மொழிபெயர்ப்புக் கவிதை

மோகனப்பிரியா

ஒரு கவிதையும் உதவிடாத இன்றிரவு (Tonight No Poetry Will Serve  – ஏட்ரியன் ரிக்)

வெற்றுக் கால்களுடன்

பௌர்ணமியின் கண்ணிமைகளை

நீண்டநேரம் நடந்தபடி கண்ணுறும்

உன்னைப் பார்த்தேன்

பின்பு தூக்கக் கலக்கத்தில்

உனது கறுமைநிறக் கூந்தலில் கரைந்துபோனாலும்

எங்கோ ஒரு மூலையில்

தூக்கம் வராதவர்களையும் தூங்காதவர்களையும்

பற்றிய உணர்வு இல்லாமல் இல்லை

இன்றிரவு

எந்த ஒரு கவிதையும்

உதவாது

என்றே எண்ணுகிறேன்

பாடுதலின் அமைப்பு:

வினைச்சொல் முன்செலுத்த

துணைச்சொற்கள் செயலை மாற்றுகின்றன.

வினையே பெயர்ச்சொல்லை வலுக்கட்டாயமாய்ச் செலுத்த

எழுவாய் அதில் மூழ்குகிறது.

பெயர்ச்சொல்லுக்கு மூச்சுத்திணற,

வினைச்சொல்லின் அவமதிப்பு தொடர்கிறது.

இப்போது அந்த வாக்கியத்தை அமைத்துப் பாருங்கள்.

கவிஞர் பற்றிய குறிப்பு:

ஏட்ரியன் செசில் ரிக் (Adrienne Cecile Rich 1929 – 2012) 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட முக்கிய ஆளுமையாக அமெரிக்க கவிஞர். இவர் கட்டுரையாளரும் பெண்ணியவாதியும் கூட.

இவர் பெண்களின் அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டது பலராலும் அங்கீகரிக்கப்பட்டது. இவரது முதல் கவிதை நூல், டபுள்.ஹெச். ஆடன் அவர்களால் Yale Series of Younger Poets Awardக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.