
மதிக்குமார் தாயுமானவன்
“என்னை இனிமேல் அம்மா
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் சிறுவன் அல்ல
என்னை இனிமேல் தத்துவங்களும்
அரசியலும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் இளைஞன் அல்ல
என்னை இனிமேல் மதமும் கலையும்
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் நடுத்தர வயதினன் அல்ல.
என்னை இனிமேல் மாத்திரைகளும் மரியாதைகளும்
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் முதியவனல்ல.
நான் இப்போது மூப்பைக் கடந்தவன், சின்னஞ்
சிறு குழந்தையைப் போல.
யாராவது என்னை லேசாக விரலால் தொட்டால்
போதும்.
எனக்குள்
சுடர்கிறது ஒரு பொற்கணம்.”
- கவிஞர் தேவதச்சன்
ஒரு சிறு தொடுதல் குழந்தைக்குப் பொற்கணங்களை ஈவது போல இந்த மழலை மனதிற்குப் பொற்கணங்களைத் தர வல்லன கவிதைகள். தர்க்க ஒழுங்குகளை மீறி, மொழி தன்னை நிகழ்த்திக்கொள்ளும் தருணமே கவிதையின் பிறப்பாகின்றது என்பார் கவிஞர் மோகனரங்கன். ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி எத்தனையோ கோல்கள் கொண்டு தனக்கு மட்டுமே புரிகின்ற மந்திரங்கள் ஓதி, கட்டவிழ்க்காது, காற்புள்ளி உணர்த்தாது, இதுவே கவிதை இதுவே கவிதை இன்று ஓலமிடும் குரல்கள் இப்பொழுது ஒலியையும் ஒளியையும் இழக்கத் தொடங்கிவிட்டன. அகங்களுக்கிடையே உரையாடப்படும் மௌனமாகக் கவிதை தன்னை மீள் உருவாக்கம் செய்ய ஆரம்பித்து விட்டது. கவிஞர் யாழிசை மணிவண்ணனின் கவிதைகள் நம் மழலை மனதை மீட்டெடுக்கும் நுட்பம் தெரிந்தவை..
“புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச் செல்லுங்கள்
பக்கத்தில் தான் குழந்தை நிலை”
என்று நம்மைக் குழந்தைப் பருவத்திற்குத் தோளில் சாய்த்துத் தூக்கிச் செல்பவை. தேவதைகள் தூவும் மழை,கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு, பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம், குடைக்காளான்கள் துளிர்க்கும் வீடு என நான்கு கவிதைத் தொகுப்புகளில் தன் வாசம் பரப்பிய யாழிசை ஐந்தாவது கவிதைத் தொகுப்பாக “மற்றும் குழுவினர்” – ஐ அழைத்து வந்திருக்கிறார்.
தன்னுடைய கவிதை இலக்கணமாக, யதார்த்தங்களையும் அழகியலையும் இணைத்து, குறி சொல்லும் கவிஞர் யாழிசை மணிவண்ணனை, கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் அவர்களின் இலக்கிய மரபின் தொடர்ச்சியாக, அந்த வரிசையில் பெருமையுடன் இணைக்கலாம்.
“மறந்து வைத்த பிளாஸ்டிக் பையாய்
மரத்தின் மேல் ஒரு தேன்கூடு”
என்று அன்றாடங்களை அழகியலோடு இணைப்பதில் வல்லவர் கவிஞர் எஸ்.வைதீஸ்வரன். அவரைப் போலவே புழங்கும் பொருட்களையும் அழகியலோடு கவிதையாக்கும் சூட்சமம் யாழிசைக்கும் வாய்த்திருக்கிறது.
இந்தக் கவிதைத் தொகுப்பைப் பாடுபொருட்கள் என்ற அடிப்படையில், அகம் சார்ந்த கவிதைகள், காமம் பாடும் கவிதைகள், சமூகம் சார்ந்தவை , வழக்கமான அழகியல் நோக்குக் கவிதைகள் என்று பிரிக்கலாம். எண்ணிக்கையின் அடிப்படையில் ஒன்றுக்கொன்று வித்தியாசம் கொண்டவை.
