ஆதிமனிதனின் வேற்றுகிரக குறிப்புகள் – 5 : வ.கீரா

0
633

(தொடர்) ஆதிமனிதனின் வேற்றுகிரக குறிப்புகள் – 5

வ.கீரா

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவரவர சிந்தனைசெயல்

ஆர்த்து இவ் உலகத்து

அன்புடை யார்க்கு அருஞ்செயலும் இல்லே;

அறம் செய்து நின்றார்க்கு

இல்லை உலகில் துன்பம்.

சுமார் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாகவி கணியன் பூங்குன்றனார் எழுதிய எழுதிய இந்த புறநானூற்றுப் பாடல் சொல்லும் செய்தியின் ஆழ்ந்த பொருள்.இவ்வுலகம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்தாலும் மாந்தனுக்கு பயன்படக் கூடியது. உலகின் ஆதி தொன்ம மாந்தர்களான தமிழர்களின் அறப்பாடல்கள் எப்படி நம்மை இன்றும் வழி நடத்துகின்றதோ, அப்படித்தான் நிகழ்காலத்திலும் அறம் சார்ந்த ஓட்டங்களை கொண்ட மாந்தர்களை சந்திக்கும்போது நம்மை வழி காட்டிக் கொள்கிறோம். அப்படித்தான் அவரது உணவகத்திற்கு தனது வாகனத்தில் இட்டுச் சென்றார் நீதிப்பாண்டி. அந்த அவர் ஷானவாஸ். சிராங்கூன் டைம்ஸின் முதன்மை ஆசிரியர்.

உணவே மாந்தனின் சிந்தனையை தூண்டியது.உணவுக்காகவே மாந்தன் இடம் பெயர்ந்தான். உணவின் பொருட்டே இன்றுவரை உலகம் விஞ்ஞானத்தின் அனைத்து அடிப்படையையும் உருவாக்கியது. அப்படியிருக்கையில்  உணவைக் கொண்டு அதையே கருப்பொருளாக உள்வாங்கி உலகெங்கும் இருக்கிற உணவுகளின் வகைகளை,அவை எப்படி உருவாக்கப்படுகின்றன; அதன் மூலவர்கள் யார்; எந்த கலவையில் கலந்தால் உணவின் ருசி வேறுபடும்; அந்த உணவு தோன்றிய காலம் என்ன; அது தோன்றியதன் பின்னனி என்ன; அந்த உணவிற்கும் அக்கால நடமுறைகளில் நடந்த அரச மாற்றம், ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம் எல்லாவற்றையும் உணவின் வழியே இணைத்து எழுதும் வல்லவர்தான் எழுத்தாளர் ஷானவாஸ். பரபரப்பாகவே சிங்கை முகமும் அதன் மாந்தர்களின் முகமும் ஊடாடியதை மட்டுமே வந்ததில் இருந்து சந்தித்து சலிப்படைந்து போயிருந்த எனக்கு எந்த ஆர்ப்பாட்ட சூழலையும் ஒதுக்கி, இயல்பாக தன்னையே கண்டுணர்ந்து அமைதி காக்கும் ஒரு யோகியைப் போலவே அந்த மாந்தன் தோன்றினான்.

”பருவமே..புதிய பாடல் பாடு.. இளமையின் பூந்தென்றல் ராகம்..” என  எஸ்.பி.பியும் ஜானகியும் உருகி மெல்ல இழுத்து அதிகாலை ஓட்டத்திற்கு ஏற்ப பாடிக் கொண்டிருந்தார்கள் என் மனதில். அப்படித்தானிருந்தது அந்த சந்திப்பு. அவரிடம் பரபரப்பும் பதட்டமும்தான் இல்லையென்று சொன்னேன். ஆனால் வெகு நிதானமாக உலக இலகியங்களை உள்ளூர் இலக்கியங்களை புதுமையான கேட்டேயிறாத தகவல்களை எனக் கொட்டிக்கொண்டே இருந்தார். பொதுவாகவே கேட்டுக்கொண்டே இருக்கும் குழந்தை நான். ஷானவாஸ் அவர்கள் சொற்களால் பாடிக் கொண்டேயிருந்தால் எப்படி இருக்கும்? ஒரு உணவகத்தை நடத்திக்கொண்டே புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, சிராங்கூன் டைம்ஸ் மாத இதழை நடத்துவது என்பதெல்லாம் மாட்டுக் கொம்பில் பால் பீய்ச்சுவதற்கு ஒப்பானது. அசாத்தியமான ஒன்றை சாத்தியப்படுத்தும் அந்த மனிதன் என் மனமெங்கும் நிரம்பி வழிந்தார் என்றே சொல்லவேண்டும். என்னுடைய அகோரப் பசிக்கு இந்த ஒரு நாள் போதாது என்றே திரும்பினேன்.

