(சிறுகதை) நெய்தல்

0
460

சித்ரா ரமேஷ்

உப்புக்காற்றுடன் மீன்வாடையும் கலந்து வீசிய மணம்.ஆறு கடலுடன் கலக்கும் உப்பங்கழியில் நீர்நாய்கள் அவசரம் அவசரமாக கடலை விட்டு ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருந்தன. அவை நீந்திக் கொண்டிருந்ததைப் பார்க்கவே உல்லாசமாக இருந்தது. இரவு முழுவதும் விடாது  பெய்த மழையால் கடல் பெருகி எது கடல் எங்கு ஆறு என்று தெரியாத அளவு நீர் வெள்ளமெனப் பாய்ந்துகொண்டிருந்தது. தானும் அதைப் போல் வெள்ளமெனப் பெருகி அன்பில் மஹேஷை மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவனை கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் பார்க்காத தாபத்தில் காலையில் மெதுவோட்டம் ஓடப் போகிறேன் என்று அம்மாவிடம் சொல்லி விட்டு கடற்கரைப்பக்கம் வந்தாள் தாட்சாயினி. மகேஷுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனுக்காகக் காத்திருக்கும் நேரம் வீணாகப் போனதாக  நினைக்கத் தோன்றாத வயது. காதலில் உறங்கி, காதலில் தோய்ந்து, காதலில் எழுந்து காதலுக்காக வாழும் பருவம் அது. சற்று தூரத்தில் அவன் வருவது தெரிந்தது. வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.

“என்ன கோவமா?” என்று கேட்டுவிட்டு இவள் பதிலை எதிர்பார்க்காமல் ஓடத் தொடங்கினான். இதைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்துப் போய் அவளும் அவனைப் பின்தொடர்ந்து ஓடத் தொடங்கினாள்.

“உங்கிட்ட வரமுடியாதுன்னு சொல்ல வேண்டாம்ன்னு வந்தேன். போன செமஸ்டர்ல எல்லா சப்ஜெக்ட்லயும் ஜிபி குறைந்து விட்டது. உனக்குத் தெரியும்தானே? நான் எக்ஸ்சேஞ்ச் ப்ரோகிராமுக்கு ட்ரை பண்றேன். இந்த ஜிபி ஸ்கோருக்கு எதுவும் கிடைக்காது” என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னான் மகேஷ்.

சென்ற வருடத்தேர்வில் தாட்சாவும் ஜிபி மதிப்பெண்கள் சரியாகப் பெறவில்லை. அப்போது தான் இருவரும் பேசிப்பழகத் தொடங்கியிருந்தனர். மகேஷ் இருபத்திநான்கு மணி நேரமும் ஆவேசம் பிடித்தவனாக ஆசைக் காதலனாகப் பேசிக்கொண்டிருந்தான். அழைக்கும்போது தொலைபேசியை எடுக்கமுடியாமல் போனால் அழுது மன்னிப்பு கேட்கும் வரை ஆத்திரப்படுவான். அப்போது தனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் குரலைக் கேட்டாலே சொக்கிப் போவாள்.

தேசியப்பல்கலைக்கழகத்தின் ‘சங்கே முழங்கு’ நாடகத்தில் இருவரும் இணைந்து நான்கு நடனங்கள் ஆடினார்கள். நாடகக் காதலர்களுக்கு உதவி செய்வதுபோல் காட்சியில் நடனம் ஆடி இந்த ஜோடியும் காதலில் விழுந்தார்கள். ஒத்திகை நேரங்கள் கடந்த பின்னும் இவர்கள் காதலுக்கு பல ஒத்திகைகள் நடந்தன.

“ரிபப்ளிக் பாலிடெக்னிக் வா. அங்க உட்கார்ந்து படிப்பதற்கு நிறைய இடம் இருக்கு” என்று அழைத்து படிக்காமல் பேசிக்கொண்டிருந்தான்.

இடையில் “காபி சாப்பிடலாம்” என்று இரண்டு மணி நேரம் வீணடித்தான். திடீரென்று “என் வீட்டுக்குப் போய் என்னுடைய டேபிளில் இருக்கும் இரண்டு ஃபைல்களை எடுத்துக் கொண்டு வா” என்று ஏவுவான்.

“நாளைக்கு நீ வரும் போது பெரிய ஃபிளாஸ்க்கில் டீயும் கூட ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு வா” என்று ஒருநாள் அவளைக் கொஞ்சிக் கொண்டே சொன்னான்.