இந்தத் தொகுப்பில் முக்கியமான கவிதையாக நான் ரசிப்பது “கடல் பார்த்தல்” என்னும் பின்வரும் கவிதை. கடல், அலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. ஓர் அலை வந்து கரை தொட்டபின்பு மீண்டும் உள்வாங்கி இன்னொரு அலையோடு சேர்ந்துகொள்கிறது. ஒரே அலையா அல்லது வெவ்வேறு அலைகளா தெரியாது. ஆனால் ஒவ்வொரு அலைகளும் காண்பவர்களைப் புதுப்பிக்கிறது அல்லது ஒவ்வொரு முறையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது.
“கடல் பார்த்தல் என்பது
காலத்தின் நிர்வாணத்தை ரசிப்பது.,
ஒலியடங்கும் பின்னிரவு
அந்தப் பெருந்தவத்தின் உகந்த காலம்.,
கடல் பார்த்தல் என்பது
தொல்குடி மூதாயின் மடிதுயிலல்.,
அலை மடிப்புகள் கசங்கி விரியும்
நீராலானது அவள் உடை.,
கடல் பார்த்தல் என்பது
கசடுகள் நீங்கும் அகக்குளியல்
கரையிலிருந்து ஊருக்குள் நுழைய
படியத் துவங்குகிறது அன்றாடத்தின் புழுதி”
நிர்வாணம் என்பது ஏதுமற்ற நிலை அல்ல. அது ரகசியங்களைக் கண்டடையும் தொடர் நிகழ்வு. காலத்தின் ரகசியங்களைக் கண்டடையத்தான் இத்தனை போராட்டங்களும். கொண்டாட்டங்களும். காலத்தின் ரகசியம் அறிந்தவர் தன்னை முழுமையாக்கிக் கொள்கிறார். கடலின் ரகசியங்களும் காலத்தின் ரகசியங்களும் ஒன்றா என்றால் தெரியவில்லை. ஆனால் ரகசியங்களைத் தேடுதல், அதிசயங்களை உணர்தல், அந்தத் தொடர் நிகழ்வில் லயித்துக் கிடத்தல், கண்டடையும் ஆழத்தில் கிடைக்கும் பேரமைதி எனக் கடல் ரசித்தலையும் காலம் பார்த்தலையும் ஒரு புள்ளியாக்கும் அந்த முதல் வரி கவிதையின் முதல் உச்சம்.
ரகசியங்களைக் கண்டதோடு கவிதை நிற்கவில்லை. காலமும் விடுவதில்லை. காலத்தின் ரகசியங்களைக் கண்டடைந்த மனம் தன்னைச் சுத்திகரிக்கத்தொடங்குகிறது. கடல் பார்த்துத் திரும்பியவன் தன்னைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறான். திரும்பிய அந்த ஏதுமற்ற மனத்தில் அன்றாடம் மீண்டும் ஒட்டிக்கொள்கிறது. ஏமாற்றங்களை, துரோகங்களை, துயரங்களை, அன்றாடத்தின் சிதிலங்களைப் “புழுதி” என்ற ஒரு சொல்லுக்குப் பின் மறைத்து வைத்திருக்கும் கடைசி வரிகள் கவிதையின் அடுத்த உச்சம். உண்மையிலேயே கவிதை இங்கு முடியவில்லை. தன்னுடைய பயணத்தை வாசகர்களின் அனுபவங்களில் தொடர்கிறது.
இன்னொரு கவிதை, சுயத்தைப் பேசுகின்றது. ரசிக்கின்றது.
“தனித்திருக்கும் தீவுகளை
எள்ளி நகையாடுகின்றன
சமுத்திரத்தின் நீரலைகள்..
பங்கின் வீதம்
எத்தனை குறுகியதானாலும்
தூரத்தில் தெரியும் தீவுகள்
சுயத்தின் ஒளிச்சுடர்.”
