கவிதை – தேன்மொழி அசோக்

மோட்சம்

யாருக்குமே கொடுத்திடாத

சிறந்த பரிசொன்றை

உனக்குக் கொடுக்க எண்ணினேன்.

என்னளவில் பெரிதான

அரிதிலும் அரிதான

என் உயிரின் மைய மாடத்தில்

அயராமல் எரியும் விளக்கைத்

தேர்ந்தெடுத்தேன்.

அதிநவீன விளக்குகளோடு

போட்டியிட இயலாமல்

உன் முற்றத்தின் மூலையில்

உபயோகமற்றுக் கிடக்கின்றது அது.

என் பேரொளியே

உன்னளவில் அரிதாவது எது எனச் சொல்லேன்

அதை அடைவதே

இப்பிறவியின் மோட்சம்.

சுய இருப்பு

விடுதலையான பட்சி மட்டுமே அறியும்

கூண்டின் நீள அகலத்தை

பரந்த பெருவெளியின் பதத்தை

கையகலப் பாத்திரத்தால் வயிறு நிறைவதைவிடக்

காட்டினில் கழனியில் கொத்துவது பெரும்பேறு.

சுற்றி வளைக்கும் சூதாட்டத்தைவிட 

தனித்து செயல்படும் போர் வீரனாய்

ஆயுதங்களோடு ஓடுவது வீரம்.

நெருக்கடியற்ற காதல் அறியும்

நெருங்குவதும் விலகுவதும்

ஓர் உயிரின் அத்தியாவசியமென

இல்லையேல் காதலும் அனாவசியம்.

அடிமை அரிசியை வயிறு முட்ட உண்டு

வாயைப் பிளந்து உறங்குவதைவிட

பாதி நிரம்பிய வயிற்றின்

அடியாழத்திலிருந்து குரைக்கும்

காவல் நாயாவதில் ஒரு மிடுக்கு.

மரிக்கொழுந்தின் மணம் அறியாதவனின்

கூடத்தில் மாலையிலிருப்பதைவிட

மக்கிக் கிடக்கும் குப்பையிலிருந்து

துளிர்ப்பது உத்தமத்திலும் உத்தமம்!

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தை

வழியறியாமல் தவிப்பதுபோலல்ல

எங்கு விட்டாலும்

வழி தேடி தடமறியும்

என் சுயமெனும் மழலை!

இத்தனையையும் மனக்கிடங்கில் கட்டுப்படுத்தாமல்

எழுத்தில் பிரசவித்த இந்நிமிடம்

சட்டெனப் பிறக்கவில்லை

கருவறையெனும் நாற்றங்காலிலிருந்தே

நன்கு பராமரித்து வளர்ந்து

இன்றும் நல்ல சாகுபடி காணும்

நெற்பயிரைப் போன்றது.