அவன் எது சொன்னாலும் அடிமை போல் செய்தாள். அம்மா முதலில் ஆச்சரியப்பட்டாள். வீட்டில் ஒரு சின்ன உதவி கேட்டாலும் செய்யாத பெண் இப்படி வேலைகள் செய்கிறாளே என்று! அப்பா தாட்சாவைக் காரில்  கொண்டு போய் விடும் போது அங்கே  நின்று கொண்டிருந்த மஹேஷைப் பார்த்து விட்டு அம்மாவிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. மறுநாள் அம்மாவிடம் “அம்மா எதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு தாயேன்.சாண்ட்விச் கொடேன் என்று கேட்டதும் அம்மா எரிச்சல்பட்டாள்.

“தாட்சா இந்த வயசும் மனசும் இப்படித்தான் அலையும். என்ன செய்ய? இப்பத்தான் படிச்சு பெரிய வேலைக்குப் போகணும்ங்கற நிர்ப்பந்தமும் இருக்கு. பாத்து நடந்துக்கோ அப்பா ரொம்ப கவலைப்படறார்” என்று பூடகமாய் சொன்னது அவளுக்குப் புரியாமலில்லை. அங்கே அவன் காத்திருப்பான் என்ற எண்ணமே அவளுக்கு மனதெல்லாம் நிறைந்திருந்தது.

“சரி இப்போ உன் கதையை ஆரம்பிக்காதே! நான் நல்லா படிச்சிட்டுத்தான் இருக்கேன்” என்று அம்மாவைப் பார்த்துக் கத்தினாள். அந்த வருடம்தான் இருவரும் செமஸ்டர் தேர்வில் சரியாகச் செய்யாமல் காதல்கோட்டை கட்டி  படிப்பைக் கோட்டை விட்டனர்.

பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டதே என்று குறுஞ்செய்தி அனுப்பி வரவழைத்தது தப்பாகி விட்டதோ என்று நினைத்தவாறே, “ஏய் மஹேஷ் ஏன் ஓடற? நில்லு நானும் வரேன். பாத்து ஒரு மாசமிருக்குமேன்னு கூப்பிட்டேன். எனக்கும் அதே எக்ஸாம், லைஃபில அம்பிஷன், ஜிபி ஸ்கோர்ன்னு எல்லாம் இருக்கு. ஏன் இப்படி விலகி விலகி போறே?” என்று கேட்டதும் ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“ஷப்பா! இந்தப் பொண்ணுங்க கிட்ட ரிலேஷன்ஷிப்பில மாட்டிக்கிட்டா இப்படித்தான் ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு” என்றான்.

தாட்சாயிணி ஒரு கணம் அதிர்ந்து போனாள். தான் எப்படி இவனால் நிலைகுலைந்து போயிருக்கிறோம் என்பது அவனுக்குத் தெரியாதா? அவன் எக்ஸ்சேஞ்ச் ப்ரோகிராமில் இடம் கிடைத்து ஸ்வீடன் போய் விடுவான். நானும் முதுகலைப்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா போய் விடுவேன். தொலைதூர உறவில் எத்தனை நாள் இருப்போம் என்று சொல்ல முடியாது. காதல் கனிந்து திருமண உறவில் முடிய வேண்டும் என்பது குறித்து சம்பிரதாயமாக இருவருமே யோசிக்கவில்லை. மனதிற்குப் பிடித்தவனோடு வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று பெண்ணின் இயல்பான ஆசைகளோடு தாட்சா இருந்தாள். தமிழ்த் திரைப்படங்களில் வருவது போல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற உடனே காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பெரிய பங்களாவில் இருக்க வேண்டும்; அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் காரில் செல்லும் கணவனுக்கு டாட்டா காட்டி விட்டு வீட்டில் இருக்கும் பெண்ணாகத் தன்னைக் கற்பனைச் செய்து பார்த்தாள். அம்மாவிடம் சொன்னால் அவ்வளவுதான்! நவீன காலத்தில் இப்படி ஒரு கல்யாணக் கனவா? என்று தன்னை நினைத்து சிரித்தாள். மஹேஷை விட்டுப் பிரிவது தனக்கு எத்தனை துன்பம் தருகிறதோ அத்தனைத் துன்பம் அவனுக்கும் இருக்கும் என்று நினைத்தாள்.

தேர்வுகள் தொடங்கி விட்டன. அந்த பரபரப்பில் இருவரும் ஒருவரை மறந்தனர். அந்த வருடத்துடன் படிப்பு முடிந்து விடும். மேற்கொண்டு தேசியப்பல்கலைக் கழகத்தில் ஹானர்ஸ் படிப்பைத் தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். மஹேஷிடம் கேட்கலாம். அவன் என்ன சொல்கிறானோ அதன்படி செய்யலாம் என்று அம்மாவும் அப்பாவும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தாள். மஹேஷைத் தொடர்பு கொள்வதே  கடினமாக இருந்தது. எப்போது கேட்டாலும் பிஸி என்ற பதில்.