மணற்திட்டுகள் இல்லாமல் அலைகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள இயலாது. அலைகள் இல்லாத தீவுகள் வெறும் மணற்திட்டுகள்தான். ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்வுதான் அலைகளுக்கும் கரைகளுக்கும். இருந்தும் தூரத்தில் இருக்கும் தீவுகளைச் சுயத்தின் ஒளிச்சுடராக்கும் கவிஞரின் பார்வை கவித்துமானது. ஒளி நிறைந்தது.
கையறு நிலைக்கும் கவிஞர்களுக்கும் என்றைக்கும் ஒரு தொன்மத் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.
“ஊமை என்றால் ஒருவகை அமைதி.
ஏழை என்றால் அதிலொரு அமைதி”
என்று அமைதியை வகைப்படுத்தி வறுமையை அதில் ஒன்றுக்குள் வைத்திருப்பார். பேசவே கூடாத அமைதிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அந்த அமைதி ஏற்படுத்திக்கொள்வது. பேசமுடியாத அமைதி அப்படி இல்லை. இன்னும் சொல்லப் போனால் அங்கு ஒலி இருக்காதே தவிர அஃது அமைதியே இல்லை. பேசுவதற்கான அத்தனை எத்தனங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் பேசமுடியாத அந்தக் கையறு நிலையை வறுமைக்குப் பொருத்திய கவியரசரின் கவிமரபில் வந்த யாழிசை,
“காலொடிந்த மறியொன்று
மந்தையின் வேகத்திற்கு
ஈடுசெய்ய முடியாத பதற்றத்தில்
பயணிக்கிறது உறவு”
என்று எழுதிக் காலொடிந்த ஆடோன்றின் பரிதவிப்பை உறவுகளுக்குள் செலுத்திப் பேரழுத்தத்தை ஏற்றுகிறார்.
பேசாத பொருட்களை, அனுதின நிகழ்வுகளைக் கவிதையாக்கும் தேடல் தொகுப்பெங்கும் நிறைந்து இருக்கிறது. நாதஸ்வர சீவாளி, அன்டர்டேக்கர், ஷேன் வார்னே, கணிதக் குறிகள், சப்பாத்தி எனக் கவிதை எளியவற்றின் அருகிலும் யதார்த்தமாக அமர்ந்து கொள்கிறது.
சமூகம் சார்ந்த கவிதைகளிலும் கவிஞர் யார் மீதும் படாமல் ஏன் அவருக்கே கூடச் சுமை தெரியாமல் தன் சாட்டையைச் சுழற்றுகிறார். அப்படி ஒரு கவிதை,
“ஒரு வழியாக
மலைகள் மௌனம் கலைத்துவிட்டன
வெடித்துச் சிரித்து
விரைவுச் சக்கரங்கள் மீதேறி
இடம் பெயர்ந்துவிட்டன
பேசத்தெரிந்த வயதுமுதல்
சொல்லித் திரிந்த வாக்கியம்
மலையளவு நம்பியிருப்பதாக
இனி எப்படிச் சொல்லுவேன்?”
இந்தத் தொகுப்பில் காமம் பேசும் கவிதைகளும் தனக்கான இடத்தை எந்தச் சண்டையும் இடாமல் இயல்பாக நிரப்பிக் கொள்கின்றன. எழுத்தில் காமம் சொற்களிலா இருக்கிறது? சொல்லுவதில்தானே இருக்கிறது? கொதிக்கும் காமத்துப்பாலில் இந்தக் கவிதை ஒரு துளி பதம்.
“காமம் தகிக்கும்
தனிமையில் ஒருவன்
ஒலிபெருக்கும் ஆம்ப்ளிபயர்களின்
சுவை மொட்டுகளை வருடுகிறான்.
இத்தனை முடுக்கிகளில்
எந்த இரண்டு மொட்டுகளில்
இருக்கிறாளோ தெரியவில்லை
அவன் காதலி”.