நான் உண்மையில் உள்ளுக்குள் ஏங்கிக் கிடந்த குழந்தையாக இருந்தேன் என்று சொல்வதில் தயக்கமேதுமில்லை. ஒரு நாவலை எழுதி விட்டு, அதற்காக எந்த பிரதிபலனும் இல்லாமல் எனது குடும்ப சுமைகளை தாங்கிக்கொண்டு நான் நீடித்து நிற்க, அது புத்தகமாகிய தருணம்தான். அந்த தருணத்தையும் டிஸ்கவரி வேடியப்பனால் கடந்த பிறகு, அதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள்? அதை எல்லோரும் படிப்பார்களா? நூறுக்கு மேற்பட்ட புத்தகங்களுக்கு திறனாய்வுக் கூட்டங்களும் அறிமுகக் கூட்டங்களும் நடத்திய நானே எனது புத்தகத்திற்கு ஒரு அறிமுகக் கூட்டம் நடத்த யாரிடம் கோருவது என்ற ஏக்கம் போருக்குச் சென்ற புரநானூற்று தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி அவனது வருகையை எதிர்பார்த்து ஏங்கி ஏங்கி பசலை பீடித்து வதங்கி கிடப்பாள். அவள் எதிர்பார்க்கும் நாட்களுக்குள் அவன் வராமல் போனால் பசலையே அவளைக் கொன்றுவிடும் என்று அவளது தோழி அஞ்சி தலைவனுக்கு தகவல் அனுப்புவாள். என் மனதில் அப்படி இறுகிக்கொண்டிருந்த பசலையை எந்தத் தோழியிடம் நான் சொல்வது எனத் தெரியாமல் முடங்கிக் கிடந்தேன். ஒரு வேளை ஐந்து படங்கள் இயக்கிய நான் பொருளாதார வலிமையில் இருந்திருந்தால் இந்தப் பசலையை புரிந்துகொள்ள எப்போதும் உடன் ஆள் இருந்திருப்பார்கள். செல்லும் இடத்தில் கிடைக்கும் மரியாதையும் சரியாக அமைந்திருக்கும் என்று எண்ணி எண்ணி என் பசலை நோக்காடை அதிகப்படுத்திக் கொண்டிருந்தபோதுதான் சிங்கை பயணமும் அன்பழகனார் நட்பும் வாய்க்கப் பெற்றது.

இதிலும் அன்பழகனார் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து தீவிரமாக இயங்குபவர். நானும் ஒரு அரசியல் நிலைப்பாட்டில் தீவிரமாக களமாடுபவன். அதிலும் நான் ஏற்றுக்கொண்ட தலைவன் சென்னை புத்தக கண்காட்சியில் பேசியதற்காக நான் சார்ந்த பதிப்பகமே தடையான சூழல்.

அந்த எந்தவித அசூயையும் நிகழாத ஒரு கணத்தை உருவாக்கிக் கொடுத்ததில் அன்பழகனார் என்றும் என் நினைவில் போற்றுதலுக்குறியவர். கவிமாலைக்காக நான் காத்திருந்த தினங்களை குறுந்தொகையில் உருக்கித் தந்த

“யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.”

பாடலுக்கு ஒப்பாகவே நான் சேமித்து வைத்திருந்தேன்.

கவிமாலையில் நிகழ்வுக்காக அன்பழகனார் உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு என்னை அழைத்துச் சென்றார்.

திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்டு நிகழும் இலக்கிய கூட்டம் எப்பொழுதாவது நிகழும். ஆனால் சிங்கையில் எல்லா நிகழ்வுமே முறையாக வடிவமைக்கப்பட்டு, எவ்வளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்றெல்லாம் கூட உறுதியாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு தெரிந்திருக்கக்கூடுமோ என்கிற ஐயம் எழும் அளவு துளி நேரமும் சிந்திவிடாமல் அள்ளிக்கொள்கிறார்கள் என்பது கவிமாலை மட்டுமல்ல. அனைத்து நிகழ்வுகளுமே அப்படித்தான் என போகப் போகத் தெரிந்தது. கவிதை வாசிப்பு, கவிதைப் போட்டிகள் அதற்கான விருதுகள் என தொடர் நிகழ்வாக மாதம்தோறும் நடத்தப்படும் கவிமாலையில் இறுதி நிகழ்வாக ‘குமரி’ வெளியிடப்பட்டது.

சிங்கையின் அதி நவீன வான் உயர்ந்த கட்டிடம் அது. ஒரு நாடு எப்பொழுது தனது மக்களுடன் நெருங்கி இருக்கமுடியும்? அறிவை ஊட்டும்போதுதான். அப்படித்தான் அறிவுக்காக உண்டாக்கப்பட்ட கட்டிடம் அது. அறிவர்கள் சந்தித்துக் கொள்ள, தங்களது கருத்துக்களை பகிர்ந்து செழுமைப் படுத்த சிங்கப்பூரின் தேசிய நூலகமாக பரந்து விரிந்திருந்த அந்த அறிவுக் குவியலுக்குள் நான்காவது மாடியில் நடைபெற்ற அவ்விழாவில் மூழ்கிப் போனேன். காந்தக் குரலில் சங்கீதா அவர்கள் முன்மொழிய, அன்பழகனார், கவிஞர் இக்பால் அவர்கள் குமரியை வெளியிட, கவிதாயினி இன்பா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நான் போகும்போது எனது உடைமைகளை எடுத்துச் செல்லவில்லை. எனது குமரியைத்தான் எடுத்துச் சென்றிருந்தேன். நான் பேச நினைத்ததை குமரி தானே இனி பேசும் எனக் காத்திருக்க தொடங்கினேன். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட யாவரும் எனது புத்தகத்தை வாங்கினார்கள். குமரி இன்று பல மேடைகளையும் பல்வேறு விருதுகளை கண்டாலும் குமரிக்கான முதல் மேடை அதுவே. அதை சிறப்புற நிகழ்த்திய கவிமாலைக்கும் சிங்கபூருக்கும் என் மனதில் எப்போதும் உடல் மச்சம் போல நன்றி ஒட்டியே கிடக்கும்.

கனியன் பூங்குன்றனார் அவர்கள் எழுதியதைப் போல நான் யாரோ ஒருவன். அவர்களும் யாரோ ஒருவர். இருவரையும் ஏதோ ஒருவகையில் பிணைத்திருப்பது அன்பே. அந்த அன்பினால் அறம் நெறிப்படும். அறம் உறுதிப்பட துன்பம் தானே விலகும்.