இவர்கள் இருவருக்கும் பெரிய நட்பு வட்டம் இருந்தது. அதில் ரகு, அர்ஜுன், மைதிலி, கிரேசிலின், சத்யா என்று எல்லோரையும் சந்திக்க அழைத்தபோது அனைவராலும் ஒன்றாக வரமுடியவில்லை. சத்யாவும் ரகுவும் வந்தனர். அவர்கள் மஹேஷுக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்கள். காஃபி ஷாப்பில் நெடுநேரம் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடம்  என்ன கேட்பது என்று புரியாமல்,

“என்ன செய்யப் போறீங்க? மேல படிப்பா? வேலையா? மஹேஷ் என்ன செய்யப் போறான்?” என்று கேட்டதும் இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.

“மஹேஷ் ஸ்வீடன் போகப்போறான். அதுக்காக ப்ளான் செய்யறான்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியும் ஆனா எப்ப போறான்? என்ன ப்ளான்னு தெரியலை. ஏன் எங்கிட்ட முன்ன மாதிரி பேச மாட்டேங்கறான்னு தெரியலை” என்று சொல்லும் போதே தாட்சாவுக்குக் கண்கள் கலங்கி விட்டன.

“நீ எதுக்கு தாட்சா அழறே? அவனெல்லாம் உனக்கு வொர்த் இல்ல” என்று சொன்ன ரகுவை உற்றுப் பார்த்தாள்.

“என்ன சொல்றீங்க? அவனுக்கு என்ன ஆச்சு?” என்று தாட்சா கேட்டதும்,

“மதுராவை ஞாபகம் இருக்கா? என்டியூவில் படிக்கிறாளே? அவதான் இப்ப மஹேஷோட கேர்ள் ஃப்ரெண்ட். அவ கூட பாரீஸ், சுவிட்சர்லாண்ட் எல்லாம் போய்விட்டு அப்புறம் ஸ்டாக்ஹோம் போகப்போறான்” என்று  சட்டென்று ரகசியத்தை உடைத்தான் அர்ஜுன். ஒரு கணம் அமைதி.

“நான் நானாக இல்லாமல் அவனுக்காக எத்தனை நாள் வாழ்ந்திருக்கேன். ஒரு நிமிஷத்தில் என் வாழ்க்கைய விட்டு விலகிட்டானா?” என்று விசும்பினாள்.

“அழாதே தாட்சா! யூனிவர்சிட்டி லைஃப்பில் இதெல்லாம் சாதாரணம்மா! டேக் இட் ஈஸி. எல்லோரும் நம்மைப் பார்க்கிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள். நீயே உன் ஃப்ரெண்ட்ஸோட எவ்வளவு பிரேக்அப் கதைகளைக் கேட்டிருக்கே!” என்ற அர்ஜுனிடம்,

“ஆமா ஆனா அதெல்லாம் எனக்கு நடக்காதுன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“சரி மஹேஷ் என்னிக்கு கிளம்பறான்னு மட்டும் சொல்லு. நீங்க எல்லாம் ஏர்போர்ட் போவீங்கன்னு தெரியும்” என்று புன்னகையுடன் கேட்ட தாட்சாயினியைப் பார்த்து இருவரும் சிரித்தனர்.

தாட்சாயினி ஆஸ்திரேலியா பயணத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அம்மா அவளைச் சுற்றி வந்து,

“நா வேணா உன்னோட வந்துடட்டுமா? மெல்பர்ன்ல ஒரு வீடு எடுத்துத் தங்கிக்கலாம். உன் படிப்பு முடியற வரை எனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்” என்றவளைப் பரிதாபமாகப் பார்த்தாள் தாட்சாயினி. ஒரே பெண். அதுவும் குழந்தைப்பேறு இல்லாமல் பொத்தோங் பாசிர் துர்க்கையிடன் விடாமல் வரம் கேட்டு தவமிருந்துப் பிறந்தவள் தாட்சாயினி. அம்மாவுக்கு உலகமே தாட்சாயினிதான். அம்மா அப்பா எல்லோரையும் விட்டு விட்டுப் போகப் போகிறோம் என்று அப்போது தான் உணர்ந்தாள்.

அம்மாவைக் கட்டிக் கொண்டாள். அம்மா அணிந்திருந்த உடையின் வாசமும், வெதுவெதுப்பான அவள் உடலும் தாட்சாவை மீண்டும் குழந்தையாக்கியது.

“ஜீவு! கவலைப்படாதே! இரண்டு வருடங்களில் உன் பெண்ணா அப்படியே திரும்பி வருவேன்” என்றாள்.

அம்மா ஜீவிதாவை செல்லமாக ஜீவு என்று கூப்பிடுவதைப் பார்த்து அப்பாவும் சிரித்தார்.