கண்ட ஒன்றிலிருந்து காணாத ஒன்றைக் கண்டடைவதும் கவிதைதான். இருந்தும் இரண்டு பொருட்களை ஒப்பிட்டு அழகியலால் கவிதையாக்குவதையே தன்னுடைய முழு பலம் என்று கவிஞர் நம்பிக்கொண்டிருக்கிறார். அந்த அழகியல் கண நேரச் சிலிர்ப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதன் ஆழமும் அந்தக் கண நேரம்தான் இருக்கிறது என்று சொல்லவேண்டியிருக்கிறது.
ஐந்து தொகுப்புகளைப் படைத்த பின்பும் தனக்கான மைதானத்தில் தடுப்பாட்டம் ஆடுவதோடு கவிஞர் நின்றுவிடுகிறார் என்ற ஐயம் எழுகிறது. மைதானத்துக்கு வெளியே பந்தை அனுப்பும் வலுவும் வயதும் கவிஞருக்கு இருந்தும் கவிதைப் பரப்பின் புது முயற்சிகளை எடுக்கத் தயங்குவதை வாசக அளவில் உணர முடிகிறது. ஏற்கனவே வெளிவந்த அவரின் கவிதைகளின் நிழல் இந்தக் கவிதைத் தொகுப்பிலும் ஆங்காங்கே படிவதைக் காண முடிகிறது.
மிக முக்கியமாக, நிறையக் கவிதைகளில், கவிஞரே கவிதையை முடித்து வைக்கிறார். ஒரு கவிதையில் கவிதை பிறக்கும் இடத்தைத் தீர்மானிக்கும் கவிஞர், அந்தக் கவிதை முடியும் இடத்தை வாசகரிடம் கொடுத்துவிட்டு விலகிநிற்பது கவிதைக்கு நல்லது. பல கவிதைகளில் முடிவைத் தீர்மானித்துவிட்டுக் கவிதையைத் தொடங்கி இருப்பதை உணர முடிகிறது.
அண்மையில் படித்த குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு என்ற நூலில் ஒரு நிகழ்வு. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற பகுதியில் மேகா என்ற மேய்ப்பர் தினமும் கால்நடைகளைப் பாலைவனப் பகுதியில் ஓட்டிச் செல்வார். கூடவே தாகம் தீர்க்க ஒரு குடுவையில் குடிநீரும் எடுத்துச் செல்வார். ஒருநாள், சிறு பள்ளம் தோண்டி, மீதிமிருந்த நீரை அந்தப் பள்ளத்தில் கொட்டிவிட்டு இலைகளால் அதை மூடி வைத்து வந்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பி வரும்போது அந்த இலைகளை நீக்கிவிட்டுப் பள்ளத்தைப் பார்க்கிறார். பள்ளத்தில் நீர் இல்லை என்றாலும் அதிலிருந்து வந்த குளிர்க்காற்று அவரின் முகத்தில் அடிக்கிறது. அவ்வளவு வெப்பத்திலும் அந்தக் குளிர்மை உயிர்ப்புடன் இருக்க முடியும் என்று உணர்ந்த மேகா, அங்குக் குளம் கட்டத் தீர்மானிக்கிறார்., தனியாளாக நெடுநாட்கள் தோண்டப்பட்டுப் பின் பொதுமக்களின் உழைப்போடும் அந்தக் குளம் உருவாகிறது. இன்றைக்கும் மேகாவின் குளம், அந்தப் பாலைவனத்தில் குளுமையான காற்றை வெளியிடுகிறது.
கவிஞர் யாழிசை மணிவண்ணன் அவர்களுக்குச் சொல்வது ஒன்றுதான். சிறுபள்ளத்தில் வரும் குளிர்மையோடு கவிதையில் தன்னிறைவை அடையாமல் ,அவர் கட்ட வேண்டிய குளங்களும் ஊரணிகளும் ஏராளம் உள்ளன. வாசகரைப் போலக் கவிதையும் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.


