக் காட்டுகிறது. இவ்வளவு பெரும்பான்மையினரில் யார் யார் எந்நிலத்திலிருந்து என்னைப் படிக்கின்றார்கள் என்பதனை முகநூலே பிரித்துக் காட்டிற்று. பெரும்பான்மையினர் தமிழ்நாட்டவர்களாக இருப்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியேயுள்ள பின் தொடர்பாளர்கள் யார் என்று பார்த்தபோது நானடைந்த வியப்புக்கு அளவில்லை, காணீர். அவர்கள் யாவரும் சிங்கப்பூர் மக்கள். சிங்கப்பூர்க் குடிவாழ்வினரும் குடிவரவாகிய தமிழ்நாட்டினருமாக என்னைப் பெரும்பான்மைச் சிங்கைவாழ் மக்கள் பின் தொடர்கின்றார்கள் என்றுணர்ந்தேன். அதன்வழியே நான் பெற்ற பொருள் – தமிழ்சார்ந்த செயல்பாடுகளில், தமிழ்சார்ந்த புத்தாக்கங்களில், தமிழ்சார்ந்த முன்னகர்வுகள் அனைத்திலும் முதன்மைப் பங்கேற்பாளர்களாக விளங்கக்கூடியவர்கள் சிங்கப்பூர்வாழ் தமிழ்மக்கள் என்பதே அது.
தமிழ்மொழிப் பற்றுணர்ச்சி ஒருவர்க்குப் புறத்தேயிருந்து ஊட்டப்படுவதன்று. அது அவரவர் உள்ளத்து ஊற்று. தாம் செய்ய நினைத்த ஒன்றைப் பிறிதொருவர் செய்யின் பெறுகின்ற உவப்போடு உடன்நிற்கும் தோழமை. சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்கள் சிறிதும் தளர்ச்சியின்றி மொழியுணர்ச்சியோடு வெளிப்படுபவர்கள் என்கின்ற தெளிவு சிங்கைக்கு வருவதற்கு முன்னமேயே எனக்கு ஏற்பட்டிருந்தது. அத்தகைய நாட்டிற்கு வருகின்ற வாய்ப்பு பொன்னானது என்றே உணர்ந்திருந்தேன்.