“ஆமா எங்கிட்ட வராமா யாருகிட்ட போவே? உனக்கு அதுக்குள்ள ஒரு மாப்பிள்ளை பார்த்து வைக்கவேண்டும்” என்றதும் அப்பா சற்று கோபத்துடன்.

“நீ எந்தக் காலத்துல இருக்கே? நானும் நீயும் மாப்பிள்ளை பாக்க வேண்டாம். அவ விருப்பம் என்னவோ அதுபடி நடப்போம்” என்றார்.

“ஜூவு! அப்பா எதாவது சொல்லட்டும். தெலுங்கு சினிமா ஹீரோ மாதிரி யாரையாவது பார், உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் தாட்சாயினி. மூவரும் மனம் விட்டுச் சிரித்தனர்.

அன்று தன் நண்பர்களிடம் வீறாப்பாக விமான நிலையம் வருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு எத்தனை நேரம் அழுதாளோ தெரியவில்லை. அம்மா கதவைத் தட்டி தட்டிப் பார்த்து ஓய்ந்தாள்.

“அவளுக்கு எதோ மனவேதனை.அவளை விட்டு விடு! அழுது முடிஞ்சு உங்கிட்ட வருவா” என்று அப்பா அம்மாவைச் சமாதானப்படுத்தினார்.

ஒரு வாரம் ஒரு வருடம் போல் இருந்தது. தன்னைக் கவனித்துக் கொள்ளாமல் சாப்பிடாமல் பித்து பிடித்த மனநிலையில் இருந்தாள். ஒரு வாரம் கழித்து அர்ஜுன் அழைத்து “இன்றிரவு பதினொரு மணி ஃபிளைட். டெர்மினல் டூ.நீ வருவதாகச் சொன்னியே. வா” என்று கூப்பிட்டான்.

நன்றாகக் குளித்து வயிறு நிறைய சாப்பிட்டாள். தனக்குப் பிடித்த இளம் நீலநிற உடையை அணிந்தாள். அதற்குப் பொருத்தமான அணிகலன்கள். அழுது அழுது கண்களில் இருந்த கசடெல்லாம் போனது போல் மனதிலிருந்த பாரமும் இறங்கியதை உணர்ந்தாள்.

“எங்க ஃபேரி மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு கிளம்பற?” என்று கேட்ட அப்பாவிடம் “என் ப்ரெண்ட் யூரோப் போறான். அவனுக்கு செண்ட் ஆஃப் கொடுக்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போறோம். நீங்களும் அம்மாவும் வரீங்களா?” என்று கேட்டவுடன் அப்பா ஒரு நிமிடம் யோசித்து விட்டு,

“நானும் அம்மாவும் உன்னை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணிட்டு அப்படியே பீச்சுக்குப் போறோம். நீ வரும்போது தனியா வந்துடும்மா” என்றார்.

விமான நிலையத்தில் பெரிய நண்பர்கள் கூட்டம் சூழ மஹேஷ் நின்றிருந்தான். பெரிய மனிதன் தோரணை முகத்தில் மிகுந்திருந்தது. சாம்பல் நிற கோட் அணிந்திருந்தான். ஜிம்முக்குப் போய் உடலைக் கட்டுக்கோப்பாய் மாற்றியிருந்தான். கண்களில் அந்த சிரிப்புக்குப் பின்னால் கபடங்கள்  நிறைந்திருந்தன. தாட்சாவின் பார்வையைத் தவிர்த்தான். தாட்சா வலுகட்டாயமாக அவன் தோளைத் தழுவி காதில் “பெஸ்ட் விஷ்ஷஸ் மஹேஷ்” என்றாள்.

மதுரா அதை சட்டையே செய்யாமல் “நாம் கிளம்பலாம்.உள்ளே போய் சுற்றலாம்” என்றதும் அனைவரும் அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு கிளம்பினர். மேய்ப்பன் பின்னால் போகும் ஆட்டுக்குட்டி போல் மதுராவுக்குப் பின்னால் மஹேஷ் செல்வதைப் பார்த்தாள் தாட்சாயினி.

“நாம் வெளியே சுற்றலாமா?” என்று கிரெசிலின் கேட்டதும் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அன்று அவள் வீடு திரும்ப விடியற்காலை மூன்று மணி ஆகிவிட்டது. அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

விடியும் பொழுதின் வெளிச்சம் வானில் நிறைந்திருந்தது. விடிவெள்ளி பளிச்சிட்டது. தாட்சாயினி தனக்கு மேல் படர்ந்த வானத்தில் கரைந்து விடலாமா என்று நினைத்தாள். அவளுக்கென்று ஒரு வானமும் அதில் ஒரு விடியலும் இருப்பதை உணர்ந்தாள்.

நெய்தல்: (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்)

chitra.kjramesh@gmail